07.50 - வாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்) - பண்டிமையோர் அசுரர்
2016-06-11
07.50 - வாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்)
----------------------
(சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.62.1 - "கண்பொலி நெற்றியினான்")
(சுந்தரர் தேவாரம் - 7.100.1 - "தானெனை முன்படைத்தான்")
1)
பண்டிமை யோரசுரர் கடை பாற்கடல் கக்குவிடம்
உண்டிருள் மாமிடறன் உமை ஒன்றிய மேனியினான்
தண்டிரை ஆர்சடைமேல் பிறை தாங்கி விரும்புமிடம்
வண்டறை பூம்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.
பதம் பிரித்து:
பண்டு இமையோர் அசுரர் கடை பாற்கடல் கக்கு விடம்
உண்டு இருள் மா மிடறன்; உமை ஒன்றிய மேனியினான்;
தண் திரை ஆர் சடைமேல் பிறை தாங்கி விரும்பும் இடம்,
வண்டு அறை பூம்பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.
பண்டு இமையோர் அசுரர் கடை பாற்கடல் கக்கு விடம் உண்டு இருள் மா மிடறன் - முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடல் கக்கிய நஞ்சை உண்டு கருமை திகழும் அழகிய கண்டத்தை உடையவன்;
உமை ஒன்றிய மேனியினான் - அர்த்தநாரீஸ்வரன்;
தண் திரை ஆர் சடைமேல் பிறை தாங்கி விரும்பும் இடம் - குளிர்ந்த கங்கை பொருந்திய, அலைகள் ஒலிக்கின்ற சடையின்மேல் சந்திரனைத் தாங்கியவன் விரும்பி உறையும் தலம்;
வண்டு அறை பூம்பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;
2)
மான்பிடி கையுடையான் மலை மங்கையொர் பங்குடையான்
மீன்பொலி யுங்கொடிவேள் உடல் வெந்தற நோக்கியவன்
தேன்பொலி கொன்றைமலர் திகழ் செஞ்சடை அண்ணலிடம்
வான்பொழில் சூழ்ந்தழகார் திரு வாஞ்சிய நன்னகரே.
மான் பிடி கை உடையான் - கையில் மானைத் தரித்தவன்;
மலைமங்கை ஒர் பங்கு உடையான் - மலைமகளை ஒரு பாகமாக உடையவன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
மீன் பொலியும் கொடி வேள் உடல் வெந்து அற நோக்கியவன் - மீன்கொடியை உடைய மன்மதனது உடல் வெந்து சாம்பலாகும்படி பார்த்தவன்; (மீன்கொடி - மகரக்கொடி - மகர கேதனம்);
தேன் பொலி கொன்றைமலர் திகழ் செஞ்சடை அண்ணல் இடம் - தேன் நிறைந்த கொன்றைப்பூக்களைச் சிவந்த சடையில் அணிந்த ஈசன் உறையும் தலம்;
வான் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு வாஞ்சிய நன்னகரே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;
3)
விண்மலர் தூவியடி தொழு வேதியன் நஞ்சுதனை
உண்மணி ஆர்மிடறன் விடை ஊர்ந்திடும் ஓர்தலைவன்
தண்மதி யோடரவம் தரி தாழ்சடை அப்பனிடம்
வண்வயல் சூழ்ந்தழகார் திரு வாஞ்சிய நன்னகரே.
விண் மலர் தூவி அடி-தொழு வேதியன் - விண்ணவர்கள் பூக்கள் தூவித் திருவடியை வணங்குகின்ற வேதியன்; (வேதியன் - வேதப்பொருள் ஆனவன்; வேதங்களைப் பாடியருளியவன்; வேதிப்பவன்);
நஞ்சுதனை உண் மணி ஆர் மிடறன் - விடத்தை உண்ட நீலமணி கண்டன்;
விடை ஊர்ந்திடும் ஓர் தலைவன் - இடப-வாகனம் உடைய ஒப்பற்ற தலைவன்;
தண்-மதியோடு அரவம் தரி தாழ்சடை அப்பன் இடம் - குளிர்ந்த திங்களையும் பாம்பையும் தாழும் சடையில் தரித்த எம் தந்தை உறையும் தலம்;
வண்-வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு வாஞ்சிய நன்னகரே - வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த அழகிய திருவாஞ்சியம் ஆகும்;
4)
குழையு(ம்) மனத்தடியார் துதி கூற இரங்கியவர்
பிழைவினை தீர்த்தருள்வான் ஒரு பெண்ணமர் மேனியினான்
உழையெரி ஏந்தியவன் மறை ஓதிய நாவனிடம்
மழைநுழை சோலையணி திரு வாஞ்சிய நன்னகரே.
குழையும் மனத்து அடியார் துதி கூற, இரங்கி அவர் பிழை வினை தீர்த்தருள்வான் - உருகும் மனத்தை உடைய பக்தர்கள் துதிகளைப் பாடி வழிபட, அவர்களுக்கு இரங்கி அவர்களது குற்றங்களையும் வினைகளையும் தீர்ப்பவன்; (பிழைவினை - பிழையும் வினையும்; உம்மைத்தொகை);
ஒரு பெண் அமர் மேனியினான் - மாதொரு பாகன்;
உழை எரி ஏந்தியவன் - மானையும் தீயையும் கையில் ஏந்தியவன்;
மறை ஓதிய நாவன் இடம் - வேத-நாவன் உறையும் தலம்;
மழை நுழை சோலை அணி திரு வாஞ்சிய நன்னகரே - மேகங்கள் நுழைகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;
5)
மாசறு நெஞ்சினனாய்த் தொழு மாணி தனக்கிடர்செய்
பாச நமன்படவே உதை பைங்கழல் எந்தைமிகு
தேசன் அயன்சிரத்தில் பலி தேர்ந்துழல் வானதிடம்
வாச மலர்ப்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.
மாசு அறு நெஞ்சினன் ஆய்த் தொழு மாணிதனக்கு இடர்செய் - குற்றமற்ற மனம் உடையவனாகி வழிபட்ட மார்க்கண்டேயருக்கு துன்பம் செய்த;
பாச-நமன் படவே உதை பைங்கழல் எந்தை - பாசத்தை ஏந்திய காலனே மாளும்படி அக்கூற்றுவனை உதைத்த திருவடியை உடைய எம் தந்தை;
மிகு தேசன் - மிகுந்த ஒளி உருவினன்;
அயன் சிரத்தில் பலி தேர்ந்து உழல்வானது இடம் - பிரமனது மண்டையோட்டில் பிச்சையேற்று உழல்கின்ற பெருமான் உறையும் தலம்;
வாச-மலர்ப்பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;
6)
அரியவன் இன்றமிழால் தொழும் அன்பின ருக்கெளியன்
பெரியவன் எம்மிறைவன் பிறை பேணிய வேணியினான்
கரியுரி போர்த்தபரன் மணி கண்டன் அமர்ந்தவிடம்
வரியளி ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.
அரியவன் - மிகவும் அரியவன்;
இன்-தமிழால் தொழும் அன்பினருக்கு எளியன் - இனிய தமிழ்ப்-பாமாலைகள் பாடி வணங்கும் அன்பர்களால் எளிதில் அடையப்படுபவன்;
பெரியவன் எம் இறைவன் - எல்லாரினும் பெரியவன் எம் கடவுள்;
பிறை பேணிய வேணியினான் - சடையில் பிறையை அணிந்தவன்; (பேணுதல் - வழிபடுதல்; போற்றுதல்; பாதுகாத்தல்); (வேணி - சடை);
கரி உரி போர்த்த பரன் - யானைத்தோலைத் தன் மார்பு சுற்றிப் போர்த்த பரமன்;
மணிகண்டன் அமர்ந்த இடம் - நீலகண்டன் விரும்பி உறையும் தலம்; (சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்");
வரி அளி ஆர் பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - வரிவண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;
7)
முன்னமன் போற்றிசெய்ய அருள் முக்கணன் நற்கழலே
உன்னிய அன்பருளம் உறை உத்தமன் நீள்மதியார்
சென்னியன் முப்புரத்தைப் பொடி செய்த மலைச்சிலையான்
மன்னிய ஊர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.
முன் நமன் போற்றிசெய்ய அருள் முக்கணன் - முன்பு தன்னை வழிபட்ட இயமனுக்கு அருள்செய்த முக்கண் இறைவன்; (இயமன் ஈசனை வழிபட்டதைத் திருவாஞ்சியத் தலபுராணத்திற் காண்க);
நற்கழலே உன்னிய அன்பர் உளம் உறை உத்தமன் - அப்பெருமானது நல்ல திருவடிகளையே தியானிக்கும் அன்பர்களின் உள்ளத்தில் உறையும் உத்தமன்;
நீள்மதி ஆர் சென்னியன் - வளர்மதியைத் தலையில் அணிந்தவன்;
முப்புரத்தைப் பொடி செய்த மலைச்சிலையான் மன்னிய ஊர் - முப்புரங்களை அழிக்க மேருமலையையே வில்லாக ஏந்தியவன் உறையும் தலம்;
பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;
8)
வெஞ்சின வாளரக்கன் உயர் வெற்பை இடந்தவன்வாய்
அஞ்சினொ டஞ்சுமழ விரல் அன்றிறை ஊன்றியவர்
செஞ்சுடர் மேனியினார் பிறை சேர்சடை ஈசரிடம்
மஞ்சண வும்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.
வெஞ்சின வாள் அரக்கன் - கடும் சினம் உடைய, கொடிய அரக்கனான இராவணனன்;
உயர் வெற்பை இடந்தவன் வாய் அஞ்சினொடு அஞ்சும் அழ விரல் அன்று இறை ஊன்றியவர் - உயர்ந்த கயிலைமலையைப் பேர்த்த இராவணனது பத்து வாய்களும் அழும்படி முன்பு ஒரு விரலைச் சற்றே ஊன்றியவர்;
செஞ்சுடர் மேனியினார் - செந்தீப் போன்ற திருமேனி உடையவர்;
பிறை சேர் சடை ஈசர் இடம் - பிறைச்சந்திரனைச் சூடிய சடையை உடைய ஈசர் உறையும் தலம்;
மஞ்சு அணவும் பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - மேகம் பொருந்தும் சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;
9)
நாரணன் மாமலரான் இவர் நண்ண வொணாச்சுடரான்
ஆரணன் ஆலநிழல் அமர் ஆரியன் வானவர்செய்
தேரதன் அச்சிறவும் நகை செய்தெயில் அட்டபிரான்
வாரண ஈருரியான் இடம் வாஞ்சிய நன்னகரே.
நாரணன் மாமலரான் இவர் நண்ண ஒணாச் சுடரான் - திருமாலாலும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனாலும் அடிமுடி அடைய இயலாத சோதி வடிவன்;
ஆரணன் ஆலநிழல் அமர் ஆரியன் - வேதியன், கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருந்த தட்சிணாமூர்த்தி; (ஆரணம் - வேதம்); (ஆரியன் - ஆசாரியன்);
வானவர் செய் தேர்அதன் அச்சு இறவும், நகை செய்து எயில் அட்ட பிரான் - தேவர்கள் செய்த தேரின் அச்சு (அந்தத் தேரில் ஈசன் திருவடியை வைத்து ஏறியதும்) முரிந்துவிழக் கண்டு, சிரித்து முப்புரங்களையும் எரித்த பெருமான்;
வாரண ஈர்-உரியான் இடம் வாஞ்சிய நன்னகரே - யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்திய பெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம் ஆகும்;
10)
நாவமர் நற்றமிழால் உமை நாதனை ஏத்தகிலார்
கூவி அழைத்திடுவார் அவர் கூறிடு பொய்விடுமின்
பூவிடு வார்க்கருளும் பொடி பூசிய ஈசனிடம்
வாவியில் வாளையுகள் திரு வாஞ்சிய நன்னகரே.
