Monday, May 20, 2024

08.03.070 - பதங்கண்டு - வானுமருள் - மடக்கு

08.03 – மடக்கு

2016-06-04

08.03.070 - பதங்கண்டு - வானுமருள் - மடக்கு

-------------------------

பதங்கண்டு போற்றிய பத்தருரை அஞ்சு

பதங்கண்டு நாமும் பரவில் - பதங்கண்டு

வானுமருள் செய்யும் வரதன் மழவிடையன்

வானுமருள் வெவ்விடமுண் மான்.


சொற்பொருள்:

பதம் - 1. பாதம்; திருவடி; 2. சொல்; ஆகுபெயராய் எழுத்தைக் குறித்தது; 3. பக்குவம்; தகுதி;

அஞ்சுபதம் - திருவைந்தெழுத்து;

காண்தல் - 1. தரிசித்தல்; 2. பார்த்தல்; 3. அறிதல்;

கண்டு - 1. கற்கண்டு; 2. பார்த்து;

பரவுதல் - போற்றுதல்; (பரவில் - போற்றினால்);

வானுமருள் - 1. வானும் அருள்; 2. வானும் மருள்;

வான் - 1. சிவலோகம்; முக்தி; 2. தேவர்கள்;

மருள்தல் - வெருவுதல்; அஞ்சுதல்;

வரதன் - வரம் அளிப்பவன்;

மான் - பெரியோன்;


பதம் கண்டு போற்றிய பத்தர் உரை அஞ்சு பதம் கண்டு நாமும் பரவில் - திருவடியைத் தரிசித்த அடியவர்கள் புகழ்ந்து உரைத்த அஞ்செழுத்தானது கற்கண்டு போல் இனிமை பயப்பது; அவர்கள் அப்படிச் செய்வதைப் பார்த்து, நாமும் அஞ்செழுத்துச் சொல்லிப் போற்றினால்; (சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.91.3 - "ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாய் உனை நானும் தொழுவனே");

பதம் கண்டு வானும் அருள் செய்யும் வரதன் - நம் பக்குவத்தை அறிந்து சிவலோகமும் அருள்கின்ற வரதன்; ("வானும் வரதன் அருள் செய்யும்" என்று இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

மழவிடையன் - இளைய எருதினை வாகனமாக உடையவன்;

வானும் மருள் வெவ்விடம் உண் மான் - தேவர்களும் அஞ்சிய கொடிய நஞ்சை உண்ட பெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------ ------------


No comments:

Post a Comment