Thursday, May 9, 2024

07.42 - அகத்தியான்பள்ளி - தலைவநின் மென்மலர்த்

07.42 - அகத்தியான்பள்ளி - தலைவநின் மென்மலர்த்


2016-05-09

07.42 - அகத்தியான்பள்ளி

------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்")

(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்")


1)

தலைவநின் மென்மலர்த் தாளிணை போற்றினேன்

மலையன வல்வினை மாய்த்தருள் நல்கிடாய்

அலைகடல் அதனயல் அகத்தியான் பள்ளியில்

மலைமகள் தன்னொடும் மகிழ்ந்துறை வரதனே.


தலைவ, நின் மென்மலர்த் தாள் இணை போற்றினேன் - தலைவனே; உன் மென்மையான மலர்ப்பாதங்கள் இரண்டையும் வணங்கினேன்;

மலை அன வல்வினை மாய்த்து அருள் நல்கிடாய் - மலை போன்ற வலிய வினைகளை அழித்து அருள்புரிவாயாக;

அலைகடல் அதன் அயல் அகத்தியான்பள்ளியில் மலைமகள் தன்னொடும் மகிழ்ந்து உறை வரதனே - கடலின் அருகே உள்ள அகத்தியான்பள்ளியில் மலையான் மகளான உமாதேவியோடு மகிழ்ந்து உறைகின்ற வரதனே; (* அகத்தியான்பள்ளி இறைவி திருநாமம் - பாகம்பிரியாள்);


2)

நீர்மலர் புகைகொடு நின்கழல் போற்றினேன்

கார்வணக் கூற்றுயிர் கவருமுன் காத்திடாய்

ஆர்கடல் அதனயல் அகத்தியான் பள்ளியில்

வார்குழ லாளொடும் மகிழ்ந்துறை வரதனே.


நீர் மலர் புகைகொடு நின் கழல் போற்றினேன் - நீராலும் மலராலும் தூபத்தாலும் உன் திருவடியை வழிபட்டேன்; (அப்பர் தேவாரம் - 4.1.6 - "சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்"); (சம்பந்தர் தேவாரம் - 2.121.4 - "போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் போதினாலே வழிபாடு செய்ய");

கார் வணக் கூற்று உயிர் கவருமுன் காத்திடாய் - கரிய நிறம் உடைய காலன் என் உயிரைக் கைப்பற்றுமுன் காத்து அருள்வாயாக;

ஆர் கடல் அதன் அயல் அகத்தியான்பள்ளியில் வார்குழலாளொடும் மகிழ்ந்து உறை வரதனே - ஒலிக்கின்ற கடலின் அருகே உள்ள அகத்தியான்பள்ளியில் நீண்ட கூந்தல் உடைய உமாதேவியோடு மகிழ்ந்து உறைகின்ற வரதனே; (ஆர்த்தல் - ஒலித்தல்);


3)

வாழ்கநின் மலரடி வல்வினைக் கடலிடை

மூழ்குமென் இடரவை முடிவுற அருளிடாய்

ஆழ்கடல் அதனயல் அகத்தியான் பள்ளியில்

தாழ்குழ லாளொடும் தங்கிடும் வரதனே.


வாழ்க நின் மலரடி - ஈசனே, மலர்போன்ற உன் திருவடி வாழ்க!

வல்வினைக் கடலிடை மூழ்கும் என் இடரவை முடிவுற அருளிடாய் - வலிய வினைக்கடலில் மூழ்கித் துன்புறும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (முடிவு - End, finality; இறுதி); (முடிதல் - அழிதல்);

ஆழ்கடல் அதன் அயல் அகத்தியான்பள்ளியில் தாழ்குழலாளொடும் தங்கிடும் வரதனே - ஆழமான கடலின் அருகே உள்ள அகத்தியான்பள்ளியில் தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு உறைகின்ற வரதனே; (சுந்தரர் தேவாரம் - 7.35.8 - "நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்குமூர் ... புறம்பயந் தொழப் போதுமே");


4)

சூலமார் கையினாய் துணையடி போற்றினேன்

காலனார் என்னுயிர் கவருமுன் காத்திடாய்

ஆலமார் கண்டனே அகத்தியான் பள்ளியில்

ஏலவார் குழலியோ டினிதுறை வரதனே.


சூலம் ஆர் கையினாய் துணையடி போற்றினேன் - சூலபாணியே, உன் இரு-திருவடிகளை வணங்கினேன்;

காலனார் என் உயிர் கவருமுன் காத்திடாய் - காலன் என் உயிரைக் கவர்ந்துசெல்வதன் முன்னமே என்னைக் காப்பாயாக;

ஆலம் ஆர் கண்டனே - விடம் பொருந்திய நீலகண்டனே; (ஆலம் - ஆலகால விடம்);

அகத்தியான்பள்ளியில் ஏல வார் குழலியோடு இனிது உறை வரதனே - அகத்தியான்பள்ளியில் மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடைய உமாதேவியோடு இனிது உறைகின்ற வரதனே; (ஏலம் - மயிர்ச்சாந்து);


5)

மருமலர் இட்டடி வாழ்த்தினேன் எமபடர்

வருமுனம் துணையென வந்தெனைக் காத்திடாய்

அருமறை ஓதினாய் அகத்தியான் பள்ளியில்

ஒருமட மாதொடும் உறைதரு வரதனே.


மரு மலர் இட்டு அடி வாழ்த்தினேன் - வாசமலர்களைத் தூவித் திருவடியை வணங்கினேன்; (மரு - வாசனை); (சம்பந்தர் தேவாரம் - 2.86.8 - "மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்");

எமபடர் வருமுனம் துணை என வந்து எனைக் காத்திடாய் - காலதூதுவர் என்னிடம் வருவதன்முன் எனக்குத் துணையாக வந்து என்னைக் காப்பாயாக;

அரு-மறை ஓதினாய் - அரிய வேதத்தை ஓதியவனே;

அகத்தியான்பள்ளியில் ஒரு மட-மாதொடும் உறைதரு வரதனே - அகத்தியான்பள்ளியில் ஒப்பில்லாத அழகுடைய உமாதேவியோடு உறைகின்ற வரதனே; (ஒரு - ஒப்பற்ற); (மடம் - அழகு; மென்மை); (தருதல் - ஒரு துணைவினை); (சம்பந்தர் தேவாரம் - 3.73.9 - "நீறதணிவான் உமைதனோடும் உறை பட்டிசரமே");


6)

ஏறணி கொடியினாய் இணையடி ஏத்தினேன்

சீறுவெங் கூற்றிடர் செய்யுமுன் காத்திடாய்

ஆறணி வேணியாய் அகத்தியான் பள்ளியில்

கூறணி மாதொடும் கோயில்கொள் வரதனே.


ஏறு அணி கொடியினாய் இணையடி ஏத்தினேன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே, உன் இரு-திருவடிகளை வணங்கினேன்;

சீறு வெங்-கூற்று இடர் செய்யு(ம்)முன் காத்திடாய் - கோபிக்கின்ற கொடிய நமன் எனக்குத் துன்பம் விளைப்பதன்முன் காப்பாயாக; (சீறுதல் - கோபித்தல்);

ஆறு அணி வேணியாய் - கங்கையைச் சடையில் அணிந்தவனே; (வேணி - சடை);

அகத்தியான்பள்ளியில் கூறு அணி மாதொடும் கோயில்கொள் வரதனே - அகத்தியான்பள்ளியில் உமாதேவி ஒரு பாகமாக உறைகின்ற வரதனே; (கூறு - பங்கு); (கோயில்கொள்ளுதல் - வாழுமிடமாகக் கொள்ளுதல்);


7)

தினங்களாய் நமனிடர் செய்யுமுன் காத்திடாய்

மனங்கொடு மலரடி வாழ்த்தினேன் காமனை

அனங்கனென் றாக்கினாய் அகத்தியான் பள்ளியில்

வனங்கிளர் மாதொடும் மகிழ்ந்துறை வரதனே.


தினங்கள் ஆய் நமன் இடர் செய்யும் முன் காத்திடாய் - என் வாழ்நாள் முடிந்து, காலன் எனக்குத் துன்பம் செய்வதன் முன்னமே காப்பாயாக; (ஆய் - ஆகி - தீர்ந்து; முடிந்து); ("தினங்கள் ஆய் நமன்" என்பதை வினைத்தொகையாகக் கொண்டும் பொருள்காணல் ஆம்; "நம் வாழ்நாளை ஆராயும் காலன்" - ஆய்தல் - ஆராய்தல்);

மனம் கொடு மலரடி வாழ்த்தினேன் - என் மனத்தால் உன் மலர் போன்ற திருவடியை வாழ்த்தினேன்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு);

காமனை அனங்கன் என்று ஆக்கினாய் - மன்மதனை எரித்து அவனை உடலற்றவன் என்று செய்தவனே;

அகத்தியான்பள்ளியில் வனம் கிளர் மாதொடும் மகிழ்ந்து உறை வரதனே - அகத்தியான்பள்ளியில் அழகு மிகும் உமாதேவியோடு மகிழ்ந்து உறைகின்ற வரதனே; (வனம் - அழகு); (கிளர்தல் - மிகுதல்; சிறத்தல்);


8)

எயிலெரி நகையினாய் ஏத்தினேற் கிரங்கிடாய்

கயிலையை எடுத்தவன் கத்திட ஊன்றினாய்

அயிலுடை வேலினாய் அகத்தியான் பள்ளியில்

மயிலன மாதொடும் மகிழ்ந்துறை வரதனே.


எயில் எரி நகையினாய் ஏத்தினேற்கு இரங்கிடாய் - மூன்று கோட்டைகளைச் சிரித்து எரித்தவனே, உன்னைத் துதிக்கும் எனக்கு இரங்குவாயாக; (எயில் - கோட்டை - முப்புரம்); (நகை - சிரிப்பு);

கயிலையை எடுத்தவன் கத்திட ஊன்றினாய் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறுமாறு ஒரு விரலை ஊன்றியவனே;

அயில்உடை வேலினாய் - கூர்மை மிக்க சூலம் ஏந்தியவனே; (அயில் - கூர்மை);

அகத்தியான்பள்ளியில் மயில் அன மாதொடும் மகிழ்ந்து உறை வரதனே - அகத்தியான்பள்ளியில் மயில் போன்ற சாயல் உடைய உமாதேவியோடு மகிழ்ந்து உறைகின்ற வரதனே; (அன - அன்ன - போன்ற);


9)

பூரணா உன்னடி போற்றினேன் காத்திடாய்

நாரணன் நான்முகன் நண்ணொணாச் சோதியே

ஆரணப் பொருளினாய் அகத்தியான் பள்ளியில்

ஏரணி கண்ணியோ டினிதுறை வரதனே.


பூரணா உன்னடி போற்றினேன் காத்திடாய் - பூரணனே, உன் திருவடியை வணங்கினேன், காப்பாயாக; (பூரணன் - முழுப்பொருள்; முழுமையானவன்);

நாரணன் நான்முகன் நண்ணொணாச் சோதியே - திருமாலும் பிரமனும் அணுக ஒண்ணாத ஜோதியே; (நண்ணொணா - நண்ண ஒண்ணா - தொகுத்தல் விகாரம், இடைக்குறை விகாரம்);

ஆரணப் பொருளினாய் - வேதப்பொருளே; (ஆரணம் - வேதம்);

அகத்தியான்பள்ளியில் ஏர் அணி கண்ணியோடு இனிது உறை வரதனே - அகத்தியான்பள்ளியில் அழகிய கண்களையுடைய உமாதேவியோடு இனிது உறைகின்ற வரதனே; (ஏர் - அழகு); (திருக்கோவையார் - 18 வரைபொருட்பிரிதல் - 31 - "காரணன் ஏரணி கண்ணுதலோன்");


10)

பொய்யணி நாவராய்ப் புன்னெறிக் கழைத்திடும்

கையருக் கருளிலான் காதலர்க் கெளியவன்

ஐயமுண் வாழ்க்கையன் அகத்தியான் பள்ளியில்

தையலாள் தன்னொடும் தங்கிடும் வரதனே.


பொய் அணி நாவராய்ப் புன்னெறிக்கு அழைத்திடும் கையருக்கு அருள் இலான் - நாக்கில் பொய்யை அணிந்து தங்கள் சிறுநெறிகளில் சேருங்கள் என்று அழைக்கும் கீழோருக்கு அருள் இல்லாதவன்; (கையர் - கீழோர்; வஞ்சகர்);

காதலர்க்கு எளியவன் - அன்பர்களால் எளிதில் அடையப்படுபவன்;

ஐயம் உண் வாழ்க்கையன் - பிச்சை ஏற்று உண்ணும் வாழ்க்கையன்; (சம்பந்தர் தேவாரம் - 1.107.7 - "வாடல் உடைதலையில் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்");

அகத்தியான்பள்ளியில் தையலாள்-தன்னொடும் தங்கிடும் வரதனே - அகத்தியான்பள்ளியில் உமாதேவியோடு உறைகின்ற வரதனே;


11)

சலம்படர் சடையடை சங்கரன் தாள்தொழல்

நலம்பெறு வழியது நம்பயம் நீக்குவான்

அலம்புதண் கடலயல் அகத்தியான் பள்ளியில்

சிலம்புமன் மகளொடும் சேர்ந்துறை வரதனே.


சலம் படர்-சடை அடை சங்கரன் தாள் தொழல் நலம் பெறு வழியது - கங்கையைத் தன் படர்ந்த சடையில் அடைத்த சங்கரனுடைய திருவடிகளை வணங்குவது நன்மை அடையும் வழியாகும்; (சலம் - ஜலம் - கங்கை);

நம் பயம் நீக்குவான் - அப்பெருமான் நம் அச்சத்தைத் தீர்ப்பான்;

அலம்பு தண்-கடல் அயல் அகத்தியான்பள்ளியில் - ஒலிக்கின்ற குளிர்ந்த கடலின் அருகே அகத்தியான்பள்ளியில்; (அலம்புதல் - ஒலித்தல்);

சிலம்பு-மன் மகளொடும் சேர்ந்து உறை வரதனே - மலைக்கு மன்னன் மகளான உமாதேவியோடு சேர்ந்து உறைகின்ற வரதனே; (சிலம்பு - மலை); (மன் - மன்னன்; அரசன்);


பிற்குறிப்புகள்:

1. யாப்புக் குறிப்பு: கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "விளம் விளம் விளம் விளம்" என்ற வாய்பாடு; தானனா என்பது தனதனா என்றும் வரலாம்;

2. சம்பந்தர் தேவாரம் - 3.35.1 -

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்

தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்

மன்னுமா காவிரி வந்தடி வருடநல்

செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.


3. அகத்தியான்பள்ளி - இது வேதாரண்யத்திற்குத் தெற்கே உள்ள தலம்; இக்கால வழக்கில் அகஸ்தியான்பள்ளி / அகஸ்தியம்பள்ளி.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment