Monday, January 18, 2021

P.252 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - அம்பெய்த மன்மதன்

2014-11-03

P.252 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

-----------------------

(கட்டளைக் கலித்துறை. திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம் என்ற அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய்")


1)

அம்பெய்த மன்மதன் ஆகம் அழிய அனல்விழித்த

நம்பன் மலைமகள் நாதன் சடைமிசை நச்சரவம்

வம்பவிழ் கொன்றை மலர்புனை மைந்தன் மகிழுமிடம்

பைம்பொழி லிற்குயில் பண்பயில் பாண்டிக் கொடுமுடியே.


அம்பு எய்த மன்மதன் ஆகம் அழிய அனல்விழித்த நம்பன் - அம்பை எய்த காமனுடைய உடல் அழியும்படி நெற்றிக்கண்ணால் நோக்கிய சிவன்; (ஆகம் - உடல்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);

மலைமகள்-நாதன் - உமைகோன்;

சடைமிசை நச்சரவம் வம்பு அவிழ் கொன்றைமலர் புனை மைந்தன் மகிழும் இடம் - சடைமேல் விஷப்பாம்பு, மணம் பரப்பும் கொன்றைமலர் இவற்றை அணிந்த அழகன் விரும்பி உறையும் தலம்; (வம்பு - வாசனை); (மைந்தன் - அழகன்; வீரன்);

பைம்பொழிலில் குயில் பண் பயில் பாண்டிக்-கொடுமுடியே - அழகிய சோலையில் குயில்கள் இசை பாடும் பாண்டிக்கொடுமுடி;


2)

கசிமனத் தப்பர்க்கு ஞீலி வழிதனிற் காத்திருந்து

பசியற அன்னமும் நீரும் அளித்த பரிவுடையான்

நிசியினிற் கானில் நிருத்தம் புரியும் நிமலனிடம்

பசிய வயல்கள் புடைசூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே.


கசி மனத்து அப்பர்க்கு ஞீலி வழிதனில் காத்திருந்து பசி அற அன்னமும் நீரும் அளித்த பரிவு உடையான் - கசிந்து உருகும் மனத்தை உடைய திருநாவுக்கரசருக்குத் திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் பொதிசோறும் நீரும் அளித்துப் பசிவருத்தத்தைத் தீர்த்த அன்புடையவன்; (* இந்த நிகழ்ச்சியைப் பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் புராணத்தில் காண்க);

நிசியினில் கானில் நிருத்தம் புரியும் நிமலன் இடம் - இருளில் சுடுகாட்டில் திருநடம் செய்யும் தூயன் உறையும் தலம்; (கான் - காடு - சுடுகாடு); (நிருத்தம் - கூத்து);

பசிய வயல்கள் புடைசூழ்ந்த பாண்டிக்-கொடுமுடியே - பசுமையான வயல்கள் சூழ்ந்த பாண்டிக்கொடுமுடி;


3)

பொங்கர வம்புனல் பொன்திகழ் கொன்றை புனைமுடியான்

மங்கையைப் பங்கில் மகிழ்கின்ற மைந்தன் மணமலரால்

ஐங்கரன் வேலவன் அன்பொடு போற்றிடும் அப்பனிடம்

பைங்கிளி கள்பயில் காவணி பாண்டிக் கொடுமுடியே.


பொங்கு-அரவம், புனல், பொன் திகழ் கொன்றை புனை முடியான் - சீறும் பாம்பையும் கங்கையையும் பொன்னிறம் உடைய கொன்றைப்பூவையும் தலையில் சூடும் பெருமான்;

மங்கையைப் பங்கில் மகிழ்கின்ற மைந்தன் - அர்த்தநாரீஸ்வரன்; (மைந்தன் - அழகன்; வீரன்);

மணமலரால் ஐங்கரன் வேலவன் அன்பொடு போற்றிடும் அப்பன் இடம் - வாசமலர்களால் கணபதியும் முருகனும் போற்றும் தந்தை உறையும் தலம்;

பைங்கிளிகள் பயில் கா அணி பாண்டிக்-கொடுமுடியே - அழகிய கிளிகள் ஒலிக்கும் (/தங்கும்) சோலைகள் சூழ்ந்த திருப்பாண்டிக்கொடுமுடி; (பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்);


4)

வேய்புரை தோளியை மேனியிற் பாதி விரும்புமரன்

ஆய்மலர் தூவி அடியிணை போற்றும் அடியவர்மேல்

பாய்நமன் மார்பில் பதமலர் வீசு பரமனிடம்

பாய்புனற் காவிரிப் பாங்கரிற் பாண்டிக் கொடுமுடியே.


வேய் புரை தோளியை மேனியில் பாதி விரும்பும் அரன் - மூங்கில் போன்ற புஜம் உடைய பார்வதியை ஒரு பாகமாக உடைய ஹரன்; (வேய் - மூங்கில்); (புரைதல் - ஒத்தல்);

ஆய்மலர் தூவி அடியிணை போற்றும் அடியவர்மேல் பாய் நமன் மார்பில் பதமலர் வீசு பரமன் இடம் - ஆய்ந்து எடுத்த சிறந்த பூக்களைத் தூவி இருதிருவடிகளை வழிபடும் அடியார்மேல் பாய்ந்த காலனது மார்பில் கழலை வீசி உதைத்த பரமன் உறையும் தலம்;

பாய்-புனற் காவிரிப் பாங்கரில் பாண்டிக்-கொடுமுடியே - பாய்கின்ற காவிரிநதியின் பக்கத்தில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி; (பாங்கர் - பக்கம்);


5)

நடித்திடும் பாதன் நதிபுனை நாதன் நரைவிடையான்

அடித்தலம் பற்றி அமரர் இறைஞ்ச அருவிடத்தை

மடுத்து மிடற்றினில் வைத்தருள் ஈசன் மகிழுமிடம்

படித்துறை ஆர்பொன்னிப் பாங்கரிற் பாண்டிக் கொடுமுடியே.


நடித்திடும் பாதன் - கூத்தாடும் திருப்பாதன்;

நதி புனை நாதன் - கங்கையை அணிந்த நாதன்;

நரைவிடையான் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்; (நரை - வெண்மை);

அடித்தலம் பற்றி அமரர் இறைஞ்ச அருவிடத்தை மடுத்து மிடற்றினில் வைத்தருள் ஈசன் மகிழும் இடம் - திருவடியைப் பற்றித் தேவர்கள் வேண்ட, இரங்கிக் கொடிய விஷத்தை உண்டு கண்டத்தில் வைத்தருளிய ஈசன் விரும்பி உறையும் தலம்; (௳டுத்தல் - உண்தல்); (மிடறு - கண்டம்);

படித்துறை ஆர் பொன்னிப் பாங்கரில் பாண்டிக்-கொடுமுடியே - படித்துறைகள் திகழும் காவிரிநதியின் பக்கத்தில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி; (பாங்கர் - பக்கம்);


6)

நீரொளி வேணியன் நெற்றியிற் கண்ணன் நிழல்மழுவன்

பேரொளி மேனியிற் பெண்ணொரு கூறெனப் பேணியவன்

காரொளிர் கண்டன் கதிர்மதித் துண்டன் கருதுமிடம்

பாரொடு விண்ணும் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியே.


நீரொளி வேணியன் - 1. நீரை ஒளித்த வேணியன் - கங்கையைச் சடையில் கரந்தவன்; 2. கங்கையை அணிந்த ஒளியுடைய சடையினன்; (ஒளித்தல் - மறைத்தல்); (வேணி - சடை); (அப்பர் தேவாரம் - 4.76.9 - "கிளரொளிச் சடையினீரே");

நெற்றியில் கண்ணன் - நெற்றிக்கண்ணன்;

நிழல்-மழுவன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்; (நிழல் - ஒளி);

பேரொளி மேனியில் பெண்ரு கூறு எனப் பேணியவன் - ;

கார் ஒளிர் கண்டன் - கருமை ஒளிர்கின்ற கண்டத்தை உடையவன்;

கதிர்மதித் துண்டன் - கதிர் வீசும் சந்திரனைச் சூடியவன்;

கருதும் இடம் - அப்பெருமான் விரும்பி உறையும் தலம்;

பாரொடு விண்ணும் பணிந்தேத்தும் பாண்டிக்-கொடுமுடியே - மண்ணோரும் விண்ணோரும் வழிபாடு செய்யும் திருப்பாண்டிக்கொடுமுடி;


7)

மத்திடு வாரியில் மாவிடம் தோன்ற மனங்கலங்கி

உத்தம னேயருள் ஓலமென் றும்பர்கள் ஓடிவர

அத்துயர் தீர்த்துநஞ் சார்ந்திருள் கண்டன் அமருமிடம்

பத்தர் குழாங்கள் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியே.


மத்திடு வாரியில் மா-விடம் தோன்ற தோன்ற மனங்கலங்கி - கடைந்த கடலில் கொடிய நஞ்சு எழவும், மிகவும் அஞ்சி; (மத்திடுதல் - கடைதல்); (வாரி - கடல்);

"உத்தமனே; அருள்; ஓலம்" என்று உம்பர்கள் ஓடிவர - "உத்தமனே! காத்தருள்! ஓலம்!" என்று கூவித் தேவர்கள் ஓடிவந்து வணங்க; (உம்பர் - தேவர்);

அத்துயர் தீர்த்து நஞ்சு ஆர்ந்து இருள்-கண்டன் அமரும் இடம் - அத்துன்பத்தைப் போக்கி, அந்த விஷத்தை உண்டு, அதனால் கறுத்த கண்டத்தை உடையவன் விரும்பி உறையும் தலம்; (ஆர்தல் - உண்ணுதல்); (அமர்தல் - விரும்புதல்);

பத்தர்-குழாங்கள் பணிந்தேத்தும் பாண்டிக்-கொடுமுடியே - அன்பர் திருக்கூட்டங்கள் வந்து வணங்கும் திருப்பாண்டிக்கொடுமுடி;


8)

துணிந்து திருமலை தூக்கிய வன்றன் சுடர்மணிகள்

அணிந்த முடிபத் தடர்த்துப் பெயரும் அருள்புரிந்தார்

மணந்த மடந்தையை வாமம் மகிழண்ட வாணரிடம்

பணிந்தவர் பாவங்கள் பாற்றிடும் பாண்டிக் கொடுமுடியே.


துணிந்து திருமலை தூக்கியவன்தன் சுடர்மணிகள் அணிந்த முடி பத்து அடர்த்துப் பெயரும் அருள்புரிந்தார் - துணிச்சலோடு கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இலங்கை-மன்னனான தசமுகனுடைய ஒளிவீசும் மணிகள் பதித்த கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கிப், பின் அவன் அழுது இசைபாடித் தொழக் கேட்டு இரங்கி அவனுக்குப் பெயரும் அருளியவர்; (* தசமுகனுக்கு இராவணன் (அழுதவன்) என்ற பெயரைக் கொடுத்தவன் சிவபெருமான்); (சுந்தரர் தேவாரம் - 7.68.9 - இலங்கை வேந்தன் .. .. நீள்முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்தின்னிசை கேட்டு வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை");

மணந்த மடந்தையை வாமம் மகிழ் அண்டவாணர் இடம் - உமாதேவியை இடப்பாகமாக உடையவர்; அண்டம் முழுவதும் வாழும் அவர் உறையும் தலம்; (வாமம் - இடப்பக்கம்);

பணிந்தவர் பாவங்கள் பாற்றிடும் பாண்டிக்-கொடுமுடியே - தொழும் பக்தர்களது பாவங்களைப் போக்கும் திருப்பாண்டிக்கொடுமுடி; (பாற்றுதல் - அழித்தல்);


9)

மண்ணகழ் கேழலும் வானுயர் அன்னமும் வாடிநிற்க

விண்ணுயர் சோதியன் வெண்பொடி மேனியன் வெள்விடையன்

கண்ணமர் நெற்றியன் கங்கைச் சடையன் கருதுமிடம்

பண்ணொலி வண்டுசெய் பைம்பொழிற் பாண்டிக் கொடுமுடியே.


மண் அகழ் கேழலும் வான் உயர் அன்னமும் வாடிநிற்க விண் உயர் சோதியன் - பன்றி உருவில் மண்ணை அகழ்ந்து தேடிய திருமாலும் அன்னமாகி வானில் உயர்ந்து பறந்து தேடிய பிரமனும் அடிமுடி காணாராய் வாடும்படி விண்ணில் எல்லையின்றி நீண்ட ஜோதி வடிவினன்; (கேழல் - பன்றி);

வெண்பொடி மேனியன் - திருமேனியில் வெண்ணீற்றைப் பூசியவன்;

வெள்விடையன் - வெள்ளை எருதை வாகனமாக உடையவன்;

கண் அமர் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கங்கைச்-சடையன் கருதும் இடம் - சடையில் கங்கையை அணிந்த பெருமான் விரும்பி உறையும் தலம்;

பண்ணொலி வண்டுசெய் பைம்பொழில் பாண்டிக்-கொடுமுடியே - வண்டுகள் பல பண்களில் ரீங்காரம் செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பாண்டிக்கொடுமுடி;


10)

மாம்பழம் உண்ண மறுத்தொரு வேம்பினை வாய்மடுக்கும்

தீம்பர்கள் சொல்லும் சிறுநெறி துன்பத்தில் சேர்த்திடுமால்

ஓம்பிடு வார்க்கின்பம் நல்குமுக் கண்ணன் உறையுமிடம்

பாம்பணை யான்பிர மன்பணி பாண்டிக் கொடுமுடியே.


மாம்பழம் உண்ண மறுத்து ஒரு வேம்பினை வாய்மடுக்கும் தீம்பர்கள் சொல்லும் சிறுநெறி துன்பத்தில் சேர்த்திடுமால் - இனிய மாம்பழத்தை உண்ண மறுத்து வேப்பங்காயை உண்ணும் கீழோர் சொல்லும் புன்னெறிகள் துன்பத்தில் சேர்க்கும்; (அவர்களது பேச்சைப் பொருட்படுத்தாமல் நீங்கிச் சிவபெருமானைத் தொழுது உய்யுங்கள்); (வேம்பு - வேப்பங்காய்); (மடுத்தல் - உண்ணுதல்; வாய்மடுத்தல் - வாயினுட்கொள்ளுதல்); (தீம்பர் - கீழோர்; துஷ்டர்); (ஆல் - அசைச்சொல்);

ஓம்பிடுவார்க்கு இன்பம் நல்கும் முக்கண்ணன் உறையும் இடம் - போற்றும் பக்தர்களுக்கு இன்பம் அருளும் நெற்றிக்கண்ணன் உறையும் தலம்; (ஓம்புதல் - பேணுதல்; போற்றுதல்);

பாம்பணையான் பிரமன் பணி பாண்டிக் கொடுமுடியே - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பிரமனும் வழிபாடு செய்யும் திருப்பாண்டிக்கொடுமுடி; (பாம்பணை - நாகப்படுக்கை); (சுந்தரர் தேவாரம் - 7.48.9 - "நாரணன் பிரமன் தொழும் கறையூரிற் பாண்டிக் கொடுமுடிக் காரணா");


11)

வார்சடை அண்ணலை வாழ்த்து விசயன் மகிழ்ந்திடவே

ஓர்படை நல்கிடப் பன்றிப்பின் சென்றவர் உண்பலிக்கா

ஊர்விடை ஏறி உடைதலை ஏந்தும் ஒருவரிடம்

பார்படை நான்முகன் மால்பணி பாண்டிக் கொடுமுடியே.


வார்சடை அண்ணலை வாழ்த்து விசயன் மகிழ்ந்திடவே ஓர் படை நல்கிடப் பன்றிப்பின் சென்றவர் - நீள்சடையை உடைய ஈசனை வழிபட்ட அர்ஜுனன் மகிழுமாறு ஒப்பற்ற பாசுபதாஸ்திரத்தை அவனுக்கு அருள்செய்ய ஒரு பன்றியின்பின் வேடனாகச் சென்றவர்; (வார்தல் - நீள்தல்); (ஓர் படை - ஓர் ஆயுதம்; ஒப்பற்ற ஆயுதம் - பாசுபதாஸ்திரம்);

உண்பலிக்கா ஊர்விடை ஏறி உடைதலை ஏந்தும் ஒருவர் இடம் - பிச்சைக்காக இடபவாகனத்தில் ஏறி மண்டையோட்டைக் கையில் ஏந்துகின்ற ஒப்பற்றவர் உறையும் தலம்; (உண்பலி - பிச்சை; உண்பலிக்கா - உண்பலிக்காக; கடைக்குறை விகாரம்); (ஊர்தல் - ஏறுதல்); (உடைதலை - உடைந்த தலை - மண்டையோடு);

பார் படை- நான்முகன் மால் பணி- பாண்டிக் கொடுமுடியே - உலகைப் படைக்கும் பிரமனும் திருமாலும் வணங்கும் திருப்பாண்டிக்கொடுமுடி;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment