Thursday, May 9, 2024

08.04.038 - திருஞான சம்பந்தர் துதி - மடைதிறந்தாற் போல்

08.04.038 - திருஞான சம்பந்தர் துதி - மடைதிறந்தாற் போல்

2016-05-13

8.4.38 - திருஞான சம்பந்தர் துதி

"சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு"

----------------------------------

(11 பாடல்கள்)

(வெண்பா)

(எல்லாப் பாட்டுகளும் ஒரே ஈற்றடி)


1) --- ஞானப்பால் உண்ணுதல் ---

மடைதிறந்தாற் போல்கண்ணீர் மல்கியழக் கண்டு

சடையானும் மாதும் தனிவெள் விடையேறி

வந்துபால் ஊட்ட மகிழ்ந்துண்ட சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


மடை - மதகுப் பலகை;

மல்கி - பெருகி;

சடையானும் மாதும் - சிவனும் பார்வதியும்;

தனி - ஒப்பில்லாத;


(சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - "தோடுடைய செவியன் விடையேறி");

("நாவே நீ செப்பு" என்பதனை ஒத்த பிரயோக உதாரணம் - திருநாவுக்கரசர் தேவாரம் - 4.9.1 - "தலையே நீ வணங்காய்");


2) --- திருக்கோலக்காவில் பொற்றாளம் பெறுதல் ---

கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலைக் கண்டிரங்கி

ஐயன்கோ லக்கா அமரிறை செய்யவன்

தந்தபொற் றாளம் தனையேந்து சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


ஒத்தறுத்து - தாளம் போட்டு; (ஒத்தறுத்தல் - To measure time; தாளவரையறை செய்தல்);

ஐயன் - தலைவன்;

கோலக்கா அமர் இறை - திருக்கோலக்காவில் விரும்பி உறையும் இறைவன்;

செய்யவன் - செம்மேனியான்;

பொற்றாளம் - பொன் + தாளம்;


(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய");


3) --- முத்துச்சிவிகை பெறுதல் ---

பாத வருத்தத்தைப் பாரா மகனார்க்குச்

சீதமுடி ஈசன் சிவிகைதரக் காதலொடு

சந்தவிசை பாடியரன் தாள்பணிந்த சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


பாத வருத்தத்தைப் பாரா மகனார்க்குச் - தமது பாதம் நோவதையும் பொருட்படுத்தாது பல தலங்களுக்கு நடந்துசென்று தரிசித்துவந்த சம்பந்தருக்கு;

சீதமுடி ஈசன் - கங்காதரன்; (சீதம் - குளிர்ச்சி; நீர்);

சிவிகை - பல்லக்கு;

காதலொடு சந்த இசை பாடி அரன் தாள் பணிந்த - அன்போடு சந்தம் நிறைந்த இசையோடு கூடிய திருப்பதிகத்தைப் பாடியருளி ஹரன் திருவடியை வணங்கிய;


(சம்பந்தர் தேவாரம் - 2.90.1 - "எந்தை ஈசனெம் பெருமான்");


4) --- மாலைமாற்றுப் பாடுதல் ---

புகலியில் அம்மையப்பன் பொன்னடியைப் போற்றி

அகமகிழ்ந்து வாழ்நாளில் யாப்பில் மிகவரிய

அந்தொடை மாலைமாற் றாக்கியருள் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


புகலியில் அம்மையப்பன் பொன்னடியைப் போற்றி அகம் மகிழ்ந்து வாழ் நாளில் - சீகாழியில் அம்மையும் அப்பனும் ஆன பெருமானின் பொன் போன்ற திருவடியை வழிபட்டு உள்ளம் மகிழ்ந்து வாழ்ந்திருந்த சமயத்தில்; (புகலி - சீகாழி);

யாப்பில் மிக அரிய அம் தொடை மாலைமாற்று ஆக்கி அருள் - செய்யுளில் மிகவும் கடினமான அழகிய மாலைமாற்றினைப் பாடி அருளிய; (அந்தொடை - அம் தொடை - அழகிய பாட்டு); (மாலைமாற்று - palindromic poem - A kind of verse that remains identical when its letters are read in the reverse direction);


(சம்பந்தர் தேவாரம் - 3.117.1 - "யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா");


5) --- ஏகபாதம் பாடுதல் ---

ஓதவிடம் உண்ட ஒருவன் உமைபங்கன்

தாதைபுகழ் பாடித் தனியேக பாதமெனும்

கந்தமலி ஆரம் கழலிட்ட சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


ஓத விடம் - கடல் நஞ்சு;

ஒருவன் - ஒப்பற்றவன்;

தாதை - தந்தை;

தனி - ஒப்பற்ற;

ஏகபாதம் - நான்கு அடிகளும் ஒன்றாகவே அமைந்து வெவ்வேறு பொருள்தரும் பாட்டு - Stanza of four lines all apparently alike but really made up of different sets of words and so conveying different meanings;

கந்தம் மலி ஆரம் - வாசனை மிகுந்த மாலை;


(சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்");


6) --- திருநாவுக்கரசரை அப்பரே என்றழைத்தல் ---

நாரிபங்கன் சீர்பாடு நாவுக் கரசருக்

கூரினர்முன் அப்பரெனும் ஒப்பில்லாப் பேரினைத்

தந்தவர் தண்பூந் தராய்மன்னம் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


பதம் பிரித்து:

நாரிபங்கன் சீர் பாடு நாவுக்கரசருக்கு

ஊரினர்முன் அப்பர் எனும் ஒப்பு இல்லாப் பேரினைத்

தந்தவர், தண் பூந்தராய் மன், நம் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


நாரிபங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;

தண் - குளிர்ந்த;

பூந்தராய் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று;

மன் - தலைவன்;


(பெரியபுராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.182 - "விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே எனஅவரும் அடியேன் என்றார்");


7) --- முயலகன் நோய் தீர்த்தல் ---

கொல்லி மழவன் குமரி முயலகன்நோய்

ஒல்லையற இன்பதிகம் ஒன்றினைச் சொல்லியருள்

கந்த மலர்ப்பொழில்சூழ் காழியர்கோன் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


கொல்லி மழவன் குமரி முயலகன்நோய் ஒல்லை அற - கொல்லி மழவன் மகளைப் பீடித்திருந்த முயலகன் என்ற நோய் விரைவில் நீங்கும்படி; (ஒல்லை - சீக்கிரம்);

இன் பதிகம் ஒன்றினைச் சொல்லி அருள் - இனிய பதிகம் ஒன்றைப் பாடி அருளிய;

கந்த மலர்ப்பொழில்சூழ் காழியர்கோன் - வாசமலர்கள் விளங்கும் சோலை சூழ்ந்த சீகாழிக்குத் தலைவர் ஆன;

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - திருஞான சம்பந்தர் தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக;


(சம்பந்தர் தேவாரம் - 1.44.1 - "துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்");


8) --- கொடிமாடச் செங்குன்றூரில் குளிர்சுரம் போக்கியது ---

கொடிமாடச் செங்குன்றூர் தன்னிற் சுரம்தீர்ந்

தடியார் மகிழஅரக் கன்றன் முடிகணெரி

எந்தைதிரு நீலகண்டம் என்றோது சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


கொடிமாடச் செங்குன்றூர் தன்னில் - திருச்செங்கோட்டில்;

சுரம் தீர்ந்து அடியார் மகிழ - குளிர்ஜுரத்தால் வருந்திய அடியவர்களுடைய ஜுரம் தீர்ந்து அவர்கள் மகிழும்படி;

அரக்கன்தன் முடிகள் நெரி எந்தை திருநீலகண்டம் என்று ஓது - இராவணனுடைய பத்துத் தலைகளையும் கயிலைக்கீழ் நசுக்கி அருளிய எம் தந்தையான சிவபெருமானின் திருநீலகண்டம் என்று ஆணையிட்டுப் பாடிய; (அரக்கன்றன் முடிகணெரி = அரக்கன்தன் முடிகள் நெரி);

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - திருஞான சம்பந்தர் தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக;


(சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்");


9) --- மருகலில் விடம் தீர்த்தது ---

மருகலில் மாண்ட வணிகன் உயிரை

இருவர்க் கரியானை ஏத்தித் தரவல்லார்

அந்தமிலா ஈசன் அடிமறவாச் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


மருகலில் மாண்ட வணிகன் உயிரை - திருமருகலில் பாம்பு தீண்டி இறந்த வணிகனுடைய உயிரை;

இருவர்க்கு அரியானை ஏத்தித் தர வல்லார் - திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய சோதியான சிவபெருமானைத் துதித்து மீட்டுத் தந்தவர்;

அந்தம் இலா ஈசன் அடி மறவாச் - முடிவு இல்லாத ஈசனுடைய திருவடியை என்றும் மறவாத;

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - திருஞான சம்பந்தர் தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக;


(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்");


10) --- சமணரை அனல்வாதத்தில் வென்றது ---

நமனையுதை நம்பனை நாளும் வணங்கு

தமர்மடத்தில் தீவை தகவில் அமணரை

வெந்தழல் வாதினில் வெற்றிகொள் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


நமனை உதை நம்பனை நாளும் வணங்கு - காலனை உதைத்த சிவபெருமானைத் தினமும் வழிபடும்;

தமர் மடத்தில் தீ வை தகவு இல் அமணரை - சிவனடியார்கள் தங்கியிருந்த திருமடத்தை எரிக்கத் தீயை வைத்த, நற்குணமற்ற சமணர்களை; (தகவு - தகுதி; குணம்; நடுநிலை);

வெந்தழல் வாதினில் வெற்றிகொள் - அனல்வாதத்தில் வென்ற; (தழல் - அனல் - நெருப்பு);


(சம்பந்தர் தேவாரம் - 3.87.1 - "தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்");


11) --- திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முக்தி ---

கருமா மிடற்றுக் கடவுள் அவன்தன்

ஒருநாமச் சீரை உரைத்துத் திருமணத்தில்

வந்தவர்க் கெல்லாம்வான் வாழ்வளித்த சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


கரு மா மிடற்றுக் கடவுள் அவன்தன் ஒருநாமச் சீரை உரைத்துத் - அழகிய நீலகண்டம் உடைய கடவுளின் ஒப்பற்ற நாமமாகிய "நமச்சிவாய" மந்திரத்தின் பெருமையைப் பாடி;

திருமணத்தில் வந்தவர்க்கெல்லாம் வான் வாழ்வு அளித்த - தம் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லார்க்கும் சிவலோக வாழ்வினைத் தந்த;

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - சம்பந்தர் பாடியருளிய தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக.


(சம்பந்தர் தேவாரம் - 3.49.1 - "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி");


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment