08.03 – மடக்கு
2016-05-20
08.03.069 - உடையானை - வேதனை - மடக்கு
-------------------------
உடையானை ஓதுமன்பர் உள்ளத்தை என்றும்
உடையானை வேங்கை உரிவை - உடையானை
வேதனை முக்கண் விமலனைப் போற்றிடில்
வேதனை தீர்ந்து விடும்.
சொற்பொருள்:
உடையான் - 1. சுவாமி; 2. உடைக்கமாட்டான்; வருத்தமாட்டான்; 3. உடை அணிந்தவன்;
வேதனை - 1. வேதப்பொருள் ஆனவனை; 2. வருத்தம்; துன்பம்;
உடையானை - சுவாமியை;
ஓதும் அன்பர் உள்ளத்தை என்றும் உடையானை - துதிக்கும் பக்தர்கள் மனத்திற்கு இதம் அளிப்பவனை; (உடைத்தல் - தகர்த்தல்; வருத்துதல்);
வேங்கை உரிவை உடையானை - புலித்தோலை அணிந்தவனை; (வேங்கை - புலி); (உரிவை - தோல்);
வேதனை - வேதன் என்ற நாமம் உடையவனை; (வேதன் - வேதப்பொருள் ஆனவன்; வேதம் ஓதியவன்);
முக்கண் விமலனைப் போற்றிடில் வேதனை தீர்ந்துவிடும் - முக்கண்ணனும் தூயவனும் ஆன சிவபெருமானை வழிபட்டால் துன்பம் நீங்கிவிடும்;
வி. சுப்பிரமணியன்
------------ ------------
No comments:
Post a Comment