07.43 - உறையூர் மூக்கீச்சரம் - தினந்தினம் சிவன்
2016-05-09
07.43 - உறையூர் மூக்கீச்சரம் (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்)
---------------------------------
(கட்டளைக் கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.82.9 - "ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்")
1)
தினந்தி னம்சிவன் சேவடி யேநினை
கனிந்த நெஞ்சொடு கைதொழு மாணிமேல்
சினந்து பாய்ந்த நமனுயிர் சிந்திட
முனிந்த முக்கணன் மூக்கீச் சரவனே.
தினந்தினம் சிவன் சேவடியே நினை - நாள்தோறும் சிவன் சேவடியையே நினைக்கின்ற;
கனிந்த நெஞ்சொடு கைதொழு மாணிமேல் - இளகிய மனத்தால் வணங்கிய மார்க்கண்டேயர்மேல்;
சினந்து பாய்ந்த நமன் உயிர் சிந்திட முனிந்த முக்கணன் - கோபித்துப் பாய்ந்த காலனது உயிர் அழியுமாறு கூற்றுவனைக் கோபித்த முக்கட்பெருமான்; (சிந்துதல் - அழிதல்);
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்); (மூக்கீச்சரவன் - மூக்கீச்சரத்தில் உறைபவன்); (அப்பர் தேவாரம் - 5.52.1 - "செல்வர் போல் திரு நாகேச்சரவரே");
2)
அக்கின் ஆரம் அணிந்தவன் தேவர்கள்
துக்கம் தீரச் சுடுகணை ஒன்றினால்
ஒக்க முப்புரம் ஒள்ளழல் சேர்த்திய
முக்கண் மூர்த்திநம் மூக்கீச் சரவனே.
அக்கின் ஆரம் அணிந்தவன் - எலும்பு மாலை அணிந்தவன்; (அக்கு - எலும்பு; உருத்திராக்ஷம்);
தேவர்கள் துக்கம் தீரச் சுடுகணை ஒன்றினால் - தேவர்களது துன்பம் தீரும்படி, தீக்கணை ஒன்றை எய்து; (சுடுதல் - எரித்தல்);
ஒக்க முப்புரம் ஒள்ளழல் சேர்த்திய முக்கண் மூர்த்தி - முப்புரங்களையும் ஒருசேரத் தீப்பற்றி அழியச்செய்த முக்கட்கடவுள்; (ஒக்க - ஒருசேர; ஒருங்கே); (ஒள் அழல் - ஒளியுடைய தீ); (சேர்த்துதல் - சேர்த்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.66.5 - "ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ"); (சம்பந்தர் தேவாரம் - 2.19.7 - "பிறைதான் சடைச் சேர்த்திய எந்தை");
நம் மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் நம் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
3)
பண்டு தேவர்க் கிரங்கிப் படுவிடம்
உண்ட கண்டன் ஒருவிடை ஊர்தியன்
வண்டு சேர்குழல் மாதொரு பங்கினன்
முண்ட நீற்றினன் மூக்கீச் சரவனே.
பண்டு தேவர்க்கு இரங்கிப் படுவிடம் உண்ட கண்டன் - முற்காலத்தில் தேவர்களுக்கு இரங்கிக் கொடிய விடத்தை உண்ட நீலகண்டன்;
ஒரு விடை ஊர்தியன் - ஒப்பற்ற இடப வாகனன்;
வண்டு சேர் குழல் மாது ஒரு பங்கினன் - வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
முண்ட நீற்றினன் - நெற்றியில் நீறு பூசியவன்; (முண்டம் - நெற்றி);
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
4)
அதளின் ஆடையன் அன்புடை யார்கட்குக்
கதலி இன்கனி கன்னல் நிகர்த்தவன்
நுதலிற் கண்ணினன் நோய்மூப் பிறப்பொடு
முதலி லாதவன் மூக்கீச் சரவனே.
அதளின் ஆடையன் - தோலை ஆடையாக அணிந்தவன்; (அதளாடை - தோலாடை - தோலினால் ஆன ஆடை); (அதள் - தோல்); (இன் - சாரியை); (அப்பர் தேவாரம் - 6.63.4 - "கொன்றைத் தாரானைப் புலியதளின் ஆடையானைத்");
அன்புடையார்கட்குக் கதலி இன்கனி கன்னல் நிகர்த்தவன் - பக்தர்களுக்கு இனிய வாழைக்கனியும் கரும்பும் போன்று இனிமை பயப்பவன்; (கதலி - வாழை); (கன்னல் - கரும்பு); (நிகர்த்தல் - ஒத்தல்);
நுதலிற் கண்ணினன் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);
நோய் மூப்பு இறப்பொடு முதல் இலாதவன் - நோய், முதுமை, சாவு, ஆதி இவையெல்லாம் இல்லாதவன்;
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
5)
ஓட்டில் உண்பலி தேரிறை ஒண்பிறை
காட்டு சென்னியன் காந்தி மதிபங்கன்
காட்டில் ஆடி கடியரண் மூன்றெரி
மூட்டி னான்திரு மூக்கீச் சரவனே.
ஓட்டில் உண்பலி தேர் இறை - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் இறைவன்;
ஒண் பிறை காட்டு சென்னியன் - ஒளிவீசும் பிறைச்சந்திரனைத் தலையில் அணிந்தவன்; (சென்னி - தலை);
காந்திமதி பங்கன் - காந்திமதி என்ற திருநாமம் உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (* காந்திமதி - உறையூர் மூக்கீச்சரத்து இறைவி திருநாமம்);
காட்டில் ஆடி - சுடுகாட்டில் ஆடுபவன்;
கடி அரண் மூன்று எரி மூட்டினான் - காவல் உடைய மூன்று கோட்டைகளையும் எரித்தவன்; (கடி - காவல்); (அரண் - கோட்டை);
திரு மூக்கீச்சரவனே - திருமூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
6)
சேவ தேறிய சேவகன் நான்மறை
நாவன் நாள்தொறும் நம்பித் தொழுதவர்
பாவம் தீர்ப்பவன் ஒன்றும் இரண்டுமாய்
மூவர் ஆனவன் மூக்கீச் சரவனே.
சேஅது ஏறிய சேவகன் - இடபத்தின்மேல் ஏறிய வீரன்; (சே - எருது); (சேவகன் - வீரன்);
நான்மறை நாவன் - நால்வேதங்களைப் பாடி அருளியவன்;
நாள்தொறும் நம்பித் தொழுதவர் பாவம் தீர்ப்பவன் - தினமும் விரும்பி வணங்கும் அடியவர்களது பழவினைகளைத் தீர்ப்பவன்;
ஒன்றும் இரண்டும் ஆய் மூவர் ஆனவன் - ஏகன் (ஒருவன்) ஆகி, (சிவம் சக்தி என) இருவர் ஆகி, (பிரமன், திருமால், உருத்திரன் என) மூவர் ஆனவன்;
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
7)
அடிவ ணங்கிய அன்பருக் கன்பினன்
துடிகள் ஆர்க்கச் சுடலையில் ஆடுவான்
கொடியில் ஏற்றினன் கூவிளம் கொன்றையார்
முடியி னான்திரு மூக்கீச் சரவனே.
அடி வணங்கிய அன்பருக்கு அன்பினன் - திருவடியைத் தொழுத அன்பர்களுக்கு அன்பு உடையவன்;
துடிகள் ஆர்க்கச் சுடலையில் ஆடுவான் - உடுக்குகள் ஒலிக்கச் சுடுகாட்டில் ஆடுபவன்; (துடி - உடுக்கை); (ஆர்த்தல் - ஒலித்தல்);
கொடியில் ஏற்றினன் - இடபக்கொடி உடையவன்;
கூவிளம் கொன்றை ஆர் முடியினான் - வில்வமும் கொன்றையும் முடிமேல் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);
திரு மூக்கீச்சரவனே - திருமூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
8)
கத்தி வெற்பெறி காரரக் கன்முடி
பத்த டர்த்திசை கேட்டுப் பரிந்தவன்
நித்தல் நெக்குரு கித்தொழும் நேயர்க்கு
முத்தி நல்கிடும் மூக்கீச் சரவனே.
கத்தி வெற்பு எறி கார் அரக்கன் முடி பத்து அடர்த்து, இசை கேட்டுப் பரிந்தவன் - கோபத்தோடு இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பேர்த்து எறிய முயன்ற கரிய நிறத்து அரக்கனான இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கிப், பின் அவன் இசை பாடி வணங்க அதனைக் கேட்டு அவனுக்கு இரங்கியவன்;
நித்தல் நெக்குருகித் தொழும் நேயர்க்கு முத்தி நல்கிடும் - நாள்தோறும் மனம் கசிந்து வழிபடும் அன்பர்களுக்கு முக்தி அளித்து அருளும்;
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
9)
கரியன் வேதன் இருவரும் காணொணா
எரிய தாய பெரியன் எதிர்கரி
உரியன் ஒள்ளெரி ஆர்கணை ஒன்றெய்து
முரண ரண்சுடு மூக்கீச் சரவனே.
கரியன் வேதன் இருவரும் காணொணா எரிஅது ஆய பெரியன் - திருமால் பிரமன் இருவராலும் காணற்கு அரிய ஜோதி ஆகிய பெரியவன்; (கரியன் - திருமால்); (பெரியன் - பெரியவன்);
எதிர் கரி உரியன் - எதிர்த்துப் போர்செய்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்; (எதிர்தல் / எதிர்த்தல் - இகலித் தாக்குதல்);
ஒள் எரி ஆர் கணை ஒன்று எய்து, முரண் அரண் சுடு - பகைத்த முப்புரங்களை ஒளியுடைய தீப் பொருந்திய அம்பு ஒன்றை எய்து சுட்டவன்; (முரண்தல் - பகைத்தல்); (அரண் - கோட்டை);
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
10)
சிறுமை மிக்கவர் செப்பு நெறிவிடும்
மறுமை இன்பமும் நல்கும் மணிகண்டன்
பொறுமை மிக்கவன் போற்றார் புரஞ்சுட
முறுவல் செய்தவன் மூக்கீச் சரவனே.
சிறுமை மிக்கவர் செப்பு நெறி விடும் - சிறுமைக்குணம் மிக்கவர் சொல்லும் மார்க்கங்களை நீங்குங்கள்; (சிறுமை - குற்றம்; கயமை; அற்பத்தனம்); (செப்புதல் - சொல்லுதல்); (விடுதல் - நீங்குதல்);
மறுமை இன்பமும் நல்கும் மணிகண்டன் - (இம்மை இன்பமும்) மறுமை இன்பமும் அளிக்கும் நீலகண்டன்; (உம் - எச்சவும்மை);
பொறுமை மிக்கவன் - மிகுந்த தயை உடையவன்;
போற்றார் புரம் சுட முறுவல் செய்தவன் - பகைவர்களது முப்புரங்களை எரிக்கச் சிரித்தவன்; (போற்றார் - பகைவர்);
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
11)
பாடு வார்க்கருள் பண்பன் பிணஞ்சுடு
காடு தன்னில் கண(ம்)முழ வார்த்திட
ஆடு முக்கணன் ஆனையின் ஈருரி
மூடு மார்பினன் மூக்கீச் சரவனே.
பாடுவார்க்கு அருள் பண்பன் - (தேவாரம் முதலியன) பாடி வணங்கும் அடியவர்களுக்கு அருளும் குணம் உடையவன்;
பிணம் சுடு காடு தன்னில் கணம் முழவு ஆர்த்திட ஆடு முக்கணன் - பிணங்களை எரிக்கும் சுடுகாட்டில் பூதகணங்கள் முழவுகளை ஒலிக்க ஆடுகின்ற நெற்றிக்கண்ணன்;
ஆனையின் ஈர்-உரி மூடு மார்பினன் - யானையின் உரித்த ஈரத்தோல் மூடுகின்ற மார்பை உடையவன் - யானைத் தோலை மார்பில் போர்த்தியவன்; (ஈர்த்தல் - உரித்தல்); (ஈர் - ஈரம்); (உரி - தோல்);
மூக்கீச்சரவனே - மூக்கீச்சரத்தில் உறையும் ஈசன் - (உறையூர்ப் பஞ்சவர்ணேஸ்வரன்);
வி. சுப்பிரமணியன்
-------------------
No comments:
Post a Comment