Friday, November 15, 2024

08.04.041 - திருநீலகண்ட நாயனார் - (செஸ்டீனா)

08.04.041 - திருநீலகண்ட நாயனார் - (செஸ்டீனா)

2005-02-23

8.4.41 - திருநீலகண்ட நாயனார் - (செஸ்டீனா)

-----------

முற்குறிப்பு : செஸ்டீனா (Sestina) என்பது (இத்தாலியன், ஆங்கிலம், முதலிய) சில மேனாட்டு மொழிகளில் காணப்பெறும் 7 பாடல்கள் அமைந்த ஒரு தொகுப்பின் அமைப்பு. முதற்பாடலின் ஈற்றில் வரும் சொற்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் மற்ற 6 பாடல்களிலும் வரவேண்டும்.

தமிழில்:

மேற்சொன்ன வரிசையில், ஆனால் அடியீற்றுச் சொற்களின் வரிசையாக அல்லாமல் அடிகளின் முதற்சொற்களின் வரிசையாக அமைந்து வருமாறு இயற்றப்பட்ட பாடல்கள்.

முதல் 6 பாடல்கள் ஆறடிப் பாடல்களாகவும், 7-ஆம் பாடல் மூவடிப் பாடலாகவும் அமையும்.

செஸ்டினா அமைப்பில் முதல் ஆறடிகளின் முதற்சீர்கள் (ஆங்கிலத்தில் ஈற்றுச்சீர்கள்) அடுத்துவரும் ஐந்து பகுதிகளிலும் ஒரு பின்னல் போல் அமைவதல் இதனை "ஆறடிப் பின்னல்" என்று சொல்லலாம்.


1) 123456

2) 615243

3) 364125

4) 532614

5) 451362

6) 246531

7) 14, 25, 36


இப்பாடலில்:

1 = மறைவாய், 2 = முறையை, 3 = இறைவன்,

4 = உறையும், 5 = நிறைய, 6 = கறையை


தமிழ்ப் பாடல் முறையை ஒட்டி, இந்தப் பாடலில் இந்த வார்த்தைகளைப் பாடலின் முதலில் வைத்துள்ளேன்.


1) -- 123456

மறைவாய்ச் சென்றொரு மாதுடன் மகிழ்ந்த

முறையை மனைவி அறிந்து மொழிந்தனள்

இறைவன் மேலோர் ஆணை! எம்மை

உறையும் நாளெலாம் தீண்டா தீர்என;

நிறைய நாளிந் நெறியுடன் இருந்து

கறையை உடைய கண்டனைப் போற்றினர்.


2) -- 615243

கறையை உடைய கணவன் செயலை

மறைவாய் வைத்த மனைவியும் அவரும்

நிறைய காலம் நிமலனைப் போற்றிய

முறையை உலகுக்(கு) உணர்த்த கங்கை

உறையும் சடையை உடைய ஒப்பிலா

