Saturday, May 4, 2024

08.02.187 - கச்சூர் (திருக்கச்சூர்) - பெற்றாய் பெற்றூர் - (வண்ணம்)

08.02.187 - கச்சூர் (திருக்கச்சூர்) - பெற்றாய் பெற்றூர் - (வண்ணம்)

2016-03-08

8.2.187 - பெற்றாய் பெற்றூர் - (கச்சூர் - திருக்கச்சூர்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தா தத்தா தத்தா தத்தா

தத்தா தத்தா .. தனதான)

(இவ்வமைப்பு இந்தத் திருப்புகழ் அமைப்பைப் பெரும்பாலும் ஒத்தது -

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் - திருப்புகழ் - திருத்தணிகை)


பெற்றாய் இப்பார் பெற்றூர் சிட்டா

.. .. பித்தா பட்டார் .. பொடிபூசீ

.. நற்றா ளிற்போ திட்டார் கட்கே

.. .. அற்றாய் நக்கா .. உமைபாகா

மற்றார் பற்றா உற்றேன் வற்றா

.. .. வைப்பே முற்றா .. மதிசூடீ

.. கற்றோர் சித்தா நித்தா முத்தா

.. .. கச்சூர் அத்தா .. அருளாயே

சொற்போர் இட்டார் எய்ப்பே உற்றே

.. .. தொக்கோ தத்தீ .. எனநீள்வாய்

.. துட்டே மிக்கான் மற்றோள் இற்றே

.. .. சுத்தா சொக்கா .. எனவேதான்

வெற்போர் பொற்றாள் வைத்தாய் பற்றார்

.. .. பொற்பூர் சுட்டாய் .. நகையாலே

.. வித்தே முத்தே அக்கா னத்தா

.. .. னைத்தோ லைப்போர் .. பெருமானே.


பதம் பிரித்து:

பெற்றாய் இப்-பார்; பெற்று ஊர் சிட்டா;

.. .. பித்தா; பட்டார் பொடி பூசீ;

.. நற்றாளிற் போது இட்டார்கட்கே

.. .. அற்றாய்; நக்கா; உமைபாகா;

மற்று ஆர் பற்றா உற்றேன்? வற்றா

.. .. வைப்பே; முற்றா மதி சூடீ;

.. கற்றோர் சித்தா; நித்தா; முத்தா;

.. .. கச்சூர் அத்தா; அருளாயே;

சொற்போர் இட்டார் எய்ப்பே உற்றே

.. .. தொக்கு ஓதத் தீ என நீள்வாய்;

.. துட்டே மிக்கான் மற்றோள் இற்றே,

.. .. "சுத்தா; சொக்கா" எனவேதான்

வெற்பு ஓர் பொற்றாள் வைத்தாய்; பற்றார்

.. .. பொற்பு-ஊர் சுட்டாய் நகையாலே;

.. வித்தே; முத்தே; அக்-கானத்து

.. .. ஆனைத்தோலைப் போர்- பெருமானே.


பெற்றாய் இப்-பார் - இந்த உலகத்தைப் பெற்றவனே; (எல்லா உயிர்களுக்கும் தந்தையே);

பெற்று ஊர் சிட்டா - இடபத்தின்மேல் ஏறும் பெருமை உடைய சிட்டனே (உயர்ந்தவனே); (பெற்று - இடபம்); (ஊர்தல் - ஏறுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.80.8 - "பெற்றொன்றேறி வருவார்"); (அப்பர் தேவாரம் - 5.81.1 - "சிட்டனைச் சிவனை");

பித்தா - பேரருளாளனே; (பித்தன் - பேரருள் உடையவன்);

பட்டார் பொடி பூசீ - இறந்தவர் சாம்பலைப் பூசியவனே - சுடலைப்பொடி பூசியவனே; (படுதல் - சாதல்); (பொடி - சாம்பல்);

நற்றாளில் போது இட்டார்கட்கே அற்றாய் - நல்ல திருவடியில் பூக்களைத் தூவியவர்களுக்கே அன்பு உடையவனே; (போது - பூ); (அறுதல் - அன்பு பூணுதல்; நட்புச்செய்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே");

நக்கா - ஆடையணியாதவனே; (நக்கன் - நக்னன் - ஆடை அணியாதவன்);

உமைபாகா - உமைபங்கனே;

மற்று ஆர் பற்றா உற்றேன் - உன்னையன்றி வேறு யாரை நான் பற்றுக்கோடாக உடையேன்? (பற்று - பற்றுக்கோடு);

வற்றா வைப்பே - என்றும் குறையாத வைப்புநிதியே; (வைப்பு - சேமநிதி);

முற்றா மதி சூடீ - இளம்பிறையைச் சூடியவனே;

கற்றோர் சித்தா நித்தா முத்தா - கற்றவர்கள் சித்தத்தில் இருப்பவனே; நித்தியனே; முத்தனே; (நித்தன் - நித்யன் - என்றும் இருப்பவன்); (முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் - சிவபிரான்);

கச்சூர் அத்தா அருளாயே - திருக்கச்சூரில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, எனக்கு அருள்புரிவாயாக;


சொற்போர் இட்டார் எய்ப்பே உற்றே தொக்கு ஓதத் தீ என நீள்வாய் - மிகவும் வாதுசெய்தவர்களான திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடி) மிக வருந்தி, ஒன்றாகக் கூடித் துதிக்கும்படி ஜோதியாகி ஓங்கியவனே; (தொக்கு - கூடி; தொகுதல் - கூடுதல்); (அப்பர் தேவாரம் - 6.5.10 - "தொக்கணா என்றிருவர் தோள்கை கூப்ப" - தொக்கணா = தொக்கு அ(ண்)ணா);

துட்டே மிக்கான் மற்றோள் இற்றே, "சுத்தா; சொக்கா" எனவேதான் வெற்பு ஓர் பொற்றாள் வைத்தாய் - துஷ்டத்தனமே மிகுந்த இராவணனது வலிய புஜங்களெல்லாம் முறிந்து, "தூயனே, அழகனே" என்று துதிக்கும்படி கயிலைமலைமேல் ஒரு பொன்னடியை ஊன்றியவனே (= ஊன்றி அவனை நசுக்கியவனே); (துட்டு - துஷ்டத்தனம்); (மற்றோள் - மல்+தோள்; மல் - வலிமை; தோள் - புஜம்); (இறுதல் - முறிதல்; அழிதல்); (சொக்கன் - அழகன்); (வெற்பு - மலை); (அப்பர் தேவாரம் - 4.78.10 - "மலை எடுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்து");

பற்றார் பொற்பு-ஊர் சுட்டாய் நகையாலே - பகைவர்களான அசுரர்களது அழகிய முப்புரங்களை ஒரு சிரிப்பால் எரித்து அழித்தவனே; (பற்றார் - பற்றலர் - பகைவர்); (பொற்பு - அழகு); (சுடுதல் - எரித்தல்); (நகை - சிரிப்பு);

வித்தே முத்தே - உலகங்களுக்கெல்லாம் முதலாக உள்ளவனே; முத்துப் போன்றவனே; (வித்து - விதை); (முத்து - முத்துப் போன்றவன்); (அப்பர் தேவாரம் - 5.56.2 - "முத்தினை முதலாகிய மூர்த்தியை வித்தினை");

அக்-கானத்து ஆனைத்தோலைப் போர்- பெருமானே - அந்தக் காட்டுயானையின் தோலைப் போர்த்த பெருமானே; (கானம் - காடு); (போர்த்தல் - தரித்தல்; மூடுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment