Saturday, May 4, 2024

07.37 - இடைச்சுரம் (திருவடிசூலம்) - கரவினை நீக்கி

07.37 - இடைச்சுரம் (திருவடிசூலம்) - கரவினை நீக்கி

2016-03-07

07.37 - இடைச்சுரம் (இக்காலத்தில் - திருவடிசூலம்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)

-----------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

கரவினை நீக்கிக் கைதொழு வார்க்குக் .. கனிந்தருள் புரிகிற கருத்தன்

குரவினைச் சூடு பொற்சடை தன்னிற் .. குளிர்புனல் கரந்தருள் குழகன்

அரவினை அரையில் ஆர்த்தவன் பறைகள் .. ஆர்த்திடப் பாரிடம் சூழ

இரவினில் ஆடி மடக்கொடி யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


* இமய மடக்கொடியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்;

கரவினை நீக்கிக் கைதொழுவார்க்குக் கனிந்து அருள்புரிகிற கருத்தன் - வஞ்சம் இன்றி வணங்கும் பக்தர்களுக்கு இரங்கி அருளும் தலைவன்; (கரவு - ஒளித்தல்; வஞ்சம்); (கருத்தன் - கர்த்தா - தலைவன்);

குரவினைச் சூடு பொற்சடை தன்னிற் குளிர்புனல் கரந்து அருள் குழகன் - குராமலரைச் சூடிய செஞ்சடையில் கங்கையை ஒளித்த அழகன்; (குரவு - குரா மலர்); (குழகன் - இளையோன்; அழகன்);

அரவினை அரையில் ஆர்த்தவன் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (அரவு - பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்);

பறைகள் ஆர்த்திடப் பாரிடம் சூழ இரவினில் ஆடி - பல பறைவாத்தியங்கள் முழங்கப், பூதங்கள் சூழ, நள்ளிருளில் ஆடுபவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (பாரிடம் - பூதம்); (ஆடி - ஆடுபவன்);

மடக்கொடியுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - இளங்கொடி போன்ற உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்;


2)

தளம்புது மலர்கள் தண்புனல் கொண்டு .. தாளிணை போற்றடி யார்க்கு

வளம்பல நல்கி வானம ளிக்கும் .. மாண்பினன் மாமறை நாலும்

விளம்பிய விமலன் முப்புரம் எரிக்க .. மேருவில் ஏந்திய வீரன்

இளம்பிறை சூடி ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


தளம், புது மலர்கள், தண் புனல் கொண்டு தாளிணை போற்று அடியார்க்கு - வில்வ இலை, நாண்மலர்கள், குளிர்ந்த நீர் இவற்றால் இரு-திருவடிகளை வழிபடும் பக்தர்களுக்கு; (தளம் - இலை - வில்வம், வன்னி);

வளம் பல நல்கி வானம் அளிக்கும் மாண்பினன் - இவ்வுலகில் பல நலங்களையும் அருளி வானுலகும் அளித்தருளும் பெருமை உடையவன்;

மா மறை நாலும் விளம்பிய விமலன் - சிறந்த நால்வேதங்களும் துதிக்கும் தூயவன்; ("நால்வேதங்களைச் சொன்ன தூயவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);

முப்புரம் எரிக்க மேருவில் ஏந்திய வீரன் - திரிந்த முப்புரங்களையும் எரிப்பதற்காக மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்;

இளம்பிறை சூடி - இளம் பிறைச்சந்திரனைச் சூடியவன்;

ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்; (ஏந்திழை - பெண்);


3)

அரும்புகழ் பாடி அடியிணை போற்றும் .. அன்பரைக் காத்தருள் ஐயன்

கரும்பினை ஏந்திக் கடிமலர் எய்த .. காமனைக் காய்ந்தமுக் கண்ணன்

சுரும்பமர் கொன்றை கூவிளம் மத்தம் .. தூமதி யம்திகழ் சடையில்

இரும்புனல் சூடி ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


அரும்-புகழ் பாடி அடி-இணை போற்றும் அன்பரைக் காத்துஅருள் ஐயன் - ஈசனின் அரிய புகழைப் பாடி அவன் இரு திருவடிகளை வழிபடும் பக்தர்களைக் காத்து அருளும் தலைவன்;

கரும்பினை ஏந்திக் கடிமலர் எய்த காமனைக் காய்ந்த முக்கண்ணன் - கரும்பை வில்லாக ஏந்தி வாசமலரை அம்பாக ஏவிய மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்; (கடி - வாசனை);

சுரும்பு அமர் கொன்றை கூவிளம் மத்தம் தூ-மதியம் திகழ் சடையில் இரும்-புனல் சூடி - (வண்டுகள் விரும்பும் கொன்றைமலரும் வில்வமும் தூய திங்களும் விளங்கும் சடையில் பெரிய கங்கைநதியையும் சூடியவன்; (சுரும்பு - வண்டு); (அமர்தல் - விரும்புதல்); (கூவிளம் - வில்வம்); (மதியம் - திங்கள்); (இரும் புனல் - பெரிய நதி);

ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்; (ஏந்திழை - பெண்);


4)

தொண்டுகள் செய்து துதித்திடும் அன்பர் .. தொல்வினை தீர்த்தருள் துணைவன்

வண்டமர் கின்ற மதுமலர்க் கொன்றை .. வளர்மதி திகழ்திரு முடியன்

பண்டரு நஞ்சை உண்டமி டற்றன் .. பாய்புலித் தோலணி அரையன்

எண்டிசை போற்ற ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


தொண்டுகள் செய்து துதித்திடும் அன்பர் தொல்வினை தீர்த்தருள் துணைவன் - இயன்ற வகையில் தொண்டுகள் செய்து போற்றும் பக்தர்களுடைய பழவினைகளைத் தீர்த்து அருள்கின்ற துணைவன்;

வண்டு அமர்கின்ற மது மலர்க் கொன்றை, வளர் மதி திகழ் திரு முடியன் - வண்டு விரும்பும் தேன் மிக்க கொன்றைமலரும் வளர்கின்ற திங்களும் விளங்கும் திருமுடி உடையவன்;

பண்டு அரு நஞ்சை உண்ட மிடற்றன் - முன்னர் அரிய விடத்தை உண்ட கண்டன்; (பண்டு - முற்காலத்தில்); (மிடறு - கண்டம்);

பாய் புலித்தோல் அணி அரையன் - பாய்கின்ற புலியின் தோலை அணிந்த அரசன்; (அரையன் - அரசன்);

எண் திசை போற்ற, ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - எட்டுத் திக்கிலும் உள்ள உலகோர் போற்ற உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்; (ஏந்திழை - பெண்);


5)

உளங்குழைந் தேத்தும் அடியவர்க் கென்றும் .. உறுதுணை ஆகிய ஒருவன்

துளங்கிய பிறையைச் சூடிய சடையில் .. தூநதி யைக்கரந் தருள்செய்

களங்கமில் புகழன் கறைமலி கண்டன் .. கானிடை ஆடிய கழலன்

இளங்கொடி அன்ன ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


உளம் குழைந்து ஏத்தும் அடியவர்க்கு என்றும் உறுதுணை ஆகிய ஒருவன் - மனம் உருகித் துதிக்கும் அடியவர்களுக்குச் சிறந்த துணை ஆகிய ஒப்பற்றவன்; (ஒருவன் - ஒப்பற்றவன்);

துளங்கிய பிறையைச் சூடிய சடையில் தூ-நதியைக் கரந்து அருள்செய் களங்கம் இல் புகழன் - (கலைகள் தேய்ந்து) மனம் கலங்கிய சந்திரனை என்றும் பிரகாசிக்குமாறு அணிந்த சடையில் கங்கையை ஒளித்து அருளிய, குற்றமற்ற புகழ் உடையவன்; (துளங்குதல் - 1. வருந்துதல்; 2. விளங்குதல்; பிரகாசித்தல்);

கறை மலி கண்டன் - நீலகண்டன்;

கானிடை ஆடிய கழலன் - சுடுகாட்டில் ஆடுபவன்; (கான் - காடு - சுடுகாடு); (கழலன் - கழல் அணிந்த திருவடி உடையவன்);

இளம் கொடி அன்ன ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - இளங்கொடி போன்ற உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்;


6)

பொருள்திரு வடியே என்றுணர் அன்பர் .. போற்றிட அவர்க்குயர் வானம்

அருள்தரும் அடிகள் ஆரழல் ஏந்தி .. அல்லினில் ஆடிடும் கூத்தன்

இருடியர் நால்வர்க் கழகிய ஆல்கீழ் .. இருந்தரு மறைவிரி ஈசன்

இருள்திகழ் கண்டன் ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


பொருள் திருவடியே என்று உணர் அன்பர் போற்றிட அவர்க்கு உயர் வானம் அருள்தரும் அடிகள் - மெய்ப்பொருள் ஆவது இறைவன் திருவடியே என்று உணர்ந்த அன்பர்கள் போற்றி வணங்க, அவர்களுக்குச் சிவலோகம் அருள்புரியும் கடவுள்; (உயர் வானம் - சிவலோகம்); (தருதல் - ஒரு துணைவினை); (அடிகள் - கடவுள்);

ஆர் அழல் ஏந்தி அல்லினில் ஆடிடும் கூத்தன் - அரிய நெருப்பைக் கையில் ஏந்தி இரவில் ஆடும் கூத்தன்; (அழல் - நெருப்பு); (அல் - இரவு; இருள்);

இருடியர் நால்வர்க்கு அழகிய ஆல்கீழ் இருந்து அரு மறை விரி ஈசன் - சனகாதி முனிவர்கள் நால்வர்க்குக் கல்லால மரத்தின் கீழ் இருந்து அரிய மறைப்பொருளை விளக்கிய குருவான தட்சிணாமூர்த்தி (இருடி - முனிவன்);;

இருள் திகழ் கண்டன் - நீலகண்டன்;

ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்;

(இலக்கணக் குறிப்பு : ள்+- புணர்ச்சியில் ட என்று திரியும். பொருடிரு (பொருள் திரு), அருடரும் (அருள் தரும்), இருடிகழ் (இருள் திகழ்) )


7)

அலைகடல் உமிழ்ந்த அருவிடம் உண்ட .. அடிகளே அடிபணி மதியைத்

தலைமிசை வைத்த சங்கர என்று .. சந்ததம் போற்றிடும் அன்பர்

நிலைபெற அருளும் நின்மல மூர்த்தி .. நெற்றியில் நேத்திரம் உடையான்

இலைநுனை வேலன் ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


"அலைகடல் உமிழ்ந்த அருவிடம் உண்ட அடிகளே - "அலைகின்ற கடலில் எழுந்த கொடிய நஞ்சை உண்ட இறைவனே;

அடி பணி மதியைத் தலைமிசை வைத்த சங்கர" என்று - திருவடியைப் பணிந்த சந்திரனைத் தலைமேல் ஏற்றி வைத்த சங்கரனே" என்று பலவாறு;

சந்ததம் போற்றிடும் அன்பர் நிலைபெற அருளும் நின்மல மூர்த்தி - எப்போதும் தொழும் பக்தர்கள் நன்னிலை அடைய அருளும் தூயவன்; (சந்ததம் - எப்பொழுதும்);

நெற்றியில் நேத்திரம் உடையான் - நெற்றிக்கண்ணன்;

இலை நுனை வேலன் - இலை போன்ற முனைகளையுடைய சூலத்தை ஏந்தியவன்; (நுனை - முனை);

ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்;


8)

கமழலர் தூவிக் கழல்தொழு தேத்திக் .. காதலிப் பார்க்கொரு துணைவன்

சமரிலன் ஆகித் தருக்கிய அரக்கன் .. தன்முடி பத்தைய டர்த்தான்

தமருகத் தோடு தழலையும் தாங்கித் .. தனிநடம் புரிபெருங் கூத்தன்

இமையவர் போற்ற ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


கமழ் அலர் தூவிக் கழல் தொழுது ஏத்திக் காதலிப்பார்க்கு ஒரு துணைவன் - மணம் கமழும் பூக்களத் தூவித் திருவடியை வணங்கும் அன்பர்களுக்கு ஒப்பற்ற துணைவன்; (அலர் - பூ); (காதலித்தல் - அன்புசெய்தல்); (ஒரு - ஒப்பற்ற); (அப்பர் தேவாரம் - 6.32.10 - "காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி");

சமர் இலன் ஆகித் தருக்கிய அரக்கன்தன் முடி பத்தை அடர்த்தான் - போர் இன்மையால் மிகவும் ஆணவத்தோடு இருந்த இராவணனுடைய பத்துத்தலைகளையும் நசுக்கியவன்; (சமர் - போர்); (தருக்குதல் - செருக்குக் கொள்ளுதல்); (அடர்த்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே" - செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன்);

தமருகத்தோடு தழலையும் தாங்கித் தனி நடம் புரி பெருங் கூத்தன் - உடுக்கையும் தீயும் ஏந்தி ஒப்பற்ற திருநடம் செய்யும் பெரிய கூத்தன்; (தமருகம் - உடுக்கை; துடி); (தனி - ஒப்பற்ற);

இமையவர் போற்ற ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - தேவர்கள் வணங்க, உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்; (இமையவர் - தேவர்கள்)


9)

கண்ணிணை கசியக் கைதொழு வார்க்குக் .. கருதிய வரமருள் வள்ளல்

மண்ணினை அளந்த மாலொடு பிரமன் .. வணங்கிட வளர்எரி ஆனான்

தண்ணதி தன்னைத் தாங்கிய சடையன் .. சாம்பலைப் பூசிய தலைவன்

எண்ணுரு உடையான் ஏந்திழை யுடனே .. இடைச்சுரம் மேவிய சிவனே.


