08.04.039 - காரைக்கால் அம்மையார் - (செஸ்டீனா)
2006-08-04
8.4.39 - காரைக்கால் அம்மையார் - (செஸ்டீனா)
-----------
முற்குறிப்பு : செஸ்டீனா (Sestina) என்பது (இத்தாலியன், ஆங்கிலம், முதலிய) சில மேனாட்டு மொழிகளில் காணப்பெறும் 7 பாடல்கள் அமைந்த ஒரு தொகுப்பின் அமைப்பு. முதற்பாடலின் ஈற்றில் வரும் சொற்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் மற்ற 6 பாடல்களிலும் வரவேண்டும்.
தமிழில்:
மேற்சொன்ன வரிசையில், ஆனால் அடியீற்றுச் சொற்களின் வரிசையாக அல்லாமல் அடிகளின் முதற்சொற்களின் வரிசையாக அமைந்து வருமாறு இயற்றப்பட்ட பாடல்கள்.
முதல் 6 பாடல்கள் ஆறடிப் பாடல்களாகவும், 7-ஆம் பாடல் மூவடிப் பாடலாகவும் அமையும்.
செஸ்டினா அமைப்பில் முதல் ஆறடிகளின் முதற்சீர்கள் (ஆங்கிலத்தில் ஈற்றுச்சீர்கள்) அடுத்துவரும் ஐந்து பகுதிகளிலும் ஒரு பின்னல் போல் அமைவதல் இதனை "ஆறடிப் பின்னல்" என்று சொல்லலாம்.
ஆறடிப்பின்னல் என்பது 39 அடிகள் கொண்ட அகவல் ஒத்த அமைப்பு. 7 பகுதிகளாக அமையும். முதல் ஆறுபகுதிகள் ஒவ்வொன்றும் ஆறு அளவடிகள் கொண்டவை. கடைசிப்பகுதி மூன்று அளவடிகள் கொண்டவை.
1) 123456
2) 615243
3) 364125
4) 532614
5) 451362
6) 246531
7) 14, 25, 36
இப்பாடலில்:
1 = நீதி, 2 = ஆதி, 3 = சோதி, 4 = வீதி, 5 = ஓதி, 6 = மீதி
1) -- 123456
நீதி வழுவா நிலைநின்(று) என்றும்
ஆதி சிவன்பால் அளவிலா அன்பள்,
சோதி அவனது தொண்டர் ஒருநாள்
வீதி வரக்கனி படைத்தாள்; வண்(டு)அமர்
ஓதி உமைகோன் செயல்அறி வார்ஆர்?
மீதிக் கதையில் விளம்புவேன் இனியதை.
(இனியதை - 1. இனியதான அந்த விஷயத்தை; 2. இனி அதனை);
2) -- 615243
மீதிக் கனியைக் கணவன் வேண்ட,
நீதி நீயொரு வழிகாட்(டு) என்(று)அவள்
ஓதி வழிபட, ஒருகனி வந்ததே
ஆதி அந்தம் இல்லான் அருளால்!
வீதி விடங்கன் விளையாட்(டு) அறியான்,
சோதி அவள்எனத் துணிந்துவிட்(டு) அகன்றான்.
(வீதி விடங்கன் - திருவாரூர்ப் பெருமான்; இங்கே, சிவன் என்ற பொதுப்பொருளில்); (சோதி - ஜோதி - தெய்வம் என்ற பொருளில்); (விட்டு அகல்தல் - நீங்கிச் செல்தல்);
3) -- 364125
சோதித்(து) அவன்வாழ் மதுரைக்(கு) ஏகினாள்;
மீதி வாழ்க்கை வே(று)ஒருத் தியோ(டு)என
வீதி நடுவே விழுந்(து)அவன் வணங்கினான்;
நீதி இதுவோ நிமலா என்றன்
ஆதி அழ(கு)உரு ஆர்க்(கு)இனி என்றே
ஓதிப் பேய்உரு ஒன்றைப் பெற்றாள்.
(சோதித்து = ஆராய்ந்து அறிந்து);
4) -- 532614
ஓதி உணரற்(கு) அரிய,மால் காணாச்
சோதி உறையும் தூமலை ஏறி
ஆதி அவனை அடைய அம்மலை
மீதில் தலையால் விரைந்தாள்; முன்மனு
நீதிச் சோழன் ஆண்ட ஆரூர்
வீதி விடங்கர் அம்மையே என்றார்!
5) -- 451362
வீதி கொண்ட மேலோர் வேண்டி
ஓதித் தொழவிடம் உண்டவன் கழலை
நீதி நெறியில் நின்று துதித்தார்;
சோதி சொன்னார் "ஆலங் காட்டில்
மீதி நாள்நீ விரும்புமா(று) ஆடுவோம்";
ஆதி அவன்புகழ் பாடிஅங்(கு) இருந்தார்.
(வீதி - பீதி; அச்சம்);
6) -- 246531
ஆதி ஆய அவன்பேர் பாடி
வீதி செல்லும் குழாத்தை விரவினால்
மீதி எல்லாம் விளையுமே தன்னால்!
ஓதி உரைக்க ஒண்ணுமோ அளப்பரும்
சோதி அவன்அருள்? காரைக் காலில்
நீதி பேணிய அம்மையை நினையுமே.
(குழாம் - அடியார் திருக்கூட்டம்); (விரவுதல் - கலத்தல்; பொருந்துதல்);
7) -- 14, 25, 36
நீதி நெறியெலாம் வீதி விடங்கன்
ஆதி அவன்கழல் ஓதி வணங்கலே!
சோதி அருளால் மீதி வினையிலை.
வி. சுப்பிரமணியன்
--------- ---------
No comments:
Post a Comment