08.02.195 - புகலி (காழி) - இனலைத் தருமிப் பிறவி - (வண்ணம்)
2016-06-26
08.02.195 - இனலைத் தருமிப் பிறவி - புகலி (காழி)
------------------
(வண்ணவிருத்தம்;
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் .. தனதான)
(அமைவுற் றடையப் - திருப்புகழ் - திருத்தணிகை)
இனலைத் தருமிப் பிறவித் தளையற்
.. .. றிருளற் றிடுநற் .. கதிதாராய்
.. இருமைப் பயனைத் தருநற் றமிழிட்
.. .. டிருபொற் கழலைத் .. தொழுதேனே
கனலைத் துடியைப் பரசுப் படையைக்
.. .. கரம்வைத் துரிகட் .. டியநாதா
.. கடலிற் சிலைமத் திடுமச் சுரரைக்
.. .. கருதிக் கறையைத் .. தரிநேயா
கனவெற் பதனிற் கணைவைத் தெயிலைக்
.. .. கடிதிற் சுடநக் .. கருள்வோனே
.. கமலத் தயனுக் கலையிற் றுயிலக்
.. .. கருடக் கொடியற் .. கரியானே
புனலைக் குரவைப் பிறையைப் பணியைப்
.. .. புரிபொற் சடையிற் .. புனைவோனே
.. புதல்வர்க் கமுதைப் பருகத் தருமப்
.. .. புரிசைப் புகலிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
இனலைத் தரும் இப் பிறவித் தளை அற்று,
.. .. இருள் அற்றிடு நற்கதி தாராய்;
.. இருமைப் பயனைத் தரு நற்றமிழ் இட்டு
.. .. இரு-பொற்கழலைத் தொழுதேனே;
கனலைத், துடியைப், பரசுப் படையைக்
.. .. கரம் வைத்து, உரி கட்டிய நாதா;
.. கடலிற் சிலை-மத்து இடும் அச் சுரரைக்
.. .. கருதிக் கறையைத் தரி-நேயா;
கன-வெற்பு-அதனிற் கணை வைத்து, எயிலைக்
.. .. கடிதிற் சுட நக்கு அருள்வோனே;
.. கமலத்து அயனுக்கு, அலையில் துயில்-அக்
.. .. கருடக் கொடியற்கு அரியானே;
புனலைக், குரவைப், பிறையைப், பணியைப்,
.. .. புரி-பொற்சடையிற் புனைவோனே;
.. புதல்வர்க்கு அமுதைப் பருகத் தரும் அப்
.. .. புரிசைப் புகலிப் பெருமானே.
இனலைத் தரும் இப்-பிறவித் தளை அற்று, இருள் அற்றிடு நற்கதி தாராய் - துன்பத்தைத் தருகின்ற இந்தப் பிறவிப்பிணி நீங்கி, அஞ்ஞான இருள் அழியும் நல்ல கதியை அருள்வாயாக; (இனலை - இன்னலை; இடைக்குறை விகாரம்); (அறுதல் - இல்லாமற் போதல்); (இருள் - அஞ்ஞானம். அதன் நீக்கம் இம்மையில் (இப்பிறவியில்) நிகழ்வது. பிறவாமை - மறுமை இன்பம்;)
இருமைப் பயனைத் தரு நற்றமிழ் இட்டு இரு-பொற்கழலைத் தொழுதேனே - இம்மை மறுமை இன்பங்களைத் தரும் நல்ல தமிழ்ப்பாமாலைகளைச் சூட்டி உன் இரு-பொன்னடிகளை வணங்கினேன்; (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "இருமைக்கும் உள்ளது நீறு"); (நற்றமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன); (சம்பந்தர் தேவாரம் - 3.24.1 - "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை"); (சம்பந்தர் தேவாரம் - 2.107.11 - "ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப் பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே");
கனலைத், துடியைப், பரசுப் படையைக் கரம் வைத்து, உரி கட்டிய நாதா - நெருப்பை, உடுக்கையை, மழுவாயுதத்தைக் கையில் ஏந்தித், தோலை ஆடையாகக் கட்டிய தலைவனே; (துடி - உடுக்கை); (பரசு - மழு); (படை - ஆயுதம்); (உரி - தோல்); (கட்டுதல் - உடுத்தல்);
கடலில் சிலை-மத்து இடும் அச்-சுரரைக் கருதிக் கறையைத் தரி-நேயா - பாற்கடலில் ஒரு மலையை மத்தாக நட்டுக் கடைந்த அந்தத் தேவர்கள் உய்யும்பொருட்டுக் கறையைக் கண்டத்தில் அணிந்த அன்பனே; (சிலை - மலை);
கன-வெற்பு-அதனில் கணை வைத்து, எயிலைக் கடிதில் சுட நக்கு அருள்வோனே - பெரிய மேருமலையில் ஓர் அம்பைப் பிணைத்து, முப்புரங்களை விரைந்து எரிக்கச் சிரித்து அருளியவனே; (கனம் - பருமன்; பெருமை); (வெற்பு - மலை); (எயில் - மதில்); (கடிதில் - விரைவாய்); (நகுதல் - சிரித்தல்);
கமலத்து அயனுக்கு, அலையில் துயில்- அக்-கருடக் கொடியற்கு அரியானே - தாமரைப்பூவில் இருக்கும் பிரமனுக்கும், கடலலைமேல் பள்ளிகொள்பவனும் கருடக்கொடியை உடையவனுமான திருமாலுக்கும் அறிய ஒண்ணாதவனே; (அயன் - பிரமன்); (கொடியற்கு - கொடியன்+கு - கொடியனுக்கு);
புனலைக், குரவைப், பிறையைப், பணியைப், புரி-பொற்சடையில் புனைவோனே - கங்கையைக், குராமலரைப், பிறைச்சந்திரனை, நாகத்தைச், சுருண்ட பொன் போன்ற சடையில் அணிந்தவனே; (குரவு - குராமலர்); (பணி - நாகம்); (புரிதல் - முறுக்குக்கொள்தல்);
புதல்வர்க்கு அமுதைப் பருகத் தரும் அப்-புரிசைப் புகலிப் பெருமானே - ஆளுடைய பிள்ளையாரான காழிப் பிள்ளையார்க்கு ஞானப்பாலைப் பருகத் தந்த, மதில் சூழ்ந்த அந்தப் புகலியில் (சீகாழியில்) உறைகின்ற பெருமானே; (புரிசை - மதில்); ("அப்-புரிசைப் புகலி" என்றதில் "அ" - பண்டறிசுட்டு); ("பருகத் தருமப் புரிசைப் புகலிப் பெருமானே" - "தரு" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு - "பருகத் தரு" & "தருமப் புரிசைப் புகலிப் பெருமான்" என்று இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்; "பருகத் தந்த, தருமம் மிக்க, மதில் சூழ்ந்த புகலியில் உறையும் பெருமானே");
வி. சுப்பிரமணியன்
--------------- ---------------
No comments:
Post a Comment