Tuesday, June 30, 2015

01.02 - சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)

01.02 - சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி


2007-11-02
திருச்சிராப்பள்ளி
எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்
------------------------------------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

1)

காப்பவன்; அடிதொழுது கரம்சேர்ப்பார் தமைக்கரையில்
சேர்ப்பவன்; திரிபுரங்கள் செந்தீயில் வேகஅம்பைக்
கோப்பவன்; தென்னிலங்கைக் கோன்செருக்கை விரலூன்றித்
தீர்ப்பவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(திரிபுரங்கள் - வினைத்தொகை - திரிகிற புரங்கள் - முப்புரங்கள்;
கோத்தல் - தொடுத்தல்;
இலங்கைக் கோன் - இராவணன்;
செருக்கு - ஆணவம்;
சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி;)

2)
நெரித்தவன், மலையெடுக்க நினைத்தவனை; மன்மதனை
எரித்தவன், எரிவிடத்தை இமையவர்க்காக் கண்டத்தில்
தரித்தவன்; சடையில்நதி தடுத்தவன்;முப் புரம்எரியச்
சிரித்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


நெரித்தல் - நசுக்குதல்;
மலை எடுக்க நினைத்தவன் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்;
எரிவிடம் - வினைத்தொகை - எரி விடம் - எரிக்கும் விஷம்;
இமையவர் - தேவர்கள்;
தரித்தல் - தாங்குதல்; பொறுத்தல்; அணிதல்;
சடையினதி - சடையில் நதி - கங்கை;
தடுத்தல் - அடைத்தல்; தடை செய்தல்; நிறுத்திவைத்தல்; அடக்குதல்;


3)
தூயவன்; முதலாகித் தோற்றுபவன்; இங்கெல்லாம்
ஆயவன்; அடிபோற்றும் அன்பர்கட்(கு) அன்பனவன்;
மாயவன் மண்ணகழ்ந்தும் மலரடியைக் காணாத
தீயவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(முதல் ஆகித் தோற்றுபவன் - ஆதி ஆகத் தான் இருந்து படைப்பவன்;
இங்கு எல்லாம் ஆயவன் - இப்பிரபஞ்சத்தில் எல்லாம் ஆனவன்;
அன்பர் - பக்தர்; அன்பர்கட்கு - அன்பர்களுக்கு;
மாயவன் - திருமால்; விஷ்ணு;
மலர் அடி - உவமைத் தொகை - மலர் போன்ற திருவடி;
தீயவன் - தீ அவன் - சோதியாக நின்றவன்;)


4)
தேயவன்; நடமாடித் தில்லைச்சிற் றம்பலத்தில்
மேயவன்; மண்ணுலகும் விண்ணுலகும் படைக்கின்ற
தாயவன்; அன்பருளன்; தருக்குடைய எல்லார்க்கும்
சேயவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(தே - தெய்வம்;
தேயவன் - தே அவன் - தெய்வம் அவன்;
இலக்கணக் குறிப்பு - + உயிர் வந்தால், இடையில் உடம்படுமெய்யாக ய்/வ் எதுவும் தோன்றும்.
நடம் ஆடுதல் - திருநடம் செய்தல்;
மேயவன் - மேயான்; உறைபவன்;
அன்பருளன் - அன்பர் உள்ளத்தில் இருப்பவன்;
தருக்கு - கர்வம்; செருக்கு; ஆணவம்;
சேய் - தொலைவு; தூரம்; சேயவன் - தூரத்தில் இருப்பவன்;)


5)
தின்றவன் பாற்கடலில் திரண்டநஞ்சை; திரிபுரங்கள்
வென்றவன்; இருவரிடை விண்மண்ணைக் கடந்ததென
நின்றவன்; அடியவர்க்கா நிலவுலகில் தூதனெனச்
சென்றவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(இருவர் - திருமால், பிரமன்;
அடியவர்க்கா நிலவுலகில் தூதன் எனச் சென்றவன் - சுந்தரருக்காகப் பரவையாரிடம் தூது போனவன்;)


6)
கொற்றவன்; துதித்துக்கை குவிக்கின்ற அன்பர்கட்(கு)
உற்றவன்; இடப்பக்கம் உமைநங்கை சேர்ந்திருக்கப்
பெற்றவன்; ஒருகோடி பேருடையான்; முப்புரங்கள்
செற்றவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(கொற்றவன் - அரசன்;
உற்றவன் - நண்பன்; சுற்றத்தான்;
ஒரு கோடி பேர் உடையான் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;
செற்றவன் - அழித்தவன்;)

7)
ஊர்பவன் ஓரெருதில்; ஓர்கின்ற அன்பருளம்
சேர்பவன்; சேவிப்பார் தீவினைகள் அத்தனையும்
தீர்பவன்; பிரமனது சிரத்தினிலே இடுபிச்சை
தேர்பவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(ஊர்தல் - ஏறுதல் (mount); ஏறிநடத்துதல் (ride a horse, drive a vehicle);
எருது - காளை;
ஓர்தல் - ஆராய்தல்; நினைத்தல்; தியானித்தல்;
அன்பர் உளம் - பக்தர் உள்ளம்;
சேவித்தல் - வணங்குதல்;
தீர்பவன் - வினைத்தொகை - தீர் பவன் - தீர்க்கிற பவன்;
பவன் - கடவுள்; சிவன்;
தேர்தல் - கொள்ளுதல் (acquire; obtain); )


8)
புகழ்ந்தவன் திருவடியைப் போற்றுபவர் மனத்தினிலே
நிகழ்ந்தவன்; இராவணனை நெரித்தவன்; அடிதேடி
அகழ்ந்தவன் அறியாத அளப்பரிய நெருப்பாகத்
திகழ்ந்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(புகழ்ந்தவன் - புகழ்ந்து அவன்;
நிகழ்தல் - தங்குதல்;
அடிதேடி அகழ்ந்தவன் - திருமால்;
அளப்பு - அளத்தல்; எல்லை;
அரிய - முடியாத; இயலாத; அருமையான; (precious, dear, excellent, rare, difficult))


9)
பாடியவன் மறைகளெலாம்; பலபூதம் பண்பாட
ஆடியவன்; அடிபோற்றும் அன்பரிடம் வரும்எமனைச்
சாடியவன்; தலைமாலை சூடியவன்; மால்அகழ்ந்து
தேடியவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(மறை - வேதம்;
பண் - இசை; இராகம்;
அடி போற்றும் அன்பர் - இங்கே மார்க்கண்டேயர்;
சாடுதல் - கொல்லுதல்; கடிதல்;
மால் அகழ்ந்து தேடியவன் - விஷ்ணு நிலத்தைத் தோண்டித் தேடியவன் அவன்;)


10)
ஒல்கிற அறநெறியை ஒவ்வாதென்(று) இருப்பவர்கள்
சொல்கிற மொழிகளெலாம் துறந்து,பழ வினைத்தொடரை
வெல்கிற நெறிஅறிவீர் விரும்படியார் தமைக்காக்கச்
செல்கிற எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


(ஒல்லுதல் - தகுதல்; இயலுதல்; ("ஒல்லுகிற" என்பதன் இடைக்குறையாகக் கருதலாம்);
ஒவ்வுதல் - பொருந்துதல்; ஒவ்வாது - பொருந்தாது;
துறந்து - நீங்கி; கைவிட்டு;
விரும்பு அடியார் - வினைத்தொகை - விரும்புகிற அடியார்;
அடியாரைக் காக்கச் செல்வது - தாயும் ஆனவனாய்ச் சென்று மகப்பேற்றுக்கு உதவியது, மார்க்கண்டேயரைக் காத்தது, எனப் பலவும் பொருந்தும்;)


11)
நிறைந்தவன் உலகமெலாம்; நினையாதார்க்(கு) எட்டாது
மறைந்தவன்; இருவரிடை மாசுடராய் நின்றெல்லை
இறந்தவன்; மறைக்காட்டில் இன்தமிழைக் கேட்டுத்தாழ்
திறந்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!


மறைதல் - ஒளித்துகொள்ளுதல்;
இருவர் இடை - பிரமன், விஷ்ணு இருவர் இடையே;
மா சுடராய் - பெரிய சோதியாக;
எல்லை - வரம்பு (Limit, border, boundary); அளவை (Measure, extent);
இறத்தல் - கடத்தல் (To go beyond, transcend, pass over);
நின்று எல்லை இறந்தவன் - நின்று எல்லை கடந்தவன்;
மறைக்காடு - வேதாரண்யம்;
இன் தமிழ் - இனிய தமிழ் - இங்கே திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்;
தாழ் திறந்தவன் - கோயில் கதவைத் திறந்து அருளியவன்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்கள் "நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா".

இப்பாடல்கள் பொதுவாகக் காய்ச்சீர்களால் அமைந்தவை. இங்கே, அடிதோறும் முதற்சீர் 'விள'ச்சீரா அமைந்துள்ளது.

No comments:

Post a Comment