05.22 – வாய்மூர் (திருவாய்மூர்) - (கந்த பத்யம் - kanda padyam)
2015-02-24
வாய்மூர் (திருவாய்மூர்) - "கந்த பத்யம்"
-------------------------------------------
("கந்த பத்யம்" அமைப்பில் - in "kanda padyam" meter)
(இப்பாடல்களின் யாப்பு இலக்கணத்தைக் கீழே பிற்குறிப்பில் காண்க)
1)
கானமி சைத்தடி தொழுதால்
ஊனம றுக்கும் பசுபதி உமையாள் கணவன்
தேனல ரணிதிரு முடிமேல்
வானதி ஏற்றான் வயலணி வாய்மூர் அரனே.
கானம் இசைத்து அடி தொழுதால் ஊனம் அறுக்கும் பசுபதி - பாமாலை பாடி திருவடியை வழிபட்டால் நம் குற்றங்களையும் குறைகளையும் தீர்க்கும் பசுபதி; (கானம் - பாட்டு); (ஊனம் - குறைகள்; குற்றங்கள்);
தேன்அலர் அணி திருமுடிமேல் வானதி ஏற்றான் - வாசமலர்களை அணிந்த சென்னிமேல் கங்கையை ஏற்றவன்; (தேன் அலர் - வாசமலர்கள்); (வானதி - வான் நதி - கங்கை);
வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளிய ஹரன்;
2)
மெல்லிடை மாதொரு பங்கன்
பல்லிற் பலிகொள் கபாலி பாய்புலி அதளன்
வெல்விடை யான்பணி வார்தம்
வல்வினை தீர்க்கும் வயலணி வாய்மூர் அரனே.
பல்லிற்பலிகொள் - பல் இற்பலி கொள் - பல இல்லங்களிற் பிச்சை ஏற்கும்; (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 -"... இற்பலி கொளப்புகுது மெந்தைபெருமான் ..." - இல் - வீடுகளில். பலிகொள் - பிச்சை கொள்வதற்கு);
அதள் - தோல்;
தீர்க்கும் - தீர்ப்பான்; (செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
3)
பிணிவினை தீர்க்கும் பெருமான்
பணியணி மார்பன் பசுபதி பார்வதி பங்கன்
பணிசுர ருய்ந்திட நஞ்சுண்
மணிமிட றுடையான் வயலணி வாய்மூர் அரனே.
பிணிவினை - பிணிக்கின்ற வினை; பிணியையும் (நோயையும்) வினையையும் என்று உம்மைத்தொகையாகவும் கொள்ளலாம்;
பணி அணி மார்பன் - பாம்பை மார்பில் அணிந்தவன்;
சுரர் - தேவர்கள்;
4)
காதார் குழையன் கொன்றைப்
போதார் முடியன் கழலணி பொற்றாள் போற்றித்
தாதாய் அருளெனி லீவான்
மாதோர் கூறன் வயலணி வாய்மூர் அரனே.
காது ஆர் குழையன் - காதில் குழையை அணிந்தவன்;
கொன்றைப் போது ஆர் முடியன் - கொன்றைமலரை முடிமேல் அணிந்தவன்;
கழல் அணி பொற்றாள் போற்றித் - கழல் அணிந்த, பொன் போன்ற திருவடியை வணங்கி;
தாதாய் அருள் எனில் ஈவான் - தந்தையே அருள் என்று வேண்டினால் வரம் தருவான் (/தருபவன்);
5)
பேர்பல சொல்லடி யார்வான்
சேர்வர மீவான் அணங்கு திகழுரு ஏற்றான்
கார்மிட றுடையான் நிலவார்
வார்சடை அண்ணல் வயலணி வாய்மூர் அரனே.
பேர் பல சொல் அடியார் வான் சேர் வரம் ஈவான் - திருநாமங்கள் பலவும் சொல்லும் பக்தர்கள் வானுலகம் அடைய வரம் தருவான்;
அணங்கு திகழ் உரு ஏற்றான் - பார்வதி பாகமாகத் திகழும் திருவுருவை ஏற்றவன்;
கார் மிடறு உடையான் - நீலகண்டன்;
நிலவு ஆர் வார் சடை அண்ணல் - சந்திரன் பொருந்திய நீண்ட சடையை உடைய அண்ணல்;
வயல் அணி வாய்மூர் அரனே - வயல்கள் சூழ்ந்த திருவாய்மூரில் உறையும் சிவபெருமான்;
6)
பிரமன தொருசிர மேந்தும்
கரமுடை அடிகள் கருகிய கண்டத் தீசன்
அரகர என்பார் வினைகெட
வரமரு ளண்ணல் வயலணி வாய்மூர் அரனே.
பிரமனது ஒரு சிரம் ஏந்தும் கரமுடை அடிகள் - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திய கடவுள்; (அடிகள் - சுவாமி; கடவுள்);
கருகிய கண்டத்து ஈசன் - நீலகண்டம் உடைய கடவுள்; (அப்பர் தேவாரம் - 4.60.10 - "கருகிய கண்டத்தானை");
அரகர - (திருமந்திரம் - "அரகர என்ன அறும்பிறப் பன்றே");
7)
உளமார் அன்பால் தொழுதால்
வளமே மல்கிட வழங்கு வள்ளல் செம்மான்
இளமான் அன்னாள் பங்கன்
வளரும் பிறையான் வயலணி வாய்மூர் அரனே.
உளம் ஆர் அன்பால் - உள்ளத்தில் பெருகும் அன்போடு;
செம்மான் - சிவந்த நிறத்தினன்; (மான் - பெரியவன்);
இளமான் அன்னாள் பங்கன் - இளைய மான் போன்றவளான உமையை ஒரு பங்கில் உடையவன்;
8)
முடிபத் துடையான் அழவே
அடியோர் விரலிட் டருளிறை அல்லார் கண்டன்
பிடிபோல் நடையாள் பங்கன்
வடியார் சூலன் வயலணி வாய்மூர் அரனே.
முடி பத்து உடையான் அழவே - பத்துத்தலைகளை உடைய இராவணன் அழும்படி அவனை;
அடி ஓர் விரல் இட்டு அருள் இறை - பாதத்து ஒரு விரலை ஊன்றி நசுக்கி அருள்செய்த இறைவன்;
அல் ஆர் கண்டன் - கரிய கண்டன்;
பிடி போல் நடையாள் பங்கன் - பெண்யானை போன்ற நடையை உடைய பார்வதியை ஒரு பங்கில் உடையவன்;
வடி ஆர் சூலன் - கூரிய சூலத்தை உடையவன்; (வடி - கூர்மை);
வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் ஹரன்;
9)
கண்ணன் பிரமன் காணா
தண்ணா எனவோங் கியவெரி அன்பால் பணியும்
மண்ணோர் இன்பம் கொள்ளும்
வண்ணம் தருமிறை வயலணி வாய்மூர் அரனே.
கண்ணன் - திருமால்;
அண்ணா - அண்ணால் என்பது அண்ணா என மருவிற்று; (தேவாரப் பிரயோகங்களைக் காண்க);
தரும் இறை - அருள்புரியும் இறைவன்;
10)
அறமா அவமே புரிவார்
பறைசொல் விடுமின் பசுபதி பால்வெண் நீற்றன்
பிறவான் இறவான் நற்பேர்
மறவார்க் கருளும் வயலணி வாய்மூர் அரனே.
அறமா அவமே புரிவார் - அறமாக அவமே என்றும் செய்வார்;
பறை சொல் விடுமின் - அவர்கள் கூறும் சொல்லை நீங்குங்கள்; மதியாதீர்கள்;
பிறவான் இறவான் நற்பேர் மறவார்க்கு அருளும் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன் தன் நல்ல நாமத்தை மறத்தல் இன்றி எப்பொழுதும் எண்ணுபவர்களுக்கு அருள்வான்; (நற்பேர் - நல்ல பெயர்);
11)
தாளைநி தம்பணி வார்வான்
ஆளவ ருள்வான் மணமலி ஐங்கணை ஏவும்
வேளைக் காய்முக் கண்ணன்
வாளைக ளுகளும் வயலணி வாய்மூர் அரனே.
தாளை நிதம் பணிவார் வான் ஆள அருள்வான் - திருவடியைத் தினமும் தொழுவார்கள் வானுலகம் ஆள அருள்வான்;
மணம் மலி ஐங்கணை ஏவும் வேளைக் காய் முக்கண்ணன் - வாசம் மிகுந்த ஐந்து மலர்க்கணைகளை எய்யும் மன்மதனைக் எரித்த நெற்றிக்கண்ணன்; (காய்தல் - கோபித்தல்; எரித்தல்);
வாளைகள் உகளும் வயல் அணி வாய்மூர் அரனே - வாளை மீன்கள் பாயும் (நீர்வளம் மிக்க) வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் ஹரன்; (சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்");
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
கந்த பத்யம் - ( “kanda padyam” metre )
---------------------------------
"கந்த பத்யம்" என்ற இவ்வமைப்புத் தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகின்ற பாடல் வகை. (தமிழில் எப்படிப் பல நூல்கள் வெண்பா யாப்பில் பாடப்பெற்றனவோ அதேபோல் தெலுங்கிலும் கன்னடத்திலும் பல நூல்கள் "கந்த பத்யம்" யாப்பில் பாடப்பெற்றன).
இப்பாடல் அமைப்பின் இலக்கணம்:
1) 3-5-3-5 என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
2) எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
லகு = குறில் = 1 மாத்திரை = "I"
குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"
3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்புக் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்:
W X W
X W Y W Z
W X W
X W Y W Z
இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:
X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIII IIU IUI UII UU
W = "IUI" (லகு-குரு-லகு) தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIII IIU UII UU
Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIII IUI
Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIU UU
4) எதுகை: எல்லா அடிகளிலும் முதற்சீரில் எதுகை அமையவேண்டும்.
5) மோனை: 2-ஆம் அடியிலும், 4-ஆம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.
மேலதிகக் குறிப்பு : தமிழ் யாப்பை ஒட்டி 'ஐ'காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன். (தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் 'ஐ' ஒலி எல்லா இடங்களிலும் நெடிலாக – 'குரு' - என்று கருதப்படும்).
-------------------
No comments:
Post a Comment