Friday, June 25, 2021

P.263 - பொது - தலமாலை - ஒருநாளும் மறவாமல்

2014-12-25

P.263 - பொது - தலமாலை - ஒருநாளும் மறவாமல்

–--------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்")

முற்குறிப்பு: ஒவ்வொரு பாடலிலும் ஒரு தலம்; ஈற்றுப்-பாடலில் பல தலங்கள்;


1) --- கருவூர் (கரூர்) ---

ஒருநாளும் மறவாமல் உள்ளத்தில் அன்போடு

திருநாமம் செபித்திருந்த சீலருயிர் கொல்வதற்கு

வருகாலன் மார்பிலுதை மணிகண்டன் வரம்நல்கு

கருவூரன் சீர்கேளார் காதிருந்தும் செவிடர்களே.


மறத்தல் இன்றித் தினமும் உள்ளத்தில் பக்தியோடு திருவைந்தெழுத்தை ஜபம் செய்த சீலரான மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த காலனது மார்பில் உதைத்த நீலமணிகண்டன். அவன் வரம் அருள்பவன். கருவூரில் (கரூரில்) உறைபவன். அப்பெருமானது புகழைக் கேளாதவர்கள் காது இருந்தும் செவிடர்களே.


2) --- சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) ---

இராவிலரு நடம்புரியும் எம்பெருமான் எருதேறி

அராவலையும் திருமுடிமேல் அலைமலிந்த தண்புனலும்

குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற

சிராமலையான் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


இராவில் அருநடம் புரியும் எம்பெருமான் - நள்ளிருளில் அரிய கூத்தை ஆடுகின்ற எம்பெருமான்; (இரா - இரவு);

எருதேறி - இடபவாகனன்;

அரா அலையும் திருமுடிமேல் அலை மலிந்த தண்புனலும் குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற – பாம்பு உலாவும் சென்னிமேல் அலை மிகுந்த குளிர்ந்த கங்கையையும் குரவமலரையும் வில்வத்தையும் கொக்கின் இறகையும் அணிகின்ற; (அரா - பாம்பு); (கூவிளம் - வில்வம்); (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்குவடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

சிராமலையான் சீர் கேளார் - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானது புகழைக் கேளாதவர்கள்; (ஐயடிகள் காடவர்கோன் - சேத்திரத் திருவெண்பா - 11.5.17 - "நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்");

செவிருந்தும் செவிடர்களே - காது இருந்தும் செவிடர்களே;


3) --- சிக்கல் ---

முக்கணுடை எம்பெருமான் மூவர்க்கும் முதலானான்

நக்கெயில்கள் மூன்றெரித்த நாதனுமை நங்கையையோர்

பக்க(ம்)மகிழ் கின்றபரன் பாரொடுவிண் பணிந்தேத்தும்

சிக்கலரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


முக்கணுடை எம்பெருமான் - மூன்று கண்களையுடைய எம்பெருமான்;

மூவர்க்கும் முதல் ஆனான் - மும்மூர்த்திகளுக்கும் முதல்வன்;

நக்கு எயில்கள் மூன்று எரித்த நாதன் - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவன்; ( நகுதல் - சிரித்தல்);

உமை நங்கையை ஓர் பக்க(ம்) மகிழ்கின்ற பரன் - உமாதேவியைத் திருமேனியில் ஒரு பக்கம் பாகமாக விரும்பிய பரமன்;

பாரொடு விண் பணிந்தேத்தும் சிக்கல் அரன் சீர் கேளார் - மண்ணோரும் வானோரும் வணங்கித் துதிக்கும், திருச்சிக்கலில் உறைகின்ற சிவபெருமானது திருப்புகழைக் கேளாதவர்கள்;

செவிருந்தும் செவிடர்களே - காது இருந்தும் செவிடர்களே;


4) --- தெங்கூர் ---

பொங்கார்வம் கொண்டடியைப் போற்றிசெயும் பத்தர்க்கு

மங்காத செல்வமருள் மாதேவன் நள்ளிருளில்

வெங்கானில் நடம்செய்யும் கங்காளன் விரிபொழில்சூழ்

தெங்கூரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.


பொங்கு-ஆர்வம் கொண்டு அடியைப் போற்றிசெயும் பத்தர்க்கு மங்காத செல்வம் அருள் மாதேவன் - பொங்கியெழும் பக்தியால் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்குக் குன்றாத செல்வத்தை அருளும் மகாதேவன்;

நள்ளிருளில் வெங்கானில் நடம்செய்யும் கங்காளன் - நள்ளிருளில் சுடுகாட்டில் கூத்தாடும், எலும்பால் ஆன மாலை அணிந்த சிவபெருமான்; (வெங்கான் - சுடுகாடு); (கங்காளன் - எலும்பு மாலை அணிந்த சிவபெருமான்);

விரிபொழில்சூழ் தெங்கூரன் சீர் கேளார் - விரிந்த சோலை சூழ்ந்த திருத்தெங்கூரில் உறையும் சிவபெருமானது திருப்புகழைக் கேளாதவர்கள்;

செவிருந்தும் செவிடர்களே - காது இருந்தும் செவிடர்களே;


5) --- கொடுமுடி ---

நெடுமலையை வில்லாக்கி நெருப்பரிகால் சேர்ந்தமைந்த

சுடுகணையால் புரங்களெய்து சுரர்க்கருள்செய் ஈசனன்பர்

கொடுவினையைத் தீர்க்கின்ற கூத்தனவன் உறைகின்ற

கொடுமுடியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.


நெடுமலையை வில் ஆக்கி, நெருப்பு அரி கால் சேர்ந்து அமைந்த சுடுகணையால் புரங்கள் எய்து சுரர்க்கு அருள்செய் ஈசன் - நீண்ட மேருமலையை வில் ஆக்கி, அக்கினி திருமால் வாயு மூவரும் ஒன்றாகச் சேர்ந்த எரிக்கும் அம்பால் முப்புரங்களை எய்து தேவர்களுக்கு அருளிய ஈசன்; (கால் - காற்று); (சுரர் - தேவர்);

அன்பர் கொடுவினையைத் தீர்க்கின்ற கூத்தனவன் உறைகின்ற கொடுமுடியைக் கூறாதார் - பக்தர்களது கொடிய வினையைத் தீர்த்தளும் கூத்தன் உறையும் கொடுமுடியைத் துதிசெய்யாதவர்கள்; (அப்பர் தேவாரம் - 5.81.5 - "திருக்கொடும்முடி என்றலும் தீவினைக் கருக்கெடும்");

வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தும் ஊமைகளே; (ஊமன் - ஊமையன்);


6) --- கோளிலி (திருக்கோளிலி) - (திருக்குவளை) ---

வாளியென மலரெய்யும் மதனாகம் பொடிசெய்தான்

ஆளிலையென் றருந்தமிழ்சொல் ஆரூரர்க் கருள்புரிந்தான்

தோளிருநான் குடையீசன் தூயனினி துறைகின்ற

கோளிலியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.


வாளி என மலர் எய்யும் மதன் ஆகம் பொடி செய்தான் - மலர்களை அம்பாக ஏவும் மன்மதனுடைய உடலைச் சாம்பலாக்கியவன்; (வாளி - அம்பு); (மதன் - காமன்); (ஆகம் - உடல்); (பொடி - சாம்பல்);

"ஆள் இலை" என்று அரும்-தமிழ் சொல் ஆரூரர்க்கு அருள்புரிந்தான் - "நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்கள் இல்லை" என்று பதிகம் பாடிய சுந்தரருக்கு அருள்புரிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே");

தோள் இருநான்குடை ஈசன் - எட்டுப் புஜங்களை உடைய ஈசன்;

தூயன் இனிது உறைகின்ற கோளிலியைக் கூறாதார் - பரிசுத்தனான சிவபெருமான் உறைகின்ற திருக்கோளிலியைத் துதிசெய்யாதவர்கள்;

வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தாலும் அதன் பயன் இல்லாத ஊமைகள்;


7) --- மருகல் (திருமருகல்) ---

பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்சவுண்டு

கருமணிபோல் திகழ்கண்டன் காழியர்கோன் உரைசெய்த

திருமருவு செந்தமிழ்கேட் டொருவணிகற் குயிர்தந்த

மருகலரன் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.


பெருகு-விடம் கண்டு அஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்ச, உண்டு, கருமணி போல் திகழ் கண்டன் - பெருகிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சிய பெரிய தேவர்களெல்லாம் வழிபட, அவர்களுக்கு இரங்கி அதனை உண்டு, கரியமணி விளங்குகின்ற கண்டத்தை உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.44.6 - "பித்தனைப் பெருந்தேவர் தொழப்படும் அத்தனை");

காழியர்கோன் உரைசெய்த திரு மருவு செந்தமிழ் கேட்டு ஒரு வணிகற்கு உயிர் தந்த மருகல் அரன் அடி வாழ்த்தார் - திருஞான சம்பந்தர் பாடியருளிய திருப் பொருந்திய செந்தமிழான தேவாரத்தைக் கேட்டு மகிழ்ந்து, ஒரு வணிகனுக்கு மீண்டும் உயிரைத் தந்த திருமருகல் ஈசனது திருவடியை வாழ்த்தாதவர்கள்; (காழி - சீகாழி); (வணிகற்கு - வணிகன் + கு - வணிகனுக்கு); (சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால்" - பதிக வரலாற்றைக் காண்க);

வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தாலும் அதன் பயன் இல்லாத ஊமைகள்;


8) --- வலிவலம் (திருவலிவலம்) ---

வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் மாமலைக்கீழ்

நலிவுறத்தான் விரலூன்றி நாளொடுவாள் ஈந்தபிரான்

புலியதளை அரைக்கசைத்த புராதனன்பூம் பொழில்சூழ்ந்த

வலிவலத்தான் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.


வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் - வலிமை மிக்க இருபது புஜங்களையுடைய கொடிய அரக்கனான இராவணனை; (வலி - வலிமை); (வாள் - கொடிய);

மாமலைக்கீழ் நலிவுறத்தான் விரல் ஊன்றி - கயிலைமலைக்கீழ் வருந்தும்படி திருப்பாதவிரல் ஒன்றை மலைமேல் ஊன்றி அவனை நசுக்கி;

நாளொடு வாள் ஈந்த பிரான் - (பின் அவன் அழுது தொழக் கேட்டு இரங்கி) அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளிய பெருமான்;

புலி-அதளை அரைக்கு அசைத்த புராதனன் - புலித்தோலை அரையில் கட்டிய தொன்மையானவன்; (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்);

பூம்பொழில் சூழ்ந்த வலிவலத்தான் அடி வாழ்த்தார் - அழகிய சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானது திருவடியை வாழ்த்தாதவர்கள்;

வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தும் ஊமைகளே;


9) --- நன்னிலம் ---

முன்னயனும் திருமாலும் முடியடியைக் காணாராய்ச்

சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்றபிரான்

வன்னிகொன்றை சடைப்புனைந்த மாதேவன் வயல்சூழ்ந்த

நன்னிலத்தான் நலம்புகழார் நாவிருந்தும் ஊமர்களே.


முன் அயனும் திருமாலும் முடியடியைக் காணாராய்ச் சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்ற பிரான் - முன்பு பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாராகித் தலைமேல் கைகூப்பி வணங்குமாறு ஜோதி-வடிவில் நின்ற பெருமான்;

வன்னி கொன்றை சடைப் புனைந்த மாதேவன் - வன்னி, கொன்றைமலர் இவற்றைச் சடையில் அணிந்த மகாதேவன்;

வயல் சூழ்ந்த நன்னிலத்தான் நலம் புகழார் நாவிருந்தும் ஊமர்களே - வயல் சூழ்ந்த நன்னிலத்தில் எழுந்தருளிய சிவபெருமானது புகழைப் பேசாதவர்கள் நாக்கு இருந்தும் ஊமைகளே; (சம்பந்தர் தேவாரம் - 2.44.7 - "ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே");


10) --- மறைக்காடு (வேதாரண்யம்) ---

அறக்கூற்றா அவம்பேசும் அறிவிலிகள் நிலையென்னே

மறக்கூற்றம் வந்தக்கால் வஞ்சமொழி காத்திடுமோ

பிறைக்காற்றுச் சடையீந்த பிஞ்ஞகனார் உறைகின்ற

மறைக்காட்டை வாழ்த்தாதார் வாயிருந்தும் ஊமர்களே.


அறக்-கூற்றா அவம் பேசும் அறிவிலிகள் நிலைன்னே - அறம் போல அவமொழி பேசும் மதியினர்களின் கதி என்ன?; (அறக்கூற்றா - அறக்கூற்றாக); (என்னே - 1. என்ன? 2. ஓர் அதிசய இரக்கக் குறிப்பு);

மறக்-கூற்றம் வந்தக்கால் வஞ்சமொழி காத்திடுமோ - கோபமும் கொலைத்தொழிலும் உடைய காலன் வரும்பொழுது அவர்களது வஞ்சனை நிறைந்த வார்த்தைகள் அவர்களைக் காப்பாற்றுமா?; (மறம் - கோபம்; கொலை); (வந்தக்கால் - வந்தபொழுது);

பிறைக்கு ஆற்றுச்-சடை ஈந்த பிஞ்ஞகனார் உறைகின்ற மறைக்காட்டை வாழ்த்தாதார் - கங்கையை அணிந்த சடையில் பிறைக்கும் இடம் தந்த பெருமானார் உறையும் வேதாரண்யத்தை வாழ்த்தாதவர்கள்; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (மறைக்காடு - வேதாரண்யம்);

வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தும் ஊமைகளே;


11) --- பல தலங்கள் ---

சேவூரும் பெருமானைத் திரிசூலப் படையானைத்

தேவூரும் பாம்புரமும் சிறுகுடியும் வாய்மூரும்

காவாரும் கைச்சினமும் கன்றாப்பும் உறைவானை

நாவாரத் துதிப்பாரை நலியாதீ வினைதானே.


சேரும் பெருமானைத் - இடபவாகனம் உடைய பெருமானை; (சே - எருது);

திரிசூலப் படையானைத் - சூலாயுதத்தை ஏந்தியவனை; (படை - ஆயுதம்);

சே ஊரும் பெருமான் - இடப வாகனம் உடையவன்;

தேவூரும், பாம்புரமும், சிறுகுடியும், வாய்மூரும், காரும் கைச்சினமும், கன்றாப்பும் உறைவானை - தேவூர், பாம்புரம், சிறுகுடி, வாய்மூர், சோலை சூழ்ந்த கைச்சினம், கன்றாப்பு (கன்றாப்பூர்) முதலிய தலங்களில் உறைகின்றவனை; (கா - சோலை); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

நாவாரத் துதிப்பாரை நலியா தீவினைதானே - வாயார வாழ்த்தும் அடியார்களைத் தீவினை வருத்தாது; (ஈசன் அவர்களது தீவினையைத் தீர்த்தருள்வான்);


பிற்குறிப்பு : யாப்பிலக்கணக் குறிப்பு:

செவிடர்களே, ஊமர்களே போன்ற சொற்றொடர்களை அலகிடும்போது "ர்" என்ற ஒற்றை நீக்கி அலகிட்டுக் காய்ச்சீராகக் கொள்ளவேண்டும்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

P.262 - ஞாயிறு - விரவிப் போற்றும்

2014-12-19

P.262 - ஞாயிறு

–--------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி")

(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - "இலையார் கதிர்வேல்")


1)

விரவிப் போற்றும் மெய்யன் பர்க்கு வேண்டு வரங்களெலாம்

கரவில் லாமல் நல்கும் கரனே; கங்கை கரந்தவனே;

உரையைக் கடந்த உண்மைப் பொருளே; உறுவினை தீர்த்தருளாய்;

நரைவெள் ளேற்றாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


விரவிப் போற்றும் மெய்யன்பர்க்கு வேண்டு வரங்களெலாம் கரவு இல்லாமல் நல்கும் கரனே - உன்னை அடைந்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வரங்களையெல்லாம் ஒளித்தல் இன்றி வழங்கும் வரதஹஸ்தனே; (விரவுதல் - அன்புகொள்ளுதல்; அடைதல்); (கரவு - ஒளித்தல்);

கங்கை கரந்தவனே - கங்கையைச் சடியயில் ஒளித்தவனே; (கரத்தல் - மறைத்தல்);

உரையைக் கடந்த உண்மைப் பொருளே - சொற்பதம் கடந்த மெய்ப்பொருளே;

நரைவெள்ளேற்றாய் - வெள்ளை இடபவாகனம் உடையவனே;

உறுவினை தீர்த்தருளாய் - என் வினைகளைத் தீர்த்தருள்க;

நரைவெள்ளேற்றாய் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே; (நரை - வெண்மை); (நரை வெள் - ஒருபொருட்பன்மொழி);

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே; (நறவு - தேன்; வாசனை);


2)

நாரி னோடு மாலை தொடுத்த நற்றவள் சங்கிலியைச்

சீரி லங்கு நாவ லூரர் சேர அளித்தவனே

ஏரி லங்கு கண்ட னேஎன் இருவினை தீர்த்தருளாய்

நாரி பங்கா நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


நாரினோடு மாலை தொடுத்த நற்றவள் சங்கிலியைச் சீர் இலங்கு நாவலூரர் சேர அளித்தவனே - அன்பால் நாரால் மாலைகள் தொடுத்துத் தொண்டுசெய்த நல்ல தவம் உடைய சங்கிலிநாச்சியாரைப் புகழ் மிக்க சுந்தரர் திருமணம் செய்யத் தந்தருளியவனே; (நார் - 1. அன்பு; 2. பூத்தொடுக்கும் நார்); (நாவலூரர் - திருநாவலூரில் அவதரித்த சுந்தரர்); (* சுந்தரர் வேண்டுகோளை ஏற்றுச் சங்கிலியாரை அவருக்குத் திருமணம் செய்வித்தது திருவொற்றியூரில்);

ஏர் இலங்கு கண்டனே - அழகிய கண்டம் உடையவனே; (ஏர் - அழகு);

என் இருவினை தீர்த்தருளாய் - என் வினையைத் தீர்த்தருள்க;

நாரிபங்கா - உமைபங்கனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே; (நறவு - தேன்; வாசனை);


3)

வஞ்சி போலும் மருங்குல் உடைய மாதொரு கூறுடையாய்;

வஞ்சம் அற்ற மாணிக் காக மறலியை உதைபாதா;

அஞ்செ ழுத்தை அகத்தில் வைத்தேன் அருவினை தீர்த்தருளாய்;

நஞ்சுண் மிடற்றாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


வஞ்சி போலும் மருங்குல் உடைய மாதொரு கூறு உடையாய் - கொடி போன்ற இடையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனே; (வஞ்சி - கொடி); (மருங்குல் - இடை);

வஞ்சம் அற்ற மாணிக்காக மறலியை உதைபாதா; - கள்ளமற்ற மார்க்கண்டேயரைக் காக்கும்பொருட்டுக் காலனைத்த உதைத்த திருப்பாதனே; (மறலி - இயமன்);

அஞ்செழுத்தை அகத்தில் வைத்தேன் அருவினை தீர்த்தருளாய் - திருவைந்தெழுத்தை மனத்தில் வைத்த என் வினையைத் தீர்த்தருள்க;

நஞ்சு உண் மிடற்றாய் - விஷத்தை உண்ட கண்டனே; (மிடறு - கண்டம்);

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


4)

நாகத் துரிவை போர்த்து கந்தாய் நரைவிடை ஊர்தியினாய்

ஆகத் தினிலோர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே

சோகத் தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய்

நாகத் தாராய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


நாகத்து உரிவை போர்த்து உகந்தாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (நாகம் - யானை); (உரிவை - தோல்);

நரைவிடை ஊர்தியினாய் - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;

ஆகத்தினில் ஓர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே - திருமேனியில் உமையை பாகமாகக் கொண்ட அற்புதனே; (ஆகம் - மேனி);

சோகத்தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய் - வருத்தத்தையே தரும் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;

நாகத்-தாராய் - பாம்பை மாலையாக அணிந்தவனே; (தார் - மாலை);

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


5)

வேல்போற் கண்ணி வெருவ அன்று மிகுசினத் தோடெதிர்ந்த

நால்வாய் உரித்தாய்; நாறு கொன்றை நாகம் அணிந்தவனே;

பால்போல் நீற்றாய்; பாதம் பணிந்தேன் பழவினை தீர்த்தருளாய்;

நால்வே தத்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


வேல் போல் கண்ணி வெருவ அன்று மிகு-சினத்தோடு எதிர்ந்த நால்வாய் உரித்தாய் - வேல் போன்ற கண்ணை உடைய உமாதேவி அஞ்சுமாறு முன்பு பெருங்கோபத்தோடு எதிர்த்துப் போர்செய்த யானையின் தோலை உரித்தவனே; (வெருவுதல் - அஞ்சுதல்); (நால்வாய் - யானை);

நாறு கொன்றை நாகம் அணிந்தவனே - ௳ணம் கமழும் கொன்றைமலரையும் பாம்பையும் அணிந்தவனே;

பால் போல் நீற்றாய் - பால் போன்ற வெண்திருநீற்றைப் பூசியவனே;

பாதம் பணிந்தேன் பழவினை தீர்த்தருளாய் - உன் திருவடியைப் பணிந்த என் பழைய வினையைத் தீர்த்தருள்க;

நால்வேதத்தாய் - நால்வேதங்களின் பொருளானவனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


6)

ஏன மருப்பை ஏந்து மார்ப; இருநதி பாய்சடைமேல்

வான மதியை வாழ வைத்த மாகரு ணைக்கடலே;

பாந லத்தால் பரவும் என்றன் பழவினை தீர்த்தருளாய்;

ஞான மூர்த்தீ; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


ஏன-மருப்பை ஏந்து மார்ப - பன்றிக்கொம்பைத் திருமார்பில் அணிந்தவனே; (ஏனம் - பன்றி); (மருப்பு - தந்தம்; கொம்பு);

இருநதி பாய்சடைமேல் வான-மதியை வாழவைத்த மா-கருணைக்கடலே - கங்கை பாய்ந்த சடைமேல் வானத்தின்கண் உள்ள சந்திரனை அழியாது நிலைக்கும்படி அணிந்த பெரிய கருணைக்கடலே; (இருநதி - பெரிய ஆறு; இருமை - பெருமை);

பா-நலத்தால் பரவும் என்றன் பழவினை தீர்த்தருளாய் - பாமாலைகளால் உன்னைத் துதிக்கும் என் பழைய வினையைத் தீர்த்தருள்க;

ஞானமூர்த்தீ - ஞானவடிவினனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


7)

மிகவே இடர்செய் காலன் பாசம் வீசிடக் கண்டுனையே

புகலா அடைந்த மாணிக் கருள்செய் புரிசடைப் புண்ணிய;நின்

புகழார் பாதம் போற்று கின்றேன் பொருவினை தீர்த்தருளாய்;

நகர்மூன் றெரித்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


மிகவே இடர்செய் காலன் பாசம் வீசிடக் கண்டு உனையே புகலா அடைந்த மாணிக்கு அருள்செய் புரிசடைப் புண்ணிய - மிகவும் துன்பம்செய்த காலன் பாசத்தை வீசக் கண்டு உன்னையே சரணடந்த மார்க்கண்டேயருக்கு அருளிய முறுக்கிய சடையுடைய புண்ணியனே; (புகலா - புகலாக); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);

நின் புகழ் ஆர் பாதம் போற்றுகின்றேன் பொரு-வினை தீர்த்தருளாய் - உன் புகழ் மிகுந்த திருவடியைப் போற்றும் என்னைத் தாக்கும் வினையைத் தீர்த்தருள்க; (பொருதல் - போர்செய்தல்); (அப்பர் தேவாரம் - 4.88.4 - "சென்றடைந்தேனுடைய பொருவினையெல்லாம் துரந்தனைப்");

நகர் மூன்று எரித்தாய் - முப்புரங்களை எரித்தவனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


8)

எதிர்வார் இல்லான் இரதம் கீழே இழியவும் மாமலையை

மதியா திடந்த வாள ரக்கன் மணிமுடி பத்தைவிரல்

நுதியால் நெரித்தாய்; நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய்;

நதியார் சடையாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


எதிர்வார் இல்லான் இரதம் கீழே இழியவும் - எதிர்ப்பவர்கள் இல்லாத இராவணனுடைய தேர் பறக்க இயலாமல் தரையில் இறங்கவும்; (சம்பந்தர் தேவாரம் - 3.56.8 - "இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன்"); (இரதம் - தேர்); (அப்பர் தேவாரம் - 4.34.4 - "அந்தரம் தேர் கடாவி யார் இவன் என்று சொல்லி உந்தினான் மாமலையை");

மாமலையை மதியாது இடந்த வாளரக்கன் மணிமுடி பத்தை விரல் நுதியால் நெரித்தாய் - அந்த உயர்ந்த மலையை வணங்க நினையாமல் இகழ்ந்து பேசிப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணனது மணிமுடி அணிந்த தலைகள் பத்தையும் ஒரு திருப்பாதவிரலின் நுனியால் நசுக்கியவனே; (இடத்தல் - பெயர்த்தல்); (வாள் - கொடிய); (நுதி - நுனி);

நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய் - உன்னையே வழிபட்டேன் என் பிறவிநோய்க்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (நுனையே - நுன்னையே - உன்னையே); (சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்");

நதி ஆர் சடையாய் - கங்கையை அணிந்த (/கங்கை ஒலிக்கும்) சடையானே; (ஆர்தல் - அணிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்)

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


9)

பங்க யத்தான் பாம்பின் மேலான் பன்றியும் அன்னமுமாய்

எங்கும் நேடி இளைக்க அளவில் எரியென நின்றவனே;

செங்கண் ஏற்றாய்; தினமும் தொழுதேன் தீவினை தீர்த்தருளாய்;

நங்கை பங்கா; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


பங்கயத்தான் பாம்பின்-மேலான் பன்றியும் அன்னமும் ஆய் - தாமரைமேல் இருக்கும் பிரமனும் பாம்பின்மேல் துயிலும் திருமாலும் அன்னமும் பன்றியும் ஆகி; (எதிர்நிரனிறையாக வந்தது);

எங்கும் நேடி இளைக்க அளவு-இல் எரி-என நின்றவனே - எங்கும் தேடித் தளரும்படி எல்லை இல்லாத ஜோதி என்று ஓங்கியவனே; ( நேடுதல் - தேடுதல்); (எரி - தீ);

செங்கண் ஏற்றாய் - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனே;

தினமும் தொழுதேன் தீவினை தீர்த்தருளாய் - உன்னைத் தினமும் தொழும் என் தீவினையைத் தீர்த்தருள்க;

நங்கை பங்கா - உமைபங்கனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


10)

பொல்லார், நீறு பூச அஞ்சும் பொய்யரின் புன்னெறிகள்

எல்லாம் அறியா எம்பி ரானே; இமையவர் போற்றிசெய்யும்

அல்லார் மிடற்றாய்; அடியே தொழுதேன் அருவினை தீர்த்தருளாய்;

நல்லார் மனத்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


பொல்லார், நீறு பூச அஞ்சும் பொய்யரின் புன்னெறிகள் எல்லாம் அறியா எம்பிரான் - பொல்லாதவர்களும் திருநீற்றைப் பூச அஞ்சுகின்ற பொய்யர்களும் சொல்லும் புன்மார்க்கங்களால் அறியப்படாத எம்பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");

இமையவர் போற்றிசெய்யும் அல் ஆர் மிடற்றாய் - தேவர்கள் வணங்கும் இருள் பொருந்திய கண்டத்தை உடையவனே; (பெரியபுராணம் - 12.21.259 - "அல்லார் கண்டத் தண்டர்பிரான்");

அடியே தொழுதேன் அருவினை தீர்த்தருளாய் - உன் திருவடியையே தொழும் என் தீர்த்தற்கு அரிய வினையைத் தீர்த்தருள்க;

நல்லார் மனத்தாய் - நல்லவர்கள் மனத்தில் இருப்பவனே;

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


11)

கோட கத்துச் சமணர் குன்றக் குளிர்தமிழ் நீந்தவருள்

ஏட கத்தாய்; ஏகம் பத்தாய்; இன்தமிழ் பாடியுனை

நாட கத்தார் வினைய றுக்கும் நல்லவ னே;அலகில்

நாட கத்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.


கோடு-அகத்துச் சமணர் குன்றக் குளிர்-தமிழ் நீந்த அருள் ஏடகத்தாய் - வஞ்ச-மனத்துச் சமணர்கள் தோல்வியுறச், சம்பந்தர் இட்ட தேவார-ஏடு வைகையில் வெள்ளத்தை எதிர்த்து நீந்த அருள்புரிந்த திருவேடகத்துப் பெருமானே; (கோடுதல் - நெறிதவறுதல்); (குன்றுதல் - அழிதல்; நிலைகெடுதல்);

ஏகம்பத்தாய் - கச்சி-ஏகம்பத்துப் பெருமானே;

இன்-தமிழ் பாடி உனை நாடு அகத்தார் வினை அறுக்கும் நல்லவனே - இனிய தமிழான தேவாரம் திருவாசகம் பாடி உன்னை நாடுகின்ற மனம் உடையவர்களது வினையை நீக்கும் நல்லவனே; (அறுத்தல் - தீர்த்தல்; நீக்குதல்);

அலகு இல் நாடகத்தாய் - அளவில்லாத திருக்கூத்து உடையவனே; (நாடகம் - கூத்து);

நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;


பிற்குறிப்புகள் :

யாப்புக் குறிப்பு :

அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு.

அடிகள்தோறும் ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.

5-ஆம் 6-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.

சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா";

கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.5 - "களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்(று));


ஞாயிறு - தலக்குறிப்பு : "ஞாயிறு கிராமம் - புஷ்பரதேஸ்வரர் கோயில்". சங்கிலிநாச்சியார் அவதரித்த தலம்.


வி. சுப்பிரமணியன்

-------------------  

Monday, June 7, 2021

P.261 - வான்மியூர் - சாகர விடத்துக்கு

2014-12-09

P.261 - வான்மியூர்

–--------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி")

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்")


1)

சாகர விடத்துக் கஞ்சிய தேவர் .. தாள்தொழ அதுதனை உண்டு

மேகநி றத்தை மிடற்றினிற் காட்டும் .. வீரனை வெண்ணகை யாளைப்

பாக(ம்)ம கிழ்ந்த பண்புடை யானைப் .. பாலன நீறணிந் தானை

மாகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


சாகர-விடத்துக்கு அஞ்சிய தேவர் தாள்தொழ அதுதனை உண்டு - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் வந்து திருவடியை வணங்கவும், அவர்களுக்கு இரங்கி அந்த நஞ்சை உண்டு; (சாகரம் - கடல்); (அதுதனை - அதனை);

மேகநிறத்தை மிடற்றினில் காட்டும் வீரனை - கரிய மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில் காட்டும் வீரனை;

வெண்ணகையாளைப் பாகம் மகிழ்ந்த பண்பு உடையானைப் - வெண்பற்கள் திகழும் உமையை ஒரு பாகமாக விரும்பியவனை; (நகை - பல்);

பால் அன நீறு அணிந்தானை - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனை; (அன - அன்ன - போன்ற);

மா-கடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - பெரிய கடலால் சூழப்பெற்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறத்தலும் இயலுமோ? (மருந்து - அமுதம்); (* மருந்தீசன் - திருவான்மியூர் ஈசன் திருநாமங்களுள் ஒன்று); (ஆமே என்றதில் "" - வினாவேகாரம். எதிர்மறைக்கண் வந்தது. ஆகாது என்று பொருள்பட நின்றது); (சுந்தரர் தேவாரம் - 7.59.1 - "ஆரூரானை மறக்கலும் ஆமே");


2)

தெண்திரைக் கங்கை திகழ்முடி யானைச் .. செய்தசூள் மீறிய தோழர்

கண்தனை மறைத்துப் பின்தமிழ் கேட்டுக் .. கருணைசெய் கண்ணுத லானை

வெண்திரு நீற்றை விரையெனப் பூசி .. விடையுகந் தேறிய கோனை

வண்திரை எற்று வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


தெண்திரைக் கங்கை திகழ் முடியானை - தெளிந்த அலைகள் திகழும் கங்கையைத் திருமுடியில் அணிந்தவனை; (திரை - அலை);

செய்த சூள் மீறிய தோழர் கண்தனை மறைத்துப் பின் தமிழ் கேட்டுக் கருணைசெய் கண்ணுதலானை - தாம் செய்த சபதத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனாரைக் குருடாக்கிப் பின்னர் அவர் உருகிப் பாடிய பதிகங்களைக் கேட்டு இரங்கியருளிய நெற்றிக்கண்ணனை; (தோழர் - சுந்தரர்); (கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்);

வெண்திருநீற்றை விரை எனப் பூசி விடை உகந்து ஏறிய கோனை - வெண்மையான திருநீற்றை வாசனைப்பொடி போலப் பூசி, இடபவாகனத்தின்மேல் ஏறுகின்ற தலைவனை; (விரை - வாசனைப்பொடி); (சம்பந்தர் தேவாரம் - 3.54.3 - "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே");

வண்திரை எற்று வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - வளம் மிக்க அலைகள் மோதுகின்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (எற்றுதல் - மோதுதல்);

இலக்கணக் குறிப்பு: தெண்திரை, கண்தனை, வெண்திரு, வண்திரை - இவையெல்லாம் புணர்ச்சி பிரியாத வடிவத்தில் தெண்டிரை, கண்டனை, வெண்டிரு, வண்டிரை என்று வருவன.


3)

மதியில னாகி மலர்க்கணை எய்த .. மன்மதன் தனைப்பொடி செய்த

பதியினைப் பரனைப் பாய்விடை யானைப் .. பாவையோர் பங்கனை முடிமேல்

மதியிள நாகம் மத்தம ணிந்த .. மைந்தனைக் கலிமலி வீதி

மதில்புடை சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


மதியிலனாகி மலர்க்கணை எய்த மன்மதன்தனைப் பொடி செய்த பதியினைப் - அறிவற்றவன் ஆகி மலரம்பை எய்த காமனைச் சாம்பலாக்கிய தலைவனை;

பரனைப் - மேலானவனை;

பாய்-விடையானைப் - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;

பாவை ஓர் பங்கனை - உமைபங்கனை;

முடிமேல் மதி இளநாகம் மத்தம் அணிந்த மைந்தனைக் - திருமுடிமேல் சந்திரன், இளம்பாம்பு, ஊமத்தமலர் இவற்றையெல்லாம் அணிந்த வீரனை/அழகனை; (மத்தம் - ஊமத்தமலர்); (மைந்தன் - இளைஞன்; வீரன்);

கலி மலி வீதி மதில் புடை சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - ஆரவாரம் மிக்க வீதிகளும் மதிலும் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (கலி - ஒலி);


4)

அணிமலர் தூவி அருந்தமிழ் பாடி .. அனுதினம் அடியிணை போற்றிப்

பணியடி யார்தம் பழவினை தீர்த்துப் .. பரகதி தந்தருள் வானை

அணியிரண் டாகி அலைகடல் கடைந்தார் .. அஞ்சிய அருவிடம் தனையுண்

மணிமிடற் றானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


அணிமலர் தூவி அருந்-தமிழ் பாடி அனுதினம் அடியிணை போற்றிப் பணி- அடியார்தம் பழவினை தீர்த்துப் பரகதி தந்தருள்வானை - அழகிய பூக்களைத் தூவித், தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் இருதிருவடிகளை வணங்கும் பக்தர்களது பழைய வினையைத் தீர்த்துப் பரகதியைத் தருபவனை; (அணி - அழகு);

அணிரண்டு ஆகி அலைகடல் கடைந்தார் அஞ்சிய அருவிடம்-தனைண் மணிமிடற்றானை - இரண்டு அணிகள் ஆகிப் பாற்கடலைக் கடைந்தவர்களான தேவர்களும் அசுரர்களும் அஞ்சிய ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை; (அணி - கூட்டம்);

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


5)

தலைமலி மாலை தலைக்கணி கின்ற .. தலைவனை அன்பொடு தூவும்

இலைமலர் எதுவும் ஏற்றருள் வானை .. இமையவர் தம்பெரு மானைச்

சிலையென மேருச் சிலையினை வளைத்துத் .. திரிபுரம் மூன்றெரித் தானை

மலைமகள் கோனை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


தலை மலி மாலை தலைக்கு அணிகின்ற தலைவனை - தலைக்கு மண்டையோட்டுமாலையை அணிந்தவனை;

அன்பொடு தூவும் இலை மலர் எதுவும் ஏற்றருள்வானை - பக்தர்கள் அன்போடு தூவும் எந்த மலரையும் இலையையும் ஏற்று அருள்பவனை; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்"); (அப்பர் தேவாரம் - 4.92.10 - "பாங்கறியா என்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போது எனக் கொள்ளும் ஐயன்");

இமையவர்தம் பெருமானைச் - தேவர்கள் தலைவனை;

சிலையென மேருச்-சிலையினை வளைத்துத் திரிபுரம் மூன்று எரித்தானை - மேருமலையை வில்லாக வளைத்துத், திரிந்த முப்புரங்களை எய்து எரித்தவனை; (சிலை - 1. வில்; 2. மலை); (திரிபுரம் மூன்று - திரிந்த முப்புரங்கள் - வினைத்தொகை); (சம்பந்தர் தேவாரம் - 2.40.7 - "சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த");

மலைமகள் கோனை - உமாபதியை;

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க ஒண்ணுமா?


6)

நறைமலர் தூவி நற்றமிழ் பாடி .. நாள்தொறும் போற்றிடு வார்க்குக்

குறைவற இன்பம் கொடுத்தருள் வானைக் .. கூவிளம் கொன்றையி னோடு

பிறையணிந் தானைப் பெருவிடம் உண்ட .. பித்தனை ஆலதன் கீழே

மறைவிரித் தானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


நறைமலர் தூவி நற்றமிழ் பாடி நாள்தொறும் போற்றிடுவார்க்குக் குறைவு அற இன்பம் கொடுத்து அருள்வானைக் - வாசமலர்களைத் தூவித் தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் வழிபடும் பக்தர்களுக்கு மிகுந்த இன்பத்தை அருள்பவனை; (நறை - தேன்; வாசனை);

கூவிளம் கொன்றையினோடு பிறை அணிந்தானைப் - வில்வம், கொன்றைமலர், பிறை இவற்றை அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்);

பெருவிடம் உண்ட பித்தனை - ஆலகாலத்தை உண்ட பேரருளாளனை; (பித்தன் - பேரருள் உடையவன்);

ஆலதன் கீழே மறை விரித்தானை - கல்லாலமரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்தவனை; (விரித்தல் - உபதேசித்தல்);

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


7)

பேர்பல உடைய பெருமையி னானைப் .. பிறப்பிறப் பில்லியைப் பெற்றம்

ஊர்பவன் தன்னை ஓதநஞ் சுண்ட .. ஒருவனை ஊர்தொறும் ஐயம்

தேர்பவன் தன்னைச் செந்தழல் மேனிச் .. செல்வனை ஆமையின் ஓட்டை

மார்பணிந் தானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


பேர் பல உடைய பெருமையினானைப் - பல திருநாமங்கள் உடைய பெருமை மிக்கவனை;

பிறப்பு இறப்பு இல்லியைப் - பிறத்தலும் சாதலும் இல்லாதவனை;

பெற்றம் ஊர்பவன் தன்னை - இடபவாகனனை; (பெற்றம் - இடபம்);

ஓதநஞ்சு உண்ட ஒருவனை - கடல்விடத்தை உண்ட ஒப்பற்றவனை; (ஓதம் - கடல்); (ஒரு - ஒப்பற்ற);

ஊர்தொறும் ஐயம் தேர்பவன் தன்னைச் - பல ஊர்களில் பிச்சை ஏற்பவனை; (ஐயம் - பிச்சை);

செந்தழல் மேனிச் செல்வனை - செந்தீப் போல் செம்மேனி உடைய செல்வனை;

ஆமையின் ஓட்டை மார்பு அணிந்தானை - மார்பில் ஆமையோட்டை அணிந்தவனை;

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


8)

தேரினைச் செலுத்தச் சினந்துவெற் பிடந்த .. தெளிவிலா அரக்கனை நசுக்கி

ஆரிடர் உற்ற அவனழு திசையால் .. அடிதொழக் கேட்டும கிழ்ந்து

பேரினைத் தந்த பிஞ்ஞகன் தன்னைப் .. பேய்க்கணப் படையுடை யானை

வாரியொ லிக்கும் வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


தேரினைச் செலுத்தச் சினந்து வெற்பு இடந்த தெளிவு இலா அரக்கனை நசுக்கி - தரையில் இறங்கிய தனது தேரைச் செலுத்த எண்ணிக் கோபத்தோடு கயிலைமலையைப் பெயர்த்த மதிமயக்கமுடைய இராவணனை (ஒரு பாதவிரலை ஊன்றி) நசுக்கி; (வெற்பு - மலை); (இடத்தல் - பெயர்த்தல்);

ஆரிடர் உற்ற அவன் அழுது இசையால் அடிதொழக் கேட்டு மகிழ்ந்து - பெருந்துன்பம் அடைந்த அவன் அழுது இசைபாடித் திருவடியை வழிபாடு செய்வதைக் கேட்டு அவனுக்கு இரங்கி;

பேரினைத் தந்த பிஞ்ஞகன்-தன்னைப் - இராவணன் (அழுதவன்) என்ற பெயரைத் தந்தருளிய, தலைக்கோலம் உடையவனை; (பிஞ்ஞகன் - சிவன் திருநாமம் - தலைக்கோலம் உடையவன்);

பேய்க்கணப்படைடையானை - பூதகணப்படை உடையவனை; (அப்பர் தேவாரம் - 6.63.8 - " பூதகணப் படையானை"); (சம்பந்தர் தேவாரம் - 2.6.2 - "பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர்");

வாரி ஒலிக்கும் வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - கடல் ஒலிக்கின்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (வாரி - கடல்);


9)

ஆர்பரம் என்று முரணிய அயன்மால் .. அடிமுடி தேடியி ளைக்க

ஓர்வரை யற்ற ஒள்ளெரி ஆன .. ஒருவனை அடியவர்க் கரணாம்

போர்விடை யானைப் போழ்மதி யோடு .. புற்றர வம்புனை கின்ற

வார்சடை யானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


ஆர் பரம் என்று முரணிய அயன் மால் அடிமுடி தேடி இளைக்க ஓர் வரை அற்ற ஒள்-எரி ஆன ஒருவனை - தம்மில் யார் உயர்ந்தவர் என்று மாறுபட்டு வாதிட்ட பிரமன் திருமால் இவர் இருவரும் அடிமுடியைத் தேடி வருந்துமாறு ஓர் எல்லையில்லாத ஒளி மிக்க ஜோதி ஆன ஒப்பற்றவனை; (முரணுதல் - மாறுபடுதல்); (வரை - எல்லை); (ஒருவன் - ஒப்பற்றவன்);

அடியவர்க்கு அரண் ஆம் போர்விடையானைப் - பக்தர்களுக்குக் காவல் ஆன, போர் செய்யவல்ல விடையை வாகனமாக உடையவனை;

போழ்மதியோடு புற்றரவம் புனைகின்ற வார்சடையானை - திங்களின் துண்டத்தையும் (= பிறையையும்) புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும் அணிந்த நீள்சடையனை; (போழ் - துண்டம்); (வார்தல் - நீள்தல்);

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


10)

குறியறி யாது கிறிமொழி பேசிக் .. கும்பலைச் சேர்த்திட எண்ணும்

அறிவிலி வீணர் அவருரை நெறிகள் .. அல்லலிற் சேர்ப்பன விடுமின்

மறியமர் கையன் மலரடி வாழ்த்தில் .. வானிடை வாழ்வருள் வானை

மறிகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


குறி அறியாது கிறிமொழி பேசிக் கும்பலைச் சேர்த்திட எண்ணும் - குறியை அறியாமல் வஞ்சம் பேசிக் கூட்டம் சேர்க்க எண்ணுகின்ற; (குறி - இலக்கு; அடையாளம் (symbol)); (கிறி - பொய்; வஞ்சம்); (திருப்புகழ் - திருத்தணி - "கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்");

அறிவிலி வீணர் அவர் உரை நெறிகள் அல்லலில் சேர்ப்பன விடுமின் - அறிவிலிகளான அந்தப் பயனற்றவர்கள் சொல்லும் மார்க்கங்கள் துன்பத்தில் ஆழ்த்தும்; அவற்றை மதியாமல் நீங்குங்கள்;

மறி அமர் கையன் மலரடி வாழ்த்தில் வானிடை வாழ்வு அருள்வானை - கையில் மான்கன்றை ஏந்தியவனது மலர்த்திருவடியை வாழ்த்தினால் சிவலோக வாழ்வை அருள்பவனை; (மறி - மான்கன்று); (சம்பந்தர் தேவாரம் - 3.118.11 - "வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்");

மறிகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - அலைகள் மறிகின்ற கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (மறிதல் - கிளர்தல்);


11)

சூழ்வினை தீர்க்கும் திருப்பெயர் ஓது .. தூமனத் தொண்டருக் காக

ஆழ்கடல் மேற்கல் அரும்புணை ஆக்கி .. அருளிய அண்ணலை நம்பித்

தாழ்சிரத் தோடு தாள்தொழு வார்க்குத் .. தாயினும் நல்லனை இந்து

வாழ்சடை யானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.


சூழ்வினை தீர்க்கும் திருப்பெயர் ஓது தூ-மனத் தொண்டருக்காக ஆழ்கடல்மேற் கல் அரும்-புணை ஆக்கி அருளிய அண்ணலை - சூழும் வினையைத் தீர்க்கின்ற திருநாமத்தை (நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை) ஓதும் தூய மனத்தை உடைய தொண்டரான திருநாவுக்கரசருக்காக, அவர் உய்யும்படி ஆழம் மிக்க கடலில் (அவரை ஆழ்த்திக் கொல்லும் பொருட்டுச் சமணர்கள் கட்டிய) அந்தக் கல்லையே ஓர் அரிய தெப்பம் ஆக்கி அருளிய பெருமானை; (புணை - தெப்பம்);

நம்பித் தாழ்-சிரத்தோடு தாள் தொழுவார்க்குத் தாயினும் நல்லனை - விரும்பித், தலையைத் தாழ்த்தித், திருவடியை வணங்கும் பக்தர்களுக்குத் தாயைவிட நன்மை செய்பவனை; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

இந்து வாழ் சடையானை - சந்திரன் அழியாமல் வாழ்கின்ற சடையை உடையவனை; (இந்து - சந்திரன்);

வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?


வி. சுப்பிரமணியன்

-------------------