Monday, May 20, 2024

07.49 - நாகை (நாகப்பட்டினம்) - ஆரியமும் அடியார்சொல்

07.49 - நாகை (நாகப்பட்டினம்) - ஆரியமும் அடியார்சொல்

2016-06-04

07.49 - நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.40.1 - "எம்பிரான் எனக்கமுதம் ஆவானும்")


1)

ஆரியமும் அடியார்சொல் அருந்தமிழும் மகிழ்ந்தவனே

நீரியலும் செஞ்சடைமேல் நிரைகொன்றை அணிந்தவனே

நாரியொரு பங்குடைய நாகைக்கா ரோணத்தாய்

ஆரிடர்தீர்த் தடியேனை அஞ்சேலென் றருளாயே.


ஆரியமும் அடியார் சொல் அரும்-தமிழும் மகிழ்ந்தவனே - வடமொழித் துதிகளையும் (வேதங்கள் முதலியன), அடியவர்கள் சொல்லும் திருமுறைப் பாட்டுகளையும் விரும்பியவனே;

நீர் இயலும் செஞ்சடைமேல் நிரைகொன்றை அணிந்தவனே - கங்கை தங்கிய செஞ்சடைமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடியவனே; (இயல்தல் - பொருந்துதல்; தங்குதல்; உலாவுதல்);

நாரிரு பங்குடைய நாகைக் காரோணத்தாய் - உமாதேவியை ஒரு பங்காக உடையவனே, திருநாகைக் காரோணத்தில் உறைகின்றவனே;

ஆரிடர் தீர்த்து அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அரிய துன்பங்களைத் தீர்த்து அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக; (ஆரிடர் - அருமை + இடர் - பொறுத்தற்கரிய துன்பம்);


2)

கள்ளமிலா மாணியுயிர் காத்துக்கூற் றுதைத்தவனே

கொள்ளியெரி விளக்காகக் குறட்பூத கணஞ்சூழ

நள்ளிருளில் நட்டமிடும் நாகைக்கா ரோணத்தாய்

அள்ளலழுந் தடியேனை அஞ்சேலென் றருளாயே.


கள்ளம் இலா மாணி உயிர் காத்துக் கூற்று உதைத்தவனே - வஞ்சம் இல்லாத மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் காலனை உதைத்தவனே;

கொள்ளியெரி விளக்காகக் குறட்பூதகணம் சூழ - கொள்ளித்தீ விளக்கு ஆகக், குள்ளமான பூதங்கள் பலவும் சூழ; (குறட் பூதம் - குள்ளமான பூதம்; குறள் - குறுமை; குள்ளம்);

நள்ளிருளில் நட்டம் இடும் நாகைக் காரோணத்தாய் - நடு இரவில் கூத்தாடும் திருநாகைக் காரோணப் பெருமானே;

அள்ளல் அழுந்து அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - (பிறவி என்ற) சேற்றில் அழுந்துகின்ற அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக; (அள்ளல் - சேறு); (அப்பர் தேவாரம் - 4.42.6 - "அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள்");


3)

அச்சிறவோர் தேரேறி அரண்மூன்றைச் சுட்டவனே

உச்சிமிசைக் கூவிளமும் ஒண்மதியும் புனைந்தவனே

நச்சரவ நாணுடையாய் நாகைக்கா ரோணத்தாய்

அச்சமிகு மனத்தேனை அஞ்சேலென் றருளாயே.


அச்சு இற ஓர் தேர் ஏறி, அரண் மூன்றைச் சுட்டவனே - தேவர்கள் செய்த தேரின் அச்சு முரியும்படி அதன்மீது ஏறி, முப்புரங்களை எய்தவனே;

உச்சிமிசைக் கூவிளமும் ஒண் மதியும் புனைந்தவனே - திருமுடிமேல் வில்வத்தையும் ஒளிவீசும் சந்திரனையும் அணிந்தவனே;

நச்சு-அரவ நாண் உடையாய் - விஷப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;

நாகைக் காரோணத்தாய் - திருநாகைக் காரோணத்துப் பெருமானே;

அச்சம் மிகு மனத்தேனை அஞ்சேல் என்று அருளாயே - மனத்தில் அச்சம் மிகுந்த அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக;


4)

சிக்கொருமீன் சிவனுக்கென் றாழிவிட்ட அதிபத்தர்

பக்குவத்தைக் கண்டவர்க்குப் பரகதியைத் தந்தவனே

நக்கரண்கள் மூன்றெரித்த நாகைக்கா ரோணத்தாய்

அக்கணிந்தாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


சிக்கு-ஒரு மீன் சிவனுக்கு என்று ஆழி விட்ட அதிபத்தர் பக்குவத்தைக் கண்டு, அவர்க்குப் பரகதியைத் தந்தவனே - வலையில் சிக்கிய ஒப்பற்ற ஒற்றை மீனையும் "சிவனுக்கு" என்று மீண்டும் கடலில் விட்ட அதிபத்த நாயனாரின் பக்குவத்தை அறிந்து, அவருக்குச் சிவகதியை அருளியவனே; (சிக்குதல் - ஒன்றனுள் அகப்படுதல்); (ஒரு - ஒப்பற்ற; ஒன்று); (ஆழி - கடல்);

(அதிபத்த நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

நக்கு அரண்கள் மூன்று எரித்த நாகைக் காரோணத்தாய் - சிரித்து முப்புரங்களையும் எரித்த திருநாகைக் காரோணத்துப் பெருமானே; (நகுதல் - சிரித்தல்);

அக்கு அணிந்தாய் - எலும்பை அணிந்தவனே; (அக்கு - எலும்பு);

அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக;


5)

ஏனத்தின் எயிறணிந்தாய் இருங்கடலில் எழுநஞ்சை

வானத்தார் வாழவுண்ட மணிகண்டா ஞானியர்கள்

ஞானத்தால் தொழுகின்ற நாகைக்கா ரோணத்தாய்

ஆனைத்தோல் போர்த்தவனே அஞ்சேலென் றருளாயே.


ஏனத்தின் எயிறு அணிந்தாய் - பன்றிக்கொம்பை அணிந்தவனே; (ஏனம் - பன்றி); (எயிறு - பல்); (அப்பர் தேவாரம் - 4.80.6 - "கண்டத்து இலங்கும் ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே");

இரும்-கடலில் எழு நஞ்சை, வானத்தார் வாழ, உண்ட மணிகண்டா - பெரிய கடலில் தோன்றிய விடத்தைத் தேவர்கள் வாழ்வதற்காக உண்ட நீலகண்டனே; (இருமை - பெருமை);

ஞானியர்கள் ஞானத்தால் தொழுகின்ற நாகைக் காரோணத்தாய் - ஞானிகளால் ஞானத்தால் தொழப்படுபவனே; திருநாகைக் காரோணத்துப் பெருமானே; (அப்பர் தேவாரம் - 5.91.3 - "ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்");

ஆனைத்தோல் போர்த்தவனே - யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே;

அஞ்சேல் என்று அருளாயே - அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக;


6)

கோலமெனக் கொக்கிறகும் குளிர்மதியும் புனைந்தவனே

சூலமழு வாளுடையாய் சொன்மலர்கள் பலசாத்தி

ஞாலமடி பணிந்தேத்து நாகைக்கா ரோணத்தாய்

ஆலமர்ந்தாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


கோலம் எனக் கொக்கு-இறகும் குளிர்-மதியும் புனைந்தவனே - திருமுடிமேல் அலங்காரமாகக் கொக்கின் இறகையும் குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் அணிந்தவனே; (கொக்கிறகு - கொக்கு வடிவு உடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்; கொக்கிறகு என்ற மலர்);

சூலம் மழுவாள் உடையாய் - சூலாயுதமும் மழுவும் ஏந்தியவனே;

சொல்மலர்கள் பல சாத்தி, ஞாலம் அடிபணிந்து ஏத்து நாகைக் காரோணத்தாய் - பாமாலைகள் பல அணிவித்துப் பெரியோர்கள் வழிபடுகின்ற திருநாகைக் காரோணத்துப் பெருமானே; (சொன்மலர் - சொல்மலர் - சொற்களாகிய மலர்களால் ஆன பாமாலை); (சாத்துதல் - அணிதல்); (ஞாலம் - உலகம் - பெரியோர்; "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" - சேந்தன் திவாகர நிகண்டு - மக்கட் பெயர்த்தொகுதி - நூற்பா 15);

ஆல் அமர்ந்தாய் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியே; (ஆல் - ஆலமரம்; விஷம்); (அமர்தல் - இருத்தல்;விரும்புதல்);

அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக;


7)

அஞ்சுமலர்க் கணையானை அனங்கனெனச் செய்தவனே

வெஞ்சினவெள் விடையுடையாய் வேங்கைத்தோல் உடையுடையாய்

நஞ்சணிந்த கண்டத்தாய் நாகைக்கா ரோணத்தாய்

அஞ்சுகின்ற அடியேனை அஞ்சேலென் றருளாயே.


அஞ்சு மலர்க்-கணையானை அனங்கன் எனச் செய்தவனே - ஐந்து மலர்க்கணைகள் ஏவுகின்ற மன்மதனை உடலற்றவன் ஆகச் செய்தவனே;

வெஞ்சின வெள்-விடை உடையாய் - வலிய சினம் மிக்க வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே; (வெம்மை - கோபம்; பராக்கிரமம்);

வேங்கைத்தோல் உடை உடையாய் - புலித்தோலை ஆடையாக உடுத்தவனே;

நஞ்சு அணிந்த கண்டத்தாய் - விடத்தை மணி போலக் கழுத்தில் அணிந்தவனே;

நாகைக் காரோணத்தாய் - திருநாகைக் காரோணத்துப் பெருமானே;

அஞ்சுகின்ற அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அச்சம் உடைய அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக;


8)

பொங்குசினத் தாற்கயிலைப் பொருப்பிடந்த அரக்கனழச்

செங்கமலப் பாதவிரல் திருமலைமேல் வைத்தவனே

நங்கையொரு பங்குடைய நாகைக்கா ரோணத்தாய்

அங்கணனே அடியேனை அஞ்சேலென் றருளாயே.


பொங்கு சினத்தால் கயிலைப் பொருப்பு இடந்த அரக்கன் அழச் - (வானில் செல்லும் தன் தேர் ஓடாமல் தரையில் இறங்கக்கண்டு) பொங்கியெழுந்த கோபத்தால் கயிலைமலையைப் பேர்த்த இராவணன் அழும்படி; (பொருப்பு - மலை); (இடத்தல் - பெயர்த்தல்);

செங்கமலப் பாதவிரல் திருமலைமேல் வைத்தவனே - செந்தாமரை போன்ற பாதத்தின் ஒரு விரலைக் கயிலைமலைமேல் ஊன்றியவனே;

நங்கை ஒரு பங்கு உடைய நாகைக் காரோணத்தாய் - உமாதேவியை ஒரு பங்காக உடைய, திருநாகைக் காரோணத்துப் பெருமானே; (நங்கை - பெண்ணிற் சிறந்தாள்);

அங்கணனே - அருட்கண் உடையவனே;

அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக;


9)

காரணிந்த கண்டத்தாய் கண்பொலியும் நெற்றியினாய்

வாரணத்தின் உரிபோர்த்தாய் மலரவற்கும் மண்ணகழ்ந்த

நாரணற்கும் அரியவனே நாகைக்கா ரோணத்தாய்

ஆரணனே அடியேனை அஞ்சேலென் றருளாயே.


கார் அணிந்த கண்டத்தாய் - கருமையை அணிந்த கண்டம் உடையவனே; (கார் - கருமை);

கண் பொலியும் நெற்றியினாய் - நெற்றிக்கண்ணனே;

வாரணத்தின் உரி போர்த்தாய் - யானைத்தோல் போர்த்தவனே; (வாரணம் - யானை);

மலரவற்கும் மண்கழ்ந்த நாரணற்கும் அரியவனே - பிரமனுக்கும் (பன்றி உருவில்) மண்ணை அகழ்ந்த திருமாலுக்கும் அரியவனே; (மலரவற்கு - மலரவன்+கு - மலரவனுக்கு; நாரணற்கு - நாரணன்+கு - நாரணனுக்கு);

நாகைக் காரோணத்தாய் - திருநாகைக் காரோணத்துப் பெருமானே;

ஆரணனே - வேத முதல்வனே; (ஆரணம் - வேதம்); (சுந்தரர் தேவாரம் - 7.97.6 - "செஞ்சடைமேல் மதியும் அரவும் உடனே புல்கிய ஆரணன்");

அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அடியேனை "அஞ்சேல்" என்று அருள்வாயாக;


10)

கரையாத கல்நெஞ்சர் கைதவமே தவமானார்

கரைகின்ற புன்னெறிகள் கருதேன்மின் கற்றார்சொல்

நரையேற்றான் திரையார்க்கும் நாகைக்கா ரோணத்தான்

அரவார்த்தான் அடியாரை அஞ்சேலென் றருள்வானே.


கரையாத கல் நெஞ்சர் - உருகாத கல் போன்ற மனம் உடையவர்கள்;

கைதவமே தவம் ஆனார் கரைகின்ற புன்னெறிகள் கருதேன்மின் - கபடத்தையும் பொய்யையுமே தவம்போல எப்பொழுதும் செய்கின்ற அவர்கள் சொல்கின்ற புன்மார்க்கங்களை மதிக்கவேண்டா; (கைதவம் - கபடம்; பொய்); (கரைதல் - ஒலித்தல்; சொல்லுதல்); (கருதேன்மின் - கருதேல்மின் - கருதாதீர்கள்); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

கற்றார் சொல் நரை-ஏற்றான் - கற்றவர்கள் புகழும் வெள்ளை இடப ஊர்தி உடையவன்; (சொல்லுதல் - புகழ்தல்); (நரை - வெண்மை); (ஏறு - இடபம்);

திரை ஆர்க்கும் நாகைக் காரோணத்தான்- கடல் அலைகள் ஒலிக்கின்ற திருநாகைக் காரோணத்தில் உறைகின்ற பெருமான்; (திரை - அலை; கடல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

அரவு ஆர்த்தான் - பாம்பை அரையில் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

அடியாரை அஞ்சேல் என்று அருள்வானே - அப்பெருமான் தன் அடியார்களை "அஞ்சேல்" என்று அருள்வான்;


11)

மதுமலியும் தாமரையா மலர்க்கண்ணை இடந்திட்டுத்

துதிதிருமாற் காழிதந்தான் தூநீறு திகழ்மார்பன்

நதிபுனைந்த நம்பெருமான் நாகைக்கா ரோணத்தான்

அதிர்கழலை அடைந்தாருக் கச்சமிலா நிலைதானே.


மது மலியும் தாமரையா மலர்க்கண்ணை இடந்து இட்டுத் துதி திருமாற்கு ஆழி தந்தான் - தேன் நிறைந்த தாமரைப்பூவாகத் தன் மலர் போன்ற கண்ணைத் தோண்டித் திருவடியில் இட்டு வழிபட்ட திருமாலுக்குச் சக்கராயுதத்தைத் தந்தவன்; (தாமரையா - தாமரையாக); (இடத்தல் - தோண்டுதல்); (திருமாற்கு - திருமால்+கு - திருமாலுக்கு); (ஆழி - சக்கரம்);

தூ நீறு திகழ் மார்பன் - தூய திருநீற்றை மார்பில் பூசியவன்;

நதி புனைந்த நம் பெருமான் - கங்கையைச் சடையில் அணிந்த நம் பெருமான்;

நாகைக் காரோணத்தான் - திருநாகைக் காரோணத்தில் உறைகின்றவன்

அதிர்-கழலை அடைந்தாருக்கு அச்சம் இலா நிலைதானே - அப்பெருமானின் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியைச் சரண்புகுந்த அடியவர்களுக்கு அவன் அபயம் அளிப்பான்; (அதிர்தல் - ஒலித்தல்; முழங்குதல்); (அபயம் - 1. அச்சமின்மை. 2. அடைக்கலம்); (அப்பர் தேவாரம் - 5.97.21 - "மான்மறிக் கையினான் அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ");


வி. சுப்பிரமணியன்

--------


No comments:

Post a Comment