கண் இணை கசியக் கைதொழுவார்க்குக் கருதிய வரம் அருள் வள்ளல் - இருகண்களிலும் கண்ணீர் கசிய மனம் உருகிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரத்தை அருளும் வள்ளல்;

மண்ணினை அளந்த மாலொடு பிரமன் வணங்கிட வளர் எரி ஆனான் - வாமனன் ஆகி மூவடி மண் அளந்த திருமாலும் பிரமனும் வணங்கும்படி சோதியாகி ஓங்கியவன்;

தண் நதி தன்னைத் தாங்கிய சடையன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவன்;

சாம்பலைப் பூசிய தலைவன் - திருநீற்றைப் பூசிய தலைவன்;

எண் உரு உடையான் - அட்டமூர்த்தி; எண்ணிய வடிவம் உடையவன்; (அஷ்டமூர்த்தம் - பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் என்ற எட்டு வடிவங்கள்); (எண் - எட்டு; எண்ணுதல்);

ஏந்திழையுடனே இடைச்சுரம் மேவிய சிவனே - உமையம்மை உடனாகத் திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்;


10)

கார்மலி நெஞ்சர் கழறுபுன் னெறிகள் .. காண்பதற் கரியவன் எந்தை

பேர்பல உடைய பெற்றியன் அன்பால் .. பேசிடும் பத்தருக் கெளியன்

நீர்மலி சடையன் ஒண்மழுப் படையன் .. நேரிழை யாளொரு புடையன்

ஏர்மலி கழனி பொழிலணிந் திலங்கும் .. இடைச்சுரம் மேவிய சிவனே.


கார் மலி நெஞ்சர் கழறு புன்னெறிகள் காண்பதற்கு அரியவன் எந்தை - நெஞ்சத்தில் கறுப்பே (வஞ்சமே) மிக்கவர் சொல்லும் புன்மை மிக்க மார்க்கங்களால் அறியப்படாதவன் நம் தந்தையாகிய சிவபெருமான்; (கார் - கருமை); (கழறுதல் - சொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்" - சுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன்);

பேர் பல உடைய பெற்றியன் - பல திருப்பெயர்கள் உடைய பெருமை உடையவன்; (பெற்றி - தன்மை; பெருமை);

அன்பால் பேசிடும் பத்தருக்கு எளியன் - அன்போடு போற்றித் துதிக்கும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்;

நீர் மலி சடையன் - கங்கையைச் சடையில் உடையவன்;

ஒண் மழுப் படையன் - ஒளி வீசும் மழுவாயுதத்தை ஏந்தியவன்;

நேரிழையாள் ஒரு புடையன் - உமையமையை ஒரு பக்கத்தில் உடையவன்;

ஏர் மலி கழனி, பொழில் அணிந்து இலங்கும் இடைச்சுரம் மேவிய சிவனே - அழகிய வயலும் சோலையும் சூழ்ந்து விளங்குகின்ற திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்; (ஏர் - அழகு; கலப்பை); (கழனி - வயல்);


11)

வழிபடும் அன்பர் வல்வினை யாவும் .. மாய்ந்திட இன்னருள் செய்வான்

மழிதலை ஏந்தி இடுபலி நாடி .. வரும்திரு உடையவன் என்றும்

அழிவிலன் வஞ்சி அன்னவள் ஓர்பால் .. அமர்ந்தவன் ஆறும ணிந்தான்

எழில்மதில் ஏறிக் குரங்குகள் ஓடும் .. இடைச்சுரம் மேவிய சிவனே.


வழிபடும் அன்பர் வல்வினை யாவும் மாய்ந்திட இன்னருள் செய்வான் - வணங்கும் பக்தர்களுடைய வலிய வினைகள் எல்லாம் அழிய இனிது அருள்புரிபவன்; (மாய்தல் - அழிதல்);

மழி-தலை ஏந்தி, இடு பலி நாடி வரும் திரு உடையவன் - மயிரற்ற மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்காக வருகின்றவன், எல்லாத் திருவும் உடையவன்; (மழித்தல் - சிரைத்தல்); (தலை - மண்டையோடு); (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி" - சிரை - மழிப்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "சென்றடையாத திருவுடையானை" - சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து அடையாத இயற்கையேயான திரு);

என்றும் அழிவு இலன் - அழிவற்றவன்;

வஞ்சி அன்னவள் ஓர் பால் அமர்ந்தவன் - கொடி போன்ற உமையை ஒரு பக்கம் விரும்பியவன்; (வஞ்சி - கொடி); (பால் - பக்கம்); (அமர்தல் - விரும்புதல்);

ஆறும் அணிந்தான் - கங்கையையும் அணிந்தவன்;

எழில் மதில் ஏறிக் குரங்குகள் ஓடும் இடைச்சுரம் மேவிய சிவனே - அழகிய மதில்மேல் எறிக் குரங்குகள் ஓடுகின்ற திருவிடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment