Monday, May 20, 2024

08.02.190 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - நெடிதுயர் வினைகள் - (வண்ணம்)

08.02.190 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - நெடிதுயர் வினைகள் - (வண்ணம்)

2016-05-28

08.02.190 - நெடிதுயர் வினைகள் - பாண்டிக்கொடுமுடி (இக்காலத்தில் 'கொடுமுடி' )

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனன தனதன தனன

தனதன தனன .. தனதான)

(எழுகடல் மணலை - திருப்புகழ் - சிதம்பரம்)


நெடிதுயர் வினைகள் இடர்பல தரவும்

.. .. நினைநினை தலையும் .. அறியேனாய்

.. நிதமக மனைவி வல(ம்)மிகு பதவி

.. .. நிதியென மிகவும் .. அலைவேனாய்

மடிவதும் உலகில் வருவதும் ஒழிய

.. .. மலவிருள் அழிய .. அளியோடு

.. மண(ம்)மலி தமிழ்கள் அவைகொடு தினமு(ம்)

.. .. மலரடி பரவ .. அருளாயே

கடிகமழ் மலர்கள் கழலிடும் அடியர்

.. .. கருதிய எவையும் .. அருள்நேயா

.. கருதலர் எயில்கள் எரியெழ அரிய

.. .. கணைதொடு பெரிய .. சிலைவீரா

கொடியவன் அலற முடிநெரி பரம

.. .. கொடியினில் இடபம் .. உடையானே

.. கொடுமுடி அதனில் இனிதுறை இறைவ

.. .. கொடியிடை மருவு .. பெருமானே.


பதம் பிரித்து:

நெடிது-உயர் வினைகள் இடர் பல தரவும்,

.. .. நினை நினைதலையும் .. அறியேனாய்,

.. நிதம் அக(ம்) மனைவி வல(ம்)மிகு பதவி

.. .. நிதி என மிகவும் .. அலைவேனாய்,

மடிவதும் உலகில் வருவதும் ஒழிய,

.. .. மலவிருள் அழிய, .. அளியோடு

.. மண(ம்)மலி தமிழ்கள் அவைகொடு தினமு(ம்)

.. .. மலரடி பரவ .. அருளாயே;

கடி கமழ் மலர்கள் கழலிடும் அடியர்

.. .. கருதிய எவையும் .. அருள்-நேயா;

.. கருதலர் எயில்கள் எரி எழ அரிய

.. .. கணைதொடு பெரிய .. சிலைவீரா;

கொடியவன் அலற முடி நெரி பரம;

.. .. கொடியினில் இடபம் .. உடையானே;

.. கொடுமுடி அதனில் இனிது-உறை இறைவ;

.. .. கொடி-இடை மருவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

நெடிதுயர் வினைகள் இடர் பல தரவும், நினை நினைதலையும் அறியேன் ஆய் - (மலைபோல்) மிகவும் ஓங்கி உள்ள வினைகள் பல துன்பங்களைத் தர, அதனால் உன்னை நினைப்பதையும் நான் அறியாதவன் ஆகி;

நிதம் அம், மனைவி, வலம் மிகு பதவி, நிதின மிகவும் அலைவேன் ஆய் - நாள்தோறும் வீடு, மனைவி, மக்கள், பெரிய பதவி, பணம் என்று இவற்றைத் தேடி மிகவும் அலைகின்றவன் ஆகி; (நினை - நின்னை - உன்னை); (நிதமக மனைவி - நிதம் அகம் மனைவி; / நிதம் மக மனைவி);

(நிதம் - நாள்தோறும்); (அகம் - வீடு); (மக - மகன், மகள்); (வலம் - வலிமை; வெற்றி; ஆணை);

மடிவதும் உலகில் வருவதும் ஒழிய, மலருள் அழிய, - இறப்பதும் மீண்டும் உலகில் பிறப்பதும் என்ற நிலை நீங்கவும், மும்மலக் கட்டு என்ற இருள் அழியவும்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.95.6 - "திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் ..... பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே");

அளியோடு மணம் மலி தமிழ்கள் அவைகொடு தினமும் மலரடி பரவ அருளாயே - அன்போடு வாசம் மிக்க தமிழ்ப் பாமாலைகளால் தினந்தோறும் உன் மலர் போன்ற திருவடிகளைத் துதிக்க அருள்புரிவாயாக; (அளி - அன்பு; பக்தி); (தமிழ்கள் - தேவாரம், திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகள்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);

கடி கமழ் மலர்கள் கழல் இடும் அடியர் கருதிய எவையும் அருள் நேயா - மணம் கமழும் பூக்களைத் திருவடியில் இடும் அடியவர்கள் விரும்பிய எல்லாம் அருள்கின்ற அன்பனே; (கடி - வாசனை); (கருதுதல் - விரும்புதல்; எண்ணுதல்); (நேயன் - அன்பன்; நேயம் - அன்பு);

கருதலர் எயில்கள் எரி ழ அரிய கணைதொடு பெரிய சிலை வீரா - பகைவர்களது முப்புரங்களும் தீயில் சாம்பலாகும்படி, (திருமால், வாயு, அக்கினி என்ற மூவரும் ஒன்றாகச் சேர்ந்த) அரிய அம்பு ஒன்றை ஏவிய, பெரிய வில்லை ஏந்திய வீரனே; (கருதலர் - பகைவர்); (சிலை - வில்; மலை); (சம்பந்தர் தேவாரம் - 3.21.2 - "ஒன்னலர் மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்");

கொடியவன் அலற முடி நெரி பரம - கொடியவனான இராவணன் அலறும்படி அவன் தலைகளை நசுக்கிய பரமனே; (நெரித்தல் - நசுக்குதல்);

கொடியினில் இடபம் உடையானே - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே;

கொடுமுடி அதனில் இனிதுறை இறைவ - கொடுமுடி என்ற தலத்தில் இனிதே எழுந்தருளிய இறைவனே;

கொடி-டை மருவு பெருமானே - கொடி போன்ற மெல்லிடை உடைய உமாதேவி ஒரு பாகமான பெருமானே; (கொடியிடை - ஆகுபெயராகக் கொடி போன்ற இடையை உடைய உமையைக் குறித்தது); (மருவுதல் - கலந்திருத்தல்; தழுவுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.65.3 - "கூறணிந்தார் கொடியிடையைக்");


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------

No comments:

Post a Comment