2014-12-07
P.258 - ஒற்றியூர் - (திருவொற்றியூர்)
------------------
(எண்சீர்விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு. திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)
(அப்பர் தேவாரம் - 6.1.1 - அரியானை அந்தணர்தம்)
* முற்குறிப்பு: கார்த்திகைத் தீபத்திற்கு அடுத்த நாளான 2014-12-06 அன்று கவசம் இன்றிக் காட்சி கொடுக்கும் திருவொற்றியூர்ப் படம்பக்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
1)
ஊர்வதற்கு வெள்விடையொன் றுடையான் தன்னை,
.. உலகத்தை நோக்கிமிக விரைந்தி ழிந்த
நீர்வதியும் சடையானை, நெற்றி மீது
.. நேத்திரனை ஒருகையில் நெருப்பி னானைக்,
கூர்வதியும் மூவிலைவேல் ஏந்து கின்ற
.. கோமானைக், கோலமயில் போன்றி லங்கு
பார்வதியோர் பங்கினனை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
ஊர்வதற்கு வெள்விடை ஒன்று உடையான்-தன்னை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;
உலகத்தை நோக்கி மிக விரைந்து இழிந்த நீர் வதியும் சடையானை - பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்த கங்கை தங்கும் சடையானை; (வதிதல் - தங்குதல்);
நெற்றிமீது நேத்திரனை - நெற்றிக்கண்ணனை;
ஒரு கையில் நெருப்பினானைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;
கூர் வதியும் மூவிலைவேல் ஏந்துகின்ற கோமானைக் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்திய தலைவனை; (கூர் - கூர்மை);
கோலமயில் போன்று இலங்கு பார்வதி ஓர் பங்கினனை - அழகிய மயில் போன்ற உமையை ஒரு பங்கில் உடையவனை;
ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்; (* படம்பக்கநாதன் - திருவொற்றியூரில் இறைவன் திருநாமம்);
2)
தாய்வடிவும் தாங்குகின்ற கோனை, நெஞ்சில்
.. தாங்கியவர் வினைதீர்த்துத் தாங்கு வானைத்,
தேய்வடிவம் கண்டஞ்சித் திங்கள் போற்றச்
.. செஞ்சடைமேல் ஏற்றானை, விரும்பிப் பெற்ற
பேய்வடிவம் உடையவரை ஆலங் காட்டிற்
.. பெருநடனம் காணவருள் பெம்மான் தன்னைப்,
பாய்விடைமேல் வருவானை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
தாய்வடிவும் தாங்குகின்ற கோனை - அம்மையப்பனை; (திருச்சிராப்பள்ளியில்) தாயுமானவனை;
நெஞ்சில் தாங்கியவர் வினை தீர்த்துத் தாங்குவானைத் - தன்னை நெஞ்சில் அன்போடு தரித்தவர்களது வினையைத் தீர்த்து அவர்களைக் காத்தருள்பவனை;
தேய்-வடிவம் கண்டு அஞ்சித் திங்கள் போற்றச் செஞ்சடைமேல் ஏற்றானை - தேய்ந்தழியும் வடிவத்தைக் கண்டு அஞ்சிய சந்திரன் திருவடியை வணங்கி வேண்டச், சிவந்த சடையில் திங்களை அணிந்து காத்தவனை;
விரும்பிப் பெற்ற பேய்வடிவம் உடையவரை ஆலங்காட்டில் பெருநடனம் காண அருள் பெம்மான்தன்னைப் - பேயுருவத்தை வரமாக விரும்பிப் பெற்ற காரைக்கால் அம்மையாருக்குத் திருவாலங்காட்டில் தன் திருக்கூத்தை காண அருள்செய்த பெருமானை;
பாய்விடைமேல் வருவானை - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;
ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
3)
கத்து கடலிடையே மலையை நட்டுக்
.. கடைந்தபொழு தெழுந்தவிடம் கண்டு தேவர்
"அத்த அபயமருள்" என்றி றைஞ்ச
.. அவர்க்கிரங்கி அதனையுண்ட கண்டன் தன்னைக்,
கொத்து மலர்க்குழலி கூறா னானைக்,
.. கோதில்லா அமுதத்தைக், கும்பிட் டேத்திப்
பத்தர் குழாம்கெழுமும் ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
கத்து-கடலிடையே மலையை நட்டுக் கடைந்தபொழுது எழுந்த விடம் கண்டு தேவர், "அத்த; அபயம் அருள்" என்று இறைஞ்ச, அவர்க்கு இரங்கி அதனை உண்ட கண்டன்-தன்னைக் - ஒலிக்கும் கடலில் ஒரு மலையை மத்தாக ஊன்றிக் கடைந்த சமயத்தில் பொங்கிய ஆலகாலத்தைக் கண்டு தேவர்கள், "தந்தையே! அபயம் அருள்க" என்று வேண்ட, அவர்களுக்கு இரங்கி அந்த விஷத்தை உண்ட கண்டனை; (அத்தன் - தந்தை);
கொத்துமலர்க்-குழலி கூறு ஆனானைக் - மலர்க்கொத்துகளை அணிந்த உமையை ஒரு கூறாக உடையவனை;
கோது இல்லா அமுதத்தைக் - குற்றமற்ற அமுதம் போன்றவனை;
கும்பிட்டு ஏத்திப் பத்தர்குழாம் கெழுமும் ஒற்றியூரில் - வணங்கித் துதித்து அடியார்கூட்டம் நிறைகின்ற திருவொற்றியூரில்; (கெழுமுதல் - நிறைதல்);
4)
மழவிடையை ஊர்தியென மகிழும் கோனை,
.. வடிவுடைய மங்கையொரு பங்கி னானைத்,
தழலனைய மேனியனை, வானி ழிந்த
.. தண்ணதியைச் சடையிடையே தாங்கி னானை,
அழவினைகள் எத்தனையோ ஆற்றி னாரும்
.. அஞ்செழுத்தை ஓதியடி போற்று வாரேல்
பழவினைகள் தீர்ப்பவனை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
மழவிடையை ஊர்தி என மகிழும் கோனை - இளைய இடபத்தை வாகனமாக மகிழ்ந்த தலைவனை; (மழ - இளைய);
வடிவுடைய மங்கை ஒரு பங்கினானைத் - அழகிய உமையை ஒரு பங்கில் உடையவனை; (* வடிவுடையமங்கை - திருவொற்றியூரில் அம்பிகை திருநாமம்);
தழல் அனைய மேனியனை - தீப் போலச் செம்மேனியனை;
வான் இழிந்த தண்-நதியைச் சடையிடையே தாங்கினானை - வானிலிருந்து இறங்கிய குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவனை; (அப்பர் தேவாரம் - 6.90.6 - "வான் இழிந்த கங்கை சேடெறிந்த சடையானைத்");
அழ வினைகள் எத்தனையோ ஆற்றினாரும் அஞ்செழுத்தை ஓதி அடி போற்றுவாரேல், பழவினைகள் தீர்ப்பவனை - தம்மை வருத்தும்படி வினைப்பயன் தரும் பல பாவங்கள் செய்தவரும் திருவைந்தெழுத்தை ஓதித் திருவடியைப் போற்றினால் அவர்களது பழவினையைத் தீர்ப்பவனை;
ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
5)
அரவணியா மகிழ்வானை, அரையில் வேங்கை
.. அதளாடை உடையானை, அடலேற் றானைத்,
தரையிலொரு சக்கரத்தைத் தாளாற் கீறிச்
.. சலந்தரனைத் தடிந்தானைச், சலமேற் றானைக்,
கரவடையா மனத்தோடு கைகள் கூப்பிக்
.. கடிமலர்கள் பலதூவிக் கசிந்து பாடிப்
பரவியவர்க் கினியானை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
அரவு அணியா மகிழ்வானை - பாம்பை ஆபரணமாக விரும்பியவனை; (அணியா - அணியாக);
அரையில் வேங்கை-அதள் ஆடை உடையானை - அரையில் புலித்தோலாடையைக் கட்டியவனை;
அடல்-ஏற்றானைத் - வலிய இடபத்தை வாகனமாக உடையவனை; (அடல் - வலிமை);
தரையில் ஒரு சக்கரத்தைத் தாளால் கீறிச் சலந்தரனைத் தடிந்தானைச் - தரைமேல் ஒரு சக்கரத்தைத் திருவடியால் வரைந்து அதுகொண்டு ஜலந்தராசுரனை வெட்டி அழித்தவனை; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);
சலம் ஏற்றானைக் - கங்கையைச் சடையில் ஏற்றவனை;
கரவு அடையா மனத்தோடு கைகள் கூப்பிக் கடிமலர்கள் பல தூவிக் கசிந்து பாடிப் பரவியவர்க்கு இனியானை - வஞ்சம் இல்லா மனத்தோடு கரங்குவித்து வாசமலர்கள் பல தூவி உள்ளம் கசிந்து பாடிப் போற்றும் பக்தர்களுக்கு இனியவனை; (கரவு - வஞ்சனை; பொய்); (கடி - வாசனை); (பரவுதல் - துதித்தல்);
ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
6)
தோலாடை தரித்தானைத், தூவெண் ணீறு
.. துதைந்திலங்கு மேனியனைச், சூலத் தானை,
மேலாடு வெண்மதியைச் சென்னி மீது
.. விளங்கவைத்த விகிர்தனை, மின்னல் போல
நூலாடு மார்பினனைத், திருநா மங்கள்
.. நூறுபத் துடையபெரு மானை, ஆவின்
பாலாடல் மகிழ்ந்தானை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
தோலாடை தரித்தானைத் - தோலை ஆடையாகக் கட்டியவனை;
தூ-வெண்ணீறு துதைந்து இலங்கு மேனியனைச் - தூய வெண்மையான திருநீற்றைப் பூசியவனை;
சூலத்தானை - திரிசூலத்தை ஏந்தியவனை; (துதைதல் - மிகுதல்; படிதல்); (இலங்குதல் - விளங்குதல்);
மேல் ஆடு- வெண்மதியைச் சென்னிமீது விளங்கவைத்த விகிர்தனை - வானில் சஞ்சரிக்கும் வெண்திங்களைத் திருமுடிமேல் ஒளிவீசச்செய்த விகிர்தனை; (ஆடுதல் - சஞ்சரித்தல்); (விகிர்தன் - சிவன் திருநாமம் - மாறுபட்ட செயலினன்);
மின்னல் போல நூல் ஆடு- மார்பினனைத் - மின்னல் போலப் பூணூல் அசைகின்ற திருமார்பனை; (நூல் - பூணூல்);
திருநாமங்கள் நூறுபத்து உடைய பெருமானை - சஹஸ்ரநாமம் உடைய பெருமானை;
ஆவின் பால் ஆடல் மகிழ்ந்தானை - பசுப்பாலால் அபிஷேகம் விரும்பியவனை;
ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
7)
துற்றகடல் நஞ்சத்தைக் கண்டம் இட்ட
.. துணைவனையோர் துணையிலியைச், சுற்றி ஆர்த்த
புற்றரவக் கச்சினனைப், பொருப்பு வில்லிற்
.. புர(ம்)மூன்றை எரிகணையைப் பூட்டி னானை,
நெற்றியிலோர் கண்ணுடைய நிமலன் தன்னை,
.. நீரொடுபூக் கொண்டேத்து நேயர் தங்கள்
பற்றறுக்கும் பரம்பரனை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
துற்ற கடல்-நஞ்சத்தைக் கண்டம் இட்ட துணைவனை - உண்ட ஆலகாலத்தைக் கண்டத்தில் வைத்த துணைவனை; (துறுதல் - உண்தல்);
ஓர் துணையிலியைச் - எவ்வொப்பும் இல்லாதவனை; (துணை - ஒப்பு);
சுற்றி ஆர்த்த புற்றரவக்-கச்சினனைப் - அரையைச் சுற்றி நாகத்தைக் கச்சாகக் கட்டியவனை; (ஆர்த்தல் - கட்டுதல்); (புற்றரவம் - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பு);
பொருப்பு-வில்லில் புரம் மூன்றை எரி-கணையைப் பூட்டினானை - மேருவில்லில் முப்புரங்களை எரிக்கும் அம்பைக் கோத்தவனை; (பொருப்பு - மலை);
நெற்றியில் ஓர் கண்ணுடைய நிமலன்-தன்னை - நெற்றிக்கண்ணுடைய பரிசுத்தனை;
நீரொடு பூக்கொண்டு ஏத்து நேயர்-தங்கள் பற்று அறுக்கும் பரம்பரனை - நீராலும் பூக்களாலும் வழிபாடு செய்யும் பக்தர்களது பந்தங்களை நீக்கும் மிகவும் மேலானவனை;
ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
8)
வலியேன் எனவெண்ணி மலையி டந்த
.. வாளரக்கன் அலறவிரல் ஊன்றி னானை,
ஒலியார் நதியுலவு சடையி னானை,
.. ஓதவிடம் உண்டவனை, உள்க சிந்து
கலிதீர் கதிர்மதியாய் என்றி றைஞ்சிக்
.. கைதொழுவார்க் கருந்துணையைக், கலனொன் றேந்திப்
பலிதேர்ந் துழல்வானை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
வலியேன் என எண்ணி மலை இடந்த வாளரக்கன் அலற விரல் ஊன்றினானை - "நான் பெருவலிமை உடையவன்" என்று எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணன் அலறும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவனை; (இடத்தல் - பெயர்த்தல்); (வாள் - கொடிய);
ஒலி ஆர் நதி உலவு சடையினானை - அலை ஒலிக்கின்ற கங்கை சஞ்சரிக்கும் சடையானை; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
ஓதவிடம் உண்டவனை - கடல்விஷத்தை (ஆலகாலத்தை) உண்டவனை; (ஓதம் - கடல்);
உள் கசிந்து, "கலி தீர் கதிர்மதியாய்" என்று இறைஞ்சிக் கைதொழுவார்க்கு அருந்-துணையைக் - மனம் உருகி, "எம் துன்பத்தைத் தீர்த்து அருள்க, ஒளியுடைய சந்திரனை அணிந்தவனே" என்று கைகூப்பி வணங்கும் அடியவர்களுக்கு அருளும் ஒப்பற்ற துணைவனை; (கலி - துன்பம்);
கலன் ஒன்று ஏந்திப் பலிதேர்ந்து உழல்வானை - கையில் ஓர் உண்கலன் (பிரமகபாலம்) ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவனை; (பலி - பிச்சை);
ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
9)
பணிமீது துயில்மாலும் அயனும் அன்று
.. பன்றிபுள்ளாய்த் தேடியவோர் நெருப்பைக், காரார்
மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம் தன்னில்
.. வைத்தவனை, மூவிலைய சூலத் தானை,
அணியாக அரவங்கள் ஏறு கின்ற
.. ஆகமுடை அற்புதனை, ஆரா அன்பால்
பணிவார்கட் கணியானை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
பணிமீது துயில்-மாலும் அயனும் அன்று பன்றி புள்ளாய்த் தேடிய ஓர் நெருப்பைக் - பாம்பின்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் முன்பு பன்றி அன்னம் என்ற வடிவங்களில் தேடிய ஒப்பற்ற சோதியை; (பணி - நாகப்பாம்பு);
கார் ஆர் மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம்-தன்னில் வைத்தவனை - கரிய மணியாக ஆலகாலத்தைக் கண்டத்தில் இட்டவனை;
மூவிலைய சூலத்தானை - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவனை; (அப்பர் தேவரம் - 6.24.9 - "மூவிலைய சூலத்தான் காண்");
அணியாக அரவங்கள் ஏறுகின்ற ஆகமுடை அற்புதனை - ஆபரணமாகப் பாம்புகள் ஏறுகின்ற திருமேனியை உடைய அற்புதனை; (அணி - ஆபரணம்); (ஆகம் - மேனி);
ஆரா அன்பால் பணிவார்கட்கு அணியானை - பேரன்பால் வழிபடும் பக்தர்களுக்குப் பக்கத்தில் இருந்து அருள்பவனை; (அணி - சமீபத்தில்; அணியன் - நெருங்கினவன்);
ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
10)
பொன்னாரும் அடிபோற்றாப் புல்லர்க் கென்றும்
.. புரியாத தத்துவனைப், புனலை ஏற்ற
மின்னாரும் சடையானை, வெண்ணீற் றானை,
.. வேதியனை, வேழத்தின் உரிவை யானைத்,
தன்னாகம் தனில்நாரி தங்கப் பாதி
.. தந்தவனைத், தன்னேரில் தலைவன் தன்னைப்,
பன்னாகம் பூண்டானை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
பொன் ஆரும் அடி போற்றாப் புல்லர்க்கு என்றும் புரியாத தத்துவனை - பொன்னடியை வழிபாடு செய்யாத கீழோர்களால் அறிய இயலாத மெய்ப்பொருளை; வழிபாடு செய்யாத கீழோர்க்கு அருள்புரியாத மெய்ப்பொருளை; (ஆர்தல் - ஒத்தல்);
புனலை ஏற்ற மின் ஆரும் சடையானை - ஒளி மிக்க சடையில் கங்கையை ஏற்றவனை; (மின் - ஒளி; மின்னல்); (ஆர்தல் - நிறைதல்; ஒத்தல்);
வெண்ணீற்றானை - வெண்மையான திருநீற்றைப் பூசியவனை;
வேதியனை - வேதம் ஓதியவனை; வேதங்களால் ஓதப்படுபவனை;
வேழத்தின் உரிவையானைத் - யானைத்தோலைப் போர்த்தவனை; (வேழம் - யானை); (உரிவை - தோல்);
தன் ஆகம்-தனில் நாரி தங்கப் பாதி தந்தவனைத் - உமைக்குத் தன் திருமேனியில் பாதியைத் தந்தவனை; (ஆகம் - மேனி); (நாரி - பெண்);
தன் நேர் இல் தலைவன்-தன்னை - தனக்கு ஓர் ஒப்பு இல்லாத தலைவனை; (நேர் - ஒப்பு);
பன்னாகம் பூண்டானை - பல பாம்புகளை அணிந்தவனை; (பன்னாகம் = பல்+நாகம்); (திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.17 - “இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ”);
ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
11)
கொலவடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி
.. குறைவின்றி வாழவருள் செய்த கோனை,
அலைமலிந்த ஆறுலவும் சடையி னானை,
.. அழியாத புகழானை, அளவில் லானைத்,
தலைமலிந்த மாலையினைத் தலைக்க ணிந்த
.. சங்கரனைத், தாள்பரவும் பத்தர்க் காகப்
பலவடிவும் ஏற்றானை, ஒற்றி யூரில்
.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.
கொல அடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி குறைவின்றி வாழ அருள்செய்த கோனை - கொல்ல வந்தடைந்த காலனை அழித்து மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக வாழ அருளிய தலைவனை; (கொல - கொல்ல; இடைக்குறை விகாரம்); (மாணி - மார்க்கண்டேயர்);
அலை மலிந்த ஆறு உலவும் சடையினானை - அலை மிக்க கங்கையைச் சடையில் அணிந்தவனை;
அழியாத புகழானை - நிலைத்த புகழ் உடையவனை;
அளவு இல்லானைத் - எல்லை இல்லாதவனை;
தலை மலிந்த மாலையினைத் தலைக்கு அணிந்த சங்கரனைத் - தலைக்குத் தலைமாலை அணிந்த சங்கரனை; (மலிதல் - மிகுதல்);
தாள் பரவும் பத்தர்க்காகப் பல வடிவும் ஏற்றானை - திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்காகப் பல வடிவங்களை ஏற்று அருள்பவனை;
ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;
வி. சுப்பிரமணியன்
------- ---------
No comments:
Post a Comment