நா அமர் நல்-தமிழால் உமைநாதனை ஏத்தகிலார் - நாவில் பொருந்தும் நல்ல தமிழால் (தேவாரம் திருவாசகம் முதலியன) உமாபதியைத் துதிக்கமாட்டார்;
கூவி அழைத்திடுவார் அவர் கூறிடு பொய்விடுமின் - (தம் நெறிக்கு வாரும் எனத் தினமும்) கூவி அழைக்கும் அவர்கள் சொல்லும் பொய்களை மதிக்கவேண்டா;
பூ இடுவார்க்கு அருளும் பொடி பூசிய ஈசன் இடம் - திருவடியில் பூக்கள் தூவி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்றவனும் திருநீற்றைப் பூசியவனும் ஆன ஈசன் உறையும் தலம்;
வாவியில் வாளை உகள் திரு வாஞ்சிய நன்னகரே - குளத்தில் வாளை-மீன்கள் பாயும் திருவாஞ்சியம் ஆகும்;
11)
மாமனின் வேள்விதனை அழி மஞ்சன் இருஞ்சடையன்
தாமணி சாந்தமெனப் பொடி தாங்கி நிதம்தமிழார்
பாமணி மாலைகளால் தொழு பத்தர்க ளுக்கினியன்
மாமணி கண்டனிடம் திரு வாஞ்சிய நன்னகரே.
மாமனின் வேள்விதனை அழி மஞ்சன் - மாமனான தக்கன் செய்த வேள்வியை அழித்த வீரன்; (மஞ்சன் - மைந்தன் - வீரன்);
இரும்-சடையன் - பெரிய சடையை உடையவன்; (இருமை - பெருமை);
தாம் அணி சாந்தம் எனப் பொடி தாங்கி - தாங்கள் அணியும் சந்தனம் போலத் திருநீற்றை அணிந்து; (சாந்தம் - சந்தனம்); (தாங்குதல் - அணிதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.51.2 - "தோளின்மேல் ஒளி-நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற");
நிதம் தமிழ் ஆர் பா மணி மாலைகளால் தொழு பத்தர்களுக்கு இனியன் - நாள்தோறும் தமிழ் பொருந்திய அழகிய பாமாலைகளால் வழிபடும் பக்தர்களுக்கு இனியவன்;
மா மணிகண்டன் இடம் திரு வாஞ்சிய நன்னகரே - அழகிய நீலகண்டம் உடைய பெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம் ஆகும்;
பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.
அடிகளின் முதற்சீர் - "தானன" என்பது "தனதன" என்றும் வரலாம்.
"தானன" என்ற சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், அதனை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும் - (தனதனனா / தனாதனனா
இரண்டாம் / நாலாம் சீர் - "தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்.
இச்சந்தத்தைத் “தானன தானதனா தனதானன தானதனா” என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.
இப்பாடல்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற்கும் பொருந்தும் - ("தானன தானன தானன தானன தானதனா" என்று நோக்கினால்).
2) மதிசூடி 2.47 - "நாலும றைப்பொருளாய்" என்று தொடங்கும் திருவாஞ்சியப் பதிகமும் இச்சந்தமே ஆயினும் அப்பதிகத்தில் மோனை அமையும் இடம் சற்றே வேறுபடும்.
3) சம்பந்தர் தேவாரம் - 3.61.11 - "திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை மேயவனைத்"
சம்பந்தர் தேவாரம் - 3.62.1 - "கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான்"
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment