2014-11-27
P.255 - விரிஞ்சிபுரம்
(வேலூர் அருகே உள்ள தலம்)
------------------
(எண்சீர் விருத்தம் - விளம் விளம் விளம் மா - அரையடி வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மலையினார் பருப்பதம்")
(சுந்தரர் தேவாரம் - 7.58.1 - "சாதலும் பிறத்தலும்")
(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முதல்")
1)
பாண்டிய நாட்டினில் நரிபரி ஆக்கும்
.. பரிவினன்; அகம்நிறை அன்பொடு குளத்தைத்
தோண்டிய தண்டியின் கண்களில் பார்வை
.. தோன்றிடச் செய்தவன்; விளக்கினில் திரியைத்
தூண்டிய எலிதனக் கின்னருள் செய்த
.. தூமறைக் காட்டினன்; தொழுதுரு கடியார்
வேண்டிய தீபவன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
பாண்டிய நாட்டினில் நரிபரி ஆக்கும் பரிவினன் - பாண்டிய நாட்டில் நரிகளைக் குதிரைகள் ஆக்கிய அன்பினன்; (பரிவு - அன்பு; கருணை); (* நரியைப் பரி ஆக்கியதைத் திருவிளையாடற்புராணத்தில் காண்க);
அகம் நிறை அன்பொடு குளத்தைத் தோண்டிய தண்டியின் கண்களில் பார்வை தோன்றிடச் செய்தவன் - மனத்தில் நிறைந்த அன்பால் திருக்குளத்தைத் தூர்வாரித் திருப்பணி செய்த தண்டியடிகளின் கண்களைப் பார்வைபெறச் செய்தவன்; (* தண்டியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
விளக்கினில் திரியைத் தூண்டிய எலிதனக்கு இன்னருள் செய்த தூ-மறைக்காட்டினன் - திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) திருமுன் விளக்குத்-திரியை ஓர் எலி தற்செயலாகத் தூண்டிய புண்ணியத்திற்கு அதனை மஹாபலியாகப் பிறப்பித்தவன்; (* எலியை மஹாபலியாகப் பிறப்பித்ததைத் தேவாரத்தில் காண்க. அப்பர் தேவாரம் - 4.49.8 - "நிறை-மறைக்காடு-தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் கறைநிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகமெல்லாம் குறைவறக் கொடுப்பர் போலும்");
தொழுது உருகு அடியார் வேண்டியது ஈபவன் - துழுது உருகும் அடியவர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் தருபவன்; (அப்பர் தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்"); (உருகடியார் - வினைத்தொகை - உருகு + அடியார்; இதனை ஒத்த ஒரு பிரயோகம்: "விரும்படியார் = விரும்பு + அடியார்". திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 9 - "கடலமுதே கரும்பே விரும்படியார் எண்ணகத்தாய்");
விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - விரிந்த சோலை சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்; (* வழித்துணைநாதர் - விரிஞ்சிபுரத்து ஈசன் திருநாமம்);
2)
சூள்பிழை சுந்தரர் கண்மறைப் பித்துச்
.. சொற்றமிழ் மாலைகள் கேட்டருள் செய்தான்;
ஆள்பர மாவென அடியிணை போற்றும்
.. அடியவர் இடர்களை அகற்றிடும் அண்ணல்;
நீள்கயி லைக்கிறை; நெற்றியிற் கண்ணன்;
.. நின்மலன்; விரைமலர்க் கணைதனை எய்த
வேள்பட விழித்தவன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
சூள் பிழை சுந்தரர் கண் மறைப்பித்துச், சொற்றமிழ்-மாலைகள் கேட்டு அருள்செய்தான் - சங்கிலியார்க்குச் செய்த சபதத்தை மீறியதால் சுந்தரர் இருகண்களிலும் பார்வை இழந்து, பல பதிகங்கள் பாடி மீண்டும் பார்வை பெற்றதைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.89.1 - “பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய்”);
"ஆள் பரமா" என அடியிணை போற்றும் அடியவர் இடர்களை அகற்றிடும் அண்ணல் - "என்னை ஆண்டருள் பரமனே" என்று இருதிருவடிகளைப் போற்றும் பக்தர்களது துன்பங்களைத் தீர்க்கும் தலைவன்;
நீள்கயிலைக்கு இறை - கயிலைநாதன்;
நெற்றியில் கண்ணன் - நெற்றிக்கண்ணன்;
நின்மலன் - பரிசுத்தன்;
விரைமலர்க்கணைதனை எய்த வேள் பட விழித்தவன் - வாசமலரம்பை எய்த மன்மதன் அழிய அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;
விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - விரிந்த சோலை சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்;
3)
ஆணியை ஆரழல் போற்றிகழ் மேனி
.. அண்ணலைப் போற்றிய அன்பும னத்து
மாணியைக் கொன்றிட வந்தடை கூற்றைக்
.. குரைகழல் கொண்டுதை செய்துயிர் காத்தான்;
கோணிய வான்பிறை கொக்கிற கரவம்
.. கூவிளம் குரவொடு கொன்றையும் ஏறும்
வேணியில் ஆற்றினன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
ஆணியை, ஆரழல் போல் திகழ் மேனி அண்ணலைப் போற்றிய அன்பு மனத்து மாணியைக் கொன்றிட வந்தடை கூற்றைக் குரைகழல் கொண்டு உதைசெய்து உயிர் காத்தான் - ஆணிப்பொன் போன்றவனைத், தீப்போன்ற செம்மேனி உடைய பெருமானைப் போற்றிய அன்பு மிகுந்த மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய காலனை ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் உதைத்துத், தன் பக்தரது உயிரைக் காத்தவன்; (ஆணி - பொன்னின் மாற்று அறிதற்கு வைத்திருக்கும் மாற்றுயர்ந்த பொன்; தனக்கு உவமையில்லாதான் என்னும் கருத்தில் இறைவனுக்குப் பெயராயிற்று); (மாணி - மார்க்கண்டேயர்);
கோணிய வான்பிறை கொக்கிறகு அரவம் கூவிளம் குரவொடு கொன்றையும் ஏறும் வேணியில் ஆற்றினன் - வளைந்த அழகிய பிறை, கொக்கின் இறகு, பாம்பு, வில்வம், குராமலர் இவற்றைச் சூடிய சடையில் கங்கையையும் அணிந்தவன்; (கோணுதல் - வளைதல்); (வான் - வானம்; அழகு); (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்கு வடிவுடைய குரண்டாசுரன் என்றவனை அழித்ததன் அடையாளம்); (கூவிளம் - வில்வம்); (குரவு - குராமலர்); (வேணி - சடை);
விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - விரிந்த சோலை சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்;
4)
புள்ளதன் மிசையமர் கரியவன் வயல்கள்
.. புடையணி மிழலையில் ஆழியை வேண்டிக்
கள்வடி தாமரை ஆயிரம் இட்டுக்
.. கைதொழக் கண்டது நல்கிய ஈசன்;
கள்வர்கள் ஐவர்செய் கலக்கம ழித்துக்
.. கழலிணை தொழுபவர்க் காத்தருள் அண்ணல்;
வெள்விடை ஊர்தியன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
புள்-அதன்மிசை அமர்- கரியவன் - கருடவாகனம் உடைய கரிய திருமால்; (புள் - பறவை);
வயல்கள் புடையணி மிழலையில் ஆழியை வேண்டிக் - வயல் சூழ்ந்த திருவீழிமிழலையில் சக்கராயுதத்தை அடைய விரும்பி; (ஆழி - சக்கரம்); (வேண்டுதல் - விரும்புதல்);
கள் வடி தாமரை ஆயிரம் இட்டுக் கைதொழக் கண்டு அது நல்கிய ஈசன் - தேன் வடியும் ஆயிரம் தாமரைப்பூக்களால் வழிபாடு செய்யக் கண்டு இரங்கி அதனை ஈந்த ஈசன்;
கள்வர்கள் ஐவர்செய் கலக்கம் அழித்துக் கழலிணை தொழுபவர்க் காத்தருள் அண்ணல் - ஐந்து புலன்கள் செய்யும் கலக்கத்தை அழித்து அடியவர்களைக் காத்து அருள்கின்ற பெருமான்; (பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம்வேற்றுமைத்தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு. அவ்வாறு, "தொழுபவர்க் காத்தருள் அண்ணல்" என்று இரண்டாம்வேற்றுமைத்தொகையில் "க்" என்ற வல்லொற்று மிக்கது);
வெள்விடை ஊர்தியன் - வெள்ளை ஏற்றை வாகனமாக உடையவன்;
விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - விரிந்த சோலை சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்;
5)
நண்ணலர் முப்புரம் நொடியினில் வேவ
.. நக்கவன்; நரைவிடை ஊர்தியன்; ஒருபால்
பெண்ணமர் மேனியன்; பேசுதற் கரிய
.. பெருமையன்; ஆயிரம் பேருடைப் பெருமான்;
மண்ணவர் வானவர் மாமலர் தூவி
.. மலரடி வாழ்த்திட வரமருள் வள்ளல்;
விண்ணுயர் திண்மதில் விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
நண்ணலர் முப்புரம் நொடியினில் வேவ நக்கவன் - பகைத்த அசுரர்களது முப்புரங்களும் ஒரு நொடிப்பொழுதில் சாம்பலாகும்படி சிரித்தவன்; (நண்ணலர் - பகைவர்); (நகுதல் - சிரித்தல்);
நரைவிடை ஊர்தியன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்; (நரை - வெண்மை);
ஒருபால் பெண் அமர் மேனியன் - திருமேனியில் ஒரு பக்கத்தில் உமாதேவியைப் பாகமாக மகிழ்ந்தவன்;
பேசுதற்கு அரிய பெருமையன் - அளவு கடந்த புகழ் உடையவன்;
ஆயிரம் பேருடைப் பெருமான் - சஹஸ்ரநாமம் உடையவன்;
மண்ணவர் வானவர் மாமலர் தூவி மலரடி வாழ்த்திட வரம் அருள் வள்ளல் - மண்ணோரும் தேவரும் சிறந்த பூக்கள் தூவி மலர்ப்பாதத்தை வாழ்த்த, அவர்களுக்கு வரங்கள் அருளும் வள்ளல்;
விண்-உயர் திண்-மதில் விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - வானில் உயர்ந்த வலிய மதிலும், விரிந்த சோலையும், சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்;
6)
கானமி சைத்தடி வாழ்த்திடு வார்க்குக்
.. காசினி மீதினிப் பிறவிகள் தீர்த்து
வானம ளித்திக வாழ்விலும் இன்பம்
.. வாரிவ ழங்கிடும் மாமணி கண்டன்
ஏனம ருப்பணி மார்பினில் நூலன்
.. ஈரிரு வர்க்கறம் விரிதிரி சூலன்
மீனய னிக்கிறை விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
பதம் பிரித்து:
கானம் இசைத்து அடி வாழ்த்திடுவார்க்குக்
.. காசினி மீது இனிப் பிறவிகள் தீர்த்து,
வானம் அளித்து, இகவாழ்விலும் இன்பம்
.. வாரி வழங்கிடும் மாமணிகண்டன்;
ஏன-மருப்பு அணி மார்பினில் நூலன்;
.. ஈரிருவர்க்கு அறம் விரி திரிசூலன்;
மீன்-நயனிக்கு இறை; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபுரத்து உறை வழித்துணை தானே.
காசினி - பூமி;
ஏன மருப்பு - பன்றிக்கொம்பு;
ஈரிருவர்க்கு அறம் விரி திரிசூலன் - சனகாதியர் நால்வர்க்கு மறைப்பொருளை உபதேசித்த சூலபாணி; (விரித்தல் - விளக்கியுரைத்தல்);
மீன்-நயனி - மீன் போன்ற கண்ணை உடையவள் - உமாதேவி; (அப்பர் தேவாரம் - 6.42.1 - "மைத்தான நீள்நயனி பங்கன்");
இறை - கணவன்;
7)
சூல(ம்)ம ழுப்படை தாங்கிய கையன்;
.. தோளிரு நான்கினன்; சூரனைச் செற்ற
வேலனைப் பயந்தவன்; கண்ணுதல் அண்ணல்;
.. வெல்விடைக் கொடியினன்; வேயன தோளி
சேலன கண்ணுமை பங்கமர் செல்வன்;
.. சிலையென மலைதனை ஏந்திய வீரன்;
மேலவர் தம்மிறை; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
சூல(ம்) மழுப்படை தாங்கிய கையன்; - சூலமும் மழுவாயுதமும் ஏந்தியவன்;
தோள் இருநான்கினன் - எட்டுப்-புஜங்கள் உடையவன்;
சூரனைச் செற்ற வேலனைப் பயந்தவன் - சூரபதுமனை அழித்த முருகனைப் பெற்றவன்; (பயத்தல் - பெறுதல்; கொடுத்தல்);
கண்ணுதல் அண்ணல் - நெற்றிக்கண்ணன்;
வெல்விடைக் கொடியினன் - வெற்றியுடைய இடபக்கொடி உடையவன்;
வேய் அன தோளி சேல் அன கண் உமை பங்கு அமர் செல்வன் - மூங்கில் போன்ற புஜமும் சேல்மீன் போன்ற கண்ணும் உடைய உமையம்மையை ஒரு பங்காக விரும்பிய செல்வன்;
சிலையென மலைதனை ஏந்திய வீரன் - மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்; (சிலை - வில்);
மேலவர்தம் இறை - வானவர்கோன் - தேவர்கள் தலைவன்;
விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - விரிந்த சோலை சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்;
8)
கேள்வியர் நாள்தொறும் வினைகெடப் போற்றும்
.. கேடிலி; மன்றினில் ஆடிய பாதன்;
தோள்வலி யால்மலை தூக்கிய வன்றன்
.. சுடர்முடி பத்தையும் நெரித்திசை கேட்டான்;
தாள்பணி யாதவன் னெஞ்சின னாகித்
.. தருக்கிய தக்கனின் தலையைய ரிந்து
வேள்விய ழித்தவன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
கேள்வியர் நாள்தொறும் வினை கெடப் போற்றும் கேடிலி - வேதம் கற்றவரும் கேள்விஞானம் உடையவரும் தம் வினையெல்லாம் அழியத் தினமும் போற்றும் அழிவற்றவன்; (கேள்வியர் - வேதம் கற்றவர்; கேள்வி ஞானம் மிக்கவர்); (கேடிலி - அழிவற்றவன்);
மன்றினில் ஆடிய பாதன் - அம்பலத்தில் கூத்து ஆடுபவன்;
தோள்வலியால் மலை தூக்கியவன்-தன் சுடர்முடி பத்தையும் நெரித்து இசை கேட்டான் - புஜபலத்தால் கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனது மணிமுடி அணிந்த தலைகள் பத்தையும் நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டு அருளியவன்;
தாள் பணியாத வன்னெஞ்சினன் ஆகித் தருக்கிய தக்கனின் தலையை அரிந்து வேள்வி அழித்தவன் - ஆணவத்தால் ஈசனுக்கு அவி கொடாமல் வேள்விசெய்த கல்மனம் உடைய தக்கனது தலையை அறுத்து, அவன் செய்த வேள்வியை அழித்தவன்;
விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - விரிந்த சோலை சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்;
9)
சந்திர சேகரன்; சதுர்மறை நாவன்;
.. தருக்கொடு நான்பரம் நான்பரம் என்று
முந்தயன் மாலிவர் வாதிடுங் கால்தன்
.. முடியடி தேடிட மூளெரி யானான்;
சந்ததம் நறுமலர் பலகொடு போற்றித்
.. தாள்தொழும் அடியவர் தமக்கருள் செய்து
வெந்துயர் தீர்ப்பவன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
தருக்கொடு, "நான் பரம், நான் பரம்" என்று முந்து அயன் மால் இவர் வாதிடுங்கால் தன் முடியடி தேடிட மூள் எரி ஆனான் - ஆணவத்தோடு, "நானே பரம்பொருள், நானே பரம்பொருள்" என்று முன்னர்ப் பிரமனும் திருமாலும் வாதிட்ட சமயத்தில் தன்னுடைய அடியையும் முடியையும் அவர்கள் தேடும்படி மூண்ட ஜோதிவடிவினன்; (தருக்கு - ஆணவம்);
சந்ததம் நறுமலர் பலகொடு போற்றித் தாள் தொழும் அடியவர் தமக்கு அருள் செய்து வெந்துயர் தீர்ப்பவன் - எப்பொழுதும் வாசமலர்கள் பலவற்றால் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிந்து அவர்களுடைய கொடிய துயரங்களை நீக்குபவன்;
10)
எவ்வழி நல்வழி என்றறி யாமல்
.. இடர்மிகு புன்னெறி உழல்பவர் சொல்லும்
அவ்வழி அல்வழி; அஃதடை யேன்மின்;
.. அருவமும் உருவமும் ஆயவன்; அன்பால்
கொவ்வைநி கர்த்தசெவ் வாயுமை யாளைக்
.. கூறும கிழ்ந்தவன்; கும்பிடு வார்தம்
வெவ்வினை தீர்ப்பவன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
புன்னெறி - புன்மையான மார்க்கம்;
அவ்-வழி அல்-வழி = அந்த நெறியல்லாத நெறி = அந்தத் தீநெறி; (அல்வழி - தகாத வழி; நெறியல்லாத நெறி);
அஃது அடையேன்மின் - அதனை நீங்கள் அடையவேண்டா; (மின் - முன்னிலைப் பன்மை விகுதி);
கொவ்வை நிகர்த்த செவ்வாய் உமையாளைக் கூறு மகிழ்ந்தவன் - கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயை உடைய உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவன்;
வெவ்வினை - கொடிய வினை;
11)
மடமணி மங்கையை வாம(ம்)ம கிழ்ந்து
.. வளர்சடை மேலலை வானதி வைத்தான்;
வடமணி போலிள நாகம ணிந்து
.. மழவிடை ஏறியுண் பலிக்குழல் செல்வன்;
நடமணி அரங்கெனச் சுடலைய தாக
.. நள்ளிருட் கூத்தினன்; வானவர் வாழ
விடமணி மிடறினன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.
பதம் பிரித்து:
மட-மணி-மங்கையை வாம(ம்) மகிழ்ந்து,
.. வளர்சடைமேல் அலை- வான்நதி வைத்தான்;
வடம் அணி போல் இள-நாகம் அணிந்து,
.. மழவிடை ஏறி, உண்பலிக்கு உழல் செல்வன்;
நட-மணி-அரங்கு எனச் சுடலையது ஆக,
.. நள்ளிருள் கூத்தினன்; வானவர் வாழ
விடமணி மிடறினன்; விரிபொழில் சூழ்ந்த
.. விரிஞ்சிபுரத்து உறை வழித்துணை தானே.
மட-மணி-மங்கையை வாம(ம்) மகிழ்ந்து, வளர்சடைமேல் அலை- வான்நதி வைத்தான் - அழகிய மரகதாம்பிகையை இடப்பாகமாக மகிழ்ந்து, வளரும் சடைமேல் அலைக்கும் கங்கையை அணிந்தவன்; (மடம் - அழகு; மென்மை); (மணி - நவரத்தினம் - இங்கே மரகதம்); (மடமணிமங்கை - 1. மட மணிமங்கை; 2. மடம் அணி மங்கை); (* மரகதாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);
வடம் அணி போல் இள-நாகம் அணிந்து, மழவிடை ஏறி, உண்பலிக்கு உழல் செல்வன் - மணிமாலையும் ஆபரணமும் போல இளம்பாம்பை அணிந்து, இளைய எருதின்மேல் ஏறிப், பிச்சைக்குத் திரியும் செல்வன்; (வடமணிபோல் - 1. வடமும் அணியும் போல் (உம்மைத்தொகை); 2. "அணிவடம் போல்" என்று மாற்றிக்கொண்டால் - அணிகின்ற மாலைபோல, அழகிய மாலைபோல); (வடம் - சரம்; மணிவடம்); (மழ - இளைய); (உண்பலி - பிச்சை);
நட-மணி-அரங்கு எனச் சுடலையது ஆக நள்ளிருள் கூத்தினன் - சுடுகாடே நாட்டியம் ஆடும் அழகிய அரங்கு என்று ஆக நள்ளிருளில் கூத்து ஆடுபவன்;
வானவர் வாழ விடமணி மிடறினன் - தேவர்கள் உய்யும்படி ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (விடமணி - 1. விடம் அணி (விடத்தை அணிந்த); 2. விட மணி (விடத்தால் ஆன மணி); (மிடறினன் - மிடற்றினன்; ஓசை கருதி மிடறினன் என்று வந்தது; இப்பிரயோகத்தைத் திருமுறைகளில் காணலாம்);
விரிபொழில் சூழ்ந்த விரிஞ்சிபுரத்து உறை வழித்துணைதானே - விரிந்த சோலை சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் உறையும் வழித்துணைநாதன்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment