Saturday, May 18, 2024

07.48 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - தேனிறை போது கொண்டு

07.48 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - தேனிறை போது கொண்டு

2016-05-25

07.48 - கோயில் (தில்லை - சிதம்பரம்)

-----------------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - "தானன தான தான தனதான தான தனதான தான தனனா")

(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - கோளறு பதிகம் - "வேயுறு தோளி பங்கன்")


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

1)

தேனிறை போது கொண்டு திருநீற தேறு திகழ்மார்பில் நாகம் அணிவாய்

மானினை ஏந்து நாத மணிகண்ட வென்று வழிபாடு செய்யும் அடியார்

வானிடை வாழு மாறு வரமீயும் அண்ணல் மழுவாளன் நாம(ம்) மறவா

ஞானியர் போற்ற மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


தேன் நிறை போது கொண்டு - தேன் நிறைந்த மலர்களால்; (பூக்களைத் தூவி);

"திருநீறுஅது ஏறு திகழ் மார்பில் நாகம் அணிவாய் - "திருநீறு பொருந்திய அழகிய மார்பில் பாம்பை அணிபவனே; (திகழ்தல் - விளங்குதல்; சிறப்பு மிகுதல்);

மானினை ஏந்து நாத, மணிகண்ட" என்று வழிபாடு செய்யும் அடியார் - மானைக் கையில் ஏந்திய நாதனே; நீலகண்டனே" என்று போற்றி வணங்கும் அடியவர்கள்;

வானிடை வாழுமாறு வரம் ஈயும் அண்ணல் - சிவலோகத்தில் வாழும்படி வரம் அருளும் பெருமான்;

மழுவாளன் நாமம் மறவா ஞானியர் போற்ற, மன்றில் உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - மழுவாயுதம் ஏந்திய அப்பெருமானின் திருநாமத்தை என்றும் தியானிக்கும் ஞானியர்கள் துதிக்க, உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


2)

நெற்றியில் நீறு பூசி நிதமேத்தி னாரை நெடுவானி ருத்தும் ஒருவன்

முற்றலி லாத திங்கள் இளநாகம் ஆறு முடிமீத ணிந்த முதல்வன்

மற்றிணை ஒன்றி லாத அருளாளன் நீல மணியார்ந்த கண்டம் உடையான்

நற்றவர் போற்ற மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


நெற்றியில் நீறு பூசி நிதம் ஏத்தினாரை நெடுவான் இருத்தும் ஒருவன் - நெற்றியில் திருநீற்றைப் பூசி நாள்தோறும் துதிக்கும் அடியவர்களைச் சிவலோகத்தில் வைக்கும் பெருமான்;

முற்றல் இலாத திங்கள், இளநாகம், ஆறு முடிமீது அணிந்த முதல்வன் - இளம்-பிறையையும், இளம்-பாம்பையும், கங்கையையும் திருமுடிமேல் அணிந்த முதல்வன்;

மற்று இணை ஒன்று இலாத அருளாளன் - எவ்வொப்பும் இல்லாத பெரும்-கருணையினான்;

நீலமணி ஆர்ந்த கண்டம் உடையான் - கரிய மணி பொருந்திய கண்டம் உடையவன்;

நற்றவர் போற்ற, மன்றில் உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - நல்ல தவம் உடையவர்கள் துதிக்க, உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


3)

அல்லிலும் அல்லி லாத சமயத்தும் ஐயன் அடியேநி னைந்து தொழுவார்

சொல்லிய சொல்லு கந்து துணையாகி நின்று துயர்தீர்த்து நன்மை சொரிவான்

வல்லரண் மூன்றெ ரிக்க வரைவில்லை ஏந்தி மறையோதி பாத(ம்) மறவா

நல்லவர் போற்ற மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


அல்லிலும் அல் இலாத சமயத்தும் ஐயன் அடியே நினைந்து தொழுவார் - இரவும் பகலும் தலைவன் திருவடியையே நினைந்து வணங்கும் அடியவர்கள்; (அல் - இரவு); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்");

சொல்லிய சொல் உகந்து, துணை ஆகி நின்று, துயர் தீர்த்து நன்மை சொரிவான் - சொல்லும் சொற்களை விரும்பிக் கேட்டு, அவர்களுக்குத் துணை ஆகி இருந்து, அவர்களது துன்பத்தைத் தீர்த்து, அவர்களுக்கு மிகுந்த நன்மை செய்பவன்; (சொல்லிய - சொன்ன); (திருவாசகம் - சிவபுராணம் - "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்");

வல்-அரண் மூன்று எரிக்க வரைவில்லை ஏந்தி - வலிமையுடைய முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (வரை - மலை); (ஏந்தி - ஏந்தியவன்);

மறை ஓதி பாதம் மறவா - வேதம் ஓதிய ஈசன் பாதத்தை மறவாத;

நல்லவர் போற்ற, மன்றில் உமைகாண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - நல்லவர்கள் துதிக்க, உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


4)

செஞ்சொலை ஓது நாவர் இடரான தீர்ந்து சிவலோகம் ஏற அருள்வான்

அஞ்சிய தேவர் வேண்ட அவருக்கி ரங்கி அருநஞ்சம் உண்ட மிடறன்

அஞ்சிறை வண்டி னங்கள் இசைபாடு சோலை அணிதில்லை தன்னில் அடியார்

நஞ்சடி போற்ற மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


செஞ்சொலை ஓது நாவர் இடர் ஆன தீர்ந்து சிவலோகம் ஏற அருள்வான் - செஞ்சொல் மாலைகள் ஆன தேவாரம் திருவாசகம் பாடும் நாவினை உடைய அன்பர்கள் தங்கள் இடர்கள் தீர்ந்து சிவலோகத்திற்கு ஏறுமாறு அருள்புரிபவன்;

அஞ்சிய தேவர் வேண்ட, அவருக்கு இரங்கி அரு-நஞ்சம் உண்ட மிடறன் - ஆலகால விடத்தைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி, அந்த (உண்ணற்கு) அரிய விடத்தை உண்ட நீலகண்டன்; (மிடறன் - மிடற்றன் என்பது ஓசை கருதி "மிடறன்" என வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.72.9 - "மையார் மணிமிடறன்");

அம்-சிறை வண்டு-இனங்கள் இசை பாடு சோலை அணி தில்லை தன்னில் - அழகிய இறகுகளை உடைய வண்டுகள் இசை முரல்கின்ற பொழில் சூழ்ந்த தில்லையில்;

அடியார் நஞ்சு அடி போற்ற, மன்றில் உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - அடியவர்கள் உள்ளம் நைந்து திருவடியைத் துதிக்க, உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்; (நஞ்சு - நைந்து என்பதன் போலி); (சம்பந்தர் தேவாரம் - 3.97.5 - "உமைப் பேணிநஞ் சற்றவர் அருவினை இலரே") (அப்பர் தேவாரம் - 5.68.7 - "நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே");


5)

தேனல(ம்) மல்கு பூக்கள் அடியிட்ட சீலர் திரைசூழ்ந்த பூமி இதனில்

வானல(ம்) மல்கு வாழ்வு மகிழ்கின்ற வாறு வரமான நல்கும் இறைவன்

கூனில வும்பு னைந்த குழகன்க ளிற்றின் உரிமூடு கோலம் உடையான்

நானிலம் ஏத்த மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


தேன்-நலம் மல்கு பூக்கள் அடி இட்ட சீலர் திரை சூழ்ந்த பூமி இதனில் - தேன் மலிந்த பூக்களைத் திருவடியில் தூவிய சீலர்கள், கடல் சூழ்ந்த இவ்வுலகில்;

வான்-நலம் மல்கு வாழ்வு மகிழ்கின்றவாறு வரம் ஆன நல்கும் இறைவன் - பெருநலங்கள் பெற்று மகிழ்ந்து வாழும்படி வரங்கள் அருளும் இறைவன்; (வான் - தேவருலகு; நன்மை; பெருமை; அழகு);

கூன்-நிலவும் புனைந்த குழகன் - (கங்கை, கொன்றை, நாகம் முதலியவற்றோடு) வளைந்த சந்திரனையும் அணிந்த அழகன்; (கூன் - வளைவு); (நிலவு - நிலா - சந்திரன்); (உம் - எச்சவும்மை);

களிற்றின் உரி மூடு கோலம் உடையான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (உரி - தோல்);

நானிலம் ஏத்த, மன்றில் உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - உலகத்தோர்கள் துதிக்க, உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்; (நானிலம் - உலகம்; பூமி);


6)

சதிபுரி ஐம்பு லன்கள் தமைவெல்ல வல்ல வழியென்று நால்வர் தமிழால்

துதிபல பாடி நின்று தொழுவார்க்கு வைப்பு நிதியான நல்ல துணைவன்

பதிபுகழ் ஏடு வைகை எதிர்நீந்தி வெல்ல அருள்செய்த பண்பன் மதியம்

நதிபுனை நாதன் மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


சதி புரி ஐம்புலன்கள்தமை வெல்லவல்ல வழி என்று - வஞ்சனை செய்யும் ஐந்து புலன்களை வெல்லும் உபாயம் என்று;

நால்வர் தமிழால் துதி பல பாடி நின்று தொழுவார்க்கு வைப்பு-நிதி ஆன நல்ல துணைவன் - நால்வர் பாடிய தேவாரம் திருவாசகம் இவற்றால் பல துதிகளைப் பாடி என்றும் வழிபடும் அடியவர்களுக்குச் சேமநிதி ஆகிக் காக்கின்ற நல்ல துணைவன்; (நிற்றல் - உறுதியாயிருத்தல்); (வைப்பு நிதி - சேம நிதி);

பதி புகழ் ஏடு வைகை எதிர் நீந்தி வெல்ல அருள்செய்த பண்பன் - ஈசனைப் புகழும் தேவார ஏடு வைகை வெள்ளத்தில் எதிரே நீந்திச் சென்று வெல்லும்படி அருளிய பண்பன்;

மதியம் நதி புனை நாதன் - திங்களையும் கங்கையையும் அணியும் தலைவன்; (மதியம் - சந்திரன்);

மன்றில் உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


7)

தகுமலர் தூவி நல்ல தமிழ்பாடு தொண்டர் தவியாத வண்ணம் அருள்வான்

நெகுமன மாணி வாழ நில(ம்)மீது நீல நமன்வீழ நல்கு நிமலன்

தொகுதலை மாலை பூண்டு சுடுநீற ணிந்த சுடர்சூலன் ஐய(ம்) மகிழும்

நகுதலை ஏந்தி மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


தகு மலர் தூவி நல்ல தமிழ் பாடு தொண்டர் தவியாத வண்ணம் அருள்வான் - தகுந்த பூக்களைத் தூவி, நற்றமிழ் பாடி வணங்கும் தொண்டர்கள் இன்புறுமாறு அருள்புரிபவன்;

நெகு-மன மாணி வாழ, நிலம் மீது நீல நமன் வீழ நல்கு நிமலன் - உருகிய மனம் உடைய மார்க்கண்டேயர் உயிரோடு வாழ அருளிக், கரிய கூற்றுவன் தரையில் விழுந்து இறக்குமாறு அவனைத் திருவடியால் உதைத்தருளிய தூயவன்; (நீலம் - கறுப்பு நிறம்); (நல்குதல் - அருள் செய்தல்);

தொகு-தலை மாலை பூண்டு, சுடுநீறு அணிந்த, சுடர் சூலன் - மண்டையோடுகள் சேர்ந்த மாலையை அணிந்து, திருநீற்றைப் பூசிய, ஒளிவீசும் சூலத்தை ஏந்தியவன்; (தொகுதல் - கூடுதல்; ஒன்றாதல்; நெருங்குதல்); (தொகுத்தல் - செய்தல்); (சுடர்தல் - ஒளிவிடுதல்); (சம்பந்தர் தேவாரம் -1.15.4 - "சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மன லேந்தி");

ஐயம் மகிழும் நகு-தலை ஏந்தி - சிரிப்பது போல் தோற்றமளிக்கும் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை இரப்பவன்; (மகிழ்தல் - விரும்புதல்); (ஏந்தி - ஏந்தியவன்);

மன்றில் உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


8)

அக்கரம் ஐந்தை ஓதி அலர்தூவி வெள்ளை அடலேற தேறும் அரனே

முக்கண என்று வாழ்த்தி முடிசாய்க்கும் அன்பர் வினைமாய்க்கு(ம்) மூர்த்தி முதல்வன்

அக்கயி லாய வெற்பின் அடியேவ ரக்கன் அழவூன்று பாத விரலான்

நக்கெயில் அட்ட நாதன் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


அக்கரம் ஐந்தை ஓதி, அலர் தூவி, "வெள்ளை அடல் ஏறது ஏறும் அரனே - திருவைந்தெழுத்தை ஓதி, மலர்கள் தூவி, "வெற்றியுடைய வலிய வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய ஹரனே"; (அக்கரம் ஐந்து - பஞ்சாட்சரம்); (அலர் - பூ); (அடல் - வலிமை; வெற்றி);

முக்கண" என்று வாழ்த்தி முடிசாய்க்கும் அன்பர் வினை மாய்க்கும் மூர்த்தி முதல்வன் - முக்கண்ணனே" என்று போற்றித் தலைவணங்கும் அடியவர்களது வினைகளை அழிக்கும் கடவுள், ஆதி ஆனவன்; (முக்கண - முக்கண்ண என்ற விளி); (முடிசாய்த்தல் - தலைவணங்குதல்);

அக்-கயிலாய வெற்பின் அடியே அரக்கன் அழ ஊன்று பாத-விரலான் - அரக்கனான இராவணன் அந்தக் கயிலைமலையின் கீழே நசுக்குண்டு அழும்படி, திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.29.8 - "அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால் நெருக்க ஊன்றும் விரலான்");

நக்கு எயில் அட்ட நாதன் - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவன்; (நகுதல் - சிரித்தல்); (எயில் - கோட்டை); (அடுதல் - அழித்தல்);

உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - உமையவள் காணும்படி திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


9)

உகைமலர் அம்பி னானை உடனீறு செய்த ஒருதேவ உம்பர் தலைவா

புகலடை திங்க ளோடு புனைகொன்றை சூடு புனிதாபு ராண எனவே

அக(ம்)நெகும் அன்பர் நெஞ்சன் அரிவேதன் நேட அழலான அண்ணல் ஒளிவெண்

நகையினள் ஏல ஓதி உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


"உகை மலர் அம்பினானை உடனீறு செய்த ஒரு தேவ - "மலர் அம்பை ஏவுகின்ற மன்மதனை அவனது உடல் உடனே சாம்பல் ஆகும்படி செய்த ஒப்பற்ற தேவனே; (உகைத்தல் - பாணம் செலுத்துதல்); (உடனீறு - 1. உடல் நீறு; 2. உடன் நீறு); (உடன் - உடனே; அப்பொழுதே);

உம்பர் தலைவா - தேவர் தலைவனே;

புகலடை திங்களோடு புனை கொன்றை சூடு புனிதா புராண" எனவே - சரணடைந்த பிறைச்சந்திரனையும் அழகிய கொன்றை மலரையும் (சடைமேல்) சூடும் புனிதனே, பழையவனே" என்று; (புனை - அழகு);

அகம் நெகும் அன்பர் நெஞ்சன் - உள்ளம் உருகும் பக்தர்கள் நெஞ்சில் உறைபவன்; (நெகுதல் - நெகிழ்தல்);

அரி வேதன் நேட அழல் ஆன அண்ணல் - திருமாலும் பிரமனும் தேடத் தழற்பிழம்பாகி ஓங்கிய தலைவன்;

ஒளி வெண் நகையினள் ஏல ஓதி உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - ஒளி பொருந்திய வெண்மையான பற்களை உடையவளும் மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடையவளுமான உமையவள் காணும்படி திருநடம் செய்கின்ற சிவபெருமான்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - பெண்களின் கூந்தல்);

(சம்பந்தர் தேவாரம் - 2.10.9 - "ஏல வார்குழ லாளொரு பாகம் இடங்கொடு"); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");


10)

வஞ்சக நெஞ்சர் வாயில் வரைவந்து வாயில் வருபொய்கள் தம்மை மொழிவார்

அஞ்சுதல் இன்றி நாளும் அவமேபெ ருக்கி அலைமிண்டர் வார்த்தை மதியேல்

செஞ்சுடர் வண்ண எந்தை ஒருபேர்ம கிழ்ந்து தினமோது சீலர் துணைவன்

நஞ்சணி கண்டன் மன்றில் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


வஞ்சக நெஞ்சர், வாயில்வரை வந்து, வாயில் வரு பொய்கள் தம்மை மொழிவார் - வஞ்சத்தை நெஞ்சத்தில் மறைத்தவர்கள், வீட்டு வாசலுக்கே வந்து, தங்கள் வாயில் வந்த பல பொய்களைச் சொல்வார்கள்; (இலக்கணக் குறிப்பு - "அஞ்சுதல் இன்றி நாளும்" என்ற சொற்றொடர் இடைநிலைத்தீவகமாக நின்று, இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ள அமைந்தது. - "பொய்கள் தம்மை மொழிவார் அஞ்சுதல் இன்றி நாளும்" & "அஞ்சுதல் இன்றி நாளும் அவமே புரிந்து");

அஞ்சுதல் இன்றி நாளும், அவமே பெருக்கி அலை மிண்டர் வார்த்தை மதியேல் - கொஞ்சமும் அச்சமின்றித் தினமும், அவச்செயல்களே மிகச் செய்து அலைகின்ற கல்நெஞ்சர்கள் சொல்லும் வார்த்தைகளை மதிக்கவேண்டா; (அவம் - பயனின்மை; கேடு); (அலைதல் - திரிதல்); (மிண்டர் - வலியர்; தடியர்; கல்நெஞ்சர்); (பெரியபுராணம் - 12.28.26 - "அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப் பவம்பெருக்கும் புரைநெறிகள்");

செஞ்சுடர் வண்ண எந்தை, ஒரு பேர் மகிழ்ந்து தினம் ஓது சீலர் துணைவன் - சிவந்த ஜோதி போன்ற நிறம் உடைய எம் தந்தை, அவனது ஒப்பற்ற திருநாமத்தை விரும்பித் தினமும் ஓதுகின்ற சீலம் உடையவர்களுக்குத் துணைவன்; (ஒரு - ஒப்பற்ற); (ஒரு பேர் - "ஏதேனும் ஒரு திருநாமத்தை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

நஞ்சு அணி கண்டன் - நீலகண்டன்;

மன்றில் உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - உமையவள் காணும்படி அம்பலத்தில் திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


11)

இமையவர் ஏத்தும் ஈச எருதேறும் ஐய எமையாளு(ம்) முக்க ணிறையே

குமரனை ஈன்ற அத்த எனவாழ்த்தும் அன்பர் குறைநீக்கி முத்தி அருள்வான்

அமலனை எண்ணி எண்ணி அக(ம்)நைந்த மாணி அழிவின்றி வாழ அடியால்

நமனுயிர் வீட்டு நம்பன் உமைகாண நின்று நடமாடு கின்ற சிவனே.


"இமையவர் ஏத்தும் ஈச - "தேவர்கள் போற்றும் ஈசனே;

எருது ஏறும் ஐய - இடப வாகனம் உடைய தலைவனே;

எமை ஆளும் முக்கண் இறையே - எம்மை ஆள்கின்ற முக்கட் கடவுளே;

குமரனை ஈன்ற அத்த" என வாழ்த்தும் அன்பர் குறை நீக்கி முத்தி அருள்வான் - முருகனைப் பெற்ற தந்தையே" என்று வாழ்த்துகின்ற பக்தர்களுடைய குறைகளைத் தீர்த்து, அவர்களுக்கு முக்தியையும் அருள்புரிவான்;

அமலனை எண்ணி எண்ணி அகம் நைந்த மாணி அழிவின்றி வாழ - தூயவனான பெருமானை இடைவிடாது தியானம் செய்து உள்ளம் உருகிய மார்க்கண்டேயர் இறப்பின்றி வாழும்படி;

அடியால் நமன் உயிர் வீட்டு நம்பன் - திருவடியால் காலனை உதைத்து அவன் உயிரைப் போக்கிய பெருமான்; (வீட்டுதல் - கொல்லுதல்; அழித்தல்); (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.75.2 - "வலிய காலனுயிர் வீட்டினான்");

உமை காண நின்று, நடம் ஆடுகின்ற சிவனே - உமையவள் காணும்படி திருநடம் செய்கின்ற சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------


No comments:

Post a Comment