Saturday, September 25, 2021

05.20 – கன்றாப்பூர்

05.20 – கன்றாப்பூர்


2015-01-25

கன்றாப்பூர் (திருக்கன்றாப்பூர்) (இக்காலத்தில் "கோயில் கண்ணாப்பூர்")

-----------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1)

ஊண்பாறு வெண்டலையில் உகந்தானை ஆகத்தில்

ஆண்பாதி பெண்பாதி ஆயவனை அரவத்தைப்

பூண்போல அணிந்தானைப் பூவிட்டுப் புகழ்ந்தேத்திக்

காண்பார்தம் நெஞ்சகலான் கன்றாப்பூர் நடுதறியே.


* கன்றாப்பூர் நடுதறி - கன்றாப்பூரில் ஈசன் திருநாமம் "நடுதறியப்பர்".


ஊண் பாறு வெண் தலையில் உகந்தானை - உடைந்த வெள்ளிய மணையோட்டில் உணவு விரும்பியவனை; (ஊண் - உணவு); (பாறுதல் - அழிதல்); (சுந்தரர் தேவாரம் - 7.36.5 - "பாறு வெண்டலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர்");

ஆகத்தில் ஆண் பாதி பெண் பாதி ஆயவனை - திருமேனியில் ஆணும் பெண்ணும் ஆனவனை; (ஆகம் - உடல்);

அரவத்தைப் பூண் போல அணிந்தானைப் - நாகாபரணனை; (பூண் - அணி; ஆபரணம்);

பூ இட்டுப் புகழ்ந்து ஏத்திக் காண்பார்தம் நெஞ்சு அகலான் - மலர் தூவிப் புகழ்ந்து போற்றிக் கண்டு தொழுவார்களின் நெஞ்சத்தில் நீங்காமல் உறைகின்றவன்; (காண்தல் - தரிசித்தல்; வணங்குதல்);

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பர்.

(அப்பர் தேவாரம் - 6.61.1 - "முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக் காதன்மையால் தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே");


2)

மாதவஞ்செய் பகீரதற்கு வரமருளி வானதியைப்

பூதலத்தில் ஓடவிடு பொற்சடையன் இருநான்கு

போதகத்துக் கொண்டுநிதம் பொன்னடியைப் போற்றிசெய்து

காதலிப்பார் நெஞ்சகலான் கன்றாப்பூர் நடுதறியே.


வானதியைப் பூதலத்தில் ஓடவிடு - கங்கையைப் பூமியில் ஓடும்படி விடுத்த;

இருநான்கு போது அகத்துக் கொண்டு - மனத்தில் எட்டு மலர்களைக் கொண்டு; (போது - பூ); (அப்பர் தேவாரம் - 6.34.9 - "நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" - உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியவாகும் மலர்கள் எட்டாவன "கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, வாய்மை, தவம், அன்பு" என்பன);


3)

பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் தொழஉண்டு

கருகுமிட றுடையண்ணல் கல்லாலின் புடையமர்ந்தான்

உருகுமனத் தினராகி உமைபங்கன் கழலிணையே

கருதடியார் நெஞ்சிலுறை கன்றாப்பூர் நடுதறியே.


கருகு மிடறுஉடை அண்ணல் - நீலகண்டன்; (கருகுதல் - நிறங்கறுத்தல்; இருளுதல்); (அப்பர் தேவாரம்- 5.29.1 - "கருகு கண்டத்தன்");

கல்லாலின் புடை அமர்ந்தான் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;

கருதுதல் - விரும்புதல்; சிந்தித்தல்;


4)

தண்ணதிபாய் சடைமீது தளிர்மதியம் தாங்குமரன்

ஒண்ணுதலாள் மாதுமையாள் ஒருபாகம் மகிழ்பெம்மான்

கண்ணுடைய கரும்பொன்றைக் கையேந்து மன்மதனைக்

கண்ணுதலால் பொடிசெய்த கன்றாப்பூர் நடுதறியே.


* மாதுமை - திருக்கன்றாப்பூர் இறைவி திருநாமம்;


தண்ணதி - தண் நதி - குளிர்ந்த கங்கை;

ஒண்ணுதலாள் - ஒள் நுதலாள் - ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்;

மாதுமையாள் - உமாதேவி;

கண் உடைய கரும்பு - கணு இருக்கும் கரும்பு; (கண் - மரக்கணு - Joint in bamboo or sugar-cane);

கண்ணுதலால் - நெற்றிக்கண்ணால்;


5)

தினமலர்கள் பலதூவிச் சேவடியை வழுத்திமிக

நினையடியார் நெஞ்சத்தில் நீங்காது நின்றபரன்

சினவிடையான் திருநாமம் செபஞ்செய்மார்க் கண்டர்க்காக்

கனைகழலால் நமனையுதை கன்றாப்பூர் நடுதறியே.


தினமலர்கள் - தினம் மலர்கள் - தினந்தோறும் பூக்கள்; (தினமலர் = நாண்மலர் (நாள்மலர்) = "அன்று பூத்த பூ" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மார்க்கண்டர்க்கா - மார்க்கண்டேயருக்காக;

கனைகழல் - ஒலிக்கின்ற வீரத்தண்டையை அணிந்த திருவடி;

நமன் - எமன்;


6)

சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்தவன்பின் மாலுக்கு

வலந்திகழ அதனையருள் மாதேவன் வார்கழலில்

நலந்திகழும் மலர்தூவி நாளுநினை வார்நெஞ்சில்

கலந்துறையும் கண்ணுதலான் கன்றாப்பில் நடுதறியே.


தடிதல் - வெட்டுதல்;

வலம் - வலிமை; வெற்றி; வலப்பக்கம்;

நலம் - அழகு; நன்மை;

நாளுநினைவார் - நாளும் நினைவார் - தினந்தோறும் எண்ணுபவர்கள்;

கன்றாப்பு - கன்றாப்பூர்; (அப்பர் தேவாரம் - 6.79.8 - "கனியைத் தேனைக் கன்றாப்பின் நடுதறியைக்")


7)

பெருங்களிற்றின் உரிபோர்த்த பித்தனொரு வஞ்சியன

மருங்குலுடை மலைமகளை வாமத்தில் மகிழ்பெருமான்

அருங்கலமா அஞ்செழுத்தை அணிநாவர்க் கரணாவான்

கருங்குயிலார் பொழில்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.


பெரும் களிற்றின் உரி போர்த்த பித்தன் - பெரிய யானையின் தோலைப் போர்த்திய பித்தன்;

ஒரு வஞ்சி அன மருங்குல் உடை மலைமகளை வாமத்தில் மகிழ் பெருமான் - ஒரு கொடி போன்ற இடையை உடைய உமையம்மையை இடப்பாகம் விரும்பிய பெருமான்;

அருங்கலமா அஞ்செழுத்தை அணி நாவர்க்கு அரண் ஆவான் - தம் நாவில் அணிகலனாகத் திருவைந்தெழுத்தை அணிந்தவர்களுக்குப் பாதுகாவல் ஆவான்;

கருங்குயில் ஆர் பொழில் சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே - கரிய குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்.


8)

நீர்புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால்

ஓர்விரலை வெற்பின்மேல் ஊன்றிநெரித் திசைகேட்டான்

சீர்பரவும் யாவர்க்கும் திருவருள்செய் நம்பெருமான்

கார்வளம்சேர் வயல்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.

நீர் புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால் - நீரால் சூழப்பெற்ற இலங்கைக்கு மன்னனான இராவணன் நீண்ட மலையான கயிலையைப் பெயர்த்தபொழுது; (இடந்தக்கால் - பெயர்த்தபோழுது);

குறிப்பு - "கால்' என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்து, 'இடந்தக்கால், கால் ஓர் விரலை" என்று கொண்டும் பொருள்கொள்ளலாம்;

வெற்பு - மலை;

யாவர்க்கும் - எவருக்கும்; எல்லார்க்கும்;

கார் - மேகம்; மழை; நீர்;


9)

புயல்வணனும் புண்டரிகப் போதினனும் அடிமுடியை

முயல்வணமோர் முடிவில்லா முழுத்தழலாய் ஓங்கியவன்

இயல்வணமேத் தடியார்கட் கெளியவனாய் நின்றருள்வான்

கயலுகளும் வயல்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.


புயல்வணன் - மேக நிறம் உடைய திருமால்;

புண்டரிகப் போதினன் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமன்;

முயல்வணம் - முயலும்படி;

இயல்வணம் - இயன்ற அளவில்;

கயல் உகளும் - கயல்மீன்கள் தாவுகின்ற;


10)

எந்தவழி நல்லவழி என்றறியார் இருவினைதீர்

வெந்தபொடி பூசாத மிண்டரவர் உரைகொள்ளேல்

வந்தனைசெய் தடைவார்க்கு மட்டின்றி வரமருள்வான்

கந்தமலி பொழில்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.


இருவினைதீர் வெந்தபொடி - இருவினையைத் தீர்க்கும் திருநீறு;

மிண்டர் - கல் நெஞ்சர்;

மட்டின்றி - அளவின்றி;

கந்தமலிபொழில் - கந்தம் மலி பொழில் - மணம் நிறைந்த சோலை;


11)

அளிமண்டு நெஞ்சினராய் அலர்தூவி அடிதொழுவார்க்

கெளிவந்த எம்பெருமான் இருஞ்சடைமேல் இளமதியம்

மிளிர்கொன்றை அணிந்தபரன் விரிபொழிலில் மதுவுண்டு

களிவண்டு பண்முரலும் கன்றாப்பில் நடுதறியே.


அளி - அன்பு;

மண்டுதல் - மிகுதல்;

அலர் - பூ;

எளிவந்த எம்பெருமான் - எளிதில் அடையப்படும் எம்பெருமான்;

இருஞ்சடை - பெரிய சடை;

களி வண்டு - களிக்கின்ற வண்டு;

பண் முரலும் - இசை ஒலிக்கின்ற;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment