Saturday, September 3, 2016

03.03-01 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



முற்குறிப்பு:
குறள் வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்த பாடல்கள்.



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
1) முடி
--------------
முடிமீது கங்கையலை மோதுமரன் தாளைப்
படிந்தெண்ணம் எல்லாம் முடி.



பதம் பிரித்து:
முடிமீது கங்கை அலை மோதும் அரன் தாளைப்
படிந்து, எண்ணம் எல்லாம் முடி.


முடி - 1) தலை; 2) நிறைவேற்று (To effect, accomplish);
படிதல் - வணக்கக்குறியாகக் கீழேவிழுதல் (To fall prostrate);



2) அலம்பு
--------------
அலம்பும் புனலும் அரவுமணி ஐயனடித்
தலம்போற்றி நெஞ்சை அலம்பு.



பதம் பிரித்து:
அலம்பும் புனலும் அரவும் அணி ஐயன்
அடித்தலம் போற்றி நெஞ்சை அலம்பு.


அலம்புதல் - 1) ஒலித்தல்; 2) கழுவுதல்.
அடித்தலம் - பாதம்;



3) கொல்
--------
கொல்லெமனைத் தாளால் உதைத்தானைக் கும்பிட
வல்லார்க் கிடருண்டோ கொல்.



பதம் பிரித்து:
கொல் எமனைத் தாளால் உதைத்தானைக் கும்பிட
வல்லார்க்கு இடர் உண்டோ கொல்!


கொல் - 1) கொல்லுதல்; 2) ஓர் அசைச் சொல்;



4) கல்
---------
கல்லெறியும் அன்பரையும் காக்கும் அரன்புகழைச்
சொல்ல மனமேநீ கல்.



கல் - 1) சிறு கல் (stone); 2) கற்றுக்கொள்ளுதல்;
* கல் எறிந்து வழிபட்ட அன்பர் - சாக்கிய நாயனார்;



5) பால்
----------
பால்தயிர் ஆடும் பரமன் திருவுடம்பில்
சேல்விழி மங்கையொரு பால்.



பால் - 1) பசுவின் பால்; 2) பக்கம்; பகுதி;
சேல்விழி மங்கை - சேல் மீன் போன்ற கண்களை உடைய பார்வதி;



6) படு
--------
படும்பா டெதுவும் பசுபதி தாளில்
இடுமலரால் தீர்க்கப் படும்.



படும் பாடு - அனுபவிக்கும் துன்பம்;



7) நாட்டு
-------------
நாட்டுமக்கள் போற்றும் நலம்செய் திருமறைக்
காட்டனை நெஞ்சில்நீ நாட்டு.



நாட்டு - 1) தேசத்து; 2) நாட்டுதல் - நிலைபெறச்செய்தல்;
திருமறைக்காட்டன் - திருமறைக்காடு (வேதாரண்யம்) என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவன்;



8) காட்டு
-------------
காட்டுத்தீப் போல்வினையைத் தீர்க்கநெஞ்சில் ஈசனை
நாட்டிஅன்புத் தீபத்தைக் காட்டு.



9) நாடு
----------
நாடுபல நாம்ஆண்டும் நம்மோ டெதுவரும்
கூடுவிடுங் கால்?சிவனை நாடு!



நாடு - தேசம்; விரும்பு;
நம்மோடு எது வரும் கூடு விடும் கால் - உடலை விடும்பொழுது எது நமக்குத் துணையாக வரும்?



10) அஞ்சு
---------------
அஞ்சு பொருளே தரணாகிக் காக்குமன்பர்
நெஞ்சுள் அரனெழுத் தஞ்சு!



பதம் பிரித்து:
அஞ்சு பொருள் ஏது? அரண் ஆகிக் காக்கும், அன்பர்
நெஞ்சுள் அரன் எழுத்து அஞ்சு!


அஞ்சு பொருள் - அஞ்சுகின்ற பொருள்;
அரண் - பாதுகாவல்;
அன்பர் - பக்தர்;
எழுத்து அஞ்சு - 'நமச்சிவாய' என்னும் திருவைந்தெழுத்து;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment