2014-11-16
P.253 - கருவூர் (கரூர்)
--------------------------------------
(கலித்துறை - மா மா கூவிளம் மா புளிமாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.97.1 - "எய்யா வென்றி");
முற்குறிப்பு: இப்பதிகத்தில் சில பாடல்களில் - கார்வயல் சூழ்ந்த கருவூர் - என்ற சொற்றொடர் வருகின்றது. கரூர் பெரிய ஊராகிவிட்டதால், வயல்களை ஊரின் புறப்பகுதிகளிலேயே இன்று காண இயலும்.
கார்வயல் - கார் மிக்க வயல்; ("மிக்க" என்ற சொல் இசையெச்சம் - அதனை வருவித்துப் பொருள்கொள்க); (சுந்தரர் தேவாரம் - 7.84.1 - "கார்வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே");
1)
நண்ணும் அன்பர் தம்மிடர் தீர்த்து நலம்நல்கும்
அண்ணல் அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன்
எண்ணில் நாமம் ஏற்றவெம் மீசன் இடமென்பர்
கண்ணுக் கினிய காவது சூழ்ந்த கருவூரே.
நண்ணும் அன்பர்தம் இடர் தீர்த்து நலம் நல்கும் அண்ணல் - அடைந்த பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து நலம் அளிக்கின்ற தலைவன்;
அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன் - உண்ணற்கு அரிய ஆலகாலத்தை உண்ட அருளாளன்; (ஆர்தல் - உண்தல்; அணிதல்);
எண் இல் நாமம் ஏற்ற எம் ஈசன் இடம் என்பர் - எண்ணற்ற திருநாமங்களை உடைய எம் ஈசன் உறையும் தலம்;
கண்ணுக்கு இனிய காவது சூழ்ந்த கருவூரே - கண்ணுக்கு இனிமை தரும் சோலை சூழ்ந்த கருவூர் (கரூர்); (கா - சோலை; அது - பகுதிப்பொருள்விகுதி); (இந்தக் கோயிலின் பிராகாரத்தில் பல தென்னைமரங்கள், மற்ற மரங்கள், செடிகள் முதலியன காணலாம்);
2)
போற்றிப் பாடும் அன்புடை யார்க்குப் புகலானான்
ஆற்றை ஏற்ற அஞ்சடை அப்பன் அயில்வேலன்
ஏற்றுக் கொடியன் ஏந்திழை கூறன் இடமென்பர்
காற்றில் அசையும் காவது சூழ்ந்த கருவூரே.
புகல் - அடைக்கலம்;
அஞ்சடை - அம் சடை - அழகிய சடை;
அயில்வேலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (வேல் - இங்கே மூவிலைவேல் - திரிசூலத்தைச் சுட்டியது);
ஏற்றுக் கொடியன் - இடபச் சின்னம் பொறித்த கொடியை உடையவன்;
ஏந்திழை கூறன் - உமையை ஒரு கூறாக உடையவன்;
காற்றில் அசையும் காவது சூழ்ந்த கருவூரே - காற்று வீசும்போது அசைந்தாடுகின்ற சோலை சூழ்ந்த கருவூர் (கரூர்);
3)
அரவார் சடையில் அம்புலி சூடி அடிநாளும்
பரவாப் பணியும் பத்தருக் கன்பன் பலிநாடி
இரவா உழலும் எம்பெரு மான்றன் இடமென்பர்
கரவா தளிக்கும் காவது சூழ்ந்த கருவூரே.
அரவு ஆர் சடையில் அம்புலி சூடி - நாகத்தை அணிந்த சடையில் பிறையைச் சூடியவன்;
அடி நாளும் பரவாப் பணியும் பத்தருக்கு அன்பன் - திருவடியைத் தினமும் துதித்துப் பணியும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (பரவுதல் - புகழ்தல்); (பரவா - பரவி; -- செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);
பலி நாடி இரவா உழலும் எம்பெருமான்தன் இடம் என்பர் - பிச்சை விரும்பி இரந்து உழல்கின்ற எம்பெருமான் உறையும் இடம் ஆவது; (இரவா - இரந்து);
கரவாது அளிக்கும் காவது சூழ்ந்த கருவூரே - (வண்டுகளுக்குத் தேனை) வஞ்சமின்றி கொடுக்கின்ற (= தேன்மலர்கள் நிறைந்த) சோலை சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;
4)
அயில்கொள் சூலன் ஆர்கழல் பணியும் அடியார்தம்
மயல்கள் தீர்த்து வானம ளிக்கும் மணிகண்டன்
எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடமென்பர்
கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.
அயில்கொள் சூலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்;
ஆர்-கழல் பணியும் அடியார்தம் மயல்கள் தீர்த்து வானம் அளிக்கும் மணிகண்டன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியை வணங்கும் அடியவர்களது மயக்கங்களைத் தீர்த்துச் சிவலோகம் அளிக்கின்ற நீலகண்டன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (கழல் - திருவடி); (மயல்கள் - மயக்கங்கள்);
எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடம் என்பர் - முப்புரங்களை ஓர் அம்பால் எய்தவன் உறையும் தலம்;
கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கயல்மீன்கள் பாயும், நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;
5)
தவறா தென்றும் தண்டமிழ் பாடித் தனையேத்தும்
அவர்வா னுலகம் ஆள்வதற் கருளும் அழல்வண்ணன்
இவரான் ஏறும் எம்பெரு மான்றன் இடமென்பர்
கவினார் காவில் காரளி பாடு கருவூரே.
தவறாது என்றும் தண்-தமிழ் பாடித் தனை ஏத்தும் அவர் வானுலகம் ஆள்வதற்கு அருளும் அழல்வண்ணன் - மறவாமல் எந்நாளும் குளிர்ந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் தன்னைப் போற்றும் பக்தர்கள் சிவலோகம் ஆள அருள்கின்ற தீவண்ணன்; (தண்டமிழ் - தண்+தமிழ் - குளிர்ந்த தமிழ்); (அழல் - தீ);
இவர்-ஆன் ஏறும் எம்பெருமான்தன் இடம் என்பர் - இடபவாகனம் உடைய எம்பெருமானது தலம்; (இவர்தல் - ஏறிச்செலுத்துதல்); (ஆன் - பசு / இடபம்);
கவின் ஆர் காவில் கார்-அளி பாடு கருவூரே - அழகிய சோலையில் கருவண்டுகள் ஒலிக்கின்ற கருவூர் (கரூர்); (கவின் - அழகு); (கா - சோலை); (கார் - கருமை); (அளி - வண்டு);
6)
முதலும் முடிவும் ஆகிய மூர்த்தி முடிவில்லான்
நுதலிற் கண்ணன் கையினில் மூன்று நுனைவேலன்
எதிரில் லாத எம்பெரு மான்றன் இடமென்பர்
கதலி தென்னை கார்வயல் சூழ்ந்த கருவூரே.
முதலும் முடிவும் ஆகிய மூர்த்தி - ஆதியும் அந்தமும் ஆகிய கடவுள்;
முடிவில்லான் - என்றும் அழியாதவன்;
நுதலில் கண்ணன் - நெற்றிக்கண்ணன்;
கையினில் மூன்று-நுனை-வேலன் - மூன்று முனைகளை உடைய வேலை ஏந்தியவன் - திரிசூலன்;
எதிர் இல்லாத எம்பெருமான்-தன் இடம் என்பர் - ஒப்பற்ற எம்பெருமான் உறையும் தலம்; (எதிர் - ஒப்பு);
கதலி தென்னை கார்-வயல் சூழ்ந்த கருவூரே - வாழை, தென்னை, நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்; (கதலி - வாழை);
7)
வாணி லாவை வார்சடை மீது மகிழ்பெம்மான்
பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெருவான்சேர்
ஏணி ஆன எந்தையி ருக்கும் இடமென்பர்
காண இனிய காவது சூழ்ந்த கருவூரே.
வாள்-நிலாவை வார்-சடைமீது மகிழ் பெம்மான் - ஒளிவீசும் சந்திரனை நீள்சடையின்மேல் விரும்பிச் சூடிய பெருமான்; (வாணிலா - வாள் நிலா; வாள் - ஒளி); (வார்தல் - நீள்தல்); (மகிழ்தல் - விரும்புதல்);
பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெருவான் சேர்- ஏணி ஆன எந்தை - போற்றித் துதிக்கும் பக்தர்களைக் காத்துச் சிவலோகத்தில் சேர்க்கின்ற ஏணி ஆன எம் தந்தை; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்; பாதுகாத்தல்); (பெருவான் சேர் - பெரிய வானுலகத்தில் சேர்க்கின்ற);
காண இனிய காவது சூழ்ந்த கருவூரே - கண்ணுக்கு இனிமை தரும் அழகிய சோலை சூழ்ந்த கருவூர் (கரூர்); (சம்பந்தர் தேவாரம் - 2.66.4 - "காண இனியது நீறு");
8)
முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடிபத்தைத்
தனியோர் விரலை ஊன்றிய டர்த்துத் தயைசெய்தார்
இனியார் கைத்த நஞ்சணி கண்டர் இடமென்பர்
கனியார் தெங்கின் காவது சூழ்ந்த கருவூரே.
முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடி-பத்தைத் தனி ஓர் விரலை ஊன்றி அடர்த்துத் தயைசெய்தார் - சினத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறும்படி அவனது பத்துத்-தலைகளையும் ஒரே ஒரு விரலை ஊன்றி நசுக்கி அருள்செய்தவர்; (முனிவு - கோபம்; சினம்); (அடர்த்தல் - நசுக்குதல்); (தயைசெய்தல் - அருள்செய்தல்);
இனியார் - இனியவர்;
கைத்த நஞ்சு அணி கண்டர் இடம் என்பர் - கசப்புடைய ஆலகாலத்தை அணிந்த கண்டத்தை உடையவர் உறையும் தலம்; (கைத்தல் - கசத்தல்);
கனி ஆர் தெங்கின் காவது சூழ்ந்த கருவூரே - கனிகள் நிறைந்த தென்னஞ்சோலை சூழ்ந்த கருவூர் (கரூர்); (தெங்கு - தென்னை);
9)
பெரிய தேவன் பேணிடு வாரைப் பிரியாதான்
அரியும் அயனும் அன்றடி முடியை அடையாத
எரியின் உருவன் ஏறமர் ஈசன் இடமென்பர்
கரிய வண்டு காவினில் பாடு கருவூரே.
பெரிய தேவன் - மகாதேவன்;
பேணிடுவாரைப் பிரியாதான் - பக்தர்களை நீங்காமல் துணைநிற்பவன்;
அரியும் அயனும் அன்று அடிமுடியை அடையாத எரியின் உருவன் ஏறு அமர் ஈசன் இடம் என்பர் - திருமால் பிரமன் இவர்களால் முன்பு அடிமுடியை அடைய ஒண்ணாத ஜோதிவடிவினன்; இடபவாகனம் உடைய ஈசன் உறையும் தலம்;
ஏறு அமர் ஈசன் இடம் என்பர் - இடபவாகனம் உடைய ஈசன் உறையும் தலம்;
கரிய வண்டு காவினில் பாடு கருவூரே - கருவண்டுகள் சோலையில் ஒலிக்கின்ற கருவூர் (கரூர்);
10)
துரும்பைத் தோணி என்றுரை துரிசர் சொலைநீங்கும்;
விரும்பு பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி
இரும்பு வெள்ளி பொன்னெயில் எய்த இறைவன்னூர்
கரும்பார் கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே.
துரும்பைத் தோணி என்று உரை துரிசர் சொலை நீங்கும் - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் தோணி என்று ஒரு துரும்பினைப் புகழ்ந்து பேசும் குற்றமுடையவர்கள்தம் சொல்லை மதியாமல் நீங்குங்கள்;
விரும்பு- பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி - விரும்பி வழிபடும் பக்தர்களது கொடிய வினையைத் தீர்க்கும் இடபவாகனன்; (வெவ்வினை - கொடிய வினை); (விடையேறி - இடபவாகனன்);
இரும்பு வெள்ளி பொன் எயில் எய்த இறைவன்னூர் - முறையே இரும்பு, வெள்ளி, பொன் இவற்றால் செய்யப்பெற்ற கோட்டைகளான முப்புரங்களை ஒரு கணையால் எய்த இறைவன் உறையும் தலம்; (இறைவன்னூர் - இறைவன் ஊர் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);
கரும்பு ஆர்கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்புகள் நிறைந்த, நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்);
11)
மின்னற் சடையன் வெண்திரு நீறு மிளிர்மார்பன்
பன்னி நாளும் பாதமி ரண்டைப் பணிவார்தம்
இன்னல் களையும் எம்பெரு மான்றன் இடமென்பர்
கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.
மின்னற்-சடையன் - மின்னல் போல் ஒளி திகழும் சடையை உடையவன்;
வெண்-திருநீறு மிளிர்-மார்பன் - வெண்மை திகழும் திருநீறு ஒளிவீசும் மார்பை உடையவன்;
பன்னி நாளும் பாதம் இரண்டைப் பணிவார்தம் இன்னல் களையும் எம்பெருமான்தன் இடம் என்பர் - புகழ்ந்து பாடி இரு-திருவடிகளை வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் எம்பெருமானது தலம்; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);
கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்பு விளையும் நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கன்னல் - கரும்பு );
வி. சுப்பிரமணியன்
----------------- ----------------
No comments:
Post a Comment