Monday, May 6, 2024

07.38 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - தில்லைவாழ் அந்தணர்கள்

07.38 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - தில்லைவாழ் அந்தணர்கள்

2016-04-24

07.38 - கோயில் (தில்லை - சிதம்பரம்)

"மணிமிடற்றுத் தாண்டகம்"

-----------------------

(எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" - அரையடி வாய்பாடு. திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 6.1.1 - "அரியானை அந்தணர்தம்")


1)

தில்லைவாழ் அந்தணர்கள் சிந்தை தன்னிற்

.. சேர்ந்த பெருமானும் அன்ற லர்ந்த

நல்லமா மலர்தூவு பத்தர் தம்மை

.. நணுகிய நமனையுதை பாதத் தானும்

சொல்லெலாம் கடந்தபெரும் புகழி னானும்

.. சுந்தரநீ றணிந்தானும் தேவர் போற்றும்

அல்லுலாம் மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


தில்லைவாழ் அந்தணர்கள் சிந்தை-தன்னில் சேர்ந்த பெருமானும் - தில்லையில் வாழும் அந்தணர்களுடைய உள்ளத்தில் ஒன்றிய பெருமானும்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.1.1 - "அரியானை அந்தணர்தம் சிந்தையானை");

அன்று அலர்ந்த நல்ல மா-மலர் தூவு பத்தர்-தம்மை நணுகிய நமனை உதை பாதத்தானும் - புதுமலர்களைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய காலனை உதைத்தவனும்; (நணுகுதல் - நெருங்குதல்);

சொல்-எலாம் கடந்த பெரும்-புகழினானும் - சொல்வதற்கு அரிய புகழ் உடையவனும்;

சுந்தர நீறு அணிந்தானும் - அழகிய திருநீற்றைப் பூசியவனும்;

தேவர் போற்றும் அல் உலாம் மிடற்றானும் - தேவர்கள் வணங்கும், கருமை திகழும் கண்டத்தினானும்; (அல் - இருள்); (உலாம் - உலாவும்; பொருந்திய); (மிடறு - கண்டம்);

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


2)

சீலமிக்க தில்லைவாழ் அந்த ணாளர்

.. சீர்பரவித் தினமேத்து செம்பி ரானும்

கோலமென முடிமீது திங்க ளோடு

.. கூவிளமும் கொக்கிறகும் சூடி னானும்

ஓலமென வந்துமல ரடிப ணிந்த

.. உம்பர்கள் விரும்பியவின் னமுதம் உண்ண

ஆலமுண்ட மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


சீலம் மிக்க தில்லைவாழ் அந்தணாளர் சீர் பரவித் தினம் ஏத்து செம்பிரானும் - ஒழுக்கம் மிக்க, தில்லையில் வாழும் அந்தணர்கள் தினமும் புகழ் பாடி வழிபடும் செம்மேனிப் பெருமானும்; (செம்பிரான் - சிவந்த திருமேனி உடைய தலைவன்);

கோலம் என முடிமீது திங்களோடு கூவிளமும் கொக்கிறகும் சூடினானும் - அலங்காரமாகத் திருமுடிமேல் சந்திரனையும் வில்வத்தையும் கொக்கின் இறகையும் சூடியவனும்; (கூவிளம் - வில்வம்); (கொக்கிறகு - கொக்கு வடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்; கொக்கிறகு என்ற பூவும் ஆம்);

ஓலம் என வந்து மலரடி பணிந்த உம்பர்கள் விரும்பிய இன்னமுதம் உண்ண - ஓலம் என்று வந்து மலர் போன்ற திருவடியை வணங்கிய தேவர்கள் அவர்கள் விரும்பிய இனிய அமுதத்தை உண்பதற்காக; (ஓலம் - அபயம் வேண்டும் குறிப்பு மொழி); (என - என்று); (உம்பர் - தேவர்);

ஆலம் உண்ட மிடற்றானும் - ஆலகால விடத்தை உண்ட கண்டத்தினானும்;

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


3)

உச்சிமிசைப் பிறையானும் உரக மாலை

.. உகந்தானும் அயன்தலையில் ஊணி ரக்கும்

இச்சையுடைப் பெருமானும் ஏற தேறும்

.. இறையவனும் மடப்பாவை இடப்பா லானும்

கச்செனவோர் நாகத்தைக் கட்டி னானும்

.. காத்தருளாய் என்றுதொழு வானோர் தங்கள்

அச்சமொழி மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


உச்சிமிசைப் பிறையானும் - திருமுடிமேல் பிறைச்சந்திரனை அணிந்தவனும்;

