Monday, May 20, 2024

08.02.193 - கழுமலம் (சீகாழி) - வந்தென் பழவினை - (வண்ணம்)

08.02.193 - கழுமலம் (சீகாழி) - வந்தென் பழவினை - (வண்ணம்)

2016-06-05

08.02.193 - வந்தென் பழவினை - கழுமலம் (சீகாழி)

------------------

(வண்ணவிருத்தம்;

தந்தந் தனதன தந்தந் தனதன

தந்தந் தனதன .. தனதான)

(வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை - திருப்புகழ் - திருத்தணிகை)


வந்தென் பழவினை என்றுந் துயர்மிக

.. .. வஞ்சம் புரிதர .. அதனாலே

.. மங்குந் தமியனும் உன்றன் புகழ்சொலி

.. .. மண்டுங் களிபெற .. அருளாயே

கந்தங் கமழடி அன்பன் றனதிடர்

.. .. கண்டந் தகனுயிர் .. செகுகாலா

.. கஞ்சன் கரியவன் அஞ்சும் படியெரி

.. .. கம்பந் திருவுரு .. எனவானாய்

சந்தந் திகழ்தமிழ் கொண்டுன் கழல்தொழு

.. .. சம்பந் தரின்மொழி .. மகிழ்வோனே

.. சங்கந் தனில்முன(ம்) நின்றுந் தடைவிடை

.. .. தந்துந் தமர்மிடி .. களைவோனே

சந்தந் திகழ்மலர் சிந்துங் கடியது

.. .. தங்குங் கழுமலம் .. உறைவோனே

.. தண்சந் திரனர வொன்றுஞ் சடையின

.. .. சங்கங் கரமணி .. பெருமானே.


பதம் பிரித்து:

வந்து என் பழவினை என்றும் துயர் மிக

.. .. வஞ்சம் புரிதர அதனாலே

.. மங்கும் தமியனும், உன்றன் புகழ் சொலி,

.. .. மண்டும் களி பெற அருளாயே;

கந்தம் கமழ்-அடி அன்பன் தனது இடர்

.. .. கண்டு, அந்தகன் உயிர் செகு காலா;

.. கஞ்சன் கரியவன் அஞ்சும்படி எரி-

.. .. கம்பம் திருவுரு என ஆனாய்;

சந்தம் திகழ்-தமிழ் கொண்டு உன் கழல் தொழு

.. .. சம்பந்தரின் மொழி மகிழ்வோனே;

.. சங்கம்-தனில் முன(ம்) நின்றும், தடைவிடை

.. .. தந்தும், தமர் மிடி களைவோனே;

சந்தம் திகழ்-மலர் சிந்தும் கடியது

.. .. தங்கும் கழுமலம் உறைவோனே;

.. தண்-சந்திரன் அரவு ஒன்றும் சடையின;

.. .. சங்கம் கரம் அணி பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

வந்து என் பழவினை என்றும் துயர் மிக வஞ்சம் புரிதர, அதனாலே மங்கும் தமியனும், - என் பழவினைகள் வந்து எந்நாளும் துயரமே மிகும்படி வஞ்சம் புரிய, அதனால் வாட்டமுறுகின்ற தமியேனும்; (வந்து என் பழவினை - என் பழவினை வந்து); (புரிதர - புரிய; தருதல் - துணைவினை); (மங்குதல் - வாடுதல்; வாட்டமுறுதல்);

உன்ன் புகழ் சொலி, மண்டும் களி பெற அருளாயே - உன்னுடைய புகழைப் பாடி, மிகுந்த இன்பம் பெற அருள்வாயாக; (மண்டுதல் - அதிகமாதல்; நெருங்குதல்); (சொலி - சொல்லி; இடைக்குறை விகாரம்); (களி - மகிழ்ச்சி);

கந்தம் கமழ்-அடி அன்பன் தனது இடர் கண்டு, ந்தகன் உயிர் செகு காலா - வாசம் கமழும் மலரடியைப் பணிந்த பக்தனான மார்க்கண்டேயனுடைய துன்பத்தைக் கண்டு, எமனே மாளுமாறு உதைத்தவனே, காலகாலனே; (அந்தகன் - எமன்); (செகுத்தல் - கொல்லுதல்);

கஞ்சன் கரியவன் அஞ்சும்படிரி-கம்பம் திருவுரு எனனாய் - பிரமனும் திருமாலும் அஞ்சுமாறு அவர்களிடையே பிரகாசிக்கும் ஒளித்தூண் உருவத்தில் நின்றவனே; (கஞ்சன் - பிரமன்; (கஞ்சம் - தாமரை); (கரியவன் - திருமால்); (எரி கம்பம் - எரிகின்ற கம்பம்; எரிதல் - பிரகாசித்தல்; கம்பம் - தூண்);

சந்தம் திகழ் தமிழ் கொண்டுன் கழல் தொழு சம்பந்தரின் மொழி மகிழ்வோனே - சந்தம் மலிந்த தமிழ்ப்பாமாலைகளால் உன் திருவடியைத் தொழுத திருஞான சம்பந்தரின் வாக்கான தேவாரத்தை விரும்பிக் கேட்பவனே; (சந்தம் - செய்யுளின் ஓசைநயம்);

சங்கம்-தனில் முனம் நின்றும், தடைவிடை தந்தும், தமர் மிடி களைவோனே - முன்பு மதுரையில் புலவர் சங்கத்தில் (சபையில்) சென்று நின்றும், புலவர் எழுப்பிய ஆட்சேபணைகளுக்குச் சமாதானம் தந்தும் (விடை கொடுத்தும்), உன் அடியவரான தருமியின் வறுமையை நீக்கியவனே; (உம் - இதனை அசைச்சொல்லாகவும் கொள்ளலாம்); (தருமிக்குப் பொற்கிழி அருளிய படலத்தைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க); (சங்கம் - கூட்டம்; சபை; தமிழ்ச்சங்கம்; புலவர்கள் சங்கம்); (தடைவிடை - தடைக்கு விடை - ஆக்ஷேபத்திற்குச் சமாதானம்); (தமர் - அடியவர்); (மிடி - வறுமை);

சந்தம் திகழ் மலர் சிந்தும் கடி-து தங்கும் கழுமலம் உறைவோனே - அழகிய பூக்கள் பரப்புகின்ற வாசனை நிலைத்துத் தங்கிய திருக்கழுமலத்தில் (சீகாழியில்) உறைகின்றவனே; (சந்தம் - அழகு); (சிந்துதல் - பரப்புதல்); (கடி - வாசனை); (கழுமலம் - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);

தண்-சந்திரன் அவு ஒன்றும் சடையின - குளிர்ந்த சந்திரனும் பாம்பும் ஒன்றுகின்ற சடையினனே; (ஒன்றுதல் - ஒன்றுசேர்ந்து இருத்தல்);

சங்கம் கரம் அணி பெருமானே - கையில் வளையல் அணிந்த (அர்த்தநாரீஸ்வரனான) பெருமானே; (சங்கம் - வளையல்; கைவளை);


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------


No comments:

Post a Comment