07.46 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - வம்புமலர்க் கணை
2016-05-19
07.46 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(மாச்சீர் வந்தால், அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")
1)
வம்புமலர்க் கணையெய்த மன்மதனைப் பொடிசெய்த
எம்பெருமான் ஏந்திழையை இடப்பாகம் அமர்ந்தபிரான்
கம்பமத கரியுரிவை மூடியிடம் காவிரியின்
பைம்புனல்வந் தடிபரவு பாண்டிக் கொடுமுடியே.
வம்பு-மலர்க்கணை எய்த மன்மதனைப் பொடிசெய்த எம்பெருமான் - வாசமலர் அம்பை எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய எம்பெருமான்; (வம்பு - வாசனை);
ஏந்திழையை இடப்பாகம் அமர்ந்த பிரான் - உமாதேவியை இடப்பாகமாக விரும்பிய தலைவன்; (அமர்தல் - விரும்புதல்);
கம்ப மத-கரி உரிவை மூடி இடம் - அசையும் மதயானையின் தோலைப் போர்த்தவன் உறையும் தலம்; (கம்பம் - அசைவு); (உரிவை - தோல்); (மூடி - மூடியவன்)
காவிரியின் பைம்புனல் வந்து அடி பரவு பாண்டிக் கொடுமுடியே - காவிரியின் குளிர்ந்த நீர் வந்து ஈசன் திருவடியை வழிபடுகின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பைம்மை - பசுமை; பைம்புனல் என்பதில், பசுமை - புதுமையின் மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது).
2)
மாய்நாளென் றடியார்பால் வந்தடைந்த வன்னமனைக்
காய்பாதன் நெற்றியிலோர் கண்ணுடையான் எவ்வுயிர்க்கும்
தாய்தந்தை ஆகியவன் தங்குமிடம் கயல்மீன்கள்
பாய்பொன்னி அடிபரவு பாண்டிக் கொடுமுடியே.
மாய் நாள் என்று அடியார்பால் வந்து அடைந்த வல் நமனைக் காய் பாதன் - மார்க்கண்டேயரது ஆயுள் முடியும் நாள், அவரைக் கொல்லும் நாள் என்று மார்க்கண்டேயரிடம் வந்துசேர்ந்த கொடிய கூற்றுவனைச் சினந்து உதைத்த திருப்பாதம் உடையவன்; (மாய்த்தல் - கொல்லுதல்); (மாய்தல் - இறத்தல்);
நெற்றியில் ஓர் கண் உடையான் - நெற்றிக்கண்ணன்;
எவ்வுயிர்க்கும் தாய் தந்தை ஆகியவன் தங்கும் இடம் - எல்லா உயிர்களுக்கும் அம்மையும் அப்பனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம்;
கயல்மீன்கள் பாய் பொன்னி அடி பரவு பாண்டிக் கொடுமுடியே - கயல்மீன்கள் பாய்கின்ற காவிரி ஈசன் திருவடியை வழிபடுகின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;
3)
கரந்தனிலே பிரமன்றன் சிரமேந்தி கரவின்றி
வரந்தருமோர் வள்ளலவன் மலர்தூவு வானவரைப்
புரந்தருளி ஒருகணையால் புரமெரித்த பரமனிடம்
பரந்திழிகா விரிப்பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடியே.
கரம்-தனிலே பிரமன்தன் சிரம் ஏந்தி - கையில் பிரமனுடைய மண்டையோட்டை ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன்);
கரவு இன்றி வரம் தரும் ஓர் வள்ளல்அவன் - வஞ்சமின்றி வரங்கள் தரும் வள்ளன்மை உடையவன்; (கரவு - வஞ்சம்; ஒளித்தல்); (வள்ளல்அவன் - அவன் என்றது பகுதிப்பொருள்விகுதி);
மலர் தூவு வானவரைப் புரந்து அருளி ஒரு கணையால் புரம் எரித்த பரமன் இடம் - பூக்கள் தூவி வணங்கிய தேவர்களைக் காத்து, ஓர் அம்பால் முப்புரங்களை எரித்த பரமன் உறையும் தலம்; (புரத்தல் - காத்தல்);
பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடியே - விரிந்து பாய்கின்ற காவிரியின் பக்கத்தில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பரத்தல் - பரவுதல்); (பாங்கர் - பக்கம்);
4)
ஈங்கெம் துணைநீயே என்றுருகித் தொழுதேத்தில்
தீங்கைப் புரிவினைகள் தீர்க்குமரன் கங்கைதனைத்
தாங்கச் சடைவிரித்த தலைவனிடம் காவிரியின்
பாங்கர்த் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே.
"ஈங்கு எம் துணை நீயே" என்று உருகித் தொழுது ஏத்தில் தீங்கைப் புரி வினைகள் தீர்க்கும் அரன் - "இங்கு எமக்கு நீயே துணை" என்று உள்ளம் உருகி வணங்கித் துதித்தால், நமக்குத் தீமை செய்யும் வினைகளைத் தீர்த்து அருளும் ஹரன்; (ஈங்கு - இங்கு);
கங்கைதனைத் தாங்கச் சடை விரித்த தலைவன் இடம் - கங்கையைத் தாங்குவதற்காகத் தன் சடையை விரித்த தலைவனான சிவபெருமான் உறையும் தலம்;
காவிரியின் பாங்கர்த் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே - காவிரியின் பக்கத்தில் விளங்குகின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;
5)
கரிகொல்ல வந்தக்கால் நாவரசைக் காத்தபிரான்
நரியெல்லாம் பரியாக்கி நாடகம் ஆடுமிகப்
பரிவுள்ள பரமனுமை பங்கனிடம் காவிரியில்
பரிசல்கள் செல்கின்ற பாண்டிக் கொடுமுடியே.
கரி கொல்ல வந்தக்கால் நாவரசைக் காத்த பிரான் - (சமணர்கள் ஏவிய) யானை கொல்ல வந்தபோது திருநாவுக்கரசரைக் காத்த பெருமான்;
நரி எல்லாம் பரி ஆக்கி நாடகம் ஆடு மிகப் பரிவு உள்ள பரமன் - (மாணிக்கவாசகருக்காக) நரிகளை எல்லாம் குதிரைகள் ஆக்கித் திருவிளையாடல் புரிந்த, மிகவும் கருணையுள்ள பரமன்;
உமை பங்கன் இடம் - அர்த்தநாரீஸ்வரனான சிவபெருமான் உறையும் தலம்;
காவிரியில் பரிசல்கள் செல்கின்ற பாண்டிக் கொடுமுடியே - காவிரியில் பரிசல் என்ற சிறிய ஓடங்கள் செல்கின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பரிசல் - பரிசில் - Coracle; சிற்றோடம்);
6)
நாதத்தால் கீதத்தால் நாளுமடி தொழுவார்தம்
ஏதத்தைத் தீர்த்தவரை இன்பவான் ஏற்றுமிறை
ஓதத்தில் எழுநஞ்சை உண்டிருண்ட கண்டனிடம்
பாதத்தைப் பொன்னிபணி பாண்டிக் கொடுமுடியே.
நாதத்தால் கீதத்தால் நாளும் அடி தொழுவார்தம் ஏதத்தைத் தீர்த்து அவரை இன்ப வான் ஏற்றும் இறை - இசையாலும் பாட்டாலும் தினந்தோறும் திருவடியைத் தொழும் அன்பர்களுடைய குற்றங்களைத் தீர்த்து அவர்களை இன்பமயமான சிவலோகத்திற்கு உயர்த்தும் இறைவன்; (ஏதம் - குற்றம்; துன்பம்);
ஓதத்தில் எழு நஞ்சை உண்டு இருண்ட கண்டன் இடம் - கடலில் தோன்றிய விடத்தை உண்டு கருமைபெற்ற கண்டத்தை உடைய சிவபெருமான் உறையும் தலம்; (ஓதம் - கடல்);
பாதத்தைப் பொன்னி பணி பாண்டிக் கொடுமுடியே - காவிரியாறு ஈசன் திருவடியைப் பணியும் திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;
7)
கண்ணிலங்கு நெற்றியினான் கறைக்கண்டன் கயல்போன்ற
கண்ணியொரு கூறுடையான் கனவிடையான் கதிர்மதியக்
கண்ணியணி சென்னியினான் கருதுமிடம் குயிலினங்கள்
பண்ணிசைக்கும் பொழில்சூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே.
கண் இலங்கு நெற்றியினான் - நெற்றிக்கண்ணன்;
கறைக்கண்டன் - நீலகண்டன்;
கயல் போன்ற கண்ணி ஒரு கூறு உடையான் - கயல்மீன் போன்ற கண் உடைய உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;
கன விடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;
கதிர் மதியக் கண்ணி அணி சென்னியினான் கருதும் இடம் - ஒளியுடைய (/கிரணங்களை வீசும்) திங்களைக் கண்ணிமாலை போல முடிமேல் அணிந்தவன் விரும்பி உறையும் தலம்;
குயிலினங்கள் பண் இசைக்கும் பொழில் சூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே - குயில்கள் இசைபாடும் சோலை சூழ்ந்த திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;
8)
திக்கெட்டும் செருவென்ற திறலரக்கன் சிலையெடுக்க
நக்குத்தாள் விரலொன்றின் நகமூன்றி நசுக்கியவன்
நெக்குத்தாள் பணிவார்க்கு நேயனிடம் காவிரியின்
பக்கத்தில் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே.