உரக மாலை உகந்தானும் - பாம்பினை மாலையாக அணிந்தவனும்; (உரகம் - பாம்பு); (உகத்தல் - விரும்புதல்);

அயன்-தலையில் ஊண் இரக்கும் இச்சையுடைப் பெருமானும் - பிரமனது மண்டையோட்டில் உணவை யாசிக்க விரும்பிய பெருமானும்; (அயன் - பிரமன்); (தலை - மண்டையோடு); (ஊண் - உணவு); (இரத்தல் - யாசித்தல்);

ஏறுஅது ஏறும் இறையவனும் - இடப வாகனம் உடையவனும்;

மடப்பாவை இடப்பாலானும் - உமாதேவியை இடப்பக்கம் உடையவனும்; (மடப் பாவை - அழகிய பெண்); (பால் - பகுதி; பக்கம்); (அப்பர் தேவாரம் - 6.20.6 - "குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை");

கச்சு என ஓர் நாகத்தைக் கட்டினானும் - அரையில் கச்சாகப் பாம்பைக் கட்டியவனும்;

காத்தருளாய் என்று தொழு வானோர்-தங்கள் அச்சம் அழி மிடற்றானும் - "காத்தருள்வாயாக" என்று வணங்கிய தேவர்களுடைய அச்சத்தைப் போக்கிய கண்டத்தினானும்; (ஒழித்தல் - நீக்குதல்);

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


4)

இழையிலங்கு மார்பினனும் வெந்த சாம்பல்

.. ஏறுபுயம் எட்டுடைய எழிலி னானும்

குழையிலங்கு செவியானும் கொன்றை யோடு

.. கூவிளமும் குரவுமணி சடையி னானும்

உழையிலங்கு கையானும் பாக மாக

.. உமையிலங்கு மெய்யானும் உம்பர் ஏத்தும்

அழகிலங்கு மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


இழை இலங்கு மார்பினனும் - பூணூல் அணிந்த திருமார்பினனும்; (இழை - நூல்);

வெந்த சாம்பல் ஏறு புயம் எட்டு உடைய எழிலினானும் - திருநீறு திகழும் எட்டுப் புஜங்கள் உடையவனும்;

குழை இலங்கு செவியானும் - காதில் குழையை அணிந்தவனும்;

கொன்றையோடு கூவிளமும் குரவும் அணி சடையினானும் - சடையில் கொன்றை, வில்வம், குராமலர் இவற்றை அணிந்தவனும்; (குரவு - குராமலர்);

உழை இலங்கு கையானும் - கையில் மானை ஏந்தியவனும்; (உழை - மான்);

பாகமாக உமை இலங்கு மெய்யானும் - ஒரு பாகமாக உமாதேவி திகழும் திருமேனி உடையவனும், மெய்ப்பொருள் ஆனவனும்; (மெய் - உடல்; உண்மை);

உம்பர் ஏத்தும் அழகு இலங்கு மிடற்றானும் - தேவர்கள் போற்றும் அழகிய கண்டம் உடையவனும்;

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


5)

ஊழிபல கண்டானும் செங்கண் ஏற்றை

.. ஊர்தியென உடையானும் உருகி நாளும்

ஏழிசையால் தமிழ்பாடி ஏத்தும் அன்பர்

.. இருவினைதீர் பெருமானும் இண்டை போலப்

போழிளவெண் பிறையணிந்த சடையி னானும்

.. பொருப்பரையன் பாவையொரு புடையி னானும்

ஆழிநஞ்சுண் மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


ஊழி பல கண்டானும் - காலத்தைக் கடந்தவனும், என்றும் அழிவற்றவனும்;

செங்கண் ஏற்றை ஊர்தி என உடையானும் - சினம் உடைய இடபத்தை வாகனமாக உடையவனும்;

உருகி நாளும் ஏழிசையால் தமிழ் பாடி ஏத்தும் அன்பர் இருவினை தீர் பெருமானும் - தினமும் மனம் உருகி இசைத்தமிழான தேவாரம் முதலியன பாடி வணங்கும் பக்தர்களுடைய வினைகளையெல்லாம் தீர்க்கும் பெருமானும்;

இண்டை போலப் போழ்-இள-வெண்-பிறை அணிந்த சடையினானும் - தலையில் அணியும் இண்டை என்ற மாலையைப் போல, இளம்-வெண்-திங்கட்-கீற்றைச் சடையில் அணிந்தவனும்; (போழ் - துண்டம்); (போழ்தல் - பிளவுபடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.115.2 - "போழ்ந்ததிங்கட் புரிசடையினான்"); (சம்பந்தர் தேவாரம் - 3.68.10 - "துண்டமதியோ டிண்டைபுனை வுண்டசடை");

பொருப்பு அரையன் பாவை ஒரு புடையினானும் - இமவான் மகளான பார்வதியை ஒரு பக்கத்தில் உடையவனும்; (பொருப்பு - மலை); (அரையன் - அரசன்); (புடை - பக்கம்);

ஆழி நஞ்சு உண் மிடற்றானும் - கடல் விடத்தை உண்ட கண்டத்தினானும்; (ஆழி - கடல்);

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


6)

பாரழியா திருப்பதற்குக் கங்கை தன்னைப்

.. படர்சடையில் அடைத்தானும் தேரில் ஏறி

ஓரழலார் கணையெய்து முப்பு ரங்கள்

.. உடன்வேவச் செய்தானும் நீறு பூத்த

பேரழலார் மேனியனும் பேதை தன்னைப்

.. பிரியாத அன்பினனும் பெருவி டத்தால்

ஆரழகார் மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


பார் அழியாது இருப்பதற்குக் கங்கை-தன்னைப் படர் சடையில் அடைத்தானும் - மிக விரைந்து இழிந்த கங்கையைப், பூமி அழியாது இருக்கவேண்டித், தன் படர்ந்த சடையில் அடைத்தவனும்;

தேரில் ஏறி, ஓர் அழல் ஆர் கணை எய்து முப்புரங்கள் உடன் வேவச் செய்தானும் - தேவர்கள் செய்த தேரில் ஏறித், தீப் பொருந்திய ஓர் அம்பை ஏவி, முப்புரங்களையும் ஒருங்கே வெந்து அழியச்செய்தவனும்;

நீறு பூத்த பேர்-அழல் ஆர் மேனியனும் - நீறு பூத்த பெருநெருப்புப் போலத், திருநீறு பூசிய செம்மேனியனும்;

பேதை-தன்னைப் பிரியாத அன்பினனும் - உமையைப் பிரியாத அன்பு உடையவனும்;

பெருவிடத்தால் ஆர் அழகு ஆர் மிடற்றானும் - ஆலகால நஞ்சினால் அரிய அழகு பொருந்திய கண்டத்தினானும்;

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


7)

எவ்விடமும் நிறைந்தவனும் அன்பர் நெஞ்சில்

.. இருப்பவனும் வேண்டுவரம் இலையென் னானும்

கொவ்வையன வாயுடைய மங்கை தன்னைக்

.. கூறாக உடையானும் கடலு மிழ்ந்த

வெவ்விடத்தைக் கண்டுமிக அஞ்சி வானோர்

.. மென்மலர்த்தாள் துதிசெய்ய அவர்க்கி ரங்கி

அவ்விடமுண் மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


எவ்விடமும் நிறைந்தவனும் - எங்கும் நிறைந்தவனும்; (இறைவன் - எங்கும் இருப்பவன்);

அன்பர் நெஞ்சில் இருப்பவனும் - பக்தர்கள் மனத்தில் இருப்பவனும்;

வேண்டு வரம் இலை என்னானும் - அவர்கள் வேண்டுகின்ற வரங்களை-எல்லாம் "இல்லை" என்னாது கொடுப்பவனும்; (இலை - இல்லை); (என்னானும் - என்னாதவனும்);

கொவ்வை அன வாய் உடைய மங்கை தன்னைக் கூறாக உடையானும் - கொவ்வைக்கனி போன்ற செவ்வாய் உடைய உமையை ஒரு பாகமாக உடையவனும்; (அன - அன்ன - போன்ற);

கடல் உமிழ்ந்த வெவ்விடத்தைக் கண்டு மிக அஞ்சி வானோர் மென்மலர்த்தாள் துதிசெய்ய - கடலில் தோன்றிய கொடிய விடத்தைக் கண்டு, மிகவும் கலக்கமுற்றுத் தேவர்கள் மென்மையான மலர் போன்ற திருவடிகளைத் துதிக்கவும்;

அவர்க்கு இரங்கி அவ்விடம் உண் மிடற்றானும் - அவர்களுக்கு இரங்கி, அங்கு அந்த நஞ்சை உண்ட கண்டத்தினானும்; (அவ்விடம் - 1. There, in that place; அங்கு; 2. அந்த நஞ்சு);

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


8)

பெருமஞ்சு சூழ்மலையைப் பிடித்த சைத்த

.. பித்துமனத் தரக்கனழ விரலை ஊன்றிச்

சிரமஞ்சி னோடஞ்சும் நெரிசெய் தானும்

.. செய்பணிகள் எல்லாமே சிவனுக் கென்று

கருமஞ்செய் அடியாருக் கருள்செய் வானும்

.. காவாய்எம் பெருமானே எனவான் வேண்ட

அருநஞ்சுண் மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


பெரு- மஞ்சு சூழ் மலையைப் பிடித்து அசைத்த, பித்து மனத்து அரக்கன் அழ விரலை ஊன்றிச் - மேகம் சூழ்ந்த பெரிய கயிலைமலையைக் கைகளால் பிடித்து அசைத்த, பித்துப் பிடித்தவன் போலத் தெளிவற்ற சிந்தையை உடைய அரக்கனான இராவணன் அழும்படி ஒரு விரலை ஊன்றி;

சிரம் அஞ்சினோடு அஞ்சும் நெரிசெய்தானும் - இராவணனின் பத்துத் தலைகளையும் நெரித்தவனும்; (அஞ்சு - ஐந்து);

செய் பணிகள் எல்லாமே சிவனுக்கு என்று கருமம் செய் அடியாருக்கு அருள்செய்வானும் - தாங்கள் செய்வன எல்லாமே சிவனுக்குத் தொண்டாகச் செய்யும் அடியவர்களுக்கு அருள்புரிபவனும்;

"காவாய் எம் பெருமானே" என வான் வேண்ட அரு-நஞ்சு உண் மிடற்றானும் - "எம் பெருமானே, காப்பாயாக", என்று தேவர்கள் வேண்டவும், அவர்களுக்கு இரங்கி, அந்த உண்ணற்கு அரிய நஞ்சை உண்ட கண்டத்தினானும்;

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


9)

திருமகட்குக் கேள்வனொடு பூவின் மேலான்

.. தேடியடி போற்றவுயர் செந்தீ யானும்

குருமணியாய் ஆலதன்கீழ் இருக்கை யானும்

.. குறட்பூதப் படையானும் கோல மாகப்

பெருமணியார் சரம்பூணா தரவம் பூண்ட

.. பெம்மானும் கடல்நஞ்சை உண்டு கந்த

அருமணியார் மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


திருமகட்குக் கேள்வனொடு பூவின் மேலான் தேடி அடி போற்ற உயர் செந்தீயானும் - இலக்குமியின் கணவனான திருமாலும் தாமரைப் பூவின்மேல் இருக்கும் பிரமனும் தேடித் தன் திருவடியைப் போற்றுமாறு செந்தழற் பிழம்பாகி உயர்ந்தவனும்;

குருமணியாய் ஆல் அதன்கீழ் இருக்கையானும் - சனகாதியர்க்கு மறைப்பொருளை விரித்துரைத்த குருவாகிக் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்தவனும்;

குறட்பூதப் படையானும் - குள்ளமான பூதங்கள் இருக்கும் படையை உடையவனும்; (குறள் - குறுமை; குள்ளம்); (சம்பந்தர் தேவாரம் - 1.46.1 - "குண்டைக் குறட்பூதம் குழும அனலேந்திக்");

கோலமாகப் பெருமணி ஆர் சரம் பூணாது அரவம் பூண்ட பெம்மானும் - அலங்காரமாகப் பெரிய மணிகள் இருக்கும் வடம் அணியாமல் பாம்பை அணிந்த பெருமானும்;

கடல்நஞ்சை உண்டு உகந்த அருமணி ஆர் மிடற்றானும் - கடலில் தோன்றிய நஞ்சை விரும்பி உண்ட, அரிய மணி பொருந்திய கண்டத்தினானும்;

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


10)

பிணிபாவம் தீர்க்கின்ற நீறு பூசாப்

.. பிரட்டருரை புரட்டுகளை நீங்கி வம்மின்

பணிவார்க்குப் பெருந்துணையாய்ப் பாலிப் பானும்

.. பார்த்தனுக்குப் பாசுபதப் படையீந் தானும்

பணியேறு சடையானும் காமன் வேவப்

.. பார்த்தநுதல் நேத்திரனும் கரிய நஞ்சும்

அணியாகும் மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


பிணி பாவம் தீர்க்கின்ற நீறு பூசாப் பிரட்டர் உரை புரட்டுகளை நீங்கி வம்மின் - பிணிகளையும், பிணித்துள்ள பாவங்களையும் தீர்க்கும் திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் வஞ்சக வார்த்தைகளை நீங்கி வருவீர்களாக; (பிணிபாவம் - 1. பிணியும் பாவமும்; 2. பிணித்துள்ள பாவம்); (பிரட்டர் - பிரஷ்டர் - நெறியிலிருந்து வழுவியவர்கள்); (வம்மின் - வாருங்கள்);

பணிவார்க்குப் பெரும்-துணையாய்ப் பாலிப்பானும் - வழிபடும் அன்பர்களுக்குப் பெரிய துணை ஆகி அவர்களுக்கு அருள்பவனும்; (பாலித்தல் - காத்தல்);

பார்த்தனுக்குப் பாசுபதப்-படை ஈந்தானும் - அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அளித்தவனும்; (படை - ஆயுதம்);

பணி ஏறு சடையானும் - நாகப்பாம்பு ஏறுகின்ற சடையை உடையவனும் (பணி - நாகப்பாம்பு);

காமன் வேவப் பார்த்த நுதல்-நேத்திரனும் - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவனும்; (நுதல் - நெற்றி); (நேத்திரம் - கண்);

கரிய நஞ்சும் அணி ஆகும் மிடற்றானும் - கரிய விடமும் அழகிய ஆபரணம் ஆகும் கண்டத்தினானும்; (அணி - அணிகலம்);

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


11)

சாந்தமென வெண்ணீற்றைப் பூசி னானும்

.. சார்ந்தவருக் கின்பமருள் தன்மை யானும்

பாந்தளணி சடையானும் புரமெ ரிக்கப்

.. பருப்பதத்தை வில்லாகப் பற்றி னானும்

சேர்ந்தகரம் சென்னிமிசைக் கொண்டு தேவர்

.. சேவகனே ஓலமெனப் பரிந்து நஞ்சை

ஆர்ந்தமணி மிடற்றானும் அம்ப லத்தில்

.. அருநட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே.


சாந்தம் என வெண்ணீற்றைப் பூசினானும் - சந்தனம் போலத் திருநீற்றைப் பூசியவனும்; (சாந்தம் - சந்தனம்);

சார்ந்தவருக்கு இன்பம் அருள் தன்மையானும் - தன்னைச் சரணடைந்தவர்களுக்கு இன்பம் அருளும் இயல்பு உடையவனும்; (சம்பந்தர் தேவாரம் - 1.113.5 - "சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம் நேர்ந்தவன்");

பாந்தள் அணி சடையானும் - பாம்பைச் சடைமேல் அணிந்தவனும்; (பாந்தள் - பாம்பு);

புரம் எரிக்கப் பருப்பதத்தை வில்லாகப் பற்றினானும் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்தியவனும்; (பருப்பதம் - மலை);

சேர்ந்த கரம் சென்னிமிசைக் கொண்டு தேவர் - தேவர்களெல்லாம் தம் தலைமேல் கரங்களைக் கூப்பி;

"சேவகனே ஓலம்" எனப், பரிந்து நஞ்சை ஆர்ந்த மணி மிடற்றானும் - "வீரனே! ஓலம்" என்று வேண்ட, அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்ட மணிகண்டம் உடையவனும்; (சேவகன் - வீரன்); (ஆர்தல் - உண்ணுதல்);

அம்பலத்தில் அரு-நட்டம் ஆடுகின்ற அண்ணல் தானே - சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே;


பிற்குறிப்பு :

யாப்புக்குறிப்பு : எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு.

திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு. காய்ச்சீர் வரும் இடத்தில் விளச்சீரோ மாச்சீரோ வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.


வி. சுப்பிரமணியன்

-------------------


No comments:

Post a Comment