Thursday, September 3, 2015

02.19 – சண்பை நகர் - (சீர்காழி)

02.19 – சண்பை நகர் - (சீர்காழி)



2011-05-17
சண்பை நகர் (சீகாழி)
------------------------------
(கலிவிருத்தம் - "மா மா மா புளிமாங்காய்" - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்')



1)
மழுவும் மானும் ஏந்தும் மணிகண்டன்
பழுதில் பத்தர் பரவப் பயிலூராம்
குழுமிக் குயில்கள் கூவ முகில்வந்து
தழுவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



பழுது இல் - குற்றம் அற்ற;
பரவுதல் - துதித்தல்; பாடுதல்;
பயில்தல் - தங்குதல்;
சண்பை - சீகாழியின் பன்னிரு பெயர்களுள் ஒன்று;
(சண்பை என்ற பெயரின் காரணத்தைச் சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.67.9 - 'விண்பயில மண்பகிரி .... பண்புகளை சண்பைநகரே' என்ற பாடலில் காண்க);



2)
சங்கம் ஒருபால் தரிக்கும் தழல்வண்ணன்
அங்கை குவிக்கும் அன்பர்க் கருளூராம்
வெங்கள் உண்டு வண்டு விரிபூவில்
தங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



சங்கம் - கையில் அணியும் வளையல்;
வெம் கள் - விரும்பத்தக்க தேன்; (வெம்மை - விருப்பம்);
(சம்பந்தர் தேவாரம் - 1.26.1 - “வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை”)
விரி பூ - வினைத்தொகை - விரியும் பூ;
('விரிபூவில் வெங்கள் உண்டு வண்டு தங்கும் பொழில்' என்று இயைக்க).



3)
கோங்கு குரவம் கொன்றை அணியீசன்
ஏங்கும் அன்பர்க் கின்பம் அருளூராம்
ஓங்கு மரத்தின் உச்சி மழைமேகம்
தாங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



கோங்கு, குரவம், கொன்றை - மலர்களின் பெயர்கள்;
ஏங்குதல் - மனம்வாடுதல் (To long for, yearn after);
மழைமேகம் - சூல்முற்றி மழை பொழியும் மேகம்; ('மழைத்தல்' - மழைநிறைந்திருத்தல்; கருநிறமாதல்; குளிர்தல்);


கோங்கம், குரவம். கொன்றை முதலிய பூக்களைச் சூடும் ஈசன், தன்னை எண்ணி ஏங்கும் பக்தர்களுக்கு இன்பம் அருளும் ஊர் ஆகும், உச்சியில் மழைமேகத்தைத் தாங்குமாறு ஓங்கி வளர்ந்த மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த, சண்பை என்ற பெயருடைய சீர்காழி.



4)
தவள விடையன் தவளப் பொடியாடி
பவளச் சடையன் பத்தர்க் கருளூராம்
தவளை பாடத் திவலை தெளிமேகம்
தவழும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



தவளம் - வெண்மை;
பொடி - திருநீறு;
தவளப் பொடியாடி - வெள்ளைத் திருநீற்றில் மூழ்கிய சிவபிரான்;
(சம்பந்தர் தேவாரம் - 2.43.11 - “.... பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக் ….”);
பவளச்சடை - செந்நிறச் சடை;
திவலை - மழைத்துளி;


(பட்டினத்து அடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 11.28.28 -
"... குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும் ..."
- வரகுணனின் பக்தி மிகுதியைச் சுட்டும் செய்திகளுள் ஒன்று - ஒரு சமயம் பெருமழை பெய்து ஒய்ந்தபின் தவளைகள் பல ஒருங்கே கத்த, அந்த ஓசையை அவை 'அரஹர, அரஹர!' எனச் சிவபெருமானைத் துதிப்பதாகக் கருதி அவைகளுக்குப் பரிசாக இரத்தினங்களையும், பொன்னையும் நீர் நிலைகளில் சென்று இறைக்கும்படி ஏவலர்களைக் கொண்டு செய்வித்தான்.)