திக்கு எட்டும் செரு வென்ற திறல் அரக்கன் சிலை எடுக்க - எட்டுத் திக்கிலும் எல்லாரையும் போரில் வென்ற வலிய அரக்கனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது; (செரு - போர்); (திறல் - வலிமை; வெற்றி); (சிலை - மலை);
நக்குத் தாள் விரல் ஒன்றின் நகம் ஊன்றி நசுக்கியவன் - சிரித்துத் தன் திருப்பாத விரல் ஒன்றின் நகத்தைச் சிறிதே ஊன்றி அவனை நசுக்கியவன்; (நக்கு - சிரித்து); (சம்பந்தர் தேவாரம் - 1.9.8 - "வரை எடுத்தவ்வலி அரக்கன் தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன்" - சரண் - பாதம்; உகிர் - நகம்;);
நெக்குத் தாள் பணிவார்க்கு நேயன் இடம் - மனம் உருகித் திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு அன்பு உடையவனான சிவபெருமான் உறையும் தலம்; (நெகுதல் - உருகுதல்);
காவிரியின் பக்கத்தில் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே - காவிரிக்கரையில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;
9)
உயர்பிரமன் அகழ்திருமால் உச்சியடி தேடிமிக
அயர்வுறவே அலகில்லா ஆரழலாய் நின்றபரன்
தயிர்நறுநெய் பாலாடு தலைவனிடம் தரைவாழப்
பயிர்வளர்செய் புடைசூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே.
உயர் பிரமன் அகழ் திருமால் உச்சி அடி தேடி - அன்னமாகி உயர்ந்த பிரமனும், பன்றியாகி அகழ்ந்த திருமாலும் தன் உச்சியையும் அடியையும் தேடி;
மிக அயர்வு உறவே அலகு இல்லா ஆர் அழல் ஆய் நின்ற பரன் - மிகவும் சோரும்படி அளவில்லாத அரிய ஜோதி ஆகி நின்ற பரமன்; (அயர்வு - சோர்வு; வருத்தம்); (அலகு - அளவு);
தயிர் நறு-நெய் பால் ஆடு தலைவன் இடம் - தயிர், வாச நெய், பால் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் தலைவன் உறையும் தலம்;
தரை வாழப் பயிர் வளர் செய் புடை சூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே - இவ்வுலக மக்கள் வாழப் பயிர் வளரும் வயல் சூழ்ந்த திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (செய் - வயல்); (புடை - பக்கம்); (தரை - பூமி - ஆகுபெயராகி உலக மக்களைக் குறித்தது);
10)
பண்டைமறை நெறிதன்னைப் பணத்திற்காப் பழித்துழலும்
மிண்டருரை பொய்ம்மொழிகள் விட்டொழிமின் நீறணிந்த
தொண்டருரை மகிழ்ந்துவரம் சொரியுமரன் தூமதியன்
பண்டரங்கக் கூத்தனிடம் பாண்டிக் கொடுமுடியே.
பண்டை மறைநெறி தன்னைப் பணத்திற்காப் பழித்து உழலும் மிண்டர் உரை பொய்ம்மொழிகள் விட்டு ஒழிமின் - தொன்மையான வைதிக தர்மத்தைப் பணத்திற்காகப் பழித்துப் பேசி உழல்கின்ற கல்நெஞ்சர்கள் சொல்கின்ற பொய்ச்சொற்களை விட்டு நீங்குங்கள்;
நீறு அணிந்த தொண்டர் உரை மகிழ்ந்து வரம் சொரியும் அரன் - திருநீற்றைப் பூசிய பக்தர்கள் சொல்லும் துதிக்கு மகிழ்ந்து வரங்களை வாரி வழங்கும் ஹரன்; (உரை - உரைத்தல்; சொல்);
தூ மதியன் - தூய மதியை அணிந்தவன்;
பண்டரங்கக் கூத்தன் இடம் பாண்டிக் கொடுமுடியே - பண்டரங்கம் என்ற கூத்து ஆடும் சிவபெருமான் உறையும் தலம் திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பண்டரங்கம் - பாண்டரங்கம் - கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது);
11)
அடல்விடையாய் அடுபுலித்தோல் ஆடையனே அங்கணனே
இடர்களையாய் எம்பெருமான் என்றேத்தும் அடியார்தம்
தொடர்வினையைத் துடைத்தவர்க்குத் துணையாகி நின்றருளும்
படர்சடைமேற் பிறையனிடம் பாண்டிக் கொடுமுடியே.
அடல் விடையாய் - வெற்றியுடைய வலிய இடபத்தை வாகனமாக உடையவனே; (அடல் - வலிமை; வெற்றி);
அடு புலித்தோல் ஆடையனே - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவனே; (அடுதல் - கொல்லுதல்);
அங்கணனே - அருட்கண் உடையவனே;
இடர் களையாய் எம்பெருமான் என்று ஏத்தும் அடியார்தம் தொடர்வினையைத் துடைத்து - "துன்பத்தைத் தீராய்! எம் பெருமானே!" என்று துதிக்கும் அடியவர்களுடைய வினைத்தொடரை அழித்து; (தொடர்வினை - பல பிறவிகளாகத் தொடர்கின்ற வினை); (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);
அவர்க்குத் துணை ஆகி நின்று அருளும் - அவர்களுக்குத் துணை ஆகி நின்று அருளும்;
படர்சடைமேல் பிறையன் இடம் பாண்டிக் கொடுமுடியே - படரும் சடைமேல் பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான் உறையும் தலம் திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;
வி. சுப்பிரமணியன்
--------
No comments:
Post a Comment