Monday, May 13, 2024

07.45 - கோடி - (குழகர் கோயில்) - குளிர்கடற்கரை

07.45 - கோடி - (குழகர் கோயில்) - குளிர்கடற்கரை

2016-05-17

07.45 - கோடி - (குழகர் கோயில்)

(வேதாரண்யத்திற்குத் தெற்கே உள்ள தலம். இக்காலத்தில் "குழகர் கோயில்")

---------------------------------

(கட்டளைக் கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின்நேர் மொழியாள்")


1)

குளிர்க டற்கரைக் கோடிக் குழகனே

ஒளிர்ம திச்சடை ஐயனே ஒண்கழல்

அளிம னத்தொடு போற்றும் அடியவர்க்(கு)

எளிய னேஎன இல்லை இடர்களே.


குளிர்-கடற்கரைக் கோடிக் குழகனே - குளிர்ந்த கடலின் கரையில் உள்ள திருக்கோடியில் உறைகின்ற அழகனே; (குழகன் - அழகன்);

ஒளிர்-மதிச் சடை ஐயனே - பிரகாசிக்கும் திங்களைச் சூடிய சடையை உடைய தலைவனே;

ஒண்-கழல் அளி மனத்தொடு போற்றும் அடியவர்க்கு எளியனே - ஒளி பொருந்திய அழகிய திருவடியை உருகும் மனத்தோடு வழிபடும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனே; (ஒண்மை - விளக்கம்; அழகு); (அளிதல் - குழைதல்; அன்புகொள்ளுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.128.1 - அடி 6-7: "ஒண்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய");

என இல்லை இடர்களே - என்று துதித்தால் நம் இடர்கள் நீங்கும்;


2)

குரைக டற்கரைக் கோடிக் குழகனே

அரையிற் பாம்பினை ஆர்த்த அடிகளே

உரைக டந்த ஒருவனே எம்மையாள்

அரைய னேஎன அல்லல்தீர்ந் தின்பமே.


குரைகடற் கரைக் கோடிக் குழகனே - ஒலிக்கின்ற கடலின் கரையில் உள்ள திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

அரையில் பாம்பினை ஆர்த்த அடிகளே - அரையில் பாம்பை அரைநாணாகக் கட்டிய கடவுளே;

உரை கடந்த ஒருவனே - சொல்லைக் கடந்த ஒப்பற்றவனே;

எம்மை ஆள் அரையனே - எம்மை ஆளும் அரசனே;

என அல்லல் தீர்ந்து இன்பமே - என்று துதித்தால் நம் துன்பங்கள் நீங்கி இன்பம் நிலவும்;


3)

கோல வாரிசூழ் கோடிக் குழகனே

நீல கண்டனே நெற்றியிற் கண்ணனே

கால காலனே கையினில் மூவிலை

வேல னேஎன வெவ்வினை வீடுமே.


கோல வாரி சூழ் கோடிக் குழகனே - அழகிய கடல் சூழ்ந்த திருக்கோடியில் உறைகின்ற அழகனே; (கோலம் - அழகு); (வாரி - கடல்);

நீலகண்டனே - கரிய கண்டம் உடையவனே;

நெற்றியிற் கண்ணனே - முக்கண்ணனே;

காலகாலனே - காலனுக்குக் காலன் ஆனவனே;

கையினில் மூவிலை வேலனே - கையில் திரிசூலம் ஏந்தியவனே;

என வெவ்வினை வீடுமே - என்று துதித்தால் நம் கொடிய வினைகள் நீங்கும்; (வெம்மை - கடுமை); (வீடுதல் - நீங்குதல்; அழிதல்);


4)

அமரர் போற்றிடும் அண்ணா அறுமுகக்

குமரன் அத்தனே கோடிக் குழகனே

தமர்க ளுக்கருள் சம்புவே நீறணி

நிமல னேஎன நீங்கும் இடர்களே.


அமரர் போற்றிடும் அண்ணா - தேவர்கள் வழிபடும் அண்ணலே; (அண்ணா - அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது அண்ணா என்று மருவிற்று);

அறுமுகக் குமரன் அத்தனே - முருகனுக்குத் தந்தையே; (அத்தன் - தந்தை);

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

தமர்களுக்கு அருள் சம்புவே - தொண்டர்களுக்கு அருளும் சம்புவே; (தமர் - சுற்றமாகிய அடியார்); (சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்); (அப்பர் தேவாரம் - 5.91.5 - "தலைவ னாகிய ஈசன் தமர்களைக் கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே");

நீறு அணி நிமலனே - திருநீற்றைப் பூசிய தூயவனே; (நிமலன் - மலமற்றவன்; மாசில்லாதவன்);

என நீங்கும் இடர்களே - என்று துதித்தால் நம் துன்பங்கள் நீங்கும்;


5)

நிலவும் கங்கையின் நீரும் அரவமும்

குலவு சென்னியாய் கோடிக் குழகனே

நலமெ லாமருள் நம்பனே வானவர்

தலைவ னேஎனத் தங்கா வினைகளே.


நிலவும் கங்கையின் நீரும் அரவமும் குலவு சென்னியாய் - சந்திரனும் கங்கைப்புனலும் பாம்பும் சேர்கின்ற திருமுடி உடையவனே;

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

நலம் எலாம் அருள் நம்பனே - எல்லா நலங்களையும் அருள்கின்ற நம்பனே; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

வானவர் தலைவனே - தேவர் கோனே;

எனத் தங்கா வினைகளே - என்று துதித்தால் நம் வினைகள் நீங்கும்;


6)

தஞ்சம் என்றடிச் சார்ந்த மதிதனைக்

குஞ்சிச் சூடினாய் கோடிக் குழகனே

வஞ்சி பங்கனே மாமதில் மூன்றெய்த

மஞ்ச னேஎன மாயும் வினைகளே.


தஞ்சம் என்று அடிச் சார்ந்த மதிதனைக் குஞ்சிச் சூடினாய் - உன் திருவடியில் அடைக்கலம் அடைந்த சந்திரனைத் தலையிற் சூடியவனே; (குஞ்சி - ஆண்களின் தலைமயிர் - ஆகுபெயராகத் தலையைக் குறிப்பது);

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

வஞ்சி பங்கனே - உமைபங்கனே; (வஞ்சி - பெண்);

மா மதில் மூன்று எய்த மஞ்சனே - பெரிய அழகிய முப்புரங்களையும் ஒரு கணையால் எய்த வீரனே; (மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி; மைந்தன் - வீரன்);

என மாயும் வினைகளே - என்று துதித்தால் நம் வினைகள் அழியும்;


7)

அல்லில் மாநடம் ஆடிய கூத்தனே

கொல்லை ஏற்றனே கோடிக் குழகனே

செல்வ னேபுனல் செஞ்சடைத் தேக்கிய

வல்ல னேஎன வல்வினை மாயுமே.


அல்லில் மா நடம் ஆடிய கூத்தனே - இருளில் திருநடம் ஆடிய கூத்தனே;

கொல்லை ஏற்றனே - முல்லைநிலம் சார்ந்த எருதை வாகனமாக உடையவனே; (அப்பர் தேவாரம் - 5.33.1 - "கொல்லை ஏற்றினர்");

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

செல்வனே - செல்வனே; (எல்லாச் செல்வங்களும் உடையவன்);

புனல் செஞ்சடைத் தேக்கிய வல்லனே - கங்கையைச் செஞ்சடையிடைத் தேக்கிய, வல்லவனே; (வல்லன் - வல்லவன்); (அப்பர் தேவாரம் - 5.52.1 - "வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்");

என வல்வினை மாயுமே - என்று துதித்தால் நம் வலிய வினைகள் அழியும்;


8)

குன்றெ டுத்தவன் அன்றழ ஊன்றிய

கொன்றை வேணியாய் கோடிக் குழகனே

மன்றுள் நட்டம தாடிடு மன்னனே

என்று போற்றிட இல்லை இடர்களே.


குன்று எடுத்தவன் அன்று அழ ஊன்றிய, கொன்றை வேணியாய் - முன்னர்க் கயிலைமலையைப் பேர்த்து எடுத்த தசமுகன் (இராவணன்) அழும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவனே, சடையில் கொன்றைமலர் அணிந்தவனே;

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

மன்றுள் நட்டது ஆடிடு மன்னனே - சபையில் திருநடம் ஆடும் நடராஜனே; (நட்டம் - கூத்து);

என்று போற்றிட இல்லை இடர்களே - என்று துதித்தால் நம் துன்பங்கள் நீங்கும்;


9)

தொக்கு மால்பிர மன்தொழு சோதியே

கொக்கின் தூவலாய் கோடிக் குழகனே

முக்கண் மூர்த்தியே மூவா முதல்வனே

தக்கி ணாஎன வல்வினை சாயுமே.


தொக்கு மால் பிரமன் தொழு சோதியே - (அடிமுடி தேடி வாடித்) திருமாலும் பிரமனும் சேர்ந்து தொழுத சோதியே; (தொகுதல் - சேர்தல்; ஒன்றாதல்; தொக்கு - சேர்ந்து);

கொக்கின் தூவலாய் - கொக்கின் இறகை அணிந்தவனே; (தூவல் - இறகு); (கொக்கின் தூவல் - கொக்கிறகு - 1. கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்; 2. கொக்கிறகு என்ற பூ); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும்");

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

முக்கண் மூர்த்தியே - முக்கட் கடவுளே;

மூவா முதல்வனே - மூப்பு இல்லாத ஆதியே;

தக்கிணா - தட்சிணாமூர்த்தியே; (தக்கிணன் - தட்சிணாமூர்த்தி);

என வல்வினை சாயுமே - என்று துதித்தால் வலியவினை அழியும்; (சாய்தல் - அழிதல்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "கையால் தொழுவார் வினை சாயுமே");


10)

மிண்டர் மெய்யறி யார்சொல் விடுமினீர்

கொண்டற் கண்டனே கோடிக் குழகனே

வண்டு சேர்குழல் மாதொரு பங்குடை

அண்ட னேஎன ஆரும் திருவதே


மிண்டர் மெய்-அறியார் சொல் விடுமின் நீர் - கல்நெஞ்சர்களும் உண்மையை அறியாதவர்களும் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் நீங்குங்கள்;

கொண்டல் கண்டனே - மேகம் போல் கண்டம் உடையவனே - நீலகண்டனே; (கொண்டல் - மேகம்);

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

வண்டு சேர் குழல் மாது ஒரு பங்குஉடை அண்டனே - வண்டுகள் பொருந்தும் கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே, உலகநாயகனே; (அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்);

என ஆரும் திருதே - என்று துதித்தால் திரு வந்து பொருந்தும்; திரு மிகும்; (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்); (திரு - செல்வம்; அழகு; நல்வினை; பாக்கியம்; அது - பகுதிப்பொருள்விகுதி);


11)

உழையை ஏந்தினாய் ஓர்காதிற் சங்கவெண்

குழையி னாய்திருக் கோடிக் குழகனே

இழையி லங்கிய மார்பனே என்றுளம்

குழையும் அன்பருக் கின்பமே கூடுமே.


உழையை ஏந்தினாய் - மானை ஏந்தியவனே; (உழை - மான்);

ஓர் காதில் சங்க வெண் குழையினாய் - ஒரு செவியில் வெண்சங்கக் குழையை அணிந்தவனே;

திருக் கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

இழை இலங்கிய மார்பனே - முப்புரிநூலை மார்பில் அணிந்தவனே; (இழை - நூல்);

என்று உளம் குழையும் அன்பருக்கு இன்பமே கூடுமே - என்று உள்ளம் உருகித் துதிக்கும் அடியவர்களுக்கு என்றும் இன்பமே மிகும்;


பிற்குறிப்பு : கோடி - தலப்பெயர்க் குறிப்பு:

  • தருமை ஆதீன உரையிற் காண்பது: திருமறைக்காட்டு எல்லையின் கோடியில் இருக்கும் அழகராதல் பற்றி, இங்கு உள்ள பெருமான், "கோடிக் குழகர்" எனப் படுவர். அவரது பெயரே, பின்னர் அத்தலத்திற்கும் ஆயிற்று. அக்கடற்கரையையும், "கோடிக்கரை" என்பர்.

  • சுந்தரர் தேவாரம் - 7.32.5 - "கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண்டாயே";

  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - "நீலமுகி லானகுழல் ... குழகர் கோடிநகர் மேவிவளர் பெருமாளே" - குழகர் என்னும் திருநாமத்துடன் சிவபெருமான் வீற்றிருக்கும் கோடி என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே;


வி. சுப்பிரமணியன்

-------------------


No comments:

Post a Comment