07.39 - வான்மியூர் - (திருவான்மியூர்) - வெள்ளை ஏற்றினன்
2016-04-29
07.39 - வான்மியூர் (திருவான்மியூர்)
---------------------------------
(கட்டளைக் கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.82.9 - "ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்")
1)
வெள்ளை ஏற்றினன் வேணியில் கங்கையின்
வெள்ளம் தாங்கு விகிர்தன் விடமுண்ட
வள்ளல் வான்மியூர்ப் பால்வணன் வார்கழல்
உள்கு வார்க்கிடர் ஒன்றிலை உண்மையே.
வெள்ளை ஏற்றினன் - வெண்ணிற எருதை வாகனமாக உடையவன்;
வேணியில் கங்கையின் வெள்ளம் தாங்கு விகிர்தன் - சடையில் கங்கையைத் தாங்கிய விகிர்தன்; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்);
விடம் உண்ட வள்ளல் - விடத்தை உண்டு அமுதை வழங்கிய வள்ளல்;
வான்மியூர்ப் பால்வணன் வார்-கழல் உள்குவார்க்கு இடர் ஒன்றிலை உண்மையே - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ண நாதனது நீண்ட திருவடியைத் தியானிப்பார்களுக்கு ஒரு துன்பமும் இல்லை, உண்மையே; (* பால்வண்ண நாதன் - திருவான்மியூர் ஈசன் திருநாமம்);
2)
வெங்க ளிற்றுரி போர்த்தவன் திங்களும்
பொங்க ராவும் புனைபுன் சடையினன்
மங்கை பங்கினன் வான்மியூர்ப் பால்வணன்
துங்கத் தாள்தொழு தொண்டருக் கின்பமே.
வெங்-களிற்று-உரி போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;
திங்களும் பொங்கு-அராவும் புனை- புன்சடையினன் - சந்திரனையும் சீறும் பாம்பையும் செஞ்சடையில் அணிந்தவன்;
மங்கை பங்கினன் - உமைபங்கன்;
வான்மியூர்ப் பால்வணன் - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ண நாதனது;
துங்கத் தாள் தொழு தொண்டருக்கு இன்பமே - தூய திருவடியைத் தொழும் தொண்டர்களுக்கு என்றும் இன்பமே;
3)
பாசம் வீசு பரிவிலாக் கூற்றுதை
ஈசன் நஞ்சம் இலங்கு மிடற்றினன்
மாசி லாதவன் வான்மியூர்ப் பால்வணன்
வாசம் ஆர்கழல் வாழ்த்து மடநெஞ்சே.
பாசம் வீசு பரிவு இலாக் கூற்று உதை ஈசன் - பாசத்தை வீசிய இரக்கமில்லாத கூற்றுவனை உதைத்த ஈசன்;
நஞ்சம் இலங்கு மிடற்றினன் - கண்டத்தில் நஞ்சை அணிந்தவன்;
மாசு இலாதவன் - தூயன்;
வான்மியூர்ப் பால்வணன் - திருவான்மியூரில் உறைகின்ற பால்வண்ண நாதனது;
வாசம் ஆர் கழல் வாழ்த்து மடநெஞ்சே - வாசம் மிக்க திருவடியைப், பேதைமனமே, வாழ்த்து;;
4)
மாத யைக்கட லேயென்று வான்தொழ
ஓத நஞ்சினை உண்டருள் செய்தவர்
வாதை தீர்த்தவன் வான்மியூர்ப் பால்வணன்
பாதம் ஏத்திடு பத்தருக் கின்பமே.
"மா தயைக்கடலே" என்று வான் தொழ - "பெரும் கருணைக் கடலே" என்று தேவர்கள் வணங்கவும்; (வான் - தேவர்கள்):
ஓத நஞ்சினை உண்டு அருள்செய்து, அவர் வாதை தீர்த்தவன் - கடல்-விடத்தை உண்டு அருள்புரிந்து அவர்களுடைய துன்பத்தைத் தீர்த்தவன்;
வான்மியூர்ப் பால்வணன் பாதம் ஏத்திடு பத்தருக்கு இன்பமே - திருவான்மியூரில் உறையும் பால்வண்ணனின் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்கு இன்பமே;
5)
காமன் தன்னைக் கனலெழப் பார்த்தவன்
மாமன் வேள்வி தகர்த்தவன் மங்கையை
வாமம் ஏற்றவன் வான்மியூர்ப் பால்வணன்
நாமம் ஓதிட நம்வினை நாசமே.
கனல் - தீ;
மாமன் - தக்கன்;
வாமம் - இடப்பக்கம்;
6)
முழவம் ஆர்க்க நடம்புரி முக்கணன்
உழுவைத் தோலை உடுத்தவன் கையினில்
மழுவை ஏந்திய வான்மியூர்ப் பால்வணன்
தொழுத பத்தர் துயரம் துடைப்பனே.
முழவம் - முழவு என்ற வாத்தியம்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
உழுவை - புலி;
துடைப்பன் - துடைப்பான் - போக்குவான்; (துடைத்தல் - நீக்குதல்);
7)
பறையொ லித்திட நட்டம் பயில்பவன்
கறைவி ளங்கிய கண்டன்கல் லாலின்கீழ்
மறைவி ரித்தவன் வான்மியூர்ப் பால்வணன்
நறைம லர்க்கழல் நச்சினார்க் கின்பமே.
பறை ஒலித்திட நட்டம் பயில்பவன் - பறைகள் ஒலிக்க நடம் செய்பவன்;
கறை விளங்கிய கண்டன் - நீலகண்டன்;
கல்லாலின்கீழ் மறை விரித்தவன் - கல்லால மரத்தின்கீழ் வேதப்பொருளை விளக்கியவன்;
வான்மியூர்ப் பால்வணன் நறைமலர்க்கழல் நச்சினார்க்கு இன்பமே - திருவான்மியூர்ப் பால்வண்ணநாதனின் தேன்மலர் போன்ற திருவடியை விரும்பியவர்களுக்கு இன்பமே; (நச்சுதல் - விரும்புதல்);
8)
உர(ம்)நி னைத்துயர் வெற்பை இடந்தவன்
சிர(ம்)நெ ரித்தவர் முப்புரம் தீப்புக
வரைவ ளைத்தவர் வான்மியூர்ப் பால்வணர்
உரைசெய் அன்பர்க் குறுதுணை ஆவரே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
உரம் நினைத்து உயர் வெற்பை இடந்தவன் சிரம் நெரித்தவர் - தன் வலிமையை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத்தலைகளை நசுக்கியவர்; (உரம் - வலிமை); (வெற்பு - மலை);
முப்புரம் தீப் புக வரை வளைத்தவர் - முப்புரங்களும் தீப்பற்றி அழிய மேருமலையை வில்லாக வளைத்தவர்; (வரை - மலை);
வான்மியூர்ப் பால்வணர் உரைசெய் அன்பர்க்கு உறுதுணை ஆவரே - துதித்து வணங்கும் அடியவர்களுக்குத் திருவான்மியூர்ப் பால்வண்ணநாதர் உறுதுணை ஆவார்;
9)
கார்வ ணன்பிர மன்கழல் கைதொழ
ஓர்த ழற்பிழம் பாகி உயர்ந்தவர்
மார்பில் நூலினர் வான்மியூர்ப் பால்வணர்
சீர்பு கன்றவர் தீவினை தீருமே.
கார்வணன் பிரமன் கழல் கைதொழ - கரிய நிறம் உடைய திருமால் பிரமன் என்ற இருவரும் திருவடியை வணங்குமாறு;
ஓர் தழற்பிழம்பு ஆகி உயர்ந்தவர் - ஒப்பற்ற சோதியாகி உயர்ந்தவர்;
மார்பில் நூலினர் - திருமார்பில் பூணூல் அணிந்தவர்;
வான்மியூர்ப் பால்வணர் சீர் புகன்றவர் தீவினை தீருமே - திருவான்மியூர்ப் பால்வண்ணநாதருடைய பெருமைகளைப் பேசும் அடியவர்களுடைய பாவங்கள் திரும்;
10)
நித்தம் வீதியில் நின்றுபொய் விற்றிடும்
எத்தர் புன்னெறி நீங்குமின் எம்பிரான்
மத்தம் சூடிய வான்மியூர்ப் பால்வணன்
பத்தர் தம்வினை தீர்க்கும் பரமனே.
நித்தம் - நாள்தோறும்; தினமும்;
எத்தர் - வஞ்சகர்;
புன்னெறி - சிறுநெறி;
நீங்குமின் - நீங்குங்கள்;
மத்தம் - ஊமத்த மலர்;
11)
பணியும் ஆறு(ம்) மதியும் படர்சடை
அணியும் அண்ணல் அமரர் வணங்கிடு(ம்)
மணிமி டற்றினன் வான்மியூர்ப் பால்வணன்
பணியும் அன்பரைப் பாலிக்கும் பண்பனே.
பணியும் ஆறும் மதியும் படர்சடை அணியும் அண்ணல் - பாம்பையும் கங்கையையும் திங்களையும் படர்ந்த சடையில் அணிகின்ற தலைவன்;
அமரர் வணங்கிடும் மணிமிடற்றினன் - தேவர்கள் வழிபடும் நீலகண்டன்;
வான்மியூர்ப் பால்வணன் - திருவான்மியூரில் உறையும் பால்வண்ணநாதன்;
பணியும் அன்பரைப் பாலிக்கும் பண்பனே - அப்பெருமான் தன்னைத் தொழும் பக்தர்களைக் காக்கும் பண்பு உடையவன்;
வி. சுப்பிரமணியன்
-------------------
No comments:
Post a Comment