Monday, May 20, 2024

08.02.191 - சண்பைநகர் (சீகாழி) - வஞ்சமலி ஐம்புலன்கள் - (வண்ணம்)

08.02.191 - சண்பைநகர் (சீகாழி) - வஞ்சமலி ஐம்புலன்கள் - (வண்ணம்)

2016-06-02

08.02.191 - வஞ்சமலி ஐம்புலன்கள் - சண்பைநகர் (சீகாழி)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த

தந்ததன தந்த தந்த ... தனதான)

(கண்டுமொழி கொம்பு கொங்கை - திருப்புகழ் - திருச்செந்தூர் )


வஞ்ச(ம்)மலி ஐம்பு லன்கள் .. மண்டுவினை உந்த என்றும்

.. .. வம்பரைய டைந்தி ழிந்து .. சுழலாமல்

.. வந்தவினை எஞ்ச லின்றி .. மங்கிடநெ கிழ்ந்து நின்றன்

.. .. வண்புகழ்வி ளம்பும் அன்பை .. அருளாயே

கஞ்சனொடு விண்டு பண்டு .. கம்பமுற விண்க டந்த

.. .. கம்பமென அங்கு யர்ந்த .. பெரியோனே

.. கந்த(ம்)மலி கொன்றை தும்பை .. செஞ்சடையி லங்க நின்று

.. .. கங்குலில்ந டம்பு ரிந்த .. கணநாதா

அஞ்சுசுரர் வந்தி றைஞ்ச .. அன்றுவிடம் உண்ட கண்ட

.. .. அஞ்சனம ணிந்த ஒண்கண் .. உமைகூறா

.. அந்தகனு ரங்க டந்த .. அங்கழல முன்பு ரங்கள்

.. .. அங்கியெழ வென்ற கண்ட .. எனவோதித்

தஞ்சமடை தொண்டர் நெஞ்ச .. தண்டலையில் வண்ட லம்பு

.. .. சண்பைநகர் நின்ற இன்ப .. வடிவோனே

.. சந்தமலர் என்றி யம்பு .. தண்டமிழ்ம கிழ்ந்தி ரங்கு

.. .. சங்கரச லம்பு னைந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

வஞ்ச(ம்)மலி ஐம்புலன்கள் .. மண்டு-வினை உந்த என்றும்

.. .. வம்பரை அடைந்து இழிந்து .. சுழலாமல்

.. வந்த வினை எஞ்சல் இன்றி .. மங்கிட நெகிழ்ந்து நின்றன்

.. .. வண்-புகழ் விளம்பும் அன்பை .. அருளாயே;

"கஞ்சனொடு விண்டு பண்டு .. கம்பமுற விண் கடந்த

.. .. கம்பம் என அங்கு உயர்ந்த .. பெரியோனே;

.. கந்த(ம்)மலி கொன்றை தும்பை .. செஞ்சடை இலங்க நின்று

.. .. கங்குலில் நடம்-புரிந்த .. கணநாதா;

அஞ்சு-சுரர் வந்து இறைஞ்ச, .. அன்று விடம் உண்ட கண்ட;

.. .. அஞ்சனம் அணிந்த ஒண்கண் .. உமைகூறா;

.. அந்தகன் உரம் கடந்த .. அங்கழல; முன் புரங்கள்

.. .. அங்கி எழ வென்ற கண்ட;" .. என ஓதித்

தஞ்சம் அடை- தொண்டர் நெஞ்ச; .. தண்டலையில் வண்டு அலம்பு

.. .. சண்பைநகர் நின்ற இன்ப .. வடிவோனே;

.. சந்த-மலர் என்று இயம்பு .. தண்-தமிழ் மகிழ்ந்து இரங்கு

.. .. சங்கர; சலம் புனைந்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

வஞ்சம் மலி ஐம்புலன்கள் மண்டு வினை உந்த என்றும் வம்பரைடைந்து இழிந்து சுழலாமல் - வஞ்சமே செய்யும் ஐந்து புலன்களும், மிகுந்த வினைகளும் என்னைத் தள்ளத், தீயோரை நாடி இழிவடைந்து வருந்தாமல்; (மண்டுதல் - நெருங்குதல்; திரளுதல்; மிகுதல்); (வம்பர் - வீணர்; தீயவர்);

வந்த வினை எஞ்சல் இன்றி மங்கி - என்னை நாடி வந்த வினையெல்லாம் அடியோடு அழிய; (எஞ்சல் - எஞ்சுதல் - மிஞ்சுதல்); (மங்குதல் - சாதல்);

நெகிழ்ந்து நின்றன் வண்-புகழ் விளம்பும் அன்பை அருளாயே - மனம் உருகி உனது வளமை மிகுந்த புகழைச் சொல்லும் அன்பை எனக்கு அருள்வாயாக; (வண்மை - ஈகை; வளப்பம்; அழகு); (விளம்புதல் - சொல்லுதல்);


"கஞ்சனொடு விண்டு பண்டு கம்பம்-விண் கடந்த கம்பம் என அங்கு யர்ந்த பெரியோனே - "பிரமனும் திருமாலும் முன்னொருநாள் அஞ்சி நடுங்க, (மண்ணையும்) விண்ணையும் கடந்த ஒளித்தூணாக அங்கு உயர்ந்த பெரியவனே; (கஞ்சன் - பிரமன்; கஞ்சம் - தாமரை); (விண்டு - திருமால்); (பண்டு - முன்பு); (கம்பம் - 1. அசைவு. 2. நடுக்கம்); (கம்பம் - தூண்);

கந்தம் மலி கொன்றை தும்பை செஞ்சடைலங்க நின்று - வாசனை மிக்க கொன்றை, தும்பை முதலிய மலர்களைச் சிவந்த சடையில் அணிந்து;

கங்குலில் நடம் புரிந்த கணநாதா - இருளில் கூத்தாடும், பூதகணத் தலைவனே; (கங்குல் - இரவு);


அஞ்சு சுரர் வந்து இறைஞ்ச, அன்று விடம் உண்ட கண்ட - அஞ்சிய தேவர்கள் வந்து தொழவும் அவர்களுக்கு இரங்கி அன்று நஞ்சை உண்ட கண்டனே; (சுரர் - தேவர்); (கண்டன் - கண்டத்தை உடையவன்);

அஞ்சனம் அணிந்த ஒண்-கண் உமை கூறா - மை அணிந்த ஒளியுடைய கண்களை உடைய உமை ஒரு கூறு ஆனவனே; (அஞ்சனம் - மை); (ஒண் - ஒளியுடைய);

அந்தகன் உரம் கடந்த ம்-கழல - காலனது மார்பில் உதைத்து அவனை வென்ற அழகிய திருவடியை உடையவனே; (உரம் - மார்பு; வலிமை); (கடத்தல் - வெல்லுதல்; அழித்தல்); (அம் - அழகு); (கழல - கழலனே - கழல் அணிந்த திருவடியினனே); (பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்டர் புராணம் - 12.19.110 - "புரங்கடந்தவர் காஞ்சிபுரம்"); (அப்பர் தேவாரம் - 5.6.10 - "காலனாய அவனைக் கடந்திட்டுச் சூல மான்மழு ஏந்திய கையினார்");

முன் புரங்கள் அங்கிழ வென்ற கண்ட" எனதித் - முன்பு முப்புரங்களிலும் தீ எழும்படி போர்செய்து வென்ற வீரனே" என்று பாடி; (அங்கி - நெருப்பு); (கண்டன் - வீரன்);


தஞ்சம் அடை தொண்டர் நெஞ்ச - உன்னைச் சரண் அடைந்த தொண்டர்கள் நெஞ்சில் இருப்பவனே;

தண்டலையில் வண்டு அலம்பு சண்பைநகர் நின்ற, இன்ப வடிவோனே - சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற, சண்பைநகர் என்ற பெயர் உடைய சீகாழியில் நீங்காது உறையும், இன்பனே; (தண்டலை - சோலை); (அலம்புதல் - ஒலித்தல்); (சண்பநகர் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);

சந்த-மலர் என்று இயம்பு தண்-மிழ் மகிழ்ந்து இரங்கு சங்கர - அழகிய மலர் போல அன்பர்கள் பாடுகின்ற குளிர்ந்த தமிழ்ப்பாமாலைகளை விரும்பிக்கேட்டு இரங்குகின்ற சங்கரனே; (சந்தம் - அழகு; செய்யுளின் ஓசைநயம்); (தண் - குளிர்ந்த);

சலம் புனைந்த பெருமானே - கங்கையை அணிந்த பெருமானே; (சலம் - ஜலம் - கங்கை);


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------


No comments:

Post a Comment