Saturday, September 25, 2021

P.271 - கன்றாப்பூர் - ஊண்பாறு வெண்டலையில்

2015-01-25

P.271 - கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்)

-----------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

ஊண்பாறு வெண்டலையில் உகந்தானை, ஆகத்தில்

ஆண்பாதி பெண்பாதி ஆயவனை, அரவத்தைப்

பூண்போல அணிந்தானைப், பூவிட்டுப் புகழ்ந்தேத்திக்

காண்பார்தம் நெஞ்சகலான் கன்றாப்பூர் நடுதறியே.


ஊண் பாறு- வெண்-தலையில் உகந்தானை - உடைந்த வெள்ளிய மண்டையோட்டில் உணவு விரும்பியவனை; (ஊண் - உணவு); (பாறுதல் - அழிதல்); (சுந்தரர் தேவாரம் - 7.36.5 - "பாறு வெண்டலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர்");

ஆகத்தில் ஆண் பாதி பெண் பாதி ஆயவனை - திருமேனியில் ஒரு பாதி ஆணும் ஒரு பாதி பெண்ணும் ஆனவனை; (ஆகம் - உடல்);

அரவத்தைப் பூண் போல அணிந்தானைப் - நாகாபரணனை; (அரவம் - பாம்பு); (பூண் - அணி; ஆபரணம்);

பூ இட்டுப் புகழ்ந்து ஏத்திக் காண்பார்தம் நெஞ்சு அகலான் - மலர் தூவிப் புகழ்ந்து போற்றிக் கண்டு தொழுவார்களின் நெஞ்சத்தில் நீங்காமல் உறைகின்றவன்; (காண்தல் - தரிசித்தல்; வணங்குதல்);

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்; (* நடுதறி - கன்றாப்பூரில் ஈசன் திருநாமம் "நடுதறியப்பன்"); (அப்பர் தேவாரம் - 6.61.1 - "முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக் காதன்மையால் தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே");


2)

மாதவஞ்செய் பகீரதற்கு வரமருளி வானதியைப்

பூதலத்தில் ஓடவிடு பொற்சடையன், இருநான்கு

போதகத்துக் கொண்டுதினம் பொன்னடியைப் போற்றிசெய்து

காதலிப்பார் நெஞ்சகலான், கன்றாப்பூர் நடுதறியே.


மாதவம் செய் பகீரதற்கு வரம் அருளி, வானதியைப் பூதலத்தில் ஓடவிடு பொற்சடையன் - பெருந்தவம் செய்த பகீரதனுக்கு வரம் தந்து, கங்கையை மண்ணுலகில் ஓடவிட்ட பொன் போன்ற சடையினன்; (வானதி - கங்கை);

இருநான்கு போது அகத்துக் கொண்டு தினம் பொன்னடியைப் போற்றிசெய்து காதலிப்பார் நெஞ்சு அகலான் - மலர்கள் எட்டை மனத்தில் கொண்டு (= அகமலர்கள் எட்டால்) தினமும் பொற்பாதத்தைப் போற்றி வணங்கும் அன்பர்கள் நெஞ்சில் நீங்காமல் குடிகொள்பவன்; (போது - பூ); (அப்பர் தேவாரம் - 6.34.9 - "நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" - உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியவாகும் மலர்கள் எட்டாவன "கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, வாய்மை, தவம், அன்பு" என்பன);

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;


3)

பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் தொழஉண்டு

கருகுமிட றுடையண்ணல் கல்லாலின் புடையமர்ந்தான்

உருகுமனத் தினராகி உமைபங்கன் கழலிணையே

கருதடியார் நெஞ்சிலுறை கன்றாப்பூர் நடுதறியே.


பெருகு-விடம் கண்டு அஞ்சிப் பெருந்தேவர் தொழ, உண்டு, கருகு-மிடறுடை அண்ணல் - பெருகிய ஆலகாலத்தைக் கண்டு பயந்த பெரிய தேவரெல்லாம் இறைஞ்ச, (அவர்களுக்கு இரங்கி அதனை) உண்டு, கறுத்த கண்டத்தை உடைய தலைவன்; (கருகுதல் - நிறங்கறுத்தல்; இருளுதல்); (அப்பர் தேவாரம் - 5.29.1 - "கருகு கண்டத்தன்");

கல்லாலின் புடை அமர்ந்தான் - கல்லாலமரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;

உருகு-மனத்தினர் ஆகி உமைபங்கன் கழலிணையே கருது-அடியார் நெஞ்சில் உறை - உருகும் மனம் உடையவர்கள் ஆகி உமைபங்கன் திருவடிகள் இரண்டையே எண்ணும் பக்தர்கள் நெஞ்சில் உறைகின்ற; (கருதுதல் - விரும்புதல்; சிந்தித்தல்);

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;


4)

தண்ணதிபாய் சடைமீது தளிர்மதியம் தாங்குமரன்

ஒண்ணுதலாள் மாதுமையாள் ஒருபாகம் மகிழ்பெம்மான்

கண்ணுடைய கரும்பொன்றைக் கையேந்து மன்மதனைக்

கண்ணுதலால் பொடிசெய்த கன்றாப்பூர் நடுதறியே.


தண்-நதி பாய் சடைமீது தளிர்-மதியம் தாங்கும் அரன் - குளிர்ந்த கங்கை பாயும் சடைமேல் இளந்திங்களைச் சூடிய ஹரன்;

ஒண்-நுதலாள் மாதுமையாள் ஒரு பாகம் மகிழ்-பெம்மான் - ஒளிபொருந்திய நெற்றியை உடைய மாதுமையை ஒரு பாகமாக மகிழ்ந்த பெருமான்; (நுதல் - நெற்றி); (* மாதுமை - திருக்கன்றாப்பூர் இறைவி திருநாமம்);

கண்ணுடைய கரும்பு-ஒன்றைக் கை-ஏந்து மன்மதனைக் கண்ணுதலால் பொடிசெய்த - கணுக்கள் இருக்கும் கரும்பை வில்லாகக் கையில் ஏந்திய காமனை நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கிய; ((கண் - மரக்கணு);

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;


5)

தினமலர்கள் பலதூவிச் சேவடியை வழுத்திமிக

நினையடியார் நெஞ்சத்தில் நீங்காது நின்றபரன்

சினவிடையான் திருநாமம் செபஞ்செய்ம்மார்க் கண்டர்க்காக்

கனைகழலால் நமனையுதை கன்றாப்பூர் நடுதறியே.


தினமலர்கள் பல தூவிச் சேவடியை வழுத்தி மிக நினை-டியார் நெஞ்சத்தில் நீங்காது நின்ற பரன் - தினமும் புதிய மலர்கள் பல தூவிச் சிவந்த திருவடியை வணங்கி மிகவும் எண்ணுகின்ற பக்தர்கள் நெஞ்சில் நீங்காமல் உறையும் பரமன்; (தினமலர்கள் - 1. தினம் மலர்கள் - தினந்தோறும் பூக்கள்; 2. தினமலர் = நாண்மலர் (நாள்மலர்) = "அன்று பூத்த பூ" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

சின-விடையான் - கோபம் உடைய எருதை வாகனமாக உடையவன்;

திருநாமம் செபஞ்செய்ம் மார்க்கண்டர்க்காக் கனை-கழலால் நமனை உதை - திருவைந்தெழுத்தை ஜபம் செய்த மார்க்கண்டேயருக்காகக் காலனை ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் உதைத்த; (மார்க்கண்டர்க்கா - மார்க்கண்டேயருக்காக); (நமன் - இயமன்);

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;


6)

சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்தவன்பின் மாலுக்கு

வலந்திகழ அதனையருள் மாதேவன் வார்கழலில்

நலந்திகழும் மலர்தூவி நாளு(ம்)நினை வார்நெஞ்சில்

கலந்துறையும் கண்ணுதலான் கன்றாப்பூர் நடுதறியே.


சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்தவன் - ஜலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்தவன்; (தடிதல் - வெட்டுதல்);

பின் மாலுக்கு வலம் திகழ அதனை அருள் மாதேவன் - பிறகு திருமாலுக்கு வெற்றி திகழும்படி அந்தச் சக்கரத்தை அருளிய மகாதேவன்;

வார்கழலில் நலம் திகழும் மலர் தூவி நாளு(ம்) நினைவார் நெஞ்சில் கலந்து உறையும் கண்ணுதலான் - நீண்ட கழல் அணிந்த திருவடியில் நல்ல பூக்களைத் தூவித் தினமும் தியானிக்கும் அன்பர்கள் நெஞ்சில் கலந்து உறைகின்ற நெற்றிக்கண்ணன்;

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;


7)

பெருங்களிற்றின் உரிபோர்த்த பித்தனொரு வஞ்சியன

மருங்குலுடை மலைமகளை வாமத்தில் மகிழ்பெருமான்

அருங்கலமா அஞ்செழுத்தை அணிநாவர்க் கரணாவான்

கருங்குயிலார் பொழில்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.


பெரும்-களிற்றின் உரி போர்த்த பித்தன் - பெரிய யானையின் தோலைப் போர்த்த பித்தன்; (உரி - தோல்); (பித்தன் - பேரருளாளன்);

ஒரு வஞ்சி அன மருங்குல் உடை மலைமகளை வாமத்தில் மகிழ் பெருமான் - ஒரு கொடி போன்ற இடையை உடைய உமாதேவியை இடப்பாகத்தில் விரும்பிய பெருமான்; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (அன - அன்ன - போன்ற); (மருங்குல் - இடை); (வாமம் - இடப்பக்கம்);

அருங்கலமா அஞ்செழுத்தை அணி நாவர்க்கு அரண் ஆவான் - தம் நாவில் அணிகலனாகத் திருவைந்தெழுத்தை அணிந்தவர்களுக்குப் பாதுகாவல் ஆவான்; (அருங்கலம் - அணிகலன்);

கருங்குயில் ஆர் பொழில் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - கரிய குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


8)

நீர்புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால்

ஓர்விரலை வெற்பின்மேல் ஊன்றிநெரித் திசைகேட்டான்

சீர்பரவும் யாவர்க்கும் திருவருள்செய் நம்பெருமான்

கார்வளம்சேர் வயல்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.

நீர் புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால் - நீரால் சூழப்பெற்ற இலங்கைக்கு மன்னனான இராவணன் நீண்ட மலையான கயிலையைப் பெயர்த்தபொழுது; (இடந்தக்கால் - பெயர்த்தபோழுது);

ஓர் விரலை வெற்பின்மேல் ஊன்றி நெரித்து இசை கேட்டான் - திருப்பாதவிரல் ஒன்றை அந்த மலைமேல் ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டருளியவன்; (வெற்பு - மலை); ("கால்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்து, "இடந்தக்கால், கால் ஓர் விரலை" என்று கொண்டும் பொருள்கொள்ளலாம்);

சீர் பரவும் யாவர்க்கும் திருவருள்செய் நம்பெருமான் - போற்றித் துதிக்கும் எவருக்கும் அருள்புரியும் நம்பெருமான்; (யாவர்க்கும் - எவருக்கும்; எல்லார்க்கும்);

கார்வளம் சேர் வயல் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - நீர்வளம் மிகுந்த வயல் சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (கார் - மேகம்; மழை; நீர்);


9)

புயல்வணனும் புண்டரிகப் போதினனும் அடிமுடியை

முயல்வணமோர் முடிவில்லா முழுத்தழலாய் ஓங்கியவன்

இயல்வணமேத்(து) அடியார்கட்(கு) எளியவனாய் நின்றருள்வான்

கயலுகளும் வயல்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.


புயல்வணனும் புண்டரிகப் போதினனும் அடிமுடியை முயல்வணம் ஓர் முடிவில்லா முழுத்-தழலாய் ஓங்கியவன் - முகில்வண்ணம் உடைய திருமாலும் தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும் அடிமுடியைத் தேடும்படி ஓர் எல்லையற்ற ஜோதிப்பிழம்பாகி ஓங்கியவன்; (புயல் - மேகம்); (வணன் - வண்ணன்); (புண்டரிகம் - தாமரை); (போது - மலர்);

இயல்வணம் ஏத்து-அடியார்கட்கு எளியவனாய் நின்று அருள்வான் - தங்களால் இயன்ற அளவில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அவர்களால் எளிதில் அடையப்படுபவன் ஆகி அருள்செய்பவன்;

கயல் உகளும் வயல் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - கயல்மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (உகள்தல் - தாவுதல்; பாய்தல்);


10)

எந்தவழி நல்லவழி என்றறியார் இருவினைதீர்

வெந்தபொடி பூசாத மிண்டரவர் உரைகொள்ளேல்

வந்தனைசெய் தடைவார்க்கு மட்டின்றி வரமருள்வான்

கந்த(ம்)மலி பொழில்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.


எந்த வழி நல்ல வழி என்று அறியார் - எந்த நெறி நன்னெறி என்று அறியாதவர்கள்;

இருவினை தீர் வெந்த பொடி பூசாத மிண்டர் - இருவினையைத் தீர்க்கும் சுட்ட திருநீற்றைப் பூசாத கல்நெஞ்சர்கள்; (மிண்டன் - திண்ணியோன்; கல்நெஞ்சன்);

அவர் உரை கொள்ளேல் - அவர்களது பேச்சைப் பொருட்படுத்தவேண்டா;

வந்தனைசெய்து அடைவார்க்கு மட்டு இன்றி வரம் அருள்வான் - வழிபாடு செய்து சரண்புகுந்தவர்களுக்கு அளவின்றி வரங்கள் அருள்பவன்; (அடைதல் - சரண்புகுதல்); (மட்டு - அளவு);

கந்த(ம்)மலி பொழில் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - மணம் மிகுந்த சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (கந்தம் - வாசனை);


11)

அளிமண்டு நெஞ்சினராய் அலர்தூவி அடிதொழுவார்க்(கு)

எளிவந்த எம்பெருமான் இருஞ்சடைமேல் இளமதியம்

மிளிர்கொன்றை அணிந்தபரன் விரிபொழிலில் மதுவுண்டு

களிவண்டு பண்முரலும் கன்றாப்பூர் நடுதறியே.


அளி மண்டு- நெஞ்சினராய் அலர் தூவி அடிதொழுவார்க்(கு) எளிவந்த எம்பெருமான் - அன்பு மிகுந்த நெஞ்சினர்கள் ஆகி மலர்கள் தூவித் திருவடியை வணங்கும் அன்பர்களால் எளிதில் அடையப்படுவனான எம்பெருமான்; (அளி - அன்பு); (மண்டுதல் - மிகுதல்); (அலர் - பூ); (எளிவருதல் - எளிதில் அடையப்படுதல்);

இருஞ்சடைமேல் இளமதியம் மிளிர்-கொன்றை அணிந்த பரன் - பெரிய சடையில் இளந்திங்களையும் மிளிரும் கொன்றைமலரையும் சூடிய பரமன்; (இருஞ்சடை - பெரிய சடை);

விரி-பொழிலில் மது உண்டு களி-வண்டு பண் முரலும் கன்றாப்பூர் நடுதறியே - விரிந்த சோலையில் தேனை உண்டு மகிழும் வண்டுகள் இனிய இசையை ஒலிக்கின்ற கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (களித்தல் - மகிழ்தல்); (முரல்தல் - ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

P.270 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்) - ஏலக் குழலாளை

2015-01-19

P.270 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்)

(நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

"மா காய் மா காய் மா தேமா" என்று நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள்")


1)

ஏலக் குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை எழில்மி டற்றில்

நீல மணியானை நேயர் மனக்கோயில் நீங்கா தானைச்

சூலத் தொடுமானும் சுடரும் தரித்தானைச் சுரும்பொ லிக்கும்

கோலப் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


ஏலக்குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமையை இடப்பக்கம் விரும்பியவனை; (ஏலம் - மயிர்ச்சாந்து);

எழில்-மிடற்றில் நீல-மணியானை - அழகிய கண்டத்தில் கருமணி உடையவனை;

நேயர் மனக்கோயில் நீங்காதானை - பக்தர்களின் மனம் என்ற கோயிலில் என்றும் உறைபவனை;

சூலத்தொடு மானும் சுடரும் தரித்தானை - கையில் சூலத்தையும் மானையும் தீயையும் ஏந்தியவனை; (சுடர் - தீ);

சுரும்பு ஒலிக்கும் கோலப் பொழில் சூழ்ந்த கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக; (சுரும்பு - வண்டு);


2)

துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பலபாடித் தொழுபி ரானை

மன்றிற் றிருநட்டம் மகிழும் பெருமானை மழவெள் ளேற்று

வென்றிக் கொடியானை மேவார் புரமூன்றும் வேவ எய்த

குன்றச் சிலையானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பல பாடித் தொழு-பிரானை - நெருங்கித் தேவர்களெல்லாம் பல துதிகள் பாடி தொழும் தலைவனை;

மன்றில் திருநட்டம் மகிழும் பெருமானை - அம்பலத்தில் திருக்கூத்து ஆடும் பெருமானை; (நட்டம் - நடனம்);

மழ-வெள்-ஏற்று வென்றிக் கொடியானை - இளைய, வெண்ணிற இடபச்-சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனை; (மழ - இளைய); (வென்றி - வெற்றி);

மேவார் புரம் மூன்றும் வேவ எய்த குன்றச்-சிலையானைக் - பகைத்த அசுரர்களது முப்புரமும் வெந்து அழியும்படி எய்த மேருவில்லை ஏந்தியவனைக்; (மேவார் - பகைவர்); (சிலை - வில்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


3)

பன்றி மருப்பணிந்த பவளத் திருமார்பில் பாம்பு மாலை

ஒன்றும் உடையானை ஒற்றை விடையானை ஓது வார்க்கு

நன்று மிகநல்கும் நங்கள் பெருமானை நறவம் நாறு

கொன்றை முடியானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பன்றி-மருப்பு அணிந்த பவளத் திருமார்பில் பாம்பு-மாலை ஒன்றும் உடையானை - பன்றியின் கொம்பை அணிந்த அணிந்த பவளம் போன்ற திருமார்பில் பாம்பையும் மாலை போல அணிந்தவனை; (மருப்பு - கொம்பு);

ஒற்றை விடையானை - ஒப்பற்ற இடபவாகனம் உடையவனை; (ஒற்றை - ஒப்பற்ற);

ஓதுவார்க்கு நன்று மிக நல்கும் நங்கள் பெருமானை - துதிகள் பாடுவார்க்கு மிகுந்த நமையை அருளும் நம்பெருமானை; (அப்பர் தேவாரம் - 4.77.3 - "அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே");

நறவம் நாறு கொன்றை முடியானை - வாசனை கமழும் கொன்றைமலரைச் சென்னியில் சூடியவனை; (நறவம் - வாசனை; தேன்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


4)

தொடுக்கும் சரம்சாத்தித் தொழுத அருமுனிக்குத் துன்பம் செய்ய

அடுக்கும் அடற்கூற்றின் அகலம் தனிலுதைத்தங் கருளி னானைக்

கடுக்கும் கடல்நஞ்சைக் கரந்த மிடற்றானைக் கரவி லாது

கொடுக்கும் கரத்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


தொடுக்கும் சரம்சாத்தித் தொழுத அருமுனிக்குத் துன்பம் செய்ய அடுக்கும் அடல்-கூற்றின் அகலம்தனில் உதைத்து அங்கு அருளினானைக் - தொடுத்த மாலைகளைச் சூட்டி வணங்கிய அரிய முனிவரான மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய வலிய கொடிய காலனது மார்பில் உதைத்து அருளியவனை; (சரம் - மாலை); (அடுத்தல் - நெருங்குதல்); (அடல் - கொலை; வலிமை); (அகலம் - மார்பு); (அங்கு - அவ்விடம்; அசை என்றும் கொள்ளலாம்);

கடுக்கும் கடல்நஞ்சைக் கரந்த மிடற்றானைக் - எவரும் வெறுக்கும் கசக்கின்ற ஆலகாலத்தை உண்டு ஒளித்த கண்டனை; (கடுத்தல் - மிகுதல்; வெறுத்தல்; கசத்தல்); (கரத்தல் - ஒளித்தல்); (மிடறு - கண்டம்);

கரவு இலாது கொடுக்கும் கரத்தானைக் - ஒளித்தல் இன்றி வாரி வழங்கும் கரத்தை உடையவனை; (கரவு - வஞ்சனை; மறைத்தல்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


5)

இனியெம் துணைநீயென் றேத்தும் அடியார்உண் இன்பத் தேனைத்

தனிவெள் விடையானைத் தக்கன் பெருவேள்வி தனைய ழித்த

முனிவும் உடையானை முக்கட் பெருமானை முடியின் மீது

குனிவெண் மதிசூடும் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


"இனி எம் துணை நீ" என்று ஏத்தும் அடியார் உண்- இன்பத்தேனைத் - "இனி எங்கள் துணை நீயே" என்று போற்றி வணங்கும் பக்தர்கள் உண்ணும் இன்பத்தேன் ஆனவனை; - (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.3 - "நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்");

தனி-வெள்-விடையானைத் - ஒப்பற்ற வெண்ணிட எருதை வாகனமாக உடையவனை; (தனி - ஒப்பற்ற);

தக்கன் பெருவேள்விதனை அழித்த முனிவும் உடையானை - தக்கன் செய்த பெரிய வேள்வியை அழித்த கோபம் உடையவனை; (முனிவு - கோபம் - மறக்கருணை); (உம் - அசை; எச்சவும்மை என்றும் கொள்ளல் ஆம்; அறக்கருணையும் மறக்கருணையும்);

முக்கட் பெருமானை - முக்கண்ணுடைய பெருமானை;

முடியின்மீது குனி-வெண்-மதி சூடும் - சென்னிமேல் வளைந்த வெண்திங்களைச் சூடிய; (குனிதல் - வளைதல்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


6)

பாதி மலையான்றன் பாவை வடிவேற்ற பரமன் தன்னை

ஆதி நடுவாகி அந்தம் எனவாகும் அளவி லானைப்

பூதிப் பொலிவோடு பூக்கள் பலதூவிப் போற்றிப் பாடிக்

கோதில் அடியார்சேர் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பாதி மலையான்-தன் பாவை வடிவு ஏற்ற பரமன்-தன்னை - திருமேனியில் ஒரு பாதி மலைமங்கை வடிவம் ஏற்ற பரமனை; (2.42.3 - "மாமலையான்றன் மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினான்");

ஆதி நடுவாகி அந்தம் என ஆகும் அளவு-இலானைப் - முதல் நடு இறுதி என்று ஆகும் அளவற்றவனை; (சிவபுராணம் - அடி-73 - "ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே");

பூதிப் பொலிவோடு பூக்கள் பல தூவிப் போற்றிப் பாடிக் கோது-இல் அடியார் சேர் - திருநீற்றைப் பூசிப் பல பூக்களத் தூவிப் போற்றி பாடிக் குற்றமற்ற அடியார்கள் சேர்கின்ற; (பூதி - சாம்பல் - திருநீறு); (கோது - குற்றம்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


7)

பறைகள் ஒலிக்கநடம் பயிலும் பசுபதியைப் பணிந்து வானோர்

இறைவ எமக்கருளாய் என்று துதிசெய்ய இரங்கி நஞ்சுண்

கறைகொள் மிடற்றானைக் கையால் மலர்தூவிக் கருது வார்தம்

குறைகள் களைவானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பறைகள் ஒலிக்க நடம்-பயிலும் பசுபதியைப் பணிந்து, வானோர் "இறைவ; எமக்கு அருளாய்" என்று துதிசெய்ய - பறைகள் ஒலிக்கக் கூத்தாடும் பசுபதியை வணங்கித் தேவர்கள் "இறைவனே! எங்களுக்கு அருள்க" என்று வேண்ட; (* பசுபதீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);

இரங்கி நஞ்சு-ண் கறைகொள் மிடற்றானைக் - இரங்கி ஆலகாலத்தை உண்ட கறையணிந்த கண்டனை; (மிடறு - கண்டம்);

கையால் மலர் தூவிக் கருதுவார்தம் குறைகள் களைவானைக் - கையால் மலர்களைத் தூவித் தியானிப்பவர்களது குறைகளைத் தீர்ப்பவனை;

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


8)

கருவம் மிகவாகிக் கயிலை மலைபேர்த்த கார ரக்கன்

வெருவ மலைமீது விரல்வைத் தடர்த்தானை வேதத் தானை

அரவம் மலிகங்கை அணிகூ விளமாலை அரவம் கொன்றை

குரவம் புனைந்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


கருவம் மிகவாகிக் கயிலைமலை பேர்த்த கார்-ரக்கன் வெருவ மலைமீது விரல்வைத்து அடர்த்தானை - கர்வம் மிகுந்து கயிலைமலையைப் பெயர்த்த கரிய நிறத்து இராவணன் அஞ்சுமாறு கயிலைமலைமேல் திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவனை; (கார் - கரியநிறம்); (அடர்த்தல் - நசுக்குதல்);

வேதத்தானை - வேதத்தின் பொருள் ஆனவனை;

அரவம் மலி-கங்கை, அணி கூவிள-மாலை, அரவம், கொன்றை, குரவம் புனைந்தானை - ஒலி மிகுந்த கங்கையையும், அழகிய வில்வமாலையையும், பாம்பையும், கொன்றைமலரையும், குராமலரையும் சூடியவனை; (அரவம் - 1. ஒலி; 2. பாம்பு); (கூவிளம் - வில்வம்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


9)

நாற்ற மலர்மேலான் நாரா யணனிவர்கள் நண்ண ஒண்ணாத்

தோற்றச் சுடரானைச் சுடலைப் பொடியேறும் தோளி னானை

ஆற்றுச் சடையானை ஆல நிழலானை அன்பர் வாழக்

கூற்றை உதைகோனைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


நாற்றமலர்-மேலான் நாராயணன் இவர்கள் நண்ண ஒண்ணாத் தோற்றச் சுடரானை - வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அடைய இயலாத தோற்றம் உடைய தீ ஆனவனை; (தோற்றம் - புகழ்; வடிவம்);

சுடலைப் பொடிறும் தோளினானை - சுடுகாட்டுச் சாம்பலைப் புஜங்களில் பூசியவனை;

ஆற்றுச்-சடையானை - கங்கையை அணிந்த சடையினனை;

ஆலநிழலானை - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை;

அன்பர்க்காகக் கூற்றை உதை-கோனைக் - மார்க்கண்டேயர் என்றும் இறவாமல் வாழக் காலனை உதைத்த தலைவனை;

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


10)

பொக்கம் மலிநெஞ்சர் பொய்கள் பலசொல்லும் புல்லர் மார்க்கம்

துக்கம் மிகவாக்கும் துரிசர் உரைநீங்கித் தூவெண் ணீறும்

அக்கும் அணிவார்தம் அல்லல் களைவானை அரவத் தோடு

கொக்கின் இறகுமணி கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பொக்கம் மலி-நெஞ்சர் பொய்கள் பல சொல்லும் புல்லர் மார்க்கம் துக்கம் மிகக்கும் - ;(பொக்கம் - வஞ்சகம்); (புல்லர் - கீழோர்);

துரிசர் உரைநீங்கித் தூ-வெண்ணீறும் அக்கும் அணிவார்தம் அல்லல் களைவானை - ; (துரிசர் - குற்றம் உடையவர்; துரிசு - குற்றம்); (அக்கு - உருத்திராக்கம்);

அரவத்தோடு கொக்கின் இறகும் அணி - பாம்பையும் கொக்கிறகையும் அணிந்த; (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவுடைய குரண்டாசுரனைக் கொன்று அவ்விறகைச் சூடியது);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


11)

ஒளிகொள் பொடிபூசி ஒப்பில் தமிழ்பாடி உள்கில் ஆற்ற

எளியன் எனவாகி இன்னல் வினைதீர்க்கும் இறைவன் தன்னை

அளிகள் மண(ம்)நாறும் அலரின் மதுமாந்தி ஆர்த்து லாவும்

குளிரும் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


ஒளிகொள் பொடி பூசி, ஒப்பு இல் தமிழ் பாடி உள்கில் ஆற்ற எளியன் என ஆகி இன்னல் வினை தீர்க்கும் இறைவன்தன்னை - ஒளியுடைய திருநீற்றைப் பூசி, ஒப்பற்ற தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் தியானித்தால், (அந்த அடியார்களல்) மிகவும் எளிதில் அடையப்படுபவன் ஆகித், துன்பம் செய்யும் வினையைத் தீர்க்கும் இறைவனை; (பொடி - திருநீறு); (உள்குதல் - நினைதல்); (ஆற்ற - மிக); (இன்னல் வினை - 1. துன்பம் செய்யும் வினை; 2. துன்பத்தையும் வினையையும்);

அளிகள் மண(ம்) நாறும் அலரின் மது மாந்தி ஆர்த்து உலாவும் குளிரும் பொழில் சூழ்ந்த - வண்டுகள் மணம் கமழும் பூக்களின் தேனை உண்டு ஒலித்து உலாவுகின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த; (அளி - வண்டு); (அலர் - பூ); (மாந்துதல் - உண்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - என்ற வாய்பாடு.

இதனில் 2-ஆம், 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.

இது - காய் காய் காய் காய் மா தேமா - என்ற அறுசீர் விருத்த அமைப்பை ஒட்டியது. ஆனால், அதனில் காய்ச்சீர் வரும் இடங்களுள், 1-ஆம், 3-ஆம் சீர்களில் பெரும்பாலும் மாச்சீர்கள் அமைய வருவது. அவ்வாய்பாட்டில் காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். அப்படி அமைந்தது இப்பதிகம். உதாரணங்கள்:

சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி";

சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - "புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி";


வி. சுப்பிரமணியன்

-------------- --------------