07.44 - சிக்கல் - வானோர் மலர் தூவி
2016-05-17
07.44 - சிக்கல்
----------------------------------
(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய்)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக்")
1)
வானோர் மலர்தூவி வாழ்த்தும் கழலானே
கானே இடமாகக் கருதி நடமாடீ
தேனார் பொழில்சூழ்ந்த சிக்கல் உறைவானே
ஆனே றுடையானே அடியேற் கருளாயே.
வானோர் மலர் தூவி வாழ்த்தும் கழலானே - தேவர் பூக்களைத் தூவி வழிபடும் திருவடியை உடையவனே;
கானே இடமாகக் கருதி நடமாடீ - சுடுகாடே இடம் என்று விரும்பி அங்குத் திருநடம் செய்பவனே;
தேன் ஆர் பொழில் சூழ்ந்த சிக்கல் உறைவானே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த சிக்கலில் உறைகின்றவனே; (தேன் - வண்டு; தேனீ); (ஆர்தல் - பொருந்துதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.54.1 - "ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே");
ஆனேறு உடையானே அடியேற்கு அருளாயே - இடபவாகனனே, அடியேனுக்கு அருள்வாயாக; (ஆனேறு - எருது);
2)
செய்ய சடைதன்னில் திரையார் நதியேற்றாய்
ஐயம் மகிழ்செல்வா அங்கை மழுவாளா
செய்யிற் கயல்பாயும் சிக்கல் உறைவானே
வெய்ய வினைநீங்கி உய்யற் கருளாயே.
செய்ய சடைதன்னில் திரை ஆர் நதி ஏற்றாய் - செஞ்சடையில் அலை மிக்க கங்கையை ஏற்றவனே; (செய்ய - சிவந்த); (திரை - அலை);
ஐயம் மகிழ் செல்வா - பிச்சை ஏற்று மகிழும் செல்வனே;
அங்கை மழுவாளா - கையில் மழுவாளை ஏந்தியவனே;
செய்யில் கயல் பாயும் சிக்கல் உறைவானே - வயலில் கயல்மீன்கள் பாயும் சிக்கலில் உறைகின்றவனே; (செய் - வயல்);
வெய்ய வினை நீங்கி உய்யற்கு அருளாயே - கொடிய வினைகள் நீங்கி நான் உய்வதற்கு அருள்வாயாக;
3)
பொங்கும் அரவத்தைப் புனையும் மணிமார்பா
கங்கைச் சடையானே கயிலை மலையானே
செங்கண் விடையானே சிக்கல் உறைவானே
அங்கட் பெருமானே அடியேற் கருளாயே.
பொங்கும் அரவத்தைப் புனையும் மணி மார்பா - சீறும் பாம்பை மாலையாகப் பவளம் போன்ற அழகிய மார்பில் அணிந்தவனே; (மணி - பவளம்; அழகு);
கங்கைச் சடையானே - சடையில் கங்கையை உடையவனே;
கயிலை மலையானே - கயிலைமலைமேல் இருப்பவனே;
செங்கண் விடையானே - சினக்கும் இடபத்தை ஊர்தியாக உடையவனே;
சிக்கல் உறைவானே - சிக்கலில் உறைகின்றவனே;
அங்கட் பெருமானே - அருட்கண் உடைய பெருமானே; (அங்கண் - கண்ணோட்டம் - தாட்சிண்யம்);
அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;
4)
குன்றைச் சிலையாக்கிக் கூடார் புரமெய்தாய்
பன்றி தனையெய்து பார்த்தற் கருள்செய்தாய்
தென்றல் மணம்வீசும் சிக்கல் உறைவானே
என்றன் இடர்நீக்கி இன்பம் அருளாயே.
குன்றைச் சிலை ஆக்கிக் கூடார் புரம் எய்தாய் - மேருமலையை வில்லாக்கிப் பகைவர்களது முப்புரங்களையும் எய்தவனே; (கூடார் - பகைவர்);
பன்றிதனை எய்து பார்த்தற்கு அருள்செய்தாய் - பன்றியை எய்து அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளியவனே; (பார்த்தன் + கு = பார்த்தற்கு);
தென்றல் மணம் வீசும் சிக்கல் உறைவானே - தென்றலில் மணம் கமழும் சிக்கலில் உறைகின்றவனே;
என்றன் இடர் நீக்கி இன்பம் அருளாயே - என்னுடைய துன்பங்களைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;
5)
பன்னி அடிபோற்று பத்தர் உயிர்கொள்ள
உன்னி வருகூற்றை உதைசெய் பெருமானே
செந்நெல் வயல்சூழ்ந்த சிக்கல் உறைவானே
முன்னை வினையெல்லாம் முடிய அருளாயே.
பன்னி அடிபோற்று பத்தர் உயிர்கொள்ள உன்னி வரு கூற்றை உதைசெய் பெருமானே - பாடித் திருவடியை வழிபட்ட பக்தரான மார்க்கண்டேயர் உயிரைக் கவர்வதற்கு எண்ணி வந்த காலனை உதைத்த பெருமானே; (பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்); (உன்னுதல் - நினைத்தல்; எண்ணுதல்); (அப்பர் தேவாரம் - 4.107.5 - "மாணிதன் ஆருயிர் கொள்ளவந்த .. .. காலனை");
செந்நெல் வயல் சூழ்ந்த சிக்கல் உறைவானே - சிறந்த வகை நெற்பயிர் வளரும் வயல் சூழ்ந்த சிக்கலில் உறைகின்றவனே;
முன்னை வினை எல்லாம் முடிய அருளாயே - என் பழவினைகள் எல்லாம் தீர அருள்வாயாக; (முடிதல் - அழிதல்; முற்றுப்பெறுதல்);
6)
பால்கொண் டடிபோற்றல் பார்த்துச் சிதைதாதை
கால்கள் தடிசண்டிக் கத்தா கருள்கண்டா
சேல்கள் உகள்செய்சூழ் சிக்கல் உறைவானே
மால்கொள் மதிதன்னை மாற்றி அருளாயே.
பால்கொண்டு அடிபோற்றல் பார்த்துச் சிதை தாதை கால்கள் தடி சண்டிக்கு அத்தா - (ஆற்றுமணலில் இலிங்கம் செய்து) பாலால் அபிஷேகம் செய்து வழிபடுதலைக் கண்டு சினந்து அதனை அழித்த தந்தையின் கால்களை வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு "இனி நானே உன் அப்பன்" என்று அருளியவனே; (சிதைத்தல் - அழித்தல்; கெடுத்தல்; குலைத்தல்); (தடிதல் - வெட்டுதல்); (அத்தன் - தந்தை); (* பெரியபுராணம் - சண்டேசுர நாயனார புராணம் - 12.20.54 - "அடுத்த தாதை இனியுனக்கு நாம்என் றருள்செய் தணைத்தருளி");
கருள் கண்டா - கரிய கண்டனே; (கருள்தல் - கருநிறம் அடைதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.109.4 - "கருடரு கண்டத்தெங் கயிலையாரும்" - கருள்தரு கண்டத்து - கருமை பொருந்திய கழுத்தை உடைய).
சேல்கள் உகள் செய் சூழ் சிக்கல் உறைவானே - சேல் மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த சிக்கலில் உறைகின்றவனே; (உகள்தல் - தாவுதல்); (செய் - வயல்);
மால்கொள் மதிதன்னை மாற்றி அருளாயே - மயங்கும் என் மதியை மாற்றி அருள்வாயாக; (மால் - மயக்கம்); (மாற்றுதல் - செம்மைப்படுத்துதல்);
7)
அரையில் அரவார்த்த அடிகேள் சுரரோடு
தரையோர் தொழுதேத்தும் தலைவா நிலையாகத்
திரையார் சடையானே சிக்கல் உறைவானே
அரையா வினைநீக்கி அடியேற் கருளாயே.
அரையில் அரவு ஆர்த்த அடிகேள் - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டிய கடவுளே; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி - சுவாமியே; அடிகள் - கடவுள்);
சுரரோடு தரையோர் தொழுது ஏத்தும் தலைவா - தேவர்களும் மண்ணுலகத்தோரும் வழிபடும் தலைவனே;
நிலையாகத் திரை ஆர் சடையானே - கங்கை நிலையாகத் தங்கிய சடையை உடையவனே;
சிக்கல் உறைவானே - சிக்கலில் உறைகின்றவனே;
அரையா - அரசனே; (அரையன் - அரசன்);
வினை நீக்கி அடியேற்கு அருளாயே - வினைகளைத் தீர்த்து அடியேனுக்கு அருள்வாயாக;
8)
மலைபேர்த் திடவந்தான் வாய்பத் தழவைத்தாய்
அலையார் கடல்நஞ்சம் ஆர்ந்த மணிகண்டா
சிலையால் புரமெய்தாய் சிக்கல் உறைவானே
தலைவா வினைநீக்கித் தமியேற் கருளாயே.
மலை பேர்த்திட வந்தான் வாய் பத்து அழவைத்தாய் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய வந்தவனான இராவணனுடைய பத்து வாய்களையும் அழச்செய்தவனே;
அலை ஆர் கடல் நஞ்சம் ஆர்ந்த மணிகண்டா - அலை பொருந்திய கடலில் எழுந்த விடத்தை உண்ட நீலமணி பொருந்திய கண்டனே; (ஆர்தல் - உண்ணுதல்); (அப்பர் தேவாரம் - 6.55.8 - "அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி");
சிலையால் புரம் எய்தாய் - மேருமலை வில்லால் முப்புரங்களை எய்தவனே; (சிலை - மலை; வில்);
சிக்கல் உறைவானே - சிக்கலில் உறைகின்றவனே;
தலைவா - தலைவனே;
வினை நீக்கித் தமியேற்கு அருளாயே - வினைகளைத் தீர்த்துத் தமியேனாகிய எனக்கு அருள்வாயாக; (தமியன் - தனித்திருப்பவன்; கதியற்றவன்);
9)
கஞ்சன் அரிநேடிக் காணா எரியானாய்
வஞ்சி இடைமாதை வாமம் மகிழ்தேவா
செஞ்சொல் அடியார்சொல் சிக்கல் உறைவானே
அஞ்சு வினையெல்லாம் அகல அருளாயே.
கஞ்சன் அரி நேடிக் காணா எரி ஆனாய் - பிரமனும் திருமாலும் தேடிக் காணாத ஜோதி ஆனவனே; (கஞ்சன் - பிரமன்; கஞ்சம் - தாமரை); (நேடுதல் - தேடுதல்);
வஞ்சி-இடை மாதை வாமம் மகிழ் தேவா - வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய உமாதேவியை இடப்பக்கம் பாகமாக விரும்பிய தேவனே;
செஞ்சொல் அடியார் சொல் சிக்கல் உறைவானே - தேவாரம் திருவாசகம் முதலியவற்றை அடியவர்கள் பாடும் சிக்கலில் உறைகின்றவனே;
அஞ்சு-வினை எல்லாம் அகல அருளாயே - நான் அஞ்சுகின்ற வினைகள் எல்லாம் நீங்குவதற்கு அருள்வாயாக; (அகல்தல் - நீங்குதல்);
10)
அல்லும் பகலும்பொய் அதனிற் புரள்புல்லர்
சொல்லும் நெறிநீங்கும் சூலப் படையெம்மான்
செல்வ வயல்சூழ்ந்த சிக்கல் உறையீசன்
தொல்லை வினைதீர்த்துத் தொண்டர்க் கருள்வானே.
அல்லும் பகலும் பொய்-அதனில் புரள் புல்லர் சொல்லும் நெறி நீங்கும் - இராப்பகலாகப் பொய்யிலே புரள்கின்ற கீழோர் சொல்லும் மார்க்கங்களை நீங்குங்கள்;
சூலப்படை எம்மான் - சூலாயுதம் ஏந்திய எம்பெருமான்; (படை - ஆயுதம்);
செல்வ வயல் சூழ்ந்த சிக்கல் உறை ஈசன் - வளம் மிக்க வயல் சூழ்ந்த சிக்கலில் உறைகின்ற ஈசன்; ("செல்வச் சிக்கல் & வயல் சூழ்ந்த சிக்கல்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (சுந்தரர் தேவாரம்- 7.83.4 - "செல்வ வயற்கழனித் தென்திருவாரூர்");
தொல்லை வினை தீர்த்துத் தொண்டர்க்கு அருள்வானே - அவன் பழவினையைத் தீர்த்துத் அடியவர்களுக்கு அருள்புரிவான்; (தொல்லை - பழைமை);
11)
ஒவ்வோர் கலையாக ஒளிதேய் மதியென்றும்
செவ்வே திகழத்தன் சென்னி மிசைவைத்தான்
செவ்வாய் உமைபங்கன் சிக்கல் உறையீசன்
அவ்வான் உலகத்தை அன்பர்க் கருள்வானே.
ஒவ்வோர் கலையாக ஒளி தேய் மதி என்றும் செவ்வே திகழத் தன் சென்னிமிசை வைத்தான் - சாபத்தால் ஒவ்வொரு கலையாக ஒளி மங்கித் தேய்ந்துவந்த சந்திரன் என்றும் நன்றாக விளங்கும்படி தன் திருமுடிமேல் வைத்தவன்; (செவ்வே - நன்றாக); (பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 12.29.310 - "சீத மலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகமலர்ந்து");
செவ்வாய் உமைபங்கன் - சிவந்த வாயை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;
சிக்கல் உறை ஈசன் - சிக்கலில் உறைகின்ற ஈசன்;
அவ்வான் உலகத்தை அன்பர்க்கு அருள்வானே - அப்பெருமான் அடியவர்களுக்கு வானுலகத்தை அருள்புரிவான் (/ அருள்புரிபவன்);
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - என்ற அமைப்பு.
மாங்காய்ச்சீர் வரும் இடங்களில் பொதுவாக புளிமாங்காய்ச்சீர் வரும்; ஒரோவழி (சில சமயம்) கூவிளமும் வரலாம்.
2) சம்பந்தர் தேவாரம் - 1.80.1 -
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment