Saturday, May 4, 2024

07.35 - வைகல் மாடக்கோயில் - வெள்ளை விடையன்

07.35 - வைகல் மாடக்கோயில் - வெள்ளை விடையன்

2016-03-03

07.35 - வைகல் மாடக்கோயில்

---------------------------------

(கலித்துறை - மா மா மா மா மாங்காய் - வாய்பாடு.

மாங்காய்ச்சீர் வரும் இடத்தில் விளச்சீரும் வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 2.64.1 - "தேவா சிறியோம்")

(சம்பந்தர் தேவாரம் - 1.97.3 - "வற்றா நதியும்")


1)

வெள்ளை விடையன் வெள்ளி வெற்பன் ஒருகையில்

துள்ளும் மானை ஏந்து தோன்றல் அமுதீந்த

வள்ளல் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலை

உள்கும் அடியார் வினைகள் ஒல்லை ஒழியும்மே.


வெள்ளை விடையன் - வெண்ணிற இடப வாகனம் உடையவன்;

வெள்ளி வெற்பன் - கயிலைமலையான்; (வெள்ளி வெற்பு - கயிலைமலை);

ஒரு கையில் துள்ளும் மானை ஏந்து தோன்றல் - ஒரு கையில் துள்ளுகின்ற மானை ஏந்திய தலைவன்; (தோன்றல் - தலைவன்);

அமுது ஈந்த வள்ளல் - தான் விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்த வள்ளல்;

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலை உள்கும் அடியார் வினைகள் ஒல்லை ஒழியும்மே - அச்சிவபெருமான் உறைகின்ற, வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலை எண்ணும் அடியவர்களது வினைகள் விரைவில் இல்லாது ஒழியும்; (உள்குதல் - உள்ளுதல் - எண்ணுதல்; இடைவிடாது நினைத்தல்);

இலக்கணக் குறிப்பு: ஒழியும்மே - ஒழியுமே என்பது மகர ஒற்று விரித்தல் விகாரம் பெற்று வந்தது.


2)

சென்னி மீது நாகம் திங்கள் திகழ்கொன்றை

வன்னி மத்தம் எருக்கு வைத்து மகிழ்கின்ற

மன்னன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலை

உன்னும் அடியார் வினைகள் ஒல்லை ஒழியும்மே.


சென்னி மீது நாகம், திங்கள், திகழ் கொன்றை, வன்னி, மத்தம், எருக்கு வைத்து மகிழ்கின்ற மன்னன் - திருமுடிமேல் பாம்பு, சந்திரன், விளங்குகின்ற கொன்றைமலர், வன்னி இலை, ஊமத்தமலர், எருக்கமலர் இவற்றையெல்லாம் விரும்பி அணிகின்ற அரசன்;

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலை உன்னும் அடியார் வினைகள் ஒல்லை ஒழியும்மே - அச்சிவபெருமான் உறைகின்ற, வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலை எண்ணும் அடியவர்களது வினைகள் விரைவில் இல்லாது ஒழியும்; (உன்னுதல் - நினைத்தல்)


3)

பிணிகள் அற்ற பெருமான் பேதை ஒருபங்கன்

பணியை அரையில் ஆர்த்த பரமன் கண்டத்தில்

மணியன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலைப்

பணியும் பத்தர் செய்த பாவம் பறையும்மே.


பிணிகள் அற்ற பெருமான் - பந்தங்கள் அற்றவன்; மும்மலக் கட்டு அற்றவன்;

பேதை ஒரு பங்கன் - உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;

பணியை அரையில் ஆர்த்த பரமன் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (பணி - நாகப்பாம்பு);

கண்டத்தில் மணியன் - நீலமணி திகழும் கண்டத்தை உடையவன்;

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலைப் பணியும் பத்தர் செய்த பாவம் பறையும்மே - அச்சிவபெருமான் உறைகின்ற, வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலை வணங்கும் பக்தர்களது பாவங்கள் எல்லாம் அழியும்; (பறைதல் - அழிதல்);


4)

மெய்யன் மேரு வில்லால் மேவார் புரமெய்த

செய்யன் செய்ய சடையில் திரையன் கண்டத்தில்

மையன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலில்

ஐயன் அடியை ஏத்தும் அன்பர் கவலாரே.


மெய்யன் - மெய்ப்பொருளாக உள்ளவன்;

மேரு வில்லால் மேவார் புரம் எய்த செய்யன் - மேருமலையை வில்லாக ஏந்திப் பகைவர்களது முப்புரங்களையும் எய்தவன், செம்மேனியன்; (மேவார் - பகைவர்); (செய்யன் - சிவந்தவன்);

செய்ய சடையில் திரையன் - செஞ்சடையில் கங்கையை உடையவன்; (செய்ய - சிவந்த); (திரை - நதி; அலை);

கண்டத்தில் மையன் - நீலகண்டன்; (மை - கருமை);

வயல்சூழ் வைகல் மாடக் கோயிலில் ஐயன் அடியை ஏத்தும் அன்பர் கவலாரே - வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான் திருவடியைப் போற்றும் அடியவர்கள் மனம் வருந்தமாட்டார்கள்; (கவல்தல் - மனம் வருந்துதல்);


5)

திரையில் எழுந்த நஞ்சு திகழும் கண்டத்தன்

நரைவெள் ளேறு விரும்பும் நம்பன் கயிலாய

வரையன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலில்

அரையன் அடியை ஏத்தும் அன்பர் கவலாரே.


திரையில் எழுந்த நஞ்சு திகழும் கண்டத்தன் - கடலில் தோன்றிய விடம் விளங்குகின்ற கண்டம் உடையவன்; (திரை - கடல்);

நரை வெள் ஏறு விரும்பும் நம்பன் - ஊர்தியாக வெண்ணிற இடபத்தை விரும்புபவன், நம்பன் என்ற திருநாமம் உடையவன்; (நம்பன் - விரும்பத்தக்கவன்);

கயிலாய வரையன் - கயிலைமலையான்; (வரை - மலை);

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலில் அரையன் அடியை ஏத்தும் அன்பர் கவலாரே - வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அரசனான சிவபெருமான் திருவடியைப் போற்றும் அடியவர்கள் மனம் வருந்தமாட்டார்கள்; (அரையன் - அரசன்);


6)

வந்தித் திருந்த மாணி மடியா துயிர்வாழக்

கந்த மலர்த்தாள் கொண்டு காலன் தனைச்செற்ற

மைந்தன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலைச்

சிந்தை செய்யத் தீரும் தீரா வினைதானே.


வந்தித்திருந்த மாணி மடியாது உயிர் வாழக் - தன்னை வழிபட்டிருந்த மார்க்கண்டேயர் இறவாது என்றும் உயிர்வாழும்படி;

கந்த மலர்த்தாள் கொண்டு காலன்தனைச் செற்ற மைந்தன் - வாசமலர் போன்ற பாதத்தால் எமனை உதைத்த வீரன்; (கந்தமலர் - வாசமலர்); (மைந்தன் - வீரன்);

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலைச் சிந்தை செய்யத் தீரும் தீரா வினைதானே - அப்பெருமான் உறைகின்ற, வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலை எண்ணும் அடியவர்களது தீராத வினைகள் எல்லாம் தீரும்; (சிந்தைசெய்தல் - நினைத்தல்);


7)

அலைமும் மதில்கள் அவிய அம்பெய் ஒருவெற்புச்

சிலையன் சேவார் கொடியன் திருவார் கயிலாய

மலையன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலில்

நிலையன் அடியை நினைய நில்லா வினைதானே.


அலை மும் மதில்கள் அவிய அம்பு எய் ஒரு வெற்புச் சிலையன் - தேவர்களை வருத்தி அலைந்த முப்புரங்களும் வெந்து அவியும்படி அம்பை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்தியவன்; (அலைத்தல் - வருத்துதல்); (அலைதல் - திரிதல்); (வெற்பு - மலை); (சிலை - வில்);

சே ஆர் கொடியன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்; (சே - இடபம்); (ஆர்தல் - பொருந்துதல்);

திரு ஆர் கயிலாய மலையன் - திருவுடைய கயிலைமலையில் உறைபவன்;

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலில் நிலையன் அடியை நினைய நில்லா வினைதானே - வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலில் நீங்காது உறைகின்ற அப்பெருமான் திருவடியை எண்ணும் அடியவர்களது வினைகள் எல்லாம் தீரும்; (நிலையன் - நிலைத்து இருப்பவன்);


8)

ஏசி வந்து மலையை இடந்தான் முடிபத்தும்

நாசம் ஆக ஊன்று நாதன் கயிலாய

வாசன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலை

நேச மாகி நினைய நில்லா வினைதானே.


ஏசி வந்து மலையை இடந்தான் முடி பத்தும் நாசம் ஆக ஊன்று நாதன் - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனுடைய பத்துத்தலைகளும் அழியும்படி ஒரு விரலை ஊன்றிய தலைவன்; (இடத்தல் - பெயர்த்தல்);

கயிலாய வாசன் - கயிலையில் உறைபவன்;

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலை நேசமாகி நினைய நில்லா வினைதானே - அப்பெருமான் உறைகின்ற, வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலை அன்போடு எண்ணினால், வினைகள் எல்லாம் தீரும்;


9)

இருவர் அறியா வண்ணம் எரியாய் உயரண்ணல்

முருகன் தன்னைப் பயந்த முதல்வன் இமவாற்கு

மருகன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலை

உருகி நினைய நில்லா தொழியும் வினைதானே


இருவர் அறியா வண்ணம் எரி ஆய் உயர் அண்ணல் - திருமால் பிரமன் என்ற இருவரால் அறிய முடியாதபடி சோதி ஆகி உயர்ந்த தலைவன்;

முருகன் தன்னைப் பயந்த முதல்வன் - முருகனைப் பெற்ற முதல்வன்;

இமவாற்கு மருகன் - இமவானுக்கு மருமகன்;

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலை உருகி நினைய நில்லாது ஒழியும் வினைதானே - அப்பெருமான் உறைகின்ற, வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலை மனம் உருகி எண்ணினால், வினைகள் எல்லாம் அடியோடு தீரும்;


10)

நித்தல் பொய்கள் சொல்லும் நீசர் பொருளற்ற

கத்தல் தன்னைக் கருதேல் கங்கை சடையேற்ற

மத்தன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலில்

அத்தன் அடியை வாழ்த்தும் அன்பர்க் கருள்வானே.


நித்தல் பொய்கள் சொல்லும் நீசர் பொருளற்ற கத்தல் தன்னைக் கருதேல் - நாள்தோறும் பொய்களையே சொல்லும் கீழோர்களது அர்த்தம் இல்லாத கத்தல்களை மதிக்கவேண்டா;

கங்கை சடை ஏற்ற மத்தன் - கங்கையைச் சடையில் ஏற்றவன், ஊமத்தமலர் அணிந்தவன்;

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலில் அத்தன் அடியை வாழ்த்தும் அன்பர்க்கு அருள்வானே - வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலில் உறைகின்ற நம் தந்தையாகிய சிவபெருமான் தனது திருவடியை எண்ணும் அடியவர்களுக்கு அருள்புரிவான்; (அத்தன் - தந்தை);


11)

வஞ்சி மருங்குல் மாதை வாமம் மகிழ்பெம்மான்

அஞ்சி வந்த அமரர்க் கருளி விடமுண்ட

மஞ்சன் வயல்சூழ் வைகல் மாடக் கோயிலை

நெஞ்சில் வைத்தார் தம்மை நெருங்கா வினைதானே.


வஞ்சி மருங்குல் மாதை வாமம் மகிழ் பெம்மான் - கொடி போல் இடை உடைய உமையை இடப்பால் விரும்பிய பெருமான்; (வஞ்சி - கொடி); (மருங்குல் - இடை); (வாமம் - இடப்பக்கம்);

அஞ்சி வந்த அமரர்க்கு அருளி விடம் உண்ட மஞ்சன் - அஞ்சி அடைந்த தேவர்களுக்கு அருள்புரிந்து நஞ்சை உண்ட வீரன்; (மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ/போலி);

வயல் சூழ் வைகல் மாடக் கோயிலை நெஞ்சில் வைத்தார்தம்மை நெருங்கா வினைதானே - அப்பெருமான் உறைகின்ற, வயல்களால் சூழப்பட்ட வைகல்மாடக்கோயிலை மனத்தில் வைத்த அடியவர்களை வினைகள் நெருங்கமாட்டா;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment