Thursday, July 25, 2024

08.05.036 - தேர்தன்னில் (பிறிதுபடுபாட்டு)

08.05.036 - தேர்தன்னில் (பிறிதுபடுபாட்டு)

08.05 - பலவகை

மிறைக்கவி - பிறிதுபடுபாட்டு:

அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்


2006-07-18

8.5.36 - தேர்தன்னில் (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)

-----------

1) ---- (வெண்பா) ----

தேர்தன்னில் சென்றம்பால் தீயாரூர் மூன்றெய்தார்

பேர்சொல்லும் பத்தர்க்குப் பித்தர்சே - ஊர்செல்வர்

கார்மிடற்றர் மூன்றுகண்கள் காட்(டு)அயன்மால் பார்க்கவொண்ணார்

ஓர்வார்பா வம்தீர்ப்பார் ஓது.


2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----

தேர்தன் னில்சென்(று) அம்பால் தீயார் ஊர்மூன்(று) எய்தார்;

பேர்சொல் லும்பத் தர்க்குப் பித்தர்; சேஊர் செல்வர்;

கார்மி டற்றர்; மூன்று கண்கள் காட்(டு)அ யன்மால்

பார்க்க ஒண்ணார்; ஓர்வார் பாவம் தீர்ப்பார் ஓது.


தேர்தன்னில் சென்று அம்பால் தீயார் ஊர்மூன்று எய்தார் - தேரில் சென்று (ஒரு) கணையால் தீயவர்களான அசுரர்களது முப்புரங்களை எய்து அழித்தவர்;

பேர் சொல்லும் பத்தர்க்குப் பித்தர் - திருநாமத்தைச் சொல்லும் பக்தர்களுக்குப் பேரருள் உடையவர்;

சே ஊர் செல்வர் - இடபவாகனம் ஏறிய திருவாளர்;

கார்-மிடற்றர் - நீலகண்டர்;

மூன்று கண்கள் காட்டு, அயன் மால் பார்க்க ஒண்ணார் - முக்கண் உடைய, பிரமன் திருமால் இவர்களால் காண ஒண்ணாதவர்;

ஓர்வார் பாவம் தீர்ப்பார்; ஓது - தியானிப்பவர்களது பாவத்தைத் தீர்ப்பவர்; (என்று / அவரைப்) பாடு;


பிற்குறிப்புகள்:

1. இலக்கணக் குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகள் ஆக்கி இருவகைப் பாடல் அமைப்பாகக் கருதுமாறு அமைவது.

இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்று நோக்குமாறு அமைந்தது.


வி. சுப்பிரமணியன்

--------- ---------


No comments:

Post a Comment