Monday, May 20, 2024

08.02.194 - கழுமலம் (சீகாழி) - படிமிசை வாழ்வில் - (வண்ணம்)

08.02.194 - கழுமலம் (சீகாழி) - படிமிசை வாழ்வில் - (வண்ணம்)

2016-06-11

08.02.194 - படிமிசை வாழ்வில் - கழுமலம் (சீகாழி)

------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான)

(அகரமு மாகி யதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


படிமிசை வாழ்வில் நலிவுறு மாறு

.. .. பழவினை சூழும் .. அடியேனும்

.. பகைவினை மாய அகநெகிழ் வோடு

.. .. பதமலர் ஓத .. அருளாயே

வடிமழு வாளும் இலைநுனை வேலு(ம்)

.. .. மறியெரி யோடு .. தரியீசா

.. வளர்மதி ஏறு சடைமிசை நாறு

.. .. மலரிள நாகம் .. அணிவோனே

அடிதொழு பாடல் அளவில தாக

.. .. அவணொரு பாலர் .. அழுபோதில்

.. அவர்களி கூர இருவித ஞான

.. .. அமுதளி மாது .. மணவாளா

கடிமலர் நாடு வரியளி பாடு

.. .. கவினுறு சோலை .. புடைசூழும்

.. கழுமல(ம்) மேய விடையமர் ஈச

.. .. கரியுரி மூடு .. பெருமானே.


பதம் பிரித்து:

படிமிசை வாழ்வில் நலிவுறுமாறு

.. .. பழவினை சூழும் .. அடியேனும்,

.. பகை-வினை மாய அகநெகிழ்வோடு

.. .. பதமலர் ஓத .. அருளாயே;

வடி-மழு வாளும், இலை-நுனை வேலு(ம்),

.. .. மறி எரியோடு .. தரி-ஈசா;

.. வளர்மதி ஏறு சடைமிசை நாறு

.. .. மலர் இள-நாகம் .. அணிவோனே;

அடிதொழு பாடல் அளவிலது ஆக

.. .. அவண் ஒரு பாலர் .. அழு-போதில்,

.. அவர் களி-கூர இருவித ஞான

.. .. அமுது அளி- மாது .. மணவாளா;

கடிமலர் நாடு வரி-அளி பாடு

.. .. கவினுறு சோலை .. புடைசூழும்

.. கழுமல(ம்) மேய விடை அமர் ஈச;

.. .. கரி-உரி மூடு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

படிமிசை வாழ்வில் நலிவுறுமாறு பழவினை சூழும் அடியேனும் - இவ்வுலக வாழ்க்கையில் துன்புறும்படி பழைய வினைகள் வந்து சூழ்கின்ற அடியேனும்; (படி - பூமி); (நலிவுறுதல் - துன்புறுதல்);

பகை-வினை மாய, அகநெகிழ்வோடு பதமலர் ஓத அருளாயே - பகைக்கின்ற வினைகள் எல்லாம் அழிய, மனம் உருகி, மலர் போன்ற உன் திருவடிகளைப் பாட அருள்வாயாக; (பகைவினை - 1. பகைக்கின்ற வினைகள்; 2. பகையும் வினையும்); (அகநெகிழ்வு - மனம் உருகுதல்); (ஓதுதல் - பாடுதல்; சொல்லுதல்);

வடி-மழுவாளும், இலை-நுனை வேலும், மறிரியோடு தரிசா - கூர்மையான மழுவையும், இலை போன்ற முனைகளை உடைய சூலத்தையும், மான்கன்றையும், தீயையும் ஏந்திய ஈசனே; (வடி - கூர்மை); (இலை நுனை - இலை போன்ற முனை); (மறி - மான் கன்று); (எரி - நெருப்பு);

வளர்-மதி ஏறு சடைமிசை நாறு மலர் இளநாகம் அணிவோனே - வளர்கின்ற சந்திரன் ஏறிய சடையின்மேல் மணம் கமழும் மலர்களையும் இளம்-பாம்பையும் அணிந்தவனே; (நாறுதல் - மணம் கமழ்தல்);

அடிதொழு பாடல் அளவு இது ஆ, அவண் ஒரு பாலர் அழு-போதில் - உன் திருவடியைப் போற்றுகின்ற பாட்டுகள் எண்ணற்றவை ஆகும்படி அங்கு ஒப்பற்ற குழந்தை (திருஞான சம்பந்தர்) அழுத சமயத்தில்; (அவண் - அவ்விடம்; அவ்விதம்); (ஒரு - ஒப்பற்ற); (பாலர் - குழந்தைப்பருவத்தில் இருந்த திருஞானசம்பந்தர்);

அவர் களி-கூர, இருவித ஞான அமுது அளி- மாது மணவாளா - அவர் மகிழும்படி, பரஞானம் அபரஞானம் என்ற இரண்டும் அவர் பெற, அவருக்கு ஞானப்பால் அளித்த உமைக்குக் கணவனே; (களிகூர்தல் - மகிழ்ச்சி மிகுதல்); (பெரிய புராணம் - "உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்");

கடி-மலர் நாடு வரி-ளி பாடு கவினுறு சோலை புடை சூழும் கழுமல(ம்) மேய விடைமர் ஈச - வாசமலர்களை நாடுகின்ற, வரிகளை உடைய வண்டுகள் இசை பாடுகின்ற அழகிய பொழில்கள் சூழ்ந்த கழுமலத்தில் (சீகாழியில்) உறைகின்ற, இடபவாகனம் உடைய ஈசனே; (கடி - வாசனை); (வரி - 1. கோடு; 13. இசை; 14. இசைப்பாட்டு); (அளி - வண்டு);

கரி-ரி மூடு பெருமானே - யானைத்தோலைப் போர்த்த பெருமானே; (கரி - யானை); (உரி - தோல்); (மூடுதல் - போர்த்தல்);


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------


No comments:

Post a Comment