5)
சுடலை தன்னில் துடியின் இசையோடு
நடஞ்செய் நம்பன் நமக்கின் பருளூராம்
கடலின் நீரைக் கொணருங் கருமேகம்
தடவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



சுடலை - சுடுகாடு;
துடி - உடுக்கை என்னும் பறைவகை;
நம்பன் - சிவன்; யாவராலும் விரும்பத் தக்கவன்;
நமக்கு இன்பு அருள் ஊர் ஆம் - நமக்கு இன்பம் அருள்கின்ற ஊர் ஆகும்;
தடவுதல் - வருடுதல்;



6)
ஏவுங் கணைகொண் டெயில்கள் எரியீசன்
மேவும் வினையை வீட்டி அருளூராம்
மாவும் பலவும் மாந்தி மகிழ்மந்தி
தாவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



எயில்கள் - முப்புரங்கள்;
மேவும் வினை - அடியார்கள்மேல் பொருந்தும் பழவினைகள்; (மேவுதல் - அடைதல்; பொருந்துதல்);
வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்;
மாவும் பலவும் - மா, பலா முதலிய கனிகள்; (பலவு - பலா);
மாந்துதல் - உண்ணுதல்;
(சம்பந்தர் தேவாரம் - 2.114.6 -
"ஏறிமாவின் கனியும்பலா வின்இருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே."
- குரங்குகள் மா, பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரம்);



7)
மேரு வில்லி மெய்யன் புடையார்க்குப்
பேரும் பொருளும் பெரிதும் தருவானூர்
ஆரும் அலரில் அளிகள் மதுவுண்ணச்
சாரும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



மேரு வில்லி - மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமான்;
மெய் ன்பு டையார்க்கு - உண்மையான பக்தி உடையவர்களுக்கு; (மெய்யன்பு - பயன் கருதாது செலுத்தும் அன்பு);
பேரும் பொருளும் - புகழும் பொருளும்;
ஆர்தல் - நிறைதல்;
அலர் - பூ;
அளி - வண்டு;
சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்;



8)
மத்த னாகி மலையை அசைத்தானின்
பத்துத் தலைகள் நெரித்த பரனூராம்
நித்தன் புகழைப் பத்தர் நிதமோதத்
தத்தை தமிழ்சொல் சண்பை நகர்தானே.



மத்தன் - உன்மத்தன் - வெறிகொண்டவன்;
பரன் - மேலானவன்;
நித்தன் - என்றுமிருப்பவன்; சிவன்;
நிதம் - தினமும்;
தத்தை - கிளி;
தமிழ் - தேவாரம்;


(சம்பந்தர் தேவாரம் - 1.132.1 -
ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோ னின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே.


சுந்தரர் தேவாரம் - 7.65.2 -
அணிகொ ளாடையம் பூணணி மாலை ....
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
.. செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
- 'செந்தமிழைப் பைங்கிளி தெரியும்' என்றது, ஓர் நயம். கிளிகள் தமிழை ஆராய்தல், பலரிடத்துக் கேட்கும் பயிற்சி பற்றி என்க.);



9)
பூமன் னயனும் புள்ளூர் அரிகாணார்
தூமென் றாளைத் தொழுவார்க் கருள்வானூர்
மாமென் மலரில் வண்டு மதுவுண்டு
சாமம் பாடும் சண்பை நகர்தானே.



பதம் பிரித்து:
பூ மன்னு அயனும் புள் ஊர் அரி காணார்;
தூ மென் தாளைத் தொழுவார்க்கு அருள்வான் ஊர்,
மா மென் மலரில் வண்டு மது உண்டு
சாமம் பாடும் சண்பைநகர்தானே.


பூ மன்னு அயன் - தாமரையில் உறையும் பிரமன்; (மன்னுதல் - உறைதல்);
புள் ஊர் அரி - பறவைமேற் செல்லும் திருமாலும்; - உம்மைத்தொகை.
சாமம் - சாமகானம்; (சாமம் பாடுதல் - வண்டு இசைத்தலைக் குறித்தது);
பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 12.28.9 -
காமர்திருப் பதியதன்கண் வேதியர்போற் கடிகமழும்
தாமரையும் புல்லிதழும் தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் துகளணிந்து துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையால் செழுஞ்சாமம் பாடுமால்.)



10)
ஆயும் அறிவில் அவர்கள் அடையாரே
தோயும் மனத்துத் தொழும்பர்க் கருள்வானூர்
பாயும் மந்தி பற்றிக் கொளக்கொம்பு
சாயும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



அறிவில் - அறிவு இல் - அறிவு இல்லாத;
தொழும்பர் - அடியவர்;
கொம்பு - மரக்கிளை;



11)
வண்ணம் பாடி வழுத்தும் அடியார்கட்
கெண்ணும் வரம்நல் கெந்தை அரனூராம்
கண்ணன் குண்டு களிக்குஞ் சுரும்பார்க்கும்
தண்ணம் பொழில்சூழ் சண்பை நகர்தானே.



பதம் பிரித்து:
வண்ணம் பாடி வழுத்தும் அடியார்கட்கு
எண்ணும் வரம் நல்கு எந்தை அரன் ஊர் ஆம்,
கள் நன்கு உண்டு களிக்கும் சுரும்பு ஆர்க்கும்
தண் அம் பொழில்சூழ் சண்பைநகர்தானே.


வண்ணம் - வண்ணப் பாடல்கள்; தாளத்தொடு பொருந்தப் பாடும் இசை;
கள் - தேன்;
சுரும்பு - வண்டு;
ஆர்த்தல் - ஒலித்தல்;
தண் அம் பொழில் - குளிர்ந்த அழகிய சோலை;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :



சீகாழியின் 12 பெயர்களும் அப்பெயர்க்காரணங்களும்:
http://www.tamilvu.org/slet/l41d0/l41d0sn3.jsp?x=496
சீகாழியின் பன்னிரு நாமங்களும் இவை என்பதனை:
பிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப்
பொருவிறிருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
(பெரியபுராணம் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் - 12.28.14)



என்னும் பெரியபுராணச் செய்யுளால் அறிக. இப் பன்னிரு பெயரினையும் திருஞான சம்பந்தப் பெருமான் பல பதிகத்தும் பாராட்டுதலுங் காண்க;



  1. பிரமன் பூசித்தமையாற் பிரமபுரம்;
  2. சூரபன்மன் போருக்குடைந்த இந்திரன் பூசித்த காலை இறைவன் வேணுவாய் முளைத்து அருள் செய்தமையின் வேணுபுரம்;
  3. சூரபன்மனால் துன்புற்ற வானோர்கள் பிரமேசரைப் புகலடைந்து வழிபட்டமையாற் புகலி;
  4. அசுர குருவாகிய சுக்கிரன் பூசித்தமையால் வெங்குரு;
  5. கற்பாந்தத்தில் அழியாது தோணியாக மிதந்தமையின் தோணிபுரம்;
  6. வெள்ளைப் பன்றி யுருக்கொண்டு இரணியாக்கனைக் கொன்று, பூமியைக் கொம்பிலேற்று நிறுவிய திருமால் பூசித்தமையின் பூந்தராய்;
  7. வெட்டுண்ட தலைக் கூறாகிய இராகு பூசித்தமையின் சிரபுரம்;
  8. சிபியின்பாற் புறாவுருக் கொண்டு வந்து சோதித்த அக்கினி பூசித்தமையிற் புறவம்;
  9. சண்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்டு பொருது மடிந்த யாதவர் கொலைப்பழி தன்னை அணுகா வண்ணம் கண்ணன் பூசித்தமையிற் சண்பை;
  10. காளி பூசித்தமையாற் காழி;
  11. பராசரர் மச்சகந்தியைச் சேர்ந்து பெற்ற முடை நாற்றமும் பழியும் போகப் பூசித்தமையின் கொச்சைவயம்;
  12. உரோமச முனிவர் ஞானோபதேசம் பெற்று மலங்கழுவப் பெற்றமையின் கழுமலம் ;



எனப் பெயர்க் காரணங் காண்க; இன்னும் வெவ்வேறு காரணங் கூறப்படுவனவும் உள.

-------------- --------------

No comments:

Post a Comment