Tuesday, June 30, 2015

01.03 - ஆலவாய் (மதுரை)

01.03 - ஆலவாய் (மதுரை



2007-11-04 
மதுரை (ஆலவாய்
------------------------------------------
(திருமுக்கால் அமைப்பில்)
(திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி சிறுகுடி மேவிய')

1)
திருமிகு மதுரையம் பதியினில் திகழ்பவன்
கருநிற மிடறுடை யோனே
கருநிற மிடறுடை யோன்கழல் கருதிட
அருவினை அழிவது திடமே.



திரு - செல்வம்; தெய்வத்தன்மை;
மதுரை அம் பதி - அழகிய மதுரை நகர்;
மிடறு - கழுத்து;
கழல் - திருவடி;
அருவினை - கொடிய வினை;
திடம் - நிச்சயம்;



2)
அணிமிகு மதுரையம் பதியினில் அமரிறை
மணிதிகழ் மிடறுடை யோனே
மணிதிகழ் மிடறுடை யோன்கழல் வழிபடப்
பிணிவினைத் தொடர்விடப் பெறுமே.



அணி - அழகு; பெருமை; கூட்டம்;
அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;
மணி - நீலமணி;
பிணிவினைத்தொடர் - வினைத்தொகை - பிணிக்கின்ற வினைத்தொடர்;



3)
அறமிகு மதுரையம் பதியினில் அருள்பவன்
கறைமிகு மிடறுடை யோனே
கறைமிகு மிடறுடை யோன்கழல் கைதொழப்
பறைவது பழவினைப் பகையே.



அறம் - தர்மம்;
பறைதல் - அழிதல்;



4)
மறைவளர் மதுரையம் பதியினில் மகிழ்பவன்
கறைமிளிர் திருமிட றோனே
கறைமிளிர் திருமிட றோன்குரை கழல்தொழும்
நிறைவுளர் இலரொரு குறையே.



மறை - வேதம்;
மிடறோன் - "மிடற்றோன்" என்பதன் இடைக்குறை - கழுத்தை உடையவன்;
நிறைவு - திருப்தி; மிகுதி; மாட்சிமை;
உளர் - உள்ளவர்;



5)
தமிழ்வளர் மதுரையம் பதியினில் தருபவன்
உமிழ்கடல் விடமிட றோனே
உமிழ்கடல் விடமிட றோன்கழல் உரைசெய
அமிழ்தன சுவைதரும் அதுவே.



தருபவன் - வரங்கள் தருபவன்;
உமிழ்கடல் விடம் - '(அரவு) உமிழ் விடம், கடல் விடம்' என்று பொருள்கொள்க; ('கடல் உமிழ் விடம்' என்றும் பொருள்கொள்ளலாம்;)
உரை செய்தல் - சொல்லுதல்;
அமிழ்து அன - அமிர்தம் போன்ற; (அன = "அன்ன");



(சம்பந்தர் தேவாரம் - 1.15.4 - "சுடுநீறணி யண்ணல்.....இள வரவாடுமிழ் கடனஞ்சம துண்டான் ... " - இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான்)



6)
எழில்மிகு மதுரையம் பதியுறை இறையவன்
விழிநுதல் திகழ்பெரு மானே
விழிநுதல் திகழ்பெரு மான்கழல் விதிவழி
வழிபடின் உறுவது வளமே.



எழில் - அழகு;
நுதல் - நெற்றி;
விழிநுதல் - கண்ணுதல் - நெற்றிக்கண்;
விதிவழி - முறைப்படி;



7)
புனல்மிகு மதுரையம் பதியினில் பொலிபவன்
அனல்மிகு விழியுடை யோனே
அனல்மிகு விழியுடை யோன்கழல் அடைபவர்
இனல்மிகு பிறவிகள் இலரே.



புனல் - நீர்;
அனல் - தீ;
இனல் - இன்னல் - இடைக்குறையாக வந்தது;



8)
நிலம்புகழ் மதுரையம் பதியினில் நிகழ்பவன்
இலங்கையன் தனையடர்த் தோனே
இலங்கையன் தனையடர்த் தோன்கழல் இணைதொழ
அலந்தரும் அருவினை அறுமே.



நிலம் - உலகம்;
நிகழ்தல் - தங்குதல்; உறைதல்;
இலங்கையன்தனை - இராவணனை;
அடர்த்தல் - அமுக்குதல்; நசுக்குதல்;
கழல் இணை தொழ - திருவடிகளைத் தொழுவதால்;
அலம் - துன்பம்;




9)
வியனகர் மதுரையம் பதியுறை விடையவன்
அயனரி இடையெழு தீயே
அயனரி இடையெழு தீயவன் அடியவர்
இயமன திடர்பிணி இலரே.



வியனகர் - வியன் நகர்;
வியன் - பெருமை (Greatness); சிறப்பு (Excellence);
விடையவன் - இடபவாகனத்தை உடையவன்;
அயன் அரி - பிரமன் திருமால்;
இயமனது இடர் பிணி - எமனுடைய துன்பமும் பிணியும்;



10)
செய்வள மதுரையம் பதியுறை சிவனடி
பொய்வழி யினரறி யாரே
பொய்வழி யினரறி யான்கழல் புகழ்பவர்
நைவழி வுறும்வரும் நலமே.



செய் - வயல்; (செய் வள மதுரை - வயல் வளம் மிகுந்த மதுரை);
நைவு அழிவு உறும் - வருந்துதல் இல்லாமற்போகும் - வருத்தம் தீரும்;



11)
தென்னகர் மதுரையம் பதியினில் திகழ்பவன்
மின்னிறச் சடையுடை யானே
மின்னிறச் சடையுடை யான்கழல் விழைபவர்
இன்னொரு பிறவியும் இலரே.



தென் நகர் - அழகிய நகர்;
மின் நிறம் - மின்னல் போன்ற நிறம்; ("மின்னார் செஞ்சடை");
விழைதல் - விரும்புதல்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் உள்ளன. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம். (முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி).

No comments:

Post a Comment