08.05.038 - உன்றன் அடியவற்கா (பிறிதுபடுபாட்டு)
08.05 - பலவகை
மிறைக்கவி - பிறிதுபடுபாட்டு:
அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்
2006-07-19
8.5.38 - உன்றன் அடியவற்கா (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)
-----------
1) ---- (வெண்பா) ----
உன்றன் அடியவற்கா ஓடிவந்த கூற்றையன்று
கொன்றாய் வணங்குமற்றார் கூறுமெந்தாய் - நன்றுசெய்வாய்
என்றே நடலையின்றி ஏத்துமென்றன் சொற்கிரங்காய்
இன்றென் துணையார் இயம்பு.
2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----
உன்றன் அடிய வற்கா ஓடி வந்த கூற்றை
அன்று கொன்றாய்; வணங்கும் அற்றார் கூறும் எந்தாய்,
நன்று செய்வாய் என்றே, நடலை இன்றி ஏத்தும்
என்றன் சொற்(கு)இ ரங்காய், இன்(று)என் துணையார் இயம்பு.
உன்றன் அடியவற்கா ஓடி வந்த கூற்றை அன்று கொன்றாய் - உன் பக்தனான மார்க்கண்டேயனுக்காக (அவனைக் கொல்லக் கருதி) விரைந்து வந்தடைந்த காலனை அன்று உதைத்து அழித்தவனே;
வணங்கும் அற்றார் கூறும் எந்தாய், நன்று செய்வாய் என்றே, - வணங்கும் அன்பர்கள் நன்மை செய்பவன் நீ என்று புகழும் எந்தையே; ("நன்று செய்வாய் என்றே" - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்க நின்றது);
நன்று செய்வாய் என்றே, நடலை இன்றி ஏத்தும் என்றன் சொற்(கு)இ ரங்காய் - நீ நன்மை செய்வாய் என்று வஞ்சம் இன்றி வாழ்த்தும் என் பாமாலைக்கு இரங்கி அருள்வாயாக;
இன்(று)என் துணையார் இயம்பு - (உன்னையல்லால்) இன்று என் துணை வேறு எவர் சொல்;
பிற்குறிப்புகள்:
1. இலக்கணக் குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகள் ஆக்கி இருவகைப் பாடல் அமைப்பாகக் கருதுமாறு அமைவது.
இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்று நோக்குமாறு அமைந்தது.
வி. சுப்பிரமணியன்
--------- ---------
No comments:
Post a Comment