Monday, May 20, 2024

08.02.192 - கைச்சினம் (கச்சனம்) - வெற்றுரைச் சழக்கர் - (வண்ணம்)

08.02.192 - கைச்சினம் (கச்சனம்) - வெற்றுரைச் சழக்கர் - (வண்ணம்)

2016-06-04

08.02.192 - வெற்றுரைச் சழக்கர் - கைச்சினம் (இக்காலத்தில் - கச்சனம்)

(திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)

------------------

(வண்ணவிருத்தம்;

தத்த தத்த தத்த .. தத்த தத்த தத்த

தத்த தத்த தத்த .. தனதான)

(கிட்டத்தட்ட இவ்வமைப்பு உள்ள திருப்புகழ் -

மச்ச மெச்சு சூத்ரம் - திருப்புகழ் - சிதம்பரம்)


வெற்று ரைச்ச ழக்கர் .. சொற்கு ழிக்கி டத்தல்

.. .. விட்டு னைத்து திக்க .. அருளாயே

.. வெற்பி னைப்பி டித்து .. வெப்பு டைச்ச ரத்தை

.. .. விட்டு முப்பு ரத்தை .. எரிவீரா

மற்றொர் பற்றும் அற்ற .. பத்த ரைக்க ளிக்க

.. .. வைக்கும் அத்த கத்தி .. மலைவீசு

.. மட்டி யைத்தி ருத்த .. நற்ப தத்தை யிட்டு

.. .. மற்பு யத்து ரத்தை .. நெரியீசா

பெற்ற(ம்) நச்சு நக்க .. சத்தி யத்தில் உற்ற

.. .. பெற்றி பெற்ற சத்தி .. மணவாளா

.. பிட்டி னைப்பு சிக்க .. அற்றை மொத்து முற்ற

.. .. பித்த மத்த அத்தி .. உரிமூடீ

கற்று ணைப்பி ணித்த .. அப்ப ருக்க ளித்த

.. .. கத்த கைத்த லத்தில் .. அனலானே

.. கற்ற வர்க்கி னித்த .. கட்டி யொத்த சுத்த

.. .. கைச்சி னத்தி லுற்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

வெற்றுரைச் சழக்கர் .. சொற்குழிக் கிடத்தல்

.. .. விட்டு உனைத் துதிக்க அருளாயே;

.. வெற்பினைப் பிடித்து .. வெப்புடைச் சரத்தை

.. .. விட்டு முப்புரத்தை எரி வீரா;

மற்றொர் பற்றும் அற்ற .. பத்தரைக் களிக்க-

.. .. வைக்கும் அத்த; கத்தி மலை வீசு

.. மட்டியைத் திருத்த .. நற்பதத்தை இட்டு

.. .. மற்புயத்து உரத்தை நெரி ஈசா;

பெற்ற(ம்) நச்சு நக்க; .. சத்தியத்தில் உற்ற

.. .. பெற்றி பெற்ற, சத்தி மணவாளா;

.. பிட்டினைப் புசிக்க .. அற்றை மொத்தும் உற்ற

.. .. பித்த; மத்த; அத்தி உரி மூடீ;

கற்றுணைப் பிணித்த .. அப்பருக்கு அளித்த

.. .. கத்த; கைத்தலத்தில் அனலானே;

.. கற்றவர்க்கு இனித்த .. கட்டி ஒத்த சுத்த;

.. .. கைச்சினத்தில் உற்ற பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

வெற்றுரைச் சழக்கர் சொற்குழிக் கிடத்தல் விட்டு னைத் துதிக்க அருளாயே - பொருளற்ற பேச்சுடைய தீயோர்களது சொல் என்ற படுகுழியில் விழுந்து அழியாமல், அவர்கள் பேச்சை நீங்கி உன்னைத் துதிக்க அருள்வாயாக; (சழக்கர் - தீயவர்);

வெற்பினைப் பிடித்து வெப்புடைச் சரத்தை விட்டு முப்புரத்தை எரி வீரா - மேருமலையை ஏந்திச் சுடுகணை ஒன்றை ஏவி முப்புரங்களை எரித்த வீரனே;

மற்றொர் பற்றும் அற்ற பத்தரைக் களிக்க வைக்கும் அத்த - வேறு பற்றுகள் அற்ற பக்தர்களை இன்புறவைக்கும் தந்தையே; (அத்தன் - தந்தை);

கத்தி மலை வீசு வீசு மட்டியைத் திருத்த நற்பதத்தை ட்டு மற்புயத்து ரத்தை நெரிசா - மிகவும் இகழ்ந்து கத்தியபடி கயிலைமலையை எறிய முயன்ற மூடனான இராவணனைத் திருத்த உன் நல்ல திருவடியை அம்மலைமேல் ஊன்றி அவனது வலிய புஜங்களின் வலிமையை நசுக்கி அழித்த ஈசனே; (மட்டி - மூடன்); (மல் - வலிமை); (உரம் - வலிமை); (நெரித்தல் - நசுக்குதல்);

பெற்றம் நச்சு நக்க - இடபத்தை வாகனமாக விரும்பிய நக்கனே; (பெற்றம் - எருது); (நச்சுதல் - விரும்புதல்); (நக்கன் - ஆடையில்லாதவன்);

சத்தியத்தில் உற்ற பெற்றி பெற்ற - உண்மையில் இருக்கும் பெருமை உடைய; (பெற்றி - இயல்பு; பெருமை);

சத்தி மணவாளா - உமை மணவாளனே;

பிட்டினைப் புசிக்க அற்றை மொத்தும் உற்ற பித்த - பிட்டை உண்ண விரும்பி முன்பு (மதுரையில்) பிரம்படி வாங்கிய பித்தனே; (அற்றை - அன்று); (மொத்து - அடி); (உறுதல் - அனுபவித்தல்); (பித்தன் - பேரருளாளன்);

மத்த - மத்தனே - ஊமத்தமலரை அணிந்தவனே; (அப்பர் தேவாரம் - 5.4.3 - "மத்தனைம் மதயானை உரித்தவெஞ் சித்தனை");

அத்தி உரி மூடீ - யானைத்தோலைப் போர்த்தவனே; (அத்தி - ஹஸ்தி - யானை); (குறிப்பு: "மத்தம் = யானைமதம்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்; அப்படிக் கொண்டால், "மத்த அத்தி உரி மூடீ" - மதயானையின் தோலைப் போர்த்தவனே); (சம்பந்தர் தேவாரம் - 3.47.2 - "மத்த யானையின் ஈருரி மூடிய அத்தனே");

கற்றுணைப் பிணித்த அப்பருக்கு அளித்த கத்த - கல்லோடு கட்டப்பட்ட திருநாவுக்கரசருக்கு அருளிய கடவுளே; (கற்றுணை = கல் + துணை); (கத்தன் - கர்த்தா - கடவுள்);

கைத்தலத்தில் அனலானே - கையில் தீயை ஏந்தியவனே;

கற்றவர்க்கு இனித்த கட்டித்த சுத்த - கற்றவர்களுக்கு கரும்பின் கட்டி போல் இனிமை பயக்கும் தூயனே; (கட்டி - வெல்லக்கட்டி); (சுத்தன் - பரிசுத்தன்); (அப்பர் தேவாரம் - 5.14.10 - "கட்டி பட்ட கரும்பினும் இனியன்");

கைச்சினத்தில் உற்ற பெருமானே - கைச்சினம் என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------


No comments:

Post a Comment