Saturday, May 4, 2024

08.02.188 - வல்லம் (திருவலம்) - பணநாட்ட மையல் - (வண்ணம்)

08.02.188 - வல்லம் (திருவலம்) - பணநாட்ட மையல் - (வண்ணம்)

2016-03-30

8.2.188 - பணநாட்ட மையல் - (வல்லம் - திருவலம்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய

தனதாத்த தய்ய .. தனதான)

(கலைகோட்டு வல்லி - திருப்புகழ் - பொது)

(இருள்காட்டு செவ்வி - திருப்புகழ் - தில்லை)


பணநாட்ட மையல் அதுவாட்ட வெய்ய

.. .. பழிகூட்ட வல்ல .. செயலான

.. பலவாற்றி அல்லல் உறுவேற்கு நல்ல

.. .. படிவாழ்க்கை வையம் .. இதிலாக

மணியாட்டி நல்ல புகைகாட்டி மல்கு

.. .. மலர்சூட்டி உய்தி .. தருதூய

.. மணிவார்த்தை சொல்லி உனைநோக்கி நையு(ம்)

.. .. மனமாக்கி ஐய .. அருளாயே

அணிநீற்ற கல்லில் அரவார்த்த வில்லின்

.. .. அரண்மாய்க்க வல்ல .. விறலானே

.. அடையார்க்கும் உள்க நினையார்க்கு(ம்) மெய்யை

.. .. அறியார்க்கும் இல்லை .. எனவானாய்

பணிவீக்கி மெய்யி லுமைசேர்த்த செய்ய

.. .. பலர்போற்ற வல்லம் .. உறைவோனே

.. பணிவார்க்கு வெல்லு(ம்) நெறிகாட்டி உள்ள

.. .. பய(ம்)நீக்க வல்ல .. பெருமானே.


பதம் பிரித்து:

பணநாட்ட மையல் அது வாட்ட, வெய்ய

.. .. பழி கூட்ட-வல்ல செயலான

.. பல ஆற்றி, அல்லல் உறுவேற்கு நல்ல

.. .. படி வாழ்க்கை வையம் இதில் ஆக,

மணி ஆட்டி, நல்ல புகை காட்டி, மல்கு

.. .. மலர் சூட்டி, உய்தி தரு தூய

.. மணிவார்த்தை சொல்லி, உனை நோக்கி நையு(ம்)

.. .. மனம் ஆக்கி, ஐய, அருளாயே;

அணி நீற்ற; கல்லில் அரவு ஆர்த்த வில்லின்

.. .. அரண் மாய்க்க வல்ல விறலானே;

.. அடையார்க்கும், உள்க நினையார்க்கு(ம்), மெய்யை

.. .. அறியார்க்கும் இல்லை என ஆனாய்;

பணி வீக்கி மெய்யில் உமை சேர்த்த செய்ய;

.. .. பலர் போற்ற வல்லம் உறைவோனே;

.. பணிவார்க்கு வெல்லு(ம்) நெறி காட்டி, உள்ள

.. .. பய(ம்) நீக்க வல்ல பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

பணநாட்ட மையல் அது வாட்ட - பணத்தின்மீது ஆசை என்ற மயக்கம் வாட்ட; (நாட்டம் - விருப்பம்; நோக்கம்); (மையல் - பித்து); (வாட்டுதல் - வருத்துதல்);

வெய்ய பழி கூட்ட-வல்ல செயலான பலற்றி - கொடிய பழியைக் கூட்டுகின்ற பல செயல்களைச் செய்து; (வெய்ய- கொடிய);

அல்லல் உறுவேற்கு - துன்பம் அடைகின்ற அடியேனுக்கு;

நல்லபடி வாழ்க்கை வையம் இதில் ஆ - நல்லவாறு இந்த உலகவாழ்க்கை அமையும்படி;


மணிட்டி, நல்ல புகை காட்டி, மல்கு மலர் சூட்டி - மணி அடித்து, (தூபமாகிய) வாசப்புகையைக் காட்டி, மிகுந்த பூக்களைச் சூட்டி; (மல்குதல் - மிகுதல்)

உய்தி தரு தூய மணிவார்த்தை சொல்லி - உய்வைத் தரும் தூய அழகிய வாசகங்களைச் சொல்லி; (உய்தி - ஈடேற்றம்; உய்வு); (மணி - அழகு); (மணிவார்த்தை - தேவாரம், திருவாசகம், முதலியன);

உனை நோக்கி நையும் மனம் ஆக்கி, ஐய, அருளாயே - உன்னை நோக்கி வழிபாடு செய்து கசிகின்ற மனமாக என் மனத்தை ஆக்கி, ஐயனே, அருள்வாயாக; (நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்);


அணி நீற் - அழகிய திருநீற்றைப் பூசியவனே; ( அணி - அழகு); (அணிதல் - அணிந்துகொள்ளுதல்);

கல்லில் அரவு ஆர்த்த வில்லின் அரண் மாய்க்க வல்ல விறலானே - மேருமலையில் பாம்பைக் கட்டிய வில்லினால் முப்புரங்கள் அழித்த வெற்றியுடையவனே; (கல் - மலை); (ஆர்த்தல் - கட்டுதல்); (வில்லின் - வில்லினால்; மூன்றாம்வேற்றுமைத்தொகை); (விறல் - வெற்றி; வீரம்; வலிமை);

அடையார்க்கும், உள்க நினையார்க்கும், மெய்யை அறியார்க்கும் இல்லை எனனாய் - உன்னைச் சரணடையாதவர்களுக்கும், எண்ண நினையாதவர்களுக்கும், உண்மையை அறியாதவர்களுக்கும் (அருள்) இல்லாதவனே; (அடைதல் - சரண்புகுதல்); (உள்குதல் - எண்ணுதல்); (மெய் - உண்மை);


பணி வீக்கி மெய்யில் உமை சேர்த்த செய் - (அரையில்) பாம்பைக் கட்டி, உமையைக் கூறாக உடைய செம்மேனியனே; (பணி - பாம்பு); (வீக்குதல் - கட்டுதல்); (மெய் - மேனி); (செய்யன் - சிவந்த நிறம் உடையவன்);

பலர் போற்ற வல்லம் உறைவோனே - பலரும் போற்றத் திருவல்லத்தில் உறைகின்றவனே;

பணிவார்க்கு வெல்லும் நெறி காட்டி, உள்ள பயம் நீக்க வல்ல பெருமானே - வழிபடும் பக்தர்களுக்கு வினையை வெல்லும் முத்தி நெறியைக் காட்டி, அவர்களது நெஞ்சில் இருக்கும் அச்சம் தீர அபயம் தந்து காக்கும் பெருமானே; (உள்ள - இருக்கின்ற; உள்ளம் - நெஞ்சு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment