Monday, May 6, 2024

08.04.036 - திருநாவுக்கரசர் துதி - ஆனை இடறிட

08.04.036 - திருநாவுக்கரசர் துதி - ஆனை இடறிட

2016-04-27

8.4.36 - திருநாவுக்கரசர் துதி

----------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான)

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


ஆனை இடறிட ஓடி வருபொழு

.. தாலன் அடிதொழு .. தருளாலே

ஊனம் இலரென ஆகி அமணெனும்

.. ஊறு தனையொழி .. திருநாவர்

வானம் அடியவர் ஏறு வழியென

.. வார(ம்) மலிதமிழ் .. உரைநாவர்

ஞான வடிவவர் பாத மலர்களை

.. நாளு(ம்) நினைவது .. நலமாமே.


பதம் பிரித்து:

ஆனை இடறிட ஓடி வரு-பொழுது

.. ஆலன் அடிதொழுது, .. அருளாலே

ஊனம் இலரென ஆகி, அமண் எனும்

.. ஊறுதனை ஒழி- .. திருநாவர்;

வானம் அடியவர் ஏறு- வழி என

.. வார(ம்) மலி-தமிழ் .. உரை-நாவர்;

ஞான வடிவு-அவர் பாதமலர்களை

.. நாளு(ம்) நினைவது .. நலம் ஆமே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

ஆனை இடறிட ஓடி வரு-பொழுது ஆலன் அடிதொழுது - தம்மைக் கொல்வதற்காகச் சமணர்கள் ஏவிய யானை தம்மை மிதித்து நசுக்க ஓடி வந்தபொழுது, கல்லாலில்கீழ் இருக்கும் சிவபெருமான் திருவடியை வணங்கி; (இடறுதல் - எற்றுதல்); (ஆலன் - கல்லாலின்கீழ் இருப்பவன்); (சுந்தரர் தேவாரம் - 7.85.9 - "கூடலை யாற்றூரில் ஆலன்");

அருளாலே ஊனம் இலர் என ஆகி - அப்பெருமான் அருளால் தம் உடலுக்கு எவ்வித ஊனமும் இன்றி; (ஊனம் - குறைவு; தீமை);

அமண் எனும் ஊறுதனை ஒழி திருநாவர் - (நாட்டைப் பிடித்திருந்த) சமணம் என்ற தீமையை ஒழித்த திருநாவினை உடையவர்; (அமண் - சமணம்); (ஊறு - துன்பம்).

வானம் அடியவர் ஏறு- வழி என வாரம் மலி தமிழ் உரை நாவர் - பக்தர்கள் சிவலோகத்திற்கு ஏறுகின்ற வழியாக விளங்குகின்ற, அன்பு நிறைந்த தேவாரத்தைப் பாடிய நாவை உடையவர்;

ஞான வடிவு அவர் பாத மலர்களை நாளும் நினைவது நலம் ஆமே - ஞானத்தின் வடிவாக விளங்கிய திருநாவுக்கரசருடைய மலர் போன்ற திருவடிகளைத் தினமும் நாம் நினைந்தால், நமக்கு நன்மை உண்டாகும்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment