07.41 - ஆனைக்கா - எத்தனையோ பிறவிகள்
2016-05-06
07.41 - ஆனைக்கா (திருவானைக்கா)
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.40.1 - "எம்பிரான் எனக்கமுதம் ஆவானும்")
1)
எத்தனையோ பிறவிகள் எடுத்திளைத்தேன் இனியென்னை
இத்தரைமேல் பிறப்பிக்கும் இருவினையைத் தீர்த்தருளாய்
பத்தியொடுன் பாதமலர் பரவுகின்றேன் போர்செய்த
அத்தியுரி போர்த்தவனே ஆனைக்கா மேயவனே.
அத்தி உரி - யானைத்தோல்;
2)
எண்ணற்ற பிறவிகள் எடுத்திளைத்தேன் எம்பெருமான்
கண்ணிற்றீ உடையாயென் கடுவினையைச் சாம்பலெனப்
பண்ணிக்கை தந்தருளாய் பத்தரகம் தனில்தங்கி
அண்ணிக்கும் தீங்கரும்பே ஆனைக்கா மேயவனே.
கண்ணிற்றீ = கண்ணில் தீ;
கைதருதல் - உதவுதல்;
பத்தர் அகம்-தனில் தங்கி அண்ணிக்கும் தீங்கரும்பே - பக்தர்களது நெஞ்சில் குடிகொண்டு இனிமை பயக்கின்ற இனிய கரும்பு போன்றவனே; (அப்பர் தேவாரம் - 6.52.2 - "கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான்காண்");
3)
இருள்விலகி என்மனத்தில் எஞ்ஞான்றும் உன்னைநினை
தெருள்விரவ அருள்புரியாய் செஞ்சடைமேல் மதியுடையாய்
சுருள்குழலி ஒருபங்கா தொழுசுரர்கள் அமுதுண்ண
அருள்கரிய கண்டத்தாய் ஆனைக்கா மேயவனே.
இருள் - அஞ்ஞானம்;
தெருள் - தெளிவு;
விரவுதல் - பொருந்துதல்;
4)
உரையாலுன் சீர்பரவி உளங்களிக்கும் அடியேனைத்
தரைமீது பிறந்திறந்து தவியாவா றருள்புரியாய்
வரைமாது வாமத்தாய் மால்விடையாய் புலித்தோல்மேல்
அரைநாணா அரவுடையாய் ஆனைக்கா மேயவனே.
வரைமாது வாமத்தாய் - மலைமகளை இடப்பக்கத்தில் உடையவனே;
மால்-விடையாய் - பெரிய இடபவாகனம் உடையவனே;
புலித்தோல்மேல் அரைநாணா அரவு உடையாய் - புலித்தோலை ஆடையாகத் தரித்து அதன்மேல் ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;
5)
அஞ்செழுத்தை அனுதினமும் அன்பினால் உரைசெய்தால்
அஞ்சுவினைக் கடலினிடை அரும்புணையா வரும்பரனே
நஞ்சடைநற் கண்டத்தாய் நதியுலவி நனைக்கின்ற
அஞ்சடைமேல் பிறையுடையாய் ஆனைக்கா மேயவனே.
அஞ்செழுத்தை அனுதினமும் அன்பினால் உரைசெய்தால் - திருவைந்தெழுத்தைத் தினமும் அன்போடு சொன்னால்;
அஞ்சு வினைக்கடலினிடை அரும்-புணையா வரும் பரனே - அஞ்சுகின்ற வினைக்கடலில் அரிய தெப்பமாக வந்து காக்கின்ற பரமனே;
நஞ்சு அடை நற்-கண்டத்தாய் - விடத்தை அடைத்த நல்ல கண்டத்தை உடையவனே;
அஞ்சடைமேல் பிறையுடையாய் - அழகிய சடைமேல் பிறையை அணிந்தவனே; (அம் சடை - அழகிய சடை);
* "அடியேனுக்கும் அருள்புரிக" என்பது குறிப்பு. முன்னர் உள்ள பாடல்களில் இருக்கும் வேண்டுகோளை இங்கும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்;
6)
கழலாரும் திருவடியே கைதொழுதேன் எம்பெருமான்
அழலாரும் தீவினைதீர்த் தடியேனுக் கருள்புரியாய்
நிழலாரும் மழுவுடையாய் நிகரில்லாப் புகழுடையாய்
அழகாரும் பொழில்சூழ்ந்த ஆனைக்கா மேயவனே.
கழல் ஆரும் திருவடியே - கழல் அணிந்த திருவடியையே;
அழல் ஆரும் தீவினை தீர்த்து - தீப் போல் (சுடுகின்ற) தீவினையை அழித்து;
நிழல் ஆரும் மழு உடையாய் - ஒளி திகழும் மழுவை ஏந்தியவனே;
7)
கோலமிகு தமிழ்பாடிக் கும்பிட்டேன் எம்பெருமான்
மேலைவினை மேவாத மேன்மையினை அருள்புரியாய்
சூலமழு உடையானே தொன்மறையை விரித்தருள
ஆலநிழல் அமர்வோனே ஆனைக்கா மேயவனே.
சூலமழு உடையானே = சூலத்தையும் மழுவையும் ஏந்தியவனே;
8)
கருவமலி மனத்தரக்கன் கயிலாயம் இடந்தக்கால்
ஒருவிரலை ஊன்றியவன் ஒண்முடிபத் தடர்த்தவனே
கருமுகில்போல் கண்டத்தாய் கல்லால மரத்தின்கீழ்
அருமறையை விரித்தவனே ஆனைக்கா மேயவனே.
கருவ(ம்) மலி மனத்தரக்கன் கயிலாயம் இடந்தக்கால் ஒரு விரலை ஊன்றி அவன் ஒண்முடி-பத்து அடர்த்தவனே - செருக்கு மிக்க மனம் உடைய அரக்கன் கயிலையைப் பெயர்த்தபொழுது திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனது ஒவீசும் கிரீடம் அணிந்த பத்துத்தலைகளையும் நசுக்கியவனே; (இடந்தக்கால் ஒருவிரலை - "கால்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்து, "இடந்தக்கால்" & "கால் ஒருவிரலை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
கருமுகில்போல் கண்டத்தாய் - கரிய மேகம் போன்ற கண்டம் உடையவனே;
கல்லால மரத்தின்கீழ் அருமறையை விரித்தவனே - கல்லாலமரத்தின்கீழ் அரிய வேதப்பொருளை உபதேசித்தவனே;
* இப்பதிகத்தில் முன்னர்ச் சொன்ன பாடல்களில் உள்ள வேண்டுகோள்களை இப்பாடலிலும் வருவித்துப் பொருள்கொள்க;
9)
அரிபிரமன் காணொண்ணா அருஞ்சுடரே அருச்சனையே
புரிசிறுவற் கிடர்செய்த கூற்றுதைத்த பொற்பாதா
கரியுரியைப் போர்த்தவனே காமனைக்காய் கண்ணுதலே
அரிவையொரு பங்குடையாய் ஆனைக்கா மேயவனே.
அரி பிரமன் காணொண்ணா அருஞ்சுடரே - திருமால் பிரமன் இவர்களால் அடிமுடி காண இயலாத அரிய ஜோதியே;
அருச்சனையே புரி-சிறுவற்கு இடர்செய்த கூற்று உதைத்த பொற்பாதா - வழிபாடு செய்த சிறுவரான மார்க்கண்டேயருக்குத் துன்பம் தந்த காலனை உதைத்த பொன்னடியினனே;
கரியுரியைப் போர்த்தவனே - யானைத்தோலைப் போர்த்தவனே;
காமனைக் காய் கண்ணுதலே - மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணனே;
அரிவை ஒரு பங்கு உடையாய் - உமைபங்கனே;
* இப்பதிகத்தில் முன்னர்ச் சொன்ன பாடல்களில் உள்ள வேண்டுகோள்களை இப்பாடலிலும் வருவித்துப் பொருள்கொள்க;
10)
ஆறான சமயங்கள் அவையுணரார் ஆள்சேர்க்கக்
கூறீன வார்த்தைகளைக் கொஞ்சமும்நீர் மதியேன்மின்
நீறேறு நெற்றியராய் நினைவாரை நீங்காதான்
ஆறேறு சடையுடையான் ஆனைக்கா மேயவனே.
ஆறான சமயங்கள் அவை உணரார் - இறைவனை அடைவதற்கு வழியாக உள்ள வைதிக சமயங்கள் ஆறு (ஷண்மதங்கள்) சொல்லும் தத்துவங்களை அறியாதவர்கள்; (ஆறு - 6 என்ற எண்; வழி);
ஆள் சேர்க்கக் கூறு ஈன வார்த்தைகளை கொஞ்சமும் நீர் மதியேன்மின் - தம் கூட்டத்தைப் பெருக்குவதற்காகச் சொல்கின்ற இழிந்த சொற்களை நீங்கள் சிறிதும் மதிக்கவேண்டா;
நீறு ஏறு நெற்றியராய் நினைவாரை நீங்காதான் - நெற்றியில் திருநீற்றை அணிந்து தியானிக்கும் பக்தர்களை என்றும் நீங்காமல் உடனிருந்து காப்பவன்;
ஆறு ஏறு சடையுடையான் - கங்கையைச் சடையில் அணிந்தவன்;
11)
மலையேவோர் வில்லாக வளைத்தரண்மூன் றெய்தவனே
தலையேவுண் கலனாக்கொள் சங்கரனே என்பார்க்கு
நிலையான செல்வமருள் நீர்மையினான் நீலகண்டன்
அலையாரும் காவிரிசூழ் ஆனைக்கா மேயவனே.
"மலையே ஓர் வில்லாக வளைத்து அரண் மூன்று எய்தவனே; தலையே உண்கலனாக் கொள்- சங்கரனே" என்பார்க்கு - "மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை எய்தவனே; பிரமன் மண்டையோட்டையே பிச்சைப்பாத்திரமாகக் கொண்ட சங்கரனே" என்றெல்லாம் போற்றி வணங்கும் அடியார்களுக்கு;
நிலையான செல்வம் அருள் நீர்மையினான் - நிலைத்த செல்வத்தை அருள்பவன்; (நீர்மை - குணம்);
நீலகண்டன் - கரிய கண்டம் உடையவன்;
அலை ஆரும் காவிரி சூழ் ஆனைக்கா மேயவனே - அலை மிக்க காவிரி சூழ்ந்த திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமான்;
வி. சுப்பிரமணியன்
--- ---
No comments:
Post a Comment