07.47 - இடைச்சுரம் (திருவடிசூலம்) - வாரணி முலையினாளை
2016-05-19
07.47 - இடைச்சுரம் (இக்காலத்தில் - திருவடிசூலம்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)
-----------------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருநேரிசை அமைப்பு) (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")
1)
வாரணி முலையி னாளை வாம(ம்)ம கிழ்ந்த பெம்மான்
ஓரணி யாகி உம்பர் ஒண்கழ லைத்து திக்கக்
காரணி கண்டன் தீயைக் கையினில் ஏந்து கூத்தன்
ஏரணி கழனி சூழ்ந்த இடைச்சுரம் மேவி னானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
வார் அணி முலையினாளை வாமம் மகிழ்ந்த பெம்மான் - கச்சு அணிந்த முலைகளை உடைய உமாதேவியை இடப்பக்கம் பாகமாக விரும்பிய பெருமான்; (வார் - முலைக்கச்சு); (வாமம் - இடப்பக்கம்);
ஓர் அணி ஆகி உம்பர் ஒண்கழலைத் துதிக்கக் கார் அணி கண்டன் - ஒரு கூட்டம் ஆகித் தேவர்கள் எல்லாம் ஒளி பொருந்திய கழல் அணிந்த திருவடியைத் துதிக்க, அவர்களுக்கு இரங்கிய நீலகண்டன்; (அணி - கூட்டம்); (கார் - கருமை); (அணிதல் - பூணுதல்);
தீயைக் கையினில் ஏந்து கூத்தன் - கையில் நெருப்பை ஏந்திய கூத்தன்;
ஏர் அணி கழனி சூழ்ந்த இடைச்சுரம் மேவினானே - அழகிய வயல் சூழ்ந்த திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்; (ஏர் - அழகு; கலப்பை); (கழனி - வயல்);
2)
கூத்தனே தேவர் கோனே கூவிளச் சடையாய் நெற்றி
நேத்திரா ஒப்பி லாத நின்மலா என்று நாவால்
தோத்திரம் பாடி நாளும் துணைமலர்ப் பாதம் தன்னை
ஏத்துவார்க் கின்பம் ஈவான் இடைச்சுரம் மேவி னானே.
கூத்தனே தேவர் கோனே - நடராஜனே, தேவர்கள் தலைவனே;
கூவிளச் சடையாய் - சடையில் வில்வம் சூடியவனே; (கூவிளம் - வில்வம்);
நெற்றி நேத்திரா - நெற்றிக்கண்ணனே; (நேத்திரம் - கண்);
ஒப்பு இலாத நின்மலா என்று நாவால் தோத்திரம் பாடி - ஒப்பற்ற தூயவனே என்று தம் நாக்கால் துதிகள் பாடி;
நாளும் துணைமலர்ப் பாதம் தன்னை ஏத்துவார்க்கு இன்பம் ஈவான் - தினமும் இரு-மலர்ப்பாதங்களை வழிபடுபவர்களுக்கு இன்பம் அளிப்பவன்; (துணை - இரண்டு);
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
3)
விண்ணினார் சொல்லக் கேட்டு மென்மலர்க் கணையெய் தானைக்
கண்ணினாற் காய்ந்த அண்ணல் காதலார் நெஞ்ச ராகிப்
பண்ணினார் தமிழ்கள் பாடிப் பைங்கழல் தன்னை நாளும்
எண்ணினார் இடர்கள் தீர்ப்பான் இடைச்சுரம் மேவி னானே.
விண்ணினார் சொல்லக் கேட்டு மென்மலர்க் கணை எய்தானைக் - தேவர்கள் பேச்சினைக் கேட்டு ஈசன்மேல் மென்மையான மலரம்பை எய்த மன்மதனை;
கண்ணினால் காய்ந்த அண்ணல் - நெற்றிக்கண்ணால் எரித்த இறைவன்;
காதல் ஆர் நெஞ்சர் ஆகிப் பண்ணின் ஆர் தமிழ்கள் பாடிப் - அன்பு மிகுந்த மனத்தினர்கள் ஆகிப் பண் பொருந்திய தேவாரம் முதலிய பாடல்களைப் பாடி;
பைங்கழல் தன்னை நாளும் எண்ணினார் இடர்கள் தீர்ப்பான் - அழகிய திருவடிகளைத் தினமும் தியானிக்கும் பக்தர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பவன்;
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
4)
செருவினுக் காகத் தேவர் செய்யிர தத்தில் ஏறி
ஒருவரை வில்லை ஏந்தி ஒன்னலர் புரங்கள் எய்தான்
குருவென ஆல மர்ந்தான் குரைகழல் போற்றி னார்தம்
இருவினை தீர்த்த ருள்வான் இடைச்சுரம் மேவி னானே.
செருவினுக்காகத் தேவர் செய் இரதத்தில் ஏறி - போருக்காகத் தேவர்கள் செய்த தேரில் ஏறி; (செரு - போர்);
ஒரு வரைவில்லை ஏந்தி ஒன்னலர் புரங்கள் எய்தான் - ஒப்பற்ற மேருமலையால் ஆன வில்லை ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (ஒரு - ஒப்பற்ற); (வரை - மலை); (ஒன்னலர் - பகைவர்);
குரு என ஆல் அமர்ந்தான் - தட்சிணாமூர்த்தியாகிக் கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தவன்;
குரைகழல் போற்றினார்தம் இருவினை தீர்த்து அருள்வான் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டவர்களுடைய வினைகளைத் தீர்ப்பவன்;
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
5)
சுடுபொடி மேனிப் பூசும் சுந்தரன் பூதம் சூழ
நடுவிருள் நட்டம் ஆடி நல்லவன் தேவர் வேண்டக்
கொடுவிடம் உண்டு நீலம் கொள்மிடற் றீசன் ஊரார்
இடுபலிக் குழலும் ஏந்தல் இடைச்சுரம் மேவி னானே.
சுடுபொடி மேனிப் பூசும் சுந்தரன் - சுட்ட திருநீற்றைத் திருமேனியிற் பூசும் அழகன்;
பூதம் சூழ நடு இருள் நட்டம் ஆடி - பூதங்கள் சூழ, நள்ளிரவில் திருநடம் செய்பவன்; (ஆடி - ஆடுபவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "நடுவிருள் ஆடும் எந்தை");
நல்லவன் தேவர் வேண்டக் கொடுவிடம் உண்டு நீலம்கொள் மிடற்று ஈசன் - நல்லவன், தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கிக் கொடிய விடத்தை உண்டு நீலநிறம் ஏற்ற கண்டத்தை உடைய ஈசன்;
ஊரார் இடுபலிக்கு உழலும் ஏந்தல் - ஊரில் உள்ளோர் இடும் பிச்சைக்குத் திரியும் பெருமையுடையவன்; (பலி - பிச்சை); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்; அரசன்);
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
6)
தரையினில் ஆழி இட்டுச் சலந்தர னைத்த டிந்தான்
அரையினில் அரவம் ஆர்த்தான் அஞ்சடை தன்னிற் கங்கைத்
திரையினன் கணங்கள் கொள்ளித் தீயினை ஏந்திச் சூழ
இரவினில் ஆடும் எந்தை இடைச்சுரம் மேவி னானே.
தரையினில் ஆழி இட்டுச் சலந்தரனைத் தடிந்தான் - தரையில் சக்கரத்தை வரைந்து அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவன்; (ஆழி - சக்கரம்); (தடிதல் - அழித்தல்);
அரையினில் அரவம் ஆர்த்தான் - அரையில் பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
அம்-சடை தன்னில் கங்கைத் திரையினன் - அழகிய சடையில் கங்கையின் அலைகளை உடையவன்; (அம் - அழகு); (திரை - அலை);
கணங்கள் கொள்ளித் தீயினை ஏந்திச் சூழ இரவினில் ஆடும் எந்தை - பூதகணங்கள் கொள்ளிகளை விளக்காக ஏந்திச் சூழச், சுடுகாட்டில் இரவில் திருநடம் ஆடும் எம் தந்தை; (சம்பந்தர் தேவாரம் - 3.119.1 - "கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டம்");
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
7)
பொருமத கரியின் தோலைப் போர்வையாக் கொண்ட வீரன்
கருதுநல் லமுதம் தன்னைக் கழல்தொழு சுரர்க ளுக்குத்
தருதிரு நீல கண்டன் தன்னிகர் இல்லான் வெள்ளை
எருதுகந் தேறும் ஈசன் இடைச்சுரம் மேவி னானே.
பொரு-மத கரியின் தோலைப் போர்வையாக் கொண்ட வீரன் - போர்செய்த மதயானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்த வீரன்; (பொருதல் - போர்செய்தல்); (கரி - யானை);
கருது நல்-அமுதம் தன்னைக் கழல் தொழு சுரர்களுக்குத் தரு திருநீலகண்டன் - விரும்பிய நல்ல அமுதத்தைத் தன் திருவடியைத் தொழுத தேவர்களுக்குத் தந்த திருநீலகண்டன்; (கருதுதல் - விரும்புதல்; எண்ணுதல்); (சுரர் - தேவர்);
தன் நிகர் இல்லான் - தனக்கு ஒப்பு இல்லாதவன்;
வெள்ளை எருது உகந்து ஏறும் ஈசன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக விரும்பியவன்;
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
8)
மலையினைப் பேர்ப்பேன் என்ற வாளரக் கன்றன் பத்துத்
தலைகளை நெரித்த ஈசன் தாயொடு தந்தை ஆன
தலைவனே அருளாய் என்று சரணடை அன்பர் இட்ட
இலையையும் ஏற்ற ருள்வான் இடைச்சுரம் மேவி னானே.
மலையினைப் பேர்ப்பேன் என்ற வாள்-அரக்கன்தன் பத்துத் தலைகளை நெரித்த ஈசன் - "கயிலைமலையைப் பெயர்த்து எறிவேன்" என்ற கொடிய அரக்கனான இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கிய ஈசன்;
"தாயொடு தந்தை ஆன தலைவனே அருளாய்" என்று சரண் அடை அன்பர் இட்ட இலையையும் ஏற்று அருள்வான் - "அம்மையப்பனே அருள்வாயாக" என்று திருவடியில் அடைக்கலம் புகுந்த பக்தர்கள் தூவிய இலையையும் மகிழ்ந்து ஏற்று அவர்களுக்கு அருள்பவன்; (சரண் - பாதம்; அடைக்கலம்); (இலையையும் - ஒரு சாதாரண இலையைத் தூவி வழிபட்டாலும்);
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
9)
தரியலர் முப்பு ரங்கள் சாயவோர் கணையை எய்தான்
பரிவொடு பாதம் போற்று பத்தருக் கெளியன் ஆனான்
அரியயன் கீழ்மேல் நேடி அடிமுடி காண ஒண்ணா
எரியென நின்ற எம்மான் இடைச்சுரம் மேவி னானே.
தரியலர் முப்புரங்கள் சாய ஓர் கணையை எய்தான் - பகைவர்களது முப்புரங்களும் அழியும்படி ஓர் அம்பை எய்தவன்; (தரியலர் - பகைவர்); (சாய்தல் - அழிதல்);
பரிவொடு பாதம் போற்று பத்தருக்கு எளியன் ஆனான் - பக்தியோடு திருவடியைத் துதிக்கும் அன்பர்களால் எளிதில் அடையப்படுபவன்;
அரி அயன் கீழ் மேல் நேடி அடிமுடி காண ஒண்ணா எரி என நின்ற எம்மான் - திருமாலும் பிரமனும் கீழும் மேலும் தேடி அடியையும் முடியையும் காண இயலாத ஜோதியாகி நின்ற எம் இறைவன்; (நேடுதல் - தேடுதல்); (எரி - ஜோதி);
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
10)
எந்நெறி வாரீர் அன்றேல் இழிநர கத்தில் வீழ்வீர்
என்னுமப் பொய்யை நீங்கும் ஏறமர் ஈசன் அன்பர்
உன்னிவ ணங்கு கின்ற உருவினிற் காட்சி நல்கி
இன்னருள் செய்யும் ஏந்தல் இடைச்சுரம் மேவி னானே.
"எம் நெறி வாரீர்; அன்றேல், இழி-நரகத்தில் வீழ்வீர்" என்னும் அப்-பொய்யை நீங்கும் - "எங்கள் சமயத்துக்கு வாருங்கள்; அப்படி வாராவிடில் நீங்கள் கொடிய நரகத்தில் விழுவீர்கள்" என்று சொல்லும் அந்தப் பொய்யை நீங்குங்கள்;
ஏறு அமர் ஈசன் - இடபவாகனம் உடைய ஈசன்;
அன்பர் உன்னி வணங்குகின்ற உருவினில் காட்சி நல்கி இன்னருள் செய்யும் ஏந்தல் - பக்தர்கள் எந்த வடிவினை எண்ணி வழிபடுகின்றார்களோ அந்த வடிவில் காட்சி தந்து அவர்களுக்கு இனிது அருள்புரியும் பெருமான்; (உன்னுதல் - நினைத்தல்);
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
11)
சுழல்மலி கங்கை தன்னைச் சூடிய சடையி னான்றன்
கழல்மனம் வைத்த தொண்டர் கருத்தறிந் தெல்லாம் ஈவான்
நிழல்மழு வாளை ஏந்தி நெற்றியிற் கண்ணன் நீற்றன்
எழில்மணி கண்டத் தீசன் இடைச்சுரம் மேவி னானே.
சுழல் மலி கங்கை தன்னைச் சூடிய சடையினான் - சுழல்கள் மிகுந்த கங்கைநதியைச் சடையில் சூடியவன்; (சுழல் -நீர்ச்சுழி);
தன் கழல் மனம் வைத்த தொண்டர் கருத்து அறிந்து எல்லாம் ஈவான் - தன் திருவடியை மனத்தில் தாங்கிய தொண்டர்களுடைய விருப்பங்களை அறிந்து அவற்றையெல்லாம் அளிப்பவன்; (கருத்து - இச்சை);
நிழல் மழுவாளை ஏந்தி - ஒளியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவன்; (நிழல் - ஒளி);
நெற்றியில் கண்ணன் - நெற்றிக்கண் உடையவன்;
நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்;
எழில் மணி கண்டத்து ஈசன் - அழகிய நீலகண்டம் உடைய ஈசன்;
இடைச்சுரம் மேவினானே - திருவிடைச்சுரத்தில் உறைகின்றவன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment