07.40 - புகலூர் (திருப்புகலூர்) - சொலிக்கின்ற தீப்போன்ற
2016-05-02
07.40 - புகலூர் (திருப்புகலூர்)
----------------------
(எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" - அரையடி வாய்பாடு. திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)
(அப்பர் தேவாரம் - 6.99.1 - "எண்ணுகேன் என்சொல்லி")
1)
சொலிக்கின்ற தீப்போன்ற மேனி யானைத்
.. தோள்மீது சுடுநீறு பூசி னானைப்
பலிக்கென்று கையினிலோர் ஓட்டை யேந்திப்
.. பல்லூர்கள் திரிகின்ற பரமன் தன்னை
ஒலிக்கின்ற கழலணிந்த வீரன் தன்னை
.. உமையவளை ஒருபாகம் மகிழ்ந்தான் தன்னைப்
புலித்தோலை உடுத்தவனைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
சொலிக்கின்ற தீப்போன்ற மேனியானைத் - சுடர்விடும் நெருப்புப் போன்ற செம்மேனி உடையவனை;
தோள்மீது சுடுநீறு பூசினானைப் - புஜங்களில் திருநீறு பூசியவனை;
பலிக்கென்று கையினிலோர் ஓட்டை ஏந்திப் பல்லூர்கள் திரிகின்ற பரமன் தன்னை - பிச்சைக்கென்று கையில் பிரமன் மண்டையோட்டை ஏந்திப் பல ஊர்கள் திரிகின்ற பரமனை;
ஒலிக்கின்ற கழல் அணிந்த வீரன் தன்னை - ஒலிக்கும் கழலை அணிந்த வீரனை;
உமையவளை ஒரு பாகம் மகிழ்ந்தான் தன்னைப் - உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவனை;
புலித்தோலை உடுத்தவனைப் - அரையில் புலித்தோல் அணிந்தவனை;
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
2)
அன்னேஎம் அத்தாஎன் றிமையோர் ஏத்தி
.. அடிதொழக்கண் டிரங்கிஅவர் அல்லல் தீர
இன்னார்தம் முப்புரமும் எரியில் மூழ்க
.. இருவரையை ஒருவில்லா ஏந்தி னானை
மின்னாரும் செஞ்சடைமேல் கொன்றை மத்தம்
.. வெண்திங்கள் கங்கைநதி சூடி னானைப்
பொன்னாரும் மேனியனைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
"அன்னே; எம் அத்தா" என்று இமையோர் ஏத்தி அடிதொழக் கண்டு இரங்கி - "தாயே, எம் தந்தையே" என்று தேவர்கள் துதித்துத் திருவடியை வணங்க, அதனைக் கண்டு அவர்களுக்கு இரங்கி;
அவர் அல்லல் தீர, இன்னார்தம் முப்புரமும் எரியில் மூழ்க - தேவர்களுடைய துன்பம் தீரும்படி, பகைவர்களது முப்புரங்களும் தீயில் முழுகும்படி;
இருவரையை ஒரு வில்லா ஏந்தினானை - பெரிய மேருமலையை ஓர் ஒப்பற்ற வில்லாக ஏந்தியவனை; (இருமை - பெருமை); (ஒரு - ஒப்பற்ற);
மின் ஆரும் செஞ்சடைமேல் கொன்றை மத்தம் வெண்திங்கள் கங்கைநதி சூடினானைப் - மின்னல் போன்று ஒளிரும் செஞ்சடையின்மேல் கொன்றைமலரையும், ஊமத்த மலரையும், வெண்பிறைச்சந்திரனையும், கங்கையாற்றையும் அணிந்தவனை;
பொன் ஆரும் மேனியனைப் - பொன் போன்ற திருமேனி உடையவனை;
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
3)
இடியாரும் குரலுடைய ஏற்றி னானை
.. இடப்பாகம் மடப்பாவை உடையான் தன்னைத்
துடியாரும் கையானைச் சூலத் தானைச்
.. சுடலைதனில் நடமாடும் தோன்றல் தன்னை
முடியாரும் நதியானை நுதற்கண் ணானை
.. முப்புரிநூல் திகழ்கின்ற மார்பி னானைப்
பொடியாரும் மேனியனைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
இடி ஆரும் குரல் உடைய ஏற்றினானை - இடி போன்ற குரல் உடைய இடபத்தை ஊர்தியாக உடையவனை; (ஆர்தல் - ஒத்தல்);
இடப்பாகம் மடப்பாவை உடையான் தன்னைத் - இடப்பக்கத்தில் அழகிய உமையை உடையவனை;
துடி ஆரும் கையானைச் - உடுக்கை ஏந்திய கையினனை;
சூலத்தானைச் - சூலபாணியை;
சுடலைதனில் நடம் ஆடும் தோன்றல் தன்னை - சுடுகாட்டில் திருநடம் ஆடுகின்ற தலைவனை; (தோன்றல் - தலைவன்);
முடி ஆரும் நதியானை - தலையில் கங்கையைத் தாங்கியவனை;
நுதற்கண்ணானை - நெற்றிக்கண்ணனை; (நுதல் - நெற்றி);
முப்புரிநூல் திகழ்கின்ற மார்பினானைப் - மார்பில் பூணூல் அணிந்தவனை;
பொடி ஆரும் மேனியனைப் - மேனிமேல் திருநீறு பூசியவனை;
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
4)
கற்சிலையைக் கையேந்திக் கணையொன் றெய்து
.. கடியரண்மூன் றெரித்தானைக் கயிலை என்னும்
வெற்பமரும் பெருமானை ஊர்தி யாக
.. வெள்விடையை உகந்தானை அண்ட மெல்லாம்
அற்பமெனப் பெரியவனை அன்பர் தங்கள்
.. அகத்துறையும் அற்புதனைக் கற்ப கத்தைப்
பொற்சடைமேற் பிறையானைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
கற்சிலையைக் கை ஏந்திக் கணை ஒன்று எய்து கடிஅரண் மூன்று எரித்தானைக் - மலைவில்லைக் கையில் ஏந்தி, ஓர் அம்பினைச் செலுத்திக், காவலுடைய கோட்டைகள் மூன்றையும் எரித்தவனை; (கல் - மலை); (சிலை - வில்); (கடி - காவல்); (அரண் - கோட்டை); (சுந்தரர் தேவாரம் - 7.75.5 - "கணை செந்தீ அரவம் நாண் கல் வளையுஞ் சிலையாகத் துணைசெயும் மதில் மூன்றுஞ் சுட்டவனே");
கயிலை என்னும் வெற்பு அமரும் பெருமானை - கயிலைமலையானை; (வெற்பு - மலை);
ஊர்தியாக வெள்விடையை உகந்தானை - வெண்ணிற இடபத்தை வாகனமாக விரும்பியவனை;
அண்டமெல்லாம் அற்பம் எனப் பெரியவனை - அண்டங்கள் எல்லாம் மிகவும் அற்பம் என்னும்படி மிகவும் பெரியவனை; (கருவூர்த்தேவர் - திருவிசைப்பா - 9.13.6 - "அண்டம் ஓர் அணுவாம் பெருமைகொண்டு");
அன்பர் தங்கள் அகத்து உறையும் அற்புதனைக் - அடியவர்கள் மனத்தில் குடிகொள்ளும் அற்புதனை;
கற்பகத்தைப் - வேண்டும் வரம் எல்லாம் தரும் கற்பகமரம் போன்றவனை;
பொற்சடைமேல் பிறையானைப் - பொன் போன்ற சடையின்மேல் பிறைச்சந்திரனை அணிந்தவனை;
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
5)
கள்ளிருக்கும் மலர்தூவிக் கழலைப் போற்று
.. காதலுடை மாணிக்குக் காவல் ஆகி
நள்ளிருள்போல் மேனியுடைக் காலன் மார்பில்
.. நற்கழலால் உதைத்தானை நம்பன் தன்னை
வெள்ளெருக்கும் கூவிளமும் கொன்றைப் பூவும்
.. வெண்பிறையும் விரவுகின்ற சடையி னானைப்
புள்ளினங்கள் இசைபாடும் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
கள் இருக்கும் மலர் - தேன்மலர்; வண்டுகள் உண்பதன்முன் அதிகாலையில் பறித்த மலர்;
நள்ளிருள்போல் மேனியுடைக் காலன் - கரிய மேனியுடைய கூற்றுவன்; (அப்பர் தேவாரம் - 4.107.1 - "இருட்டிய மேனி வளைவாள்-எயிற்று எரி போலுங் குஞ்சிச் சுருட்டிய நாவில்வெங் கூற்றம்");
நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்;
கூவிளம் - வில்வம்;
விரவுகின்ற - பொருந்துகின்ற;
புள்ளினங்கள் - பறவைகள்;
குறிப்பு: "கள்ளிருக்கும் மலர் தூவிக் கழலைப் போற்று" என்ற சொற்றொடரை முதனிலைத்தீவகமாகக் கொண்டு,
a) "கள்ளிருக்கும் மலர் தூவிக் கழலைப் போற்று காதலுடை மாணி" என்று "போற்று" என்ற சொல்லை வினைத்தொகையாகக் கொண்டு மார்க்கண்டேயருக்கு இயைத்தும்,
b) "கள்ளிருக்கும் மலர் தூவிக் கழலைப் போற்று; ....... பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே" என்று நெஞ்சிற்கு உபதேசமாக இயைத்தும் பொருள்கொள்ளலாம்;
6)
சீரானை வன்னமனை அடிய வர்க்காச்
.. செற்றவனைக் கொன்றையணி சென்னி மீது
நீரானைக் காராரும் கண்டத் தானை
.. நீறணிந்த மேனியனை மார்பில் நாகத்
தாரானை அறுமுகத்துப் பிள்ளை தன்னைத்
.. தந்தானைக் கருமலைபோல் வந்தெ திர்ந்த
போரானை உரியானைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
சீரானை - புகழ் உடையவனை; (சீர் - பெருமை; புகழ்);
வன் நமனை அடியவர்க்காச் செற்றவனைக் - வலிய கூற்றுவனை மார்க்கண்டேயருக்காக அழித்தவனை;
கொன்றை அணி சென்னி மீது நீரானைக் - கொன்றைமலர் அணிந்த திருமுடிமேல் கங்கையை உடையவனை;
கார் ஆரும் கண்டத்தானை - கரிய கண்டம் உடையவனை; (கார் - கருமை);
நீறு அணிந்த மேனியனை - திருநீறு பூசியவனை;
மார்பில் நாகத் தாரானை - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனை; (தார் - மாலை);
அறுமுகத்துப் பிள்ளை தன்னைத் தந்தானைக் - முருகனுக்குத் தந்தையை;
கருமலைபோல் வந்து எதிர்ந்த போர் ஆனை உரியானைப் - கரிய மலைபோல வந்து எதிர்த்துப் போரிட்ட யானையின் தோலைப் போர்த்தவனை; (உரி - தோல்);
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
7)
சங்கரனைத் தாள்விரலால் சக்க ரத்தைத்
.. தரையெழுதிச் சலந்தரனைத் தடிந்தான் தன்னைக்
கங்கையடை சடையானைக் கணையை எய்த
.. காமனைக் கண்ணுதலால் நோக்கி னானை
மங்கையொரு பங்கினனை மாசில் லானை
.. மற்றொருவர் ஒப்பில்லா மைந்தன் தன்னைப்
பொங்கரவம் புனைந்தானைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
சங்கரனைத் - நன்மை செய்பவனை;
தாள்விரலால் சக்கரத்தைத் தரை எழுதிச் சலந்தரனைத் தடிந்தான் தன்னைக் - பாதத்து விரலால் தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவனை; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);
கங்கை அடை சடையானைக் - கங்கையை அடைத்த சடையை உடையவனை;
கணையை எய்த காமனைக் கண்ணுதலால் நோக்கினானை - அம்பு எய்த மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்தவனை (பார்த்து எரித்தவனை);
மங்கை ஒரு பங்கினனை - அர்த்தநாரீஸ்வரனை;
மாசு இல்லானை - குற்றம் அற்றவனை;
மற்றொருவர் ஒப்பு இல்லா மைந்தன் தன்னைப் - யாரும் ஒப்பு ஆகாத வீரனை (/ இளையோனை);
பொங்கு அரவம் புனைந்தானைப் - சீறும் பாம்பை அணிந்தவனை;
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
8)
உர(ம்)மிகுத்த பத்திரட்டி புயங்க ளாலே
.. உயர்கயிலை தனையிடந்தான் அஞ்சோ டஞ்சு
சிர(ம்)நெரித்த பெருமானைச் சென்னி மீது
.. திகழ்மதியைப் புனைந்தானைத் தேவ ரெல்லாம்
கரமிணைத்துக் கழல்போற்றிக் கதறி வேண்டக்
.. கல்வில்லில் நாணாக அரவைக் கட்டிப்
புரமெரிக்க நக்கவனைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
உரம் மிகுத்த பத்து இரட்டி புயங்களாலே - வலிமை மிக்க இருபது புஜங்களால்; (பத்து இரட்டி = இருபது);
உயர் கயிலைதனை இடந்தான் அஞ்சோடு அஞ்சு சிரம் நெரித்த பெருமானைச் - உயர்ந்த கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கிய பெருமானை;
சென்னி மீது திகழ் மதியைப் புனைந்தானைத் - ஒளிவீசும் சந்திரனைத் தலைமேல் அணிந்தவனை;
தேவர் எல்லாம் கரம் இணைத்துக் கழல் போற்றிக் கதறி வேண்டக் - எல்லாத் தேவர்களும் தம் கைகளைச் சேர்த்துக் கூப்பித் திருவடியை வழிபட்டு அழுது வேண்ட, அவர்களுக்கு இரங்கி;
கல்-வில்லில் நாணாக அரவைக் கட்டிப் புரம் எரிக்க நக்கவனைப் - மேருமலையால் ஆன வில்லில் பாம்பை நாணாகக் கட்டி முப்புரங்களும் எரியும்படி சிரித்தவனை; (கல் - மலை); (நகுதல் - சிரித்தல்);
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
9)
கரியானும் நான்முகனும் போற்ற நின்ற
.. கனலானைக் கயற்கண்ணி கணவன் தன்னை
நரியாரும் சுடலைதனில் நட்டம் ஆடும்
.. நாயகனை நால்வேதம் பாடு கின்ற
பெரியானை ஆயிரம் பேரி னானைப்
.. பிஞ்ஞகனை மின்னலெனப் பிறங்கு கின்ற
புரிநூலார் மார்பினனைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
கரியானும் நான்முகனும் போற்ற நின்ற கனலானைக் - திருமாலும் பிரமனும் போற்றுமாறு உயர்ந்த சோதியை;
கயற்கண்ணி கணவன் தன்னை - கயல் போன்ற கண் உடைய உமைக்குக் கணவனை;
நரி ஆரும் சுடலைதனில் நட்டம் ஆடும் நாயகனை - நரிகள் இருக்கும் சுடுகாட்டில் கூத்து ஆடும் தலைவனை;
நால்வேதம் பாடுகின்ற பெரியானை - நான்கு வேதங்களும் பாடும் பெரியவனை; நான்கு வேதங்களையும் பாடியருளிய பெரியவனை;
ஆயிரம் பேரினானைப் - ஆயிரம் திருநாமங்கள் உடையவனை;
பிஞ்ஞகனை - பிஞ்ஞகன் (தலைக்கோலம் உடையவன்) என்ற நாமம் உடையவனை;
மின்னல் எனப் பிறங்குகின்ற புரிநூல் ஆர் மார்பினனைப் - மின்னல் போல் விளங்குகின்ற பூணூல் பொருந்திய மார்பு உடையவனை; (பிறங்குதல் - விளங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.63.5 - "மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்");
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
10)
நெற்றிமிசை நீறணியாக் கொள்கை நீசர்
.. நிதமுரைக்கும் வெற்றுரையை நீங்கி அன்பால்
வெற்றிவிடைக் கொடியானே விமலா என்று
.. மென்மலர்த்தாள் தொழுமடியார் வினைதீர்ப் பானைத்
துற்றுவிடம் கண்டத்தில் மணிபோல் தோன்றும்
.. தூயவனை மூவிலைய சூலத் தானைப்
புற்றரவக் கச்சையனைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
நெற்றிமிசை நீறு அணியாக் கொள்கை நீசர் நிதம் உரைக்கும் வெற்றுரையை நீங்கி - நெற்றியின்மேல் திருநீற்றினைப் பூசாத கொள்கையை உடைய கீழோர்கள் தினமும் சொல்லும் பொருளற்ற வார்த்தைகளை மதித்தல் செய்யாமல் அவற்றை நீங்கி;
அன்பால் "வெற்றிவிடைக் கொடியானே, விமலா" என்று - பக்தியோடு, "வெற்றி மிக்க இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே; விமலனே" என்று போற்றி;
மென்மலர்த்தாள் தொழும் அடியார் வினை தீர்ப்பானைத் - மென்மையான மலர் போன்ற திருவடிகளைத் தொழும் அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பவனை;
துற்று விடம் கண்டத்தில் மணிபோல் தோன்றும் தூயவனை - உண்ட விடம் கண்டத்தில் மணிபோலத் தோன்றுகின்ற தூயவனை; (துற்றுதல் - உண்ணுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.50.5 - "துஞ்சும்போதும் துற்றும்போதும் சொல்லுவன் உன் திறமே");
மூ இலைய சூலத்தானைப் - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவனை; (சுந்தரர் தேவாரம் - 7.40.3 - "இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை");
புற்று அரவக் கச்சையனைப் - புற்றில் வாழும் இயல்பு உடைய பாம்பை அரையில் கச்சையாக அணிந்தவனை;
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
11)
திகழ்திங்கள் இளநாகம் ஒன்று கின்ற
.. சென்னியனை முளைபோன்ற கொம்பி னால்மண்
அகழ்பன்றி தனைஎய்து பாண்ட வற்கோர்
.. அத்திரத்தை அருள்செய்த அம்மான் தன்னை
இகழ்தக்கன் செய்வேள்வி தகர்த்த தேவை
.. இருள்தங்கு மிடற்றானை எல்லை யில்லாப்
புகழ்தங்கு பரம்பரனைப் பொழில ணிந்த
.. பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே.
திகழ் திங்கள் இள நாகம் ஒன்றுகின்ற சென்னியனை - ஒளிவீசும் சந்திரனையும் இளம்பாம்பையும் திருமுடிமேல் ஒன்றாக இருக்குமாறு அணிந்தவனை;
முளை போன்ற கொம்பினால் மண் அகழ் பன்றிதனை எய்து பாண்டவற்கு ஓர் அத்திரத்தை அருள்செய்த அம்மான் தன்னை - முளை போன்ற தன் கொம்பால் மண்ணை அகழும் குணம் உடைய பன்றியை ஓர் அம்பால் எய்து, அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளிய தலைவனை;
இகழ் தக்கன் செய் வேள்வி தகர்த்த தேவை - ஈசனை இகழ்ந்து தக்கன் செய்த யாகத்தை அழித்த கடவுளை; (தே / தேவு - கடவுள்);
இருள் தங்கு மிடற்றானை - கருமை திகழும் கண்டம் உடையவனை;
எல்லை இல்லாப் புகழ் தங்கு பரம்பரனைப் - அளவில்லாத புகழ் உடைய மேலான தெய்வத்தை;
பொழில் அணிந்த பூம்புகலூர்ப் புண்ணியனைப் போற்று நெஞ்சே - சோலை சூழ்ந்த அழகிய புகலூரில் உறைகின்ற புண்ணிய வடிவினனான சிவபெருமானை, நெஞ்சே போற்றுவாயாக;
பிற்குறிப்பு :
யாப்புக்குறிப்பு : எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு.
திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு. காய்ச்சீர் வரும் இடத்தில் விளச்சீரோ மாச்சீரோ வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
வி. சுப்பிரமணியன்
---- --------
No comments:
Post a Comment