Sunday, February 3, 2019

04.59 - ஆலவாய் - காலை மாலையும்

04.59 - ஆலவாய் - காலை மாலையும்

2014-04-20

ஆலவாய் (மதுரை)

----------------------------

(எழுசீர் விருத்தம் - மா விளம் மா விளம் மா விளம் விளம் - வாய்பாடு)

(சுந்தரர் தேவாரம் - 7.34.1 - "தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்");


1)

காலை மாலையும் கழலி ணைக்குளம் கசிந்து நீலமி டற்றனே

கால காலனே காம கோபனே காதல் மாதொரு பாதியாய்

சூல னேபுலித் தோல னேகுளிர் துண்ட வெண்மதி சூடிய

கோல னேயென ஞால மேதரும் கூடல் ஆலவாய் அண்ணலே.


காலை மாலையும் கழலிணைக்கு உளம் கசிந்து - காலையும் மாலையும் இரு-திருவடிகளை நினைந்து மனம் உருகி;

"நீல மிடற்றனே, காலகாலனே, காமகோபனே - "நீலகண்டனே, காலனுக்கே காலன் ஆனவனே, காமனைக் கோபித்து எரித்தவனே;

காதல் மாது ஒரு பாதியாய் - அன்புடைய உமையை ஒரு கூறாக உடையவனே;

சூலனே புலித் தோலனே குளிர் துண்ட வெண்மதி சூடிய கோலனே" என - சூலபாணியே, புலித்தோலை ஆடையாக அணிந்தவனே, குளிர்ந்த வெண்பிறையைச் சூடிய கோலம் உடையவனே" என்று போற்றி வழிபட்டால்;

ஞாலமே தரும் கூடல் ஆலவாய் அண்ணலே - (அப்படித் தொழும் பக்தர்களுக்கு) உலகை ஆளும் நிலையே தருவான் (= எல்லா வரங்களையும் அருள்வான்) மதுரையில் உள்ள திருஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்; (ஞாலம் - உலகம்); (தரும் - தருவான்; - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று); (கூடல் = மதுரை); (அப்பர் தேவாரம் - 5.60.7 - "வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே");


2)

வெஞ்சொல் நீங்கிய தூய நெஞ்சராய் மேலை வல்வினை தீர்ந்திடச்

செஞ்சொல் மாலைகள் செப்பி நாள்தொறும் சேவ தேறிய செல்வனே

அஞ்சொல் மாதொரு பாக னேவிட அரவும் மதியமும் ஆர்ந்திடும்

குஞ்சி யாயென அஞ்சல் என்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


வெஞ்சொல் நீங்கிய தூய நெஞ்சராய் - கடுஞ்சொற்களைத் தவிர்ந்து மனத்தூய்மையோடு;

மேலை வல்வினை தீர்ந்திடச் செஞ்சொல் மாலைகள் செப்பி நாள்தொறும் - பழவினைகள் எல்லாம் தீரும்படி தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைத் தினமும் சொல்லி;

"சேவது ஏறிய செல்வனே - "இடபவாகனம் உடைய திருவாளனே; (சே - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி);

அஞ்சொல் மாது ஒரு பாகனே - இன்மொழி பேசும் உமையை ஒரு பாகமாக உடையவனே; (அஞ்சொல் - அம் சொல் - இனிய மொழி);

விட-அரவும் மதியமும் ஆர்ந்திடும் குஞ்சியாய்" என – நாகமும் சந்திரனும் பொருந்தும் திருமுடியை உடையவனே" என்று போற்றி வழிபட்டால்; (ஆர்தல் - பொருந்துதல்); (குஞ்சி - தலை);

அஞ்சல் என்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே - அபயம் அளிப்பான் மதுரையில் உள்ள திருஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்;


3)

படியு றப்பணிந் துருகு நெஞ்சராய்ப் பரசு பாணியே பரமனே

கடிய ரண்களைப் பொடிசெய் வீரனே கறையி லங்கிய கண்டனே

கொடிய னாளொரு கூற னேமிளிர் கொன்றை சூடியே வெள்விடைக்

கொடியி னாயென மிடிய றுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

படி உறப் பணிந்து உருகு நெஞ்சராய்ப், "பரசு பாணியே; பரமனே;

கடி அரண்களைப் பொடிசெய் வீரனே; கறை இலங்கிய கண்டனே;

கொடி அனாள் ஒரு கூறனே; மிளிர் கொன்றை சூடியே; வெள்விடைக்

கொடியினாய்" என, மிடி அறுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


படி - நிலம்;

பரசு-பாணி - மழுவை ஏந்தியவன்;

கடி-அரண்கள் - காவல் மிக்க முப்புரங்கள்;

கொடி அனாள் - கொடி அன்னாள் - பூங்கொடி போன்ற உமை;

வெள்விடைக் கொடியினாய் - வெள்ளை இடபம் திகழும் கொடி உடையவனே;

மிடி அறுப்பவன் - துன்பத்தைத் தீர்ப்பவன்;


4)

பூத்தொ டுத்தடி போற்றிப் புண்ணியா பூத நாயகா ஓர்கணை

கோத்து முப்புரம் எய்த மைந்தனே கொக்கின் இறகணி பிஞ்ஞகா

நேத்தி ரந்திகழ் நெற்றி யாய்திரு நீற தாடிய அம்பலக்

கூத்த னேயெனக் காத்த ருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பூத் தொடுத்து அடி போற்றிப் - பூக்களைத் தொடுத்துத் திருவடியைப் போற்றி;

"புண்ணியா பூத நாயகா - "புண்ணியனே, பூதங்களுக்குத் தலைவனே;

ஓர் கணை கோத்து முப்புரம் எய்த மைந்தனே - ஓர் அம்பை வில்லில் கோத்து முப்புரங்களை எய்த விரனே; (மைந்தன் - வீரன்);

கொக்கின் இறகு அணி பிஞ்ஞகா - கொக்கிறகைச் சூடிய சிவபெருமானே; (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குருவம் கொண்ட குரண்டாசுரனை அழித்து, அதன் அடையாளமாகச் சிவபெருமான் தன் தலையில் அணிந்தது); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - "குலம்பாடிக் கொக்கிறகும் பாடி");

நேத்திரம் திகழ் நெற்றியாய் - நெற்றிக்கண்ணனே;

திருநீது ஆடிய அம்பலக் கூத்தனே எனக் - திருநீற்றைப் பூசியவனே, சபையில் ஆடும் நடராஜனே", என்று துதித்து வழிபட்டால்; (ஆடுதல் - பூசுதல்); (அம்பலம் - சபை; தில்லையில் சிற்றம்பலம்; மதுரையில் வெள்ளியம்பலம்);

காத்து அருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே - (அத்தகைய பக்தர்களைக்) காப்பவன் மதுரையில் உள்ள திருஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்;


(* கச்சியப்ப சிவாச்சாரியார் - கந்தபுராணம் - 3. மகேந்திர காண்டம் - 9. சயந்தன் புலம்புறு படலம் - # 64 -

ஏங்கி அமரர் இரிந்தோடவே துரந்த

ஓங்கு குரண்டத்து உருக்-கொண்ட தானவனைத்

தீங்கு பெறத் தடிந்து சின்னமா ஓர்-சிறையை

வாங்கி அணிந்த அருள் இங்கு என்பால் வைத்திலையே. )


5)

இன்ற மிழ்த்தொடை நாவ ராய்மனம் இளகி ஏறமர் ஈசனே

மன்றில் ஆடிடும் மன்ன னேஅயன் மண்டை யோட்டினை ஏந்தினாய்

அன்றி னார்புரம் அட்ட ஐயனே ஆறு பாய்தரு சென்னிமேல்

கொன்றை யாயென வென்றி யேதரும் கூடல் ஆலவாய் அண்ணலே.


இன்-மிழ்த்தொடை - இனிய தமிழ்ப்பாடலான தேவாரம், திருவாசகம்;

ஏறு அமர் ஈசனே - இடப வாகனனே;

மன்றில் ஆடிடும் மன்னனே - அம்பலத்தில் ஆடும் நடராஜனே;

அயன் மண்டையோட்டினை ஏந்தினாய் - பிரமகபாலத்தில் பிச்சை எடுப்பவனே;

அன்றினார் புரம் அட்ட ஐயனே - பகைவர்களது முப்புரங்களை அழித்த தலைவனே; (அன்றினார் - பகைவர்); (அடுதல் - அழித்தல்);

ஆறு பாய்தரு சென்னிமேல் கொன்றையாய் - கங்கை பாய்கின்ற திருமுடியின்மேல் கொன்றைமலரைச் சூடியவனே; (தருதல் - ஒரு துணைவினைச்சொல்);

வென்றி - வெற்றி;


6)

பொய்த விர்ந்தடி போற்றிப் புனிதனே புற்ற ராவணி வேணியாய்

மைத யங்கிய மணிமி டற்றினாய் வன்னி தாங்கிய கையினாய்

எய்தி அம்பினை எய்த காமனை எரிசெய் தாய்பிர மன்சிரம்

கொய்த கோனெனக் கைகொ டுப்பவன் கூடல் ஆலவாய் ஆண்ணலே.


பதம் பிரித்து:

பொய் தவிர்ந்து, அடி போற்றிப், "புனிதனே; புற்றுஅரா அணி வேணியாய்;

மை தயங்கிய மணிமிடற்றினாய்; வன்னி தாங்கிய கையினாய்;

எய்தி அம்பினை எய்த காமனை எரிசெய்தாய்; பிரமன் சிரம்

கொய்த கோன்" எனக், கைகொடுப்பவன் கூடல் ஆலவாய் ஆண்ணலே.


பொய் தவிர்ந்து - பொய்யை நீங்கி;

வேணியாய் - சடையானே;

மை தயங்கிய மணி மிடற்றினாய் - கருமை திகழும் அழகிய நீலகண்டனே; (தயங்குதல் - ஒளிவிடுதல்); (மணி - அழகு; நீலமணி);

வன்னி - நெருப்பு;

எய்தி - அடைந்து; அணுகி; (எய்துதல் - அடைதல்);

எய்த - செலுத்திய; ஏவிய; (எய்தல் - ஏவுதல்);

காமனை எரிசெய்தாய் - மன்மதனை எரித்தவனே;

பிரமன் சிரம் கொய்த கோன் - பிரமனின் தலை ஒன்றைக் கிள்ளிய தலைவனே; (கோன் - அண்மைவிளியாக வந்தது - கோனே);

கைகொடுத்தல் - உதவுதல்; வினைக்கடலில் ஆழாதவண்ணம் கைகொடுத்துக் காப்பவன்;


7)

ஏற தேறிய ஏந்த லேகடி இலங்கு கூவிளம் மல்லிகை

சீற ராநதி செஞ்ச டைப்புனை தேவ தேவனே சுடலைவெண்

நீற தேறிய மேனி யாய்மணி நீல கண்டனே மங்கையோர்

கூற னேயெனப் பேற ருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

"ஏறது ஏறிய ஏந்தலே; கடி இலங்கு கூவிளம் மல்லிகை

சீறு-அரா நதி செஞ்சடைப் புனை தேவதேவனே; சுடலை வெண்-

நீறது ஏறிய மேனியாய்; மணி-நீலகண்டனே; உமை மங்கை ஓர்

கூறனே" எனப், பேறு அருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


கடி இலங்கு கூவிளம் மல்லிகை - வாசனை கமழும் வில்வம், மல்லிகை;

சீறு-அரா நதி செஞ்சடைப் புனை தேவதேவனே - சீறுகின்ற பாம்பு, கங்கை, இவற்றைச் செஞ்சடையில் அணிந்த பெருமானே; (அப்பர் தேவாரம் - 5.11.4 - "நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்")


8)

தரையி றங்கிய தேர்க டாவிடத் தசமு கன்மலை பேர்க்கவும்

வரையின் கீழவன் வாட ஓர்விரல் வைத்து வாளருள் வள்ளலே

அரவ நாணசை அரைய னேபுலி அதள னேவட வாலமர்

குரவ னேயென வரம ளிப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

"தரை இறங்கிய தேர் கடாவிடத் தசமுகன் மலை பேர்க்கவும்,

வரையின்கீழ் அவன் வாட ஓர் விரல் வைத்து, வாள் அருள் வள்ளலே;

அரவ-நாண் அசை- அரையனே; புலி-அதளனே; வடவால் அமர்

குரவனே" என, வரம் அளிப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


தரை இறங்கிய தேர் கடாவிடத் தசமுகன் மலை பேர்க்கவும் - கயிலையின்மேல் பறக்க இயலாமல் தன் தேர் தரையில் இறங்கியது கண்டு, மிகச் சினந்து கயிலையைப் பெயர்க்க இராவணன் முயன்றபொழுது; (தேர் கடாவுதல் - தேரைச் செலுத்துதல்);

வரையின்கீழ் அவன் வாட ஓர் விரல் வைத்து, வாள் அருள் வள்ளலே - கயிலைமலையின்கீழ் அவன் வருந்தும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அருளிய வள்ளலே; (வரை - மலை);

அரவ-நாண் அசை- அரையனே - பாம்பை அரைநாணாகக் கட்டிய அரசனே; (அசைத்தல் - கட்டுதல்); (அரையன் - அரசன்);

புலி-அதளனே - புலித்தோலை ஆடையாக அணிந்தவனே; (அதள் - தோல்);

வடவால் அமர் குரவனே - கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியே; (வடவால் - கல்லால-மரம்); (குரவன் - குரு); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கிநின்று");


9)

மழையி னேர்வணன் மலரி னானிவர் வாழ்த்த மாலெரி ஆயினாய்

குழையி லங்கிய காதி னாய்எதிர் குஞ்ச ரத்துரி மூடினாய்

உழையி லங்கிய கையி னாய்சிரம் ஒன்றில் உண்பலி தேர்ந்துழல்

குழக னேயெனப் பிழைபொ றுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

"மழையின் நேர் வணன், மலரினான் இவர் வாழ்த்த மால் எரி ஆயினாய்;

குழை இலங்கிய காதினாய்; எதிர் குஞ்சரத்து உரி மூடினாய்;

உழை இலங்கிய கையினாய்; சிரம் ஒன்றில் உண்பலி தேர்ந்து உழல்

குழகனே" எனப் பிழை பொறுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


மழையின் நேர் வணன் - முகில்வண்ணன் - திருமால்; (மழை - மேகம்); (நேர்தல் - ஒத்தல்); (வணன் - வண்ணன் - இடைக்குறையாக வந்தது);

மலரினான் - பிரமன்; (சம்பந்தர் தேவாரம் - 1.47.9 - "மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது");

வாழ்த்துதல் - துதித்தல்;

மால் எரி - பெரிய ஜோதி;

எதிர் குஞ்சரத்து உரி மூடினாய் - எதிர்த்த யானையின் தோலைப் போர்த்தவனே; (அப்பர் தேவாரம் - 4.60.5 - "ஓடைசேர் நெற்றி யானை உரிவையை மூடினானை");

உழை - மான்;

குழகன் - அழகன்;

பிழை பொறுப்பவன் - அடியார்களது குற்றங்களையெல்லாம் மன்னிப்பவன்; ("குற்றம் பொறுத்த நாதர்" - திருக்கருப்பறியலூரில் ஈசன் திருநாமம்); (அப்பர் தேவாரம் - 6.47.7 - "உன்பால் அன்பர் பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே");


10)

குற்ற நெஞ்சினர் வெற்று வாதினர் கூறு பொய்ம்மொழி கருதிடேல்

முற்றி லாமதி சூடி னாய்அரண் மூன்று தீப்புக வில்லினில்

ஒற்றை அம்பினைக் கோத்த வீரனே உரகத் தாரனே எம்மையாள்

கொற்ற வாவெனப் பற்றி ஏற்றுவான் கூடல் ஆலவாய் அண்ணலே.


குற்ற நெஞ்சினர் வெற்று வாதினர் - நெஞ்சில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு, பொருளற்ற தர்க்கம் செய்கின்றவர்;

கூறு பொய்ம்மொழி கருதிடேல் - அவர்கள் சொல்லும் பொய்களை மதிக்கவேண்டா; (கருதுதல் - மதித்தல்; விரும்புதல்);

"முற்றிலா-மதி சூடினாய் - இளம்பிறையைச் சூடியவனே; (அப்பர் தேவாரம் - 5.14.11 - "முற்றிலா-மதி சூடும் முதல்வனார்");

அரண் மூன்று தீப்-புக வில்லினில் ஒற்றை அம்பினைக் கோத்த வீரனே - மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழியும்படி மேருமலை என்ற வில்லில் ஓர் அம்பைக் கோத்த வீரனே;

உரகத்-தாரனே - பாம்பை மாலையாக அணிந்தவனே;

எம்மை ஆள் கொற்றவா" எனப், பற்றி ஏற்றுவான் - எம்மை ஆளும் அரசனே" என்று போற்றி வழிபடும் பக்தர்கள் வினைக்கடலில் ஆழாதவண்ணம் அவர்கள் கையைப் பற்றி மேலே தூக்குவான்;


11)

தொண்ட ராய்மலர் தூவி நாள்தொறும் தூய னேசடை மேற்பிறை

இண்டை யாவணி எந்தை யேசுரர் ஏத்த நஞ்சினை உண்டிருள்

கண்ட னேகரி காட னேகயற் கண்ணி யாளையோர் பங்கெனக்

கொண்ட கோனென விண்ட ரும்பரன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

தொண்டராய் மலர் தூவி நாள்தொறும், "தூயனே; சடைமேல் பிறை

இண்டையா அணி எந்தையே; சுரர் ஏத்த நஞ்சினை உண்டு இருள்

கண்டனே; கரிகாடனே; கயற்கண்ணியாளை ஓர் பங்கு எனக்

கொண்ட கோன்" என விண் தரும் பரன், கூடல் ஆலவாய் அண்ணலே.


தொண்டராய் மலர் தூவி - 1. தொண்டர் ஆகி, மலர் தூவி - சிவனுக்குப் பக்தர்கள் ஆகி மலர்களைத் தூவி; 2. தொண்டர் ஆய் மலர் தூவி - பக்தர்கள் ஆய்ந்தெடுத்த சிறந்த பூக்களைத் தூவி;

இண்டையா - இண்டையாக; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

சுரர் ஏத்த நஞ்சினை உண்டு இருள் கண்டனே - தேவர்கள் துதிக்க அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்டு கறுத்த கண்டத்தை உடையவனே; (இருள்தல் - கறுப்பாதல்);

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;

கயற்கண்ணி - அங்கயற்கண்ணி - ஆலவாயில் அம்பாள் திருநாமம் (மீனாட்சி);

விண் தரும் பரன் - விண்ணுலகை அளிக்கும் பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்");

கோன் - அண்மைவிளியாக வந்தது - கோனே;


பிற்குறிப்பு : இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :

எழுசீர் விருத்தம் - "மா விளம் மா விளம் மா விளம் விளம்" என்ற வாய்பாடு.

பாடல்தோறும் ஈற்றடியில் 1-3 சீர்களிடை எதுகை அமைந்த பாடல்கள்.

இவ்வாய்பாடு போலத், "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தத்தில் சம்பந்தர், சுந்தரர் பதிகங்கள் உள்ளன.

சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்";

சுந்தரர் தேவாரம் - 7.34.8 - "எள்விழுந்திடம் பார்க்குமாகிலும்";


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment