2018-09-10
P.450 - நெல்வேலி (திருநெல்வேலி)
-------------------------------
(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");
(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");
1)
மழவிடை ஏறும் அழகிய மன்னே .. வார்சடை மேற்பிறை உடையாய்
அழலினை ஒத்த செவ்வண மேனி .. அதன்மிசை நீற்றனே என்று
கழலிணை தன்னிற் கடிமலர் தூவிக் .. கைதொழு தேத்திடும் அடியார்
பழவினை தீர்க்கும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
மழவிடை ஏறும் அழகிய மன்னே - இளைய இடபத்தை வாகனமாக உடைய அழகிய மன்னனே;
வார்சடைமேல் பிறை உடையாய் - நீண்ட சடைமேல் சந்திரனை அணிந்தவனே; (வார்தல் - நீள்தல்);
அழலினை ஒத்த செவ்வண மேனி அதன்மிசை நீற்றனே என்று - தீப் போன்ற செந்நிறம் திகழும் திருமேனியின்மேல் திருநீற்றைப் பூசியவனே என்று வாழ்த்தி;
கழலிணை-தன்னில் கடிமலர் தூவிக், கைதொழுது ஏத்திடும் அடியார் - இரு-திருவடிகளில் வாசமலர்களைத் தூவிக் கைகூப்பித் துதிக்கும் பக்தர்களது;
பழவினை தீர்க்கும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பழைய வினைகளைத் தீர்ப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (தீர்க்கும் - தீர்ப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று); (பாங்கர் - பக்கம்);
2)
வெற்றிவெள் விடைமேல் ஏறிய வேந்தே .. வேதம தோதிய நாவா
குற்றமில் புகழாய் கூவிளம் கொன்றை .. குரவணி சடையனே என்று
நற்றமிழ் பாடி நறுமலர் தூவி .. நாள்தொறும் ஏத்திடும் அடியார்
பற்றெலாம் பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
வெற்றி-வெள்-விடைமேல் ஏறிய வேந்தே - வெற்றியுடைய வெள்ளை இடபவாகனத்தின்மேல் ஏறிய அரசனே;
வேதம்அது ஓதிய நாவா - வேதங்களைப் பாடியருளியவனே;
குற்றம் இல் புகழாய் - குற்றமற்ற புகழை உடையவனே;
கூவிளம் கொன்றை குரவு அணி சடையனே என்று - வில்வம், கொன்றைமலர், குராமலர் இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவனே என்று சொல்லி;
நற்றமிழ் பாடி நறுமலர் தூவி நாள்தொறும் ஏத்திடும் அடியார் - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி வாசமலர்களைத் தூவித் தினமும் வழிபடும் பக்தர்களது;
பற்று எலாம் பாற்றும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பந்தங்களை எல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பற்று - அகப்பற்றுப் புறப்பற்றுகளாகிய அபிமானங்கள்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று); (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.5 - "பற்றற நான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ");
3)
மாவங்கக் கடலின் வல்விடம் உண்ட .. மணிமிடற் றண்ணலே அரனே
நாவங்கம் ஆறு நான்மறை ஓது .. நம்பனே நாதனே என்று
பூவங்கைக் கொண்டு பொற்கழல் தன்னைப் .. போற்றிடும் பொற்புடை அடியார்
பாவங்கள் பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
மா-வங்கக் கடலின் வல்விடம் உண்ட மணிமிடற்று அண்ணலே அரனே - பெரிய அலையுடைய (/ மரக்கலங்கள் செல்லும்) கடலில் தோன்றிய கொடிய நஞ்சை உண்ட நீலகண்டனே, ஹரனே; (வங்கம் - அலை; படகு; கப்பல்); (மிடறு - கண்டம்);
நா அங்கம் ஆறு நான்மறை ஓது நம்பனே நாதனே என்று - திருநாவால் நால்வேதத்தையும் ஆறங்கத்தையும் ஓதியவனே, விரும்பத்தக்கவனே, தலைவனே என்று; (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்);
பூ அங்கைக்-கொண்டு பொற்கழல் தன்னைப் போற்றிடும் பொற்புடை அடியார் - பூக்களைக் கையிற்கொண்டு ஈசனது பொன்னடியைப் போற்றி வழிபடும் குணம் உடைய பக்தர்களது; (பொற்பு - அழகு; தன்மை); (அப்பர் தேவாரம் - 5.90.5 - "பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்");
பாவங்கள் பாற்றும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பாவங்களை எல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
4)
சந்தங்கள் பாடித் தாள்தொழு மாணி .. தன்னுயிர் கொல்வதற் கெண்ணி
வந்தங்கண் சேர்ந்த மறலியைச் செற்ற .. மைந்தனே என்றுளம் உருகிச்
சிந்துங்கள் மலரைச் சேவடி இட்டுத் .. தினந்தொறும் போற்றிசெய் அடியார்
பந்தங்கள் பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
சந்தங்கள் பாடித் தாள்தொழு மாணிதன் உயிர் கொல்வதற்கு எண்ணி - வேதங்களைப் பாடித் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயரது உயிரைக் கொல்ல நினைந்து; (சந்தம் - வேதம்; சந்தப் பாடல்);
வந்து அங்கண் சேர்ந்த மறலியைச் செற்ற மைந்தனே என்று உளம் உருகிச் - அவ்விடம் வந்து சேர்ந்த நமனை உதைத்து அழித்த வீரனே என்று உள்ளம் நெகிழ்ந்து; (அங்கண் - அவ்விடம்); (மறலி - இயமன்); (செறுதல் - அழித்தல்); (மைந்தன் - வீரன்);
சிந்தும் கள் மலரைச் சேவடி இட்டுத் தினந்தொறும் போற்றிசெய் அடியார் - வாசனை கமழும் தேன் நிறைந்த பூக்களைச் சிவந்த திருவடியில் தூவித் தினமும் வழிபடுகின்ற பக்தர்களது; ( சிந்துதல் - ஒழுகுதல்; பரப்புதல்); (சிந்தும் கள் மலரை = 1. கள் சிந்தும் மலரை (தேன் ஒழுகும் பூவை); 2. மணம் சிந்தும் கள்-மலரை (வாசனை கமழும் தேன்மலரை));
பந்தங்கள் பாற்றும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பந்தங்களை எல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பந்தம் - கட்டு; வினைக்கட்டு); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
5)
வகைவகை யான மலர்களைத் தூவி .. வணங்கிய வானவர்க் கிரங்கி
நகையது கொண்டு நண்ணலர் புரங்கள் .. நாசம தாக்கினாய் என்று
புகையொடு தீபம் புதுமலர் கொண்டு .. பொன்னடி போற்றிசெய் அடியார்
பகைவினை பாற்றும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
வகைவகையான மலர்களைத் தூவி வணங்கிய வானவர்க்கு இரங்கி - பலவிதப் பூக்களைத் தூவி வணங்கிய தேவர்களுக்கு இரங்கி;
நகைஅது கொண்டு நண்ணலர் புரங்கள் நாசம்அது ஆக்கினாய் என்று - ஒரு சிரிப்பால் பகைவர்களது முப்புரங்களையும் அழித்தவனே என்று; (நகை - சிரிப்பு); (நண்ணலர் - பகைவர்); (நகையது, நாசமது - இவற்றில் "அது" என்றது பகுதிப்பொருள்விகுதி);
புகையொடு தீபம் புதுமலர் கொண்டு பொன்னடி போற்றிசெய் அடியார் - தூபம், தீபம், நாண்மலர் இவற்றால் பொன் போன்ற திருவடியை வழிபாடு செய்யும் பக்தர்களது; (புகை - தூபம்);
பகைவினை பாற்றும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - பகையான வினையையெல்லாம் அழிப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பகைவினை - 1. பகையாக உள்ள வினை; 2. பகையையும் வினையையும் என்று உம்மைத் தொகையாகவும் கொள்ளக்கூடும்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பாற்றும் - அழிப்பான்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
6)
காலனைக் காய்ந்து பாலனைக் காத்த .. கண்ணுதல் அண்ணலே ஒருபால்
சேலன கண்ணி சேர்திரு மேனிச் .. செல்வனே நல்லனே என்று
பாலன நீற்றைப் பாங்குறப் பூசிப் .. பதமலர் பணிபவர் தம்மைப்
பாலனம் செய்யும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
காலனைக் காய்ந்து பாலனைக் காத்த கண்ணுதல் அண்ணலே - காலனைச் சினந்து உதைத்துச், சிறுவரான மார்க்கண்டேயரைக் காத்த நெற்றிக்கண்ணனே;
ஒருபால் சேல் அன கண்ணி சேர் திருமேனிச் செல்வனே நல்லனே என்று - சேல்மீன் போன்ற கண்களையுடைய உமையைத் திருமேனியில் ஒரு பக்கம் பாகமாக உடைய செல்வனே, நல்லவனே, என்று சொல்லி; (அன - அன்ன - போன்ற);
பால் அன நீற்றைப் பாங்கு உறப் பூசிப் பதமலர் பணிபவர் தம்மைப் - பால் போன்ற வெண்ணிறம் உடைய திருநீற்றை அழகுறப் பூசித் திருவடித்தாமரையை வழிபடும் பக்தர்களை; (சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "சுந்தரம் ஆவது நீறு");
பாலனம் செய்யும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - காப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பாலனம் - பாதுகாத்தல்);
7)
எரியொரு கையில் ஏந்திய ஈசா .. இருளினில் திருநடம் புரிவாய்
கரியுரி போர்த்த கறையணி கண்டா .. கடும்புனற் கங்கையைக் கரந்த
புரிசடைப் பெருமான் என்றனு தினமும் .. போற்றிசெய் அடியவர் தம்மைப்
பரிவொடு காக்கும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
எரி ஒரு கையில் ஏந்திய ஈசா - ஒரு கரத்தில் தீயை ஏந்திய ஈசனே;
இருளினில் திருநடம் புரிவாய் - இரவில் கூத்து ஆடுபவனே; (புரிதல் - செய்தல்);
கரி-உரி போர்த்த கறை அணி கண்டா - யானைத்தோலை மார்புறப் போர்த்த நீலகண்டனே; (உரி - தோல்);
கடும்புனல் கங்கையைக் கரந்த புரிசடைப் பெருமான் என்று - விரைந்து வந்த கங்கையைச் சடையில் ஒளித்த பெருமானே என்று துதித்து; (கரத்தல் - மறைத்தல்); (புரிதல் - சுருள்தல்; முறுக்குக்கொள்தல்); (அப்பர் தேவாரம் - 5.79.5 -"கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்");
அனுதினமும் போற்றிசெய் அடியவர்-தம்மைப் - தினமும் வழிபடுகின்ற அடியவர்களை; (அனுதினம் - நாள்தோறும்); (உம் - அசை);
பரிவொடு காக்கும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - அன்போடு காப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பரிவு - அன்பு );
8)
விடுவிடென் றோடி வெற்பிடந் தானை .. விரல்நுதி யால்நெரி செய்தாய்
சுடுபொடி பூசிச் சுடலையில் ஆடும் .. தூயனே நாயனே என்று
தொடுமலர் மாலை துணையடிச் சாத்தித் .. தொழுதெழும் அடியவர்க் கிரங்கிப்
படுதுயர் களையும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
விடுவிடென்று ஓடி வெற்பு இடந்தானை விரல்-நுதியால் நெரி-செய்தாய் - விரைந்து ஓடிப் போய்க் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாத-விரல்நுனியால் நசுக்கியவனே; (நுதி - நுனி); (நெரிசெய்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.86.8 - "நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்");
சுடுபொடி பூசிச் சுடலையில் ஆடும் தூயனே நாயனே என்று - சுட்ட திருநீற்றைப் பூசிச் சுடுகாட்டில் ஆடுகின்ற தூயவனே, தலைவனே, என்று துதித்து; (நாயன் - தலைவன்; கடவுள்);
தொடு-மலர்மாலை துணையடிச் சாத்தித் தொழுதெழும் அடியவர்க்கு இரங்கிப் - தொடுத்த பூமாலைகளை இரு-திருவடிகளில் சூட்டி வழிபடும் பக்தர்களுக்கு இரங்கி; (சாத்துதல் - அணிதல்); (துணை - இரண்டு; உதவி; காப்பு);
படு-துயர் களையும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - அவர்கள் படுகின்ற (/ அவர்களது கொடிய) துன்பத்தைத் தீர்ப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (படு - பெரிய; கொடிய); (படுதல் - துன்பம் அனுபவித்தல்); (பரிவு - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.93.3 - "பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர்");
9)
நறைமலர் மேலான் நாரணன் இவர்கள் .. நண்ணுதற் கரும்பெருஞ் சோதீ
பறைபல ஆர்த்துப் பாரிடஞ் சூழப் .. படுபிணக் காட்டிடை ஆடீ
கறையணி கண்டா என்றடி போற்றிக் .. கைதொழும் அடியவர் வினைகள்
பறைவுற அருளும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
நறைமலர் மேலான் நாரணன் இவர்கள் நண்ணுதற்கு அரும் பெரும் சோதீ - வாசமலரான தாமரைமேல் உறையும் பிரமன், திருமால் என்ற இவ்விருவராலும் அடைய ஒண்ணாத அரிய பெரிய ஜோதியே;
பறை பல ஆர்த்துப் பாரிடம் சூழப் படுபிணக்காட்டிடை ஆடீ - பல பறைகளை முழக்கிப் பூதங்கள் சூழ, இறந்த பிணங்களையுடைய சுடுகாட்டில் திருநடம் ஆடுபவனே; (படுதல் - சாதல்); (சுந்தரர் தேவாரம் - 7.98.4 - "படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத்தான்");
கறை அணி கண்டா என்று அடி போற்றிக் கைதொழும் அடியவர் வினைகள் - நீலகண்டனே என்று திருவடியை வாழ்த்திக் கைகூப்பி வழிபடும் அடியவர்களது வினைகள் எல்லாம்;
பறைவு-உற அருளும் தாமிர பரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - அழியுமாறு அருள்வான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பறைவு - அழிவு; பறைதல் - அழிதல்);
10)
தவமென நாளும் அவ(ம்)மிகச் செய்யும் .. சழக்கர்கள் சொற்களை விடுமின்
பவளமே அனைய மேனியிற் பாவை .. பங்கனே இறைவனென் றன்பால்
சிவசிவ என்று நீற்றினைப் பூசித் .. தினமடி இணைதொழும் அடியார்
பவபயம் தீர்க்கும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
தவம் என நாளும் அவம் மிகச் செய்யும் சழக்கர்கள் சொற்களை விடுமின் - தவம் என்று எந்நாளும் மிகவும் இழிந்த செயல்களையே செய்யும் தீயவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (சழக்கன் - தீயவன்);
பவளமே அனைய மேனியில் பாவை பங்கனே இறைவன் என்று அன்பால் - பவளம் போன்ற செம்மேனியில் உமையை ஒரு பங்காக உடையவனே இறைவன் என்று தெளிந்து, அன்போடு;
சிவசிவ என்று நீற்றினைப் பூசித் தினம் அடிஇணை தொழும் அடியார் - சிவசிவ என்று சொல்லித் திருநீற்றை அணிந்து தினந்தோறும் இரு-திருவடிகளை வணங்கும் அடியவர்களது;
பவபயம் தீர்க்கும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - வினைகளை அழித்துப் பிறவிப்பிணியைத் தீர்ப்பான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்; (பவம் - பிறவி; பவபயம் - பிறவித்தொடரால் ஏற்படும் அச்சம்);
11)
துணிமதி யோடு சுழல்மலி கங்கை .. தூமலர் கூவிளம் நாகம்
அணிமுடி உடையாய் அமரர்கள் உய்ய .. அருவிடம் அமுதென உண்டு
மணியணி கண்டா மாதுமை பங்கா .. மலரடி சரணெனப் போற்றிப்
பணிபவர்க் கருளும் தாமிர பரணிப் .. பாங்கர்நெல் வேலியெம் பரனே.
துணி-மதியோடு, சுழல்-மலி கங்கை, தூ-மலர், கூவிளம், நாகம், அணி முடி உடையாய் - நிலாத்துண்டம், சுழல் மிக்க கங்கை, தூய மலர்கள், வில்வம், பாம்பு இவற்றையெல்லாம் திருமுடிமேல் அணிந்தவனே; (துணி - துண்டம்); (கூவிளம் - வில்வம்);
அமரர்கள் உய்ய அருவிடம் அமுது என உண்டு மணி அணி கண்டா - தேவர்கள் உய்வதற்காக, உண்ணற்கரிய ஆலகாலத்தை அமுதம் போல உண்டு கண்டத்தில் நீலமணியை அணிந்தவனே;
மாது உமை பங்கா - மாதொருபாகனே;
மலரடி சரண் எனப் போற்றிப் பணிபவர்க்கு அருளும் தாமிரபரணிப் பாங்கர் நெல்வேலி எம் பரனே - உன் மலர்ப்பாதமே துணை என்று போற்றி வணங்கும் அடியவர்களுக்கு அருள்வான் தாமிரபரணியின் கரையில் உள்ள திருநெல்வேலியில் உறையும் எம் பரமன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------