Tuesday, February 17, 2026

P.466 - அவிநாசி - மானன நோக்கி

2019-03-14

P.466 - அவிநாசி

-------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.38.1 - "கங்கையைச் சடையுள் வைத்தார்")

* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;


1)

மானன நோக்கி தன்னை .. மகிழ்ந்தொரு பாகம் வைத்தார்

தேனலர்க் கொன்றை வன்னி .. செஞ்சடை மீது வைத்தார்

கானையும் அரங்காக் கொண்டார் .. கடுஞ்சினத் தோடெ திர்ந்த

ஆனையின் உரிவை போர்த்தார் .. அவிநாசி அப்ப னாரே.


மான் அன நோக்கி-தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்தார் - மான் போன்ற பார்வையுடைய உமையை விரும்பி ஒரு பாகமாக உடையவர்; (அன - அன்ன - ஒத்த);

தேன் அலர்க்-கொன்றை வன்னி செஞ்சடைமீது வைத்தார் - தேன் நிறைந்த கொன்றைமலரையும் வன்னி-இலையையும் சிவந்த சடையின்மேல் அணிந்தவர்;

கானையும் அரங்காக் கொண்டார் - சுடுகாட்டையும் கூத்தாடும் அரங்காக உடையவர்; (கான் - காடு - சுடுகாடு);

கடுஞ்சினத்தோடு எதிர்ந்த ஆனையின் உரிவை போர்த்தார் - மிகுந்த கோபத்தோடு எதிர்த்துப் போரிட்ட யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்வர்; (எதிர்தல் - எதிர்த்தல்); (உரிவை - தோல்);

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


2)

நாரியைப் பாகம் வைத்தார் .. நஞ்சினைக் கண்டம் வைத்தார்

ஏரியில் முதலை உண்ட .. இளமறைச் சிறுவன் தன்னை

ஊரினர் காணு மாறே .. ஒண்டமிழ் கேட்டி ரங்கி

ஆருயிர் பிழைக்க வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


நாரியைப் பாகம் வைத்தார் - உமையை ஒரு பங்காக உடையவர்;

நஞ்சினைக் கண்டம் வைத்தார் - ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவர் - நீலகண்டர்;

ஏரியில் முதலை உண்ட இள-மறைச்-சிறுவன் தன்னை - முன்பு ஒரு நாள் ஏரியில் இருந்த முதலை உண்ட அந்தணச் சிறுவனை;

ஊரினர் காணுமாறே ஒண்-தமிழ் கேட்டு இரங்கி ஆருயிர் பிழைக்கவைத்தார் - ஊர்மக்கள் காணும்படி, சுந்தரர் பாடிய தமிழ்ப்பாமாலையைக் கேட்டு இரங்கி, மீண்டும் உயிர்பெற்று வர அருளினார்; (* சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


3)

கம்பலை செய்து வந்து .. கழலிணை போற்றி நின்ற

உம்பருக் கிரங்கி நஞ்சை .. உண்டவர் ஆடை யாக

வெம்புலித் தோலை வைத்தார் .. விரிசடை மேல்வி ளங்க

அம்புலிக் கீற்றை வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


கம்பலை செய்து வந்து கழலிணை போற்றி நின்ற - அஞ்சி நடுங்கிப் பேரொலிசெய்து வந்து அடியிணையை வழிபட்ட; (கம்பலை - அச்சம்; பேரொலி);

உம்பருக்கு இரங்கி நஞ்சை உண்டவர் - தேவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டவர்; (உம்பர் - தேவர்);

ஆடையாக வெம்புலித்தோலை வைத்தார் - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவர்;

விரிசடைமேல் விளங்க அம்புலிக் கீற்றை வைத்தார் - பிறையை விரிந்த சடையின் மீது ஒளிவீச வைத்தவர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


4)

தரையினில் ஆழி கீறிச் .. சலந்தரன் தனைத்த டிந்தார்

விரைமலி பூக்கள் தூவி .. வேண்டிய சுரர்க்கி ரங்கிப்

புரமொரு மூன்றெ ரிக்கப் .. பொன்மலை வில்லில் நாணா

அரவினை ஆர்த்த வீரர் .. அவிநாசி அப்ப னாரே.


தரையினில் ஆழி கீறிச் சலந்தரன்தனைத் தடிந்தார் - நிலத்தில் ஒரு சக்கரத்தை வரைந்து அதனைக்கொண்டு ஜலந்தராசுரனை அழித்தவர்; (ஆழி - சக்கரம்); (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

விரை மலி பூக்கள் தூவி வேண்டிய சுரர்க்கு இரங்கிப் - மணம் மிக்க மலர்களைத் தூவி வழிபட்ட தேவர்களுக்கு இரங்கி; (விரை - வாசனை); (சுரர் - தேவர்);

புரம் ஒரு மூன்று எரிக்கப் - முப்புரங்களை எரிப்பதற்காகப்;

பொன்மலை-வில்லில் நாணா அரவினை ஆர்த்த வீரர் - பொன்மயமான மேருமலையை வில்லாக்கி அதனில் நாணாகப் பாம்பைக் கட்டிய வீரர்; (நாணா - நாணாக); (சம்பந்தர் தேவாரம் - 1.82.1 - "இரும்பொன் மலைவில்லா எரியம்பா நாணில்");

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


5)

ஓரழல் வண்ண மேனி .. உடையவர் பாக மாகப்

பேரெழில் மாதை வைத்தார் .. பேய்க்கணம் சூழ வைத்தார்

நீருழல் சடையின் மீது .. நிரைமலர்க் கொன்றை வைத்தார்

ஆரழல் அங்கை வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


ஓர் அழல் வண்ண மேனி உடையவர் - ஒப்பற்ற தீவண்ண மேனியை உடையவர்;

பாகமாகப் பேரெழில் மாதை வைத்தார் - பேரழகுடைய உமையைப் பாகமாக ஏற்றவர்;

பேய்க்கணம் சூழ வைத்தார் - பூதகணங்கள் சூழ்ந்தவர்;

நீர் உழல் சடையின் மீது நிரை-மலர்க்-கொன்றை வைத்தார் - கங்கை திரிகின்ற சடைமேல் தொடுத்த கொன்றைமலரை அணிந்தவர்; (நிரை - வரிசை; நிரைத்தல் - கோத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.27.7 - "நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் தாரினார்");

ஆரழல் அங்கை வைத்தார் - கையில் நெருப்பை ஏந்தியவர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


6)

வன்புலித் தோலைச் சுற்றி .. மாசுணக் கச்சு வைத்தார்

மின்புரை இடையி னாளை .. மேனியிற் பாகம் வைத்தார்

என்பினை ஆரம் வைத்தார் .. இருங்கழல் மறவா தேத்தும்

அன்பருக் கின்பம் வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


வன்-புலித்தோலைச் சுற்றி மாசுணக் கச்சு வைத்தார் - கொடிய புலியின் தோலை ஆடையாகக் கட்டி, அதனைச் சுற்றிப் பாம்பைக் கச்சாகக் கட்டியவர்; (சுற்றுதல் - 1. உடுத்துதல்; 2. சூழ்ந்திருத்தல்);

மின் புரை இடையினாளை மேனியில் பாகம் வைத்தார் - மின்னல் போன்ற இடையை உடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர்; (மின் - மின்னல்); (புரைத்தல் - ஒத்தல்);

என்பினை ஆரம் வைத்தார் - எலும்பை மாலையாக அணிந்தவர்; (என்பு - எலும்பு); (ஆரம் - மாலை);

இருங்கழல் மறவாது ஏத்தும் அன்பருக்கு இன்பம் வைத்தார் - பெருமை மிக்க திருவடியை என்றும் மறவாமல் வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் அருள்பவர்; (இருமை - பெருமை); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - 8.4 - அடி 129-130 - "என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி");

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


7)

அருகணைந் தம்பெய் வேளை .. அங்கமி லானா வைத்தார்

பெருகிய நஞ்சைப் பார்விண் .. பேசிடு மணியா வைத்தார்

உருகிய மனத்த ராகி .. ஓதிடும் அன்பர்க் கெல்லாம்

அருவினை தீர வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


அருகு அணைந்து அம்பு எய்- வேளை அங்கம் இலானா வைத்தார் - நெருங்கி வந்து மலர்க்கணையை எய்த மன்மதனை உடலற்றவன் ஆக்கினார்; (அருகு - பக்கம்); (அணைதல் - நெருங்குதல்; சார்தல்); (வேள் - காமன்); (அங்கம் - உடல்); (இலானா - இல்லானாக);

பெருகிய நஞ்சைப் பார் விண் பேசிடு மணியா வைத்தார் - பொங்கியெழுந்த ஆலகாலத்தை மண்ணோரும் விண்ணோரும் போற்றும் கண்டத்தில் கரிய மணியாக வைத்தவர்; (பார் - பூமி); (பேசுதல் - துதித்தல்); (மணியா - மணியாக)

உருகிய மனத்தராகி ஓதிடும் அன்பர்க்கெல்லாம் அருவினை தீர வைத்தார் - மனம் உருகி வழிபாடு செய்யும் பக்தர்களுக்கெல்லாம் பழவினை தீர அருள்பவர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


8)

கரத்தினில் மழுவாள் சூலம் .. கனலெரி உடுக்கை வைத்தார்

சிரத்தினைக் கலனா வைத்தார் .. திசைகளை ஆடை வைத்தார்

உரத்தினை உன்னி ஓடி .. உயர்கயி லாயம் பேர்த்த

அரக்கனை அலற வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


கரத்தினில் மழுவாள் சூலம் கனல்-ரி உடுக்கை வைத்தார் - கையில் மழுவாயுதத்தையும் சூலத்தையும் கனல்கின்ற தீயையும் உடுக்கையையும் ஏந்தியவர்;

சிரத்தினைக் கலனா வைத்தார் - பிரமனது மண்டையோட்டை உண்கலனாக ஏந்தியவர்; (கலனா - கலனாக);

திசைகளை ஆடை வைத்தார் - திசைகளையே ஆடையாகக் கட்டியவர் (=திகம்பரர்);

உரத்தினை உன்னி ஓடி உயர்-கயிலாயம் பேர்த்த அரக்கனை அலறவைத்தார் - தன் வலிமையை எண்ணி ஓடிப்போய்க் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை (நசுக்கி) அலறச்செய்தவர்; (உரம் - வலிமை); (உன்னுதல் - எண்ணுதல்);

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


9)

கரியவன் மலரின் மேலான் .. கைதொழு தேத்த நின்ற

எரியவர் இளவெள் ளேற்றர் .. ஏந்திழை காண நட்டம்

புரிபவர் பூநீர் கொண்டு .. போற்றிசெய் அன்பர் பாவம்

அரிபவர் என்றும் இன்பர் .. அவிநாசி அப்ப னாரே.


கரியவன் மலரின்-மேலான் கைதொழுது ஏத்த நின்ற எரியவர் - திருமாலும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும் கைகூப்பி வணங்கும்படி எல்லையின்றி ஓங்கி நின்ற ஜோதி-வடிவினர்; (எரி - தீ; அவர் - பகுதிப்பொருள்விகுதி);

இள-வெள்-ஏற்றர் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர்;

ஏந்திழை காண நட்டம் புரிபவர் - உமாதேவி காணத் திருக்கூத்து ஆடுபவர்; (ஏந்திழை - பெண்); (நட்டம் - கூத்து);

பூ நீர் கொண்டு போற்றிசெய் அன்பர் பாவம் அரிபவர் - பூவாலும் நீராலும் வழிபாடு செய்யும் பக்தர்களது வினையை நீக்குபவர்; (அரிதல் - அறுத்தல்);

என்றும் இன்பர் - பேரின்ப வடிவினர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


10)

மாசினை நெஞ்சில் வைத்து .. வாயினிற் பொய்யை வைத்துப்

பேசிடும் பேயர் பேச்சைப் .. பேணிட வேண்டா நம்பி

மாசின விடையர் பாதம் .. வழிபடும் பத்தர்க் கென்றும்

ஆசிர யங்கொ டுப்பார் .. அவிநாசி அப்ப னாரே.


மாசினை நெஞ்சில் வைத்து வாயினில் பொய்யை வைத்துப் பேசிடும் - மனத்தில் வஞ்சத்தையும் வாயில் பொய்யையும் வைத்துப் பேசுகின்ற;

பேயர் பேச்சைப் பேணிட வேண்டா நம்பி - பேயர்களது பேச்சை உண்மையென்று நம்பி மதிக்கவேண்டா;

நம்பி மா-சின-விடையர் பாதம் வழிபடும் பத்தர்க்கு என்றும் ஆசிரயம் கொடுப்பார் - பெரிய, சினம் மிக்க இடபத்தை வாகனமாக உடைய ஈசனார் தம் திருவடியை விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்; (குறிப்பு : "நம்பி" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (நம்புதல் - 1. நம்பிக்கைவைத்தல்; 2. விரும்புதல்); (ஆசிரயம் - புகலிடம்; அடைக்கலம்);

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


11)

உண்மையர் உம்பர் நாதர் .. ஒலிகழல் புனைந்த பாதர்

வெண்மையி லங்கு நீற்றை .. மேனியிற் பூசி நாளும்

பண்மலி பாடல் பாடிப் .. பணிந்தெழு பத்தர் தம்மை

அண்மைய ராகிக் காப்பார் .. அவிநாசி அப்ப னாரே.


உண்மையர், உம்பர் நாதர் - மெய்ப்பொருள் ஆனவர், தேவர்களுக்கெல்லாம் தலைவர்; (உம்பர் - தேவர்);

ஒலி-கழல் புனைந்த பாதர் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியினர்;

வெண்மை இலங்கு நீற்றை மேனியில் பூசி நாளும் பண் மலி பாடல் பாடிப் பணிந்தெழு - வெண்மை திகழும் திருநீற்றை உடம்பில் பூசித் தினமும் இசையோடு தேவாரம் முதலிய பாடல்களைப் பாடி வழிபடுகின்ற;

பத்தர் தம்மை அண்மையர் ஆகிக் காப்பார் - பக்தர்களுக்கு அருகே உள்ளவர் ஆகி அவர்களைக் காப்பவர்; (அண்மை - சமீபம்)

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


N.053 - சம்பந்தர் & திருநாவுக்கரசர் துதி - காழியில் வந்த

2019-03-10

N.053 - சம்பந்தர் & திருநாவுக்கரசர் துதி - காழியில் வந்த

** அப்படிக் காசில் செப்படி வித்தை **

----------------

(ஆசிரியப்பா / அகவல்)


காழியில் வந்த கவுணியர் திலகமும்

ஆழியில் கல்லே அரும்புணை ஆகிக்

கரைசேர் நாவினுக் கரையரும் கங்கைத்

திரையணி முடியன் குரைகழல் போற்றி

அழகிய வீழி மிழலை அதனில் 5

பழவடி யார்கள் பலர்புடை சூழத்

தனித்தனி மடங்களில் இனிதுறைந் திருந்தார்;

சிலநாள் சென்றபின் சலமது பொன்னியில்

இலையென் றாகி உலகினில் மாரியின்

நிலையும் அதுவாய் நிலம்புல மெல்லாம் 10

பயிர்கள் குன்றி உயிர்கள் வாடி

அஞ்சிடு மாறு பஞ்சமும் உற்றதே;

ஒருதினம் அன்பர் இருவர் கனவிலும்

இருள்மலி கண்டன் அருளினன், "உங்கள்

அடியவர்க் காகப் படிக்கா சளிப்போம்; 15

படிமிசைப் பஞ்சம் முடிவடை யும்வரை";

அந்நாள் தொடங்கிப் பொன்னா ணயத்தைக்

கிழக்கிலும் மேற்கிலும் பீடத்தில் வழங்கினான்;

பறையறி வித்துப் பிறையணி பரமன்

தொண்டருக் கெல்லாம் உண்டி இட்டனர்; 20

சண்பையர் மன்னர் தமது மடத்தில்

நண்பகல் தாண்டி உண்பது கண்டு

காரணம் வினவ, "நாரணன் அறியாத்

தீவணன் காசை ஆவண வீதியில்

வாசி படுமெனப் பேசி னார்கள்; 25

அப்பர் காசை அப்படி எவரும்

செப்பிலர்" என்றார் அப்பரி சனங்கள்;

கைத்தொண்டின் பெருமை எத்துணை என்றே

முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார்;

மற்றைநாள் கோயிலிற் கற்றைச் சடையனை 30

நற்றமிழ் கொண்டு குற்றமில் காசை

நல்கிட வேண்ட, வெல்விடை ஊர்தி

மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான்;

படிக்கா சதனால் அடியார் பசிதீர்

தாண்டக வேந்தர் தாள்மலர் வாழி 35

காழியர் கோன்கழல் வாழி வாழியே.


சில சொற்பொருள்:

அப்படிக் காசில் செப்படி வித்தை - அப்-படிக்காசில் செப்படிவித்தை; (படி - தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்; படிக்காசு - படியாகப் பெறும் காசு);

காழியில் வந்த கவுணியர் திலகமும் - சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தரும்;

ஆழியில் கல்லே அரும்-புணை ஆகிக் கரைசேர் நாவினுக்கு அரையரும் - கடலில் கல்லே அரிய தெப்பம் ஆகிக் கரையை அடைந்த திருநாவுக்கரசரும்; (ஆழி - கடல்); (புணை - தெப்பம்); (அரையர் - அரசர்);

கங்கைத்-திரை அணி முடியன் குரைகழல் போற்றி - கங்கையின் அலையை முடியில் அணிந்த பெருமானது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டு; (திரை - அலை);

சலம் அது பொன்னியில் இலை என்று ஆகி - காவிரியில் நீர் வறண்டு; (சலம் - ஜலம்); (இலை - இல்லை);

உலகினில் மாரியின் நிலையும் அதுவாய் - உலகில் மழையும் இல்லை ஆகி; (மாரி - மழை);

இருள்மலி கண்டன் - நீலகண்டன்;

படிமிசைப் பஞ்சம் முடிவடையும்வரை - உலகில் பஞ்சகாலம் முடியும்வரை; (படி - பூமி);

சண்பையர் மன்னர் - சண்பை என்ற பெயரையும் உடைய சீகாழியின் தலைவர் - திருஞான சம்பந்தர்;

நாரணன் அறியாத் தீவணன் காசை ஆவண-வீதியில் வாசி படும் எனப் பேசினார்கள் - திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினனான சிவபெருமான் உங்களுக்கு அளித்த காசைக் கடைவீதியில் உள்ளவர்கள் தரம் நிர்ணயித்து வட்டம் (discount) கழிக்கவேண்டும் என்று சொன்னார்கள்;

பரிசனங்கள் - ஏவல்செய்வோர்;

முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார் - முத்தமிழ் வல்லவரான திருஞான சம்பந்தர் மனத்தில் எண்ணினார்;

மற்றைநாள் - அடுத்தநாள்;

நற்றமிழ்-கொண்டு குற்றம் இல் காசை நல்கிட வேண்ட - நல்ல தமிழ்ப்பாமாலையால் குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள; (தாம் பாடிய நல்ல தமிழ்ப்பாமாலைகளை ஏற்றுக்கொண்டு குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே");

வெல்விடை-ஊர்தி மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் அப்படியே இனிது அருள்புரிந்தான்;

தாண்டக-வேந்தர் தாள்மலர் வாழி - தாண்டகம் பாடுவதில் வல்லவரான திருநாவுக்கரசரது பாதமலர் வாழ்க; (தாண்டகம் - திருத்தாண்டகம் - அடிகள்தோறும் எட்டுச் சீர்கள் இருக்கும் ஒரு செய்யுள் அமைப்பு); (தாண்டகவேந்தர் - திருநாவுக்கரசரைச் சுட்டும் ஒரு பெயர்); (வாழி - வாழ்க);

காழியர் கோன் கழல் வாழி வாழியே - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரது திருவடி வாழ்க வாழ்க;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.214 - பொது - தெள்ளுபுனல்

2019-03-04

T.214 - பொது - தெள்ளுபுனல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தய்யதன தனதான .. தனதான)


தெள்ளுபுனல் சொரிமாணி .. உயிர்வாழச்

.. செய்யகழல் நமன்மீது .. படவீசீ

புள்ளிதிகழ் படநாக .. அரைநாணாய்

.. புல்லுமுமை பிரியாத .. மணிமார்பா

வெள்ளமடை சடைமீது .. பிறையானே

.. மெய்யதனில் ஒளிநீறு .. புனைவோனே

நள்ளுமவர் வினைதீர .. அருள்வோனே

.. நள்ளிருளில் நடமாடு .. பெருமானே.


பதம் பிரித்து:

தெள்ளு-புனல் சொரி-மாணி .. உயிர் வாழச்

.. செய்ய-கழல் நமன்மீது .. பட வீசீ;

புள்ளி திகழ் பட-நாக .. அரைநாணாய்;

.. புல்லும் உமை பிரியாத .. மணிமார்பா;

வெள்ளம் அடை சடைமீது .. பிறையானே;

.. மெய்யதனில் ஒளிநீறு .. புனைவோனே;

நள்ளுமவர் வினை தீர .. அருள்வோனே;

.. நள்ளிருளில் நடம்-ஆடு .. பெருமானே.


தெள்ளு-புனல் சொரி மாணி உயிர் வாழச் செய்ய-கழல் நமன்மீது பட வீசீ - தெளிந்த நீரைச் சொரிந்து வழிபாடு செய்த மார்க்கண்டேயர் இறவாமல் இருப்பதற்காகச் சிவந்த திருவடியைக் காலன்மேல் படுமாறு (& காலன்மேல் அவன் அழியும்படி) வீசியவனே; (தெள்ளுதல் - தெளிவாதல்); (செய்ய - சிவந்த); (படுதல் - 1. ஒன்றன்மீது ஒன்று உறுதல்; 2. அழிதல்; சாதல்); (வீசீ - வீசியவனே என்ற விளி); (பெரியபுராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.257 - "தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்");

புள்ளி திகழ் பட-நாக அரைநாணாய் - புள்ளிகள் இருக்கும் படத்தை உடைய நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;

புல்லும் உமை பிரியாத மணிமார்பா - தழுவும் உமை என்றும் பிரியாமல் இருக்கும் அழகிய பவளம் போன்ற மார்பினை உடையவனே; (புல்லுதல் - தழுவுதல்); (மணி - அழகு; பவளம்);

வெள்ளம் அடை சடைமீது பிறையானே - கங்கையை அடைத்த சடையின்மேல் சந்திரனை அணிந்தவனே; (வெள்ளம் - நீர்ப்பெருக்கு; நீர்; - இங்கே, கங்கை);

மெய்யதனில் ஒளிநீறு புனைவோனே - திருமேனியில் ஒளிவீசும் திருநீற்றைப் பூசியவனே;

நள்ளுமவர் வினை தீர அருள்வோனே - விரும்புகின்றவர்களது (= பக்தர்களது) வினையெல்லாம் தீரும்படி அருள்பவனே; (நள்தல் - நட்டல் - விரும்புதல்; அடைதல்); (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.2 - "நள்ளேன் நினது அடியாரொடல்லால்");

நள்ளிருளில் நடம் ஆடு பெருமானே - நள்ளிரவில் கூத்தாடும் பெருமானே; (நள் - நடு);

* போற்றி என்பது குறிப்பு;


வி. சுப்பிரமணியன்

----------- --------------