08.04.037 - திருநாவுக்கரசர் துதி - மூர்க்க அமணர்கள்
2016-04-29
8.4.37 - திருநாவுக்கரசர் துதி
----------------------------------
(வண்ணவிருத்தம்;
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன .. தனதான)
(பெரும்பாலும் இவ்வமைப்பை ஒத்த திருப்புகழ் -
பாட்டில் உருகிலை - திருப்புகழ் - தீர்த்தமலை)
மூர்க்க அமணர்கள் ஆட்ட(ம்) முடிவுற
.. மூழ்த்த வரிகலை .. ஒருநாவாய்
ஆக்க வலவனை வாழ்த்தி உயவல
.. ஆத்தர் பணிவதன் .. உருவான
வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை
.. மாற்று வழியென .. அறிவோமே
காக்கும் அரனெரி நாட்ட நுதலிறை
.. காட்டும் அவர்மொழி .. உரைநாவே.
பதம் பிரித்து:
மூர்க்க அமணர்கள் ஆட்ட(ம்) முடிவுற
.. மூழ்த்த வரி-கலை .. ஒரு நாவாய்
ஆக்க வலவனை வாழ்த்தி உய-வல
.. ஆத்தர், பணிவு-அதன் .. உரு ஆன
வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை
.. மாற்று- வழி என .. அறிவோமே;
காக்கும் அரன், எரி நாட்ட நுதல்-இறை
.. காட்டும் அவர் மொழி .. உரை நாவே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
மூர்க்க அமணர்கள் ஆட்டம் முடிவுற மூழ்த்த வரி-கலை - மூர்க்கர்களான சமணர்களுடைய அதிகாரம் முடிவடையும்படி, அவர்கள் திருநாவுக்கரசரைக் கொல்லவேண்டிக் கடலில் ஆழ்த்துவதற்காகக் கட்டிய கல்லையே; (மூர்க்கம் - கடுஞ்சினம்; மூடத்தனம்; பகை); (மூழ்த்துதல் - ஆழ்த்துதல்); (வரித்தல் - கட்டுதல்); (கலை - கல்லை - இடைக்குறை விகாரம்);
ஒரு நாவாய் ஆக்க வலவனை வாழ்த்தி உய வல ஆத்தர் - ஒரு தெப்பம் ஆக்க வல்லவனை வாழ்த்தி உய்யவல்ல அன்பர்; (நாவாய் - தெப்பம்; படகு); (வலவனை - வல்லவனை); (வல - வல்ல); (ஆத்தர் - ஆப்தர் - இஷ்டமானவர்கள்; आप्तः - A relative, friend);
பணிவு அதன் உரு ஆன வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை மாற்று வழி என அறிவோமே - பணிவின் உருவமான திருநாவுக்கரசரின் தேவாரம் நம் வினைகளைத் தீர்க்கும் உபாயம் என்று நாம் அறிவோம்; (வாக்கின் அரையர் - வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்); (மாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);
காக்கும் அரன், எரி நாட்ட நுதல் இறை காட்டும் அவர் மொழி உரை நாவே - காக்கின்ற ஹரனும், எரிக்கின்ற நெற்றிக்கண் உடைய கடவுளும் ஆன சிவபெருமானைக் காட்டுகின்ற அவர் தேவாரத்தை, நாக்கே, நீ உரைப்பாயாக; (எரி - நெருப்பு); (நாட்டம் - கண்); (நுதல் - நெற்றி);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment