Tuesday, January 19, 2021

P.254 - கண்டியூர் - மண்டுகின்ற காதலால்

2014-11-25

P.254 - கண்டியூர்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

–------------------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா - அரையடி)

(சம்பந்தர் தேவாரம் - 3.52.1 - "வீடலால வாயிலாய்")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

மண்டு கின்ற காதலால் வாழ்த்தி நின்று நாள்தொறும்

தொண்டு செய்யும் அன்பரைத் தூய வானி ருத்துவான்

அண்ட ருக்கி ரங்கியே ஆல காலம் ஆர்ந்ததால்

கண்ட(ம்) நீலம் ஆனவன் கண்டி யூர்க்க பாலியே.


மண்டுகின்ற காதலால் வாழ்த்திநின்று நாள்தொறும் தொண்டு செய்யும் அன்பரைத் தூய வான் இருத்துவான் - மிகுகின்ற அன்பால் வாழ்த்தித் தினமும் தொண்டு செய்யும் பக்தர்களைச் சிவலோகத்தில் வாழவைப்பவன்; (மண்டுதல் - அதிகமாதல்; மிகுதல்);

அண்டருக்கு இரங்கியே ஆலகாலம் ஆர்ந்ததால் கண்டம் நீலம் ஆனவன் - தேவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டதால் நீலகண்டம் உடையவன்; (அண்டர் - தேவர்); (ஆர்தல் - உண்ணுதல்);

கண்டியூர்க் கபாலியே - பிரமகபாலத்தை ஏந்தியவனும் திருக்கண்டியூரில் உறைபவனுமான சிவபெருமான்; (கபாலி - கபாலத்தை ஏந்தியவன்);


2)

சந்தம் ஆர்ந்த தண்டமிழ் சாத்து கின்ற பத்தரின்

சிந்தை சேர்ந்து நிற்பவன் சேவ தேறு சேவகன்

அந்தம் ஆதி ஆனவன் அந்தி வான்நி றத்தினன்

கந்த(ம்) நாறு சோலைசூழ் கண்டி யூர்க்க பாலியே.


சந்தம் ஆர்ந்த தண்-தமிழ் சாத்துகின்ற பத்தரின் சிந்தை சேர்ந்து நிற்பவன் - சந்தம் நிறைந்த குளிர்ந்த தமிழான தேவாரம் முதலிய பாமாலைகளைத் திருவடியில் சூட்டுகின்ற பக்தர்களது மனத்தில் என்றும் இருப்பவன்; (சந்தம் - செய்யுளின் வண்ணம்); (சாத்துதல் - அணிதல்);

சேவது ஏறு சேவகன் - இடபவாகனம் உடைய வீரன்; (சே - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி); (சேவகன் - வீரன்);

அந்தம் ஆதி ஆனவன் - அனைத்திற்கும் முதலும் முடிவும் ஆனவன்;

அந்தி வான் நிறத்தினன் - மாலைநேரத்து வானம் போல் செம்மேனியன்;

கந்தம் நாறு சோலை சூழ் கண்டியூர்க் கபாலியே - வாசம் கமழும் சோலை சூழ்ந்த திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


3)

நீல மாமி டற்றினன் நீறு சாந்த மாகிடும்

கோல மார்பில் நூலினன் கோதை பாகம் ஆயினான்

சூல பாணி தாள்தொழு தொண்டர் ஆவி காத்தருள்

கால காலன் நீர்மலி கண்டி யூர்க்க பாலியே.


நீல மா மிடற்றினன் - அழகிய நீலகண்டம் உடையவன்; ("நீலம் ஆம் மிடற்றினன்" - என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம்); (மிடறு - கண்டம்);

நீறு சாந்தம் ஆகிடும் கோல மார்பில் நூலினன் - திருநீறே சந்தனம்போல் திகழும் அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (சாந்தம் - சந்தனம்); (கோலம் - அழகு);

கோதை பாகம் ஆயினான் - உமைபங்கன்; (கோதை - பெண் - பார்வதி);

சூலபாணி - திரிசூலத்தை ஏந்தியவன்;

தாள் தொழு தொண்டர் ஆவி காத்தருள் காலகாலன் - திருவடியைத் தொழுத மார்க்கண்டேயரது உயிரைக் காத்துக் காலனை உதைத்து அழித்தவன்;

நீர் மலி கண்டியூர்க் கபாலியே - நீர்வளம் மிக்க திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


4)

சாம வேத நாவினன் தாயின் நல்ல சங்கரன்

தாம மாக மாசுணம் தாங்கு கின்ற மார்பினன்

நாம(ம்) நூறு பத்தினன் நாரி பங்க மர்ந்தவன்

காம கோபன் நீர்மலி கண்டி யூர்க்க பாலியே.


சாமவேத நாவினன் - சாமவேதம் பாடியவன்;

தாயின் நல்ல சங்கரன் - தாயினும் நன்மை செய்யும் சங்கரன்;

தாமம் ஆக மாசுணம் தாங்குகின்ற மார்பினன் - மாலையாகப் பாம்பை மார்பில் அணிந்தவன்; (தாமம் - மாலை); (மாசுணம் - பாம்பு);

நாமம் நூறு பத்தினன் - ஆயிரம் பெயர்கள் உடையவன்;

நாரி பங்கு அமர்ந்தவன் - உமையை ஒரு பாகமாக விரும்பியவன்;

காமகோபன் - காமனைக் காய்ந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.68.6 - "கற்பகத்தினைக் கனகமால் வரையைக் காமகோபனைக்");

நீர் மலி கண்டியூர்க் கபாலியே - நீர்வளம் மிக்க திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


5)

திங்க ளோடு நாகமும் சேர்ந்தி லங்கு சென்னியாய்

எங்க ளுக்கி ரங்கிடாய் என்றி றைஞ்சு நாவராய்த்

தங்க ரங்கு வித்தவர் சங்க டங்கள் தீர்ப்பவன்

கங்கை யைக்க ரந்தவன் கண்டி யூர்க்க பாலியே.


"திங்களோடு நாகமும் சேர்ந்து இலங்கு சென்னியாய் - "சந்திரனும் பாம்பும் சேர்ந்திருக்கும் திருமுடியை உடையவனே;

எங்களுக்கு இரங்கிடாய்" என்று இறைஞ்சு நாவராய்த் - எங்களுக்கு இரங்குவாயாக" என்று இறைஞ்சுகின்ற நாவை உடையவர்கள் ஆகி;

ம் கரம் குவித்தவர் சங்கடங்கள் தீர்ப்பவன் - தம் கைகளைக் குவித்த பக்தர்களது கஷ்டங்களைத் தீர்ப்பவன்; (சங்கடங்கடீர்ப்பவன் = சங்கடங்கள் தீர்ப்பவன்);

கங்கையைக் கரந்தவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (கரத்தல் - மறைத்தல்);

கண்டியூர்க் கபாலியே - திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


6)

சுருதி சொல்லு(ம்) மெய்ப்பொருள் தோடி லங்கு காதினன்

குருதி யாறு பாயவே கூற்று தைத்த தாளினன்

எருது கந்த எம்மிறை ஏத்து கின்ற வண்ணமே

கருது வார்க்க ருள்பவன் கண்டி யூர்க்க பாலியே.


சுருதி சொல்லும் மெய்ப்பொருள் - வேதங்களால் சொல்லப்படும் மெய்ப்பொருள் ஆனவன்; (சுருதி - வேதம்);

தோடு இலங்கு காதினன் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;

குருதி-று பாயவே கூற்று தைத்த தாளினன் - இரத்தவெள்ளம் பாயும்படி காலனைத் திருவடியால் உதைத்தவன்;

எருது கந்த எம்றை - இடபத்தை வாகனமாக விரும்பிய எம் இறைவன்;

ஏத்துகின்ற வண்ணமே கருதுவார்க்கு அருள்பவன் - பக்தர்கள் வணங்கும் வடிவில் அருள்பவன்; (கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்); (சேரமான்பெருமாள் நாயனர் - திருக்கயிலாய ஞானஉலா - 11.8 - "எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான்");

கண்டியூர்க் கபாலியே - திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


7)

பண்பு னைந்த செந்தமிழ் பாடி னார்க்க ருத்தியால்

நண்பன் என்று தந்தவன் நட்ட மாடு சுந்தரன்

விண்ப ணிந்து போற்றவும் மேரு வில்லை ஏந்தினான்

கண்பு னைந்த நெற்றியான் கண்டி யூர்க்க பாலியே.


பண் புனைந்த செந்தமிழ் பாடினார்க்கு அருத்தியால் நண்பன் என்று தந்தவன் - தேவாரம் பாடிய சுந்தரருக்கு அன்பால் தன்னைத் தோழன் என்று தந்தவன்; (அருத்தி - அன்பு; விருப்பம்);

நட்டம் ஆடு சுந்தரன் - திருநடம் செய்யும் அழகன்; (நட்டம் - கூத்து);

விண் பணிந்து போற்றவும் மேருவில்லை ஏந்தினான் - தேவர்கள் வணங்கி இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

கண் புனைந்த நெற்றியான் - நெற்றிக்கண்ணன்;

கண்டியூர்க் கபாலியே - திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


8)

கத்தி வெற்பி டந்தவற் கானம் ஓத ஊன்றினான்

பித்தன் என்ற பேரினன் பெற்றம் ஏறு பெற்றியன்

மத்த(ம்) நாகம் ஒண்பிறை வன்னி துன்று சென்னியான்

கைத்த நஞ்சை உண்டவன் கண்டி யூர்க்க பாலியே.


கத்தி வெற்பு இடந்தவன் கானம் ஓத ஊன்றினான் - கயிலைமலையைப் பெயர்த்தவனான இராவணனைப் பாட்டுப் பாடி இறைஞ்சுமாறு திருப்-பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (இடந்தவற் கானம் ஓத - "இடந்தவனைக் கானம் ஓத" என்ற பொருளில்; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகுதலும், னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிதலும் உண்டு);

பித்தன் என்ற பேரினன் - பித்தன் (பேரருளாளன்) என்ற நாமமும் உடையவன்;

பெற்றம் ஏறு பெற்றியன் - இடபவாகனம் உடைய பெருமை உடையவன்; (பெற்றம் - எருது);

மத்தம், நாகம், ஒண்-பிறை, வன்னி, துன்று சென்னியான் - ஊமத்தமலர், பாம்பு, ஒளியுடைய பிறை, வன்னியிலை இவையெல்லாம் நெருங்கியிருக்கும் திருமுடியை உடையவன்; (மத்தம் - ஊமத்தமலர்); (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்);

கைத்த நஞ்சை உண்டவன் - கசப்பு உடைய விடத்தை உண்டவன்;

கண்டியூர்க் கபாலியே - திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


9)

விண்ணில் அன்ன மாய்உயர் வேத னோடு கேழலாய்

மண்ண கழ்ந்து தேடுமால் வாடி வாழ்த்த நின்றவன்

பெண்ணி லங்கு மேனியான் பேணு வார்ம னத்தினான்

கண்ணி லங்கு நெற்றியான் கண்டி யூர்க்க பாலியே.


விண்ணில் அன்னமாய் உயர் வேதனோடு கேழலாய் மண்கழ்ந்து தேடு-மால் வாடி வாழ்த்த நின்றவன் - வானில் அன்னப்பறவை ஆகிப் பறந்து சென்ற பிரமனும், மண்ணை அகழ்ந்து சென்ற திருமாலும், தேடிக் காணாராய் வருந்தித் துதிக்க நின்ற ஜோதிவடிவினன்;

பெண் இலங்கு மேனியான் - உமைபங்கன்;

பேணுவார் மனத்தினான் - போற்றும் அன்பர் மனத்தில் உறைபவன்;

கண் இலங்கு நெற்றியான் - நெற்றிக்கண்ணன்;

கண்டியூர்க் கபாலியே - திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


10)

ஈனம் மிக்க கொள்கையர் எத்து வார்த்தை நீங்குமின்

ஞான மூர்த்தி நல்லறம் நால்வ ருக்கு ரைத்தவன்

வானி லாவை வார்சடை வாழ வைத்த மாண்பினன்

கானில் ஆடு கண்ணுதல் கண்டி யூர்க்க பாலியே.


ஈனம் மிக்க கொள்கையர் எத்து-வார்த்தை நீங்குமின் - இழிந்த கொள்கைகளையுடையவர்கள் சொல்லும் வஞ்சகச் சொற்களை (ஏமாற்றுப்பேச்சை) மதியாமல் நீங்குங்கள்; (ஈனம் - குற்றம்); (எத்து - வஞ்சகம்);

ஞானமூர்த்தி, நல்லறம் நால்வருக்கு ரைத்தவன் - ஞானவடிவினன்; சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசித்தவன்;

வானிலாவை வார்சடை வாழவைத்த மாண்பினன் - வானத்து வெண்பிறையை நீள்சடையில் வாழுமாறு சூடிய பெருமையுடையவன்; (வானிலா - 1. வான் நிலா (வான் - ஆகாயம்; அழகு); 2. / வால் நிலா (வால் - வெண்மை; இளமை) );

கானில் ஆடு கண்ணுதல் - சுடுகாட்டில் ஆடுகின்ற நெற்றிக்கண்ணன்; (கான் - காடு - சுடுகாடு); (நுதல் - நெற்றி);

கண்டியூர்க் கபாலியே - திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


11)

ஏட்டில் இன்ற மிழ்த்தொடை ஈந்து பாண பத்திரர்

வாட்டம் நீக்கும் ஆலவாய் வள்ளல் நங்கை மாரிடம்

ஓட்டில் ஐயம் ஏற்பவன் ஓர்ம ழுப்ப டைக்கரன்

காட்டில் ஆடு கண்ணுதல் கண்டி யூர்க்க பாலியே.


ஏட்டில் இன்-தமிழ்த்தொடை ஈந்து பாணபத்திரர் வாட்டம் நீக்கும் ஆலவாய் வள்ளல் - பாணபத்திரர்க்குத் திருமுகப்பாசுரம் அளித்து அவரது வறுமையைத் தீர்த்த ஆலவாய் வள்ளல்; (இன்-தமிழ்த்தொடை - இனிய தமிழ்ச்செய்யுள்); (11.1 - "மதிமலி புரிசை மாடக் கூடல்" என்று தொடங்கும் திருமுகப்பாசுரத்தைப் பாணபத்திரர்க்கு அளித்ததைப் பெரியபுராணத்தில் சேரமான்பெருமாள் நாயனார் வரலாற்றில் காண்க);

நங்கைமாரிடம் ஓட்டில் ஐயம் ஏற்பவன் - பெண்களிடம் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்; (ஐயம் - பிச்சை);

ஓர் மழுப்படைக்கரன் - ஒப்பற்ற மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;

காட்டில் ஆடு கண்ணுதல் - சுடுகாட்டில் ஆடுகின்ற நெற்றிக்கண்ணன்;

கண்டியூர்க் கபாலியே - திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4 சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5 சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6 சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");


வி. சுப்பிரமணியன்

---------- ----------

No comments:

Post a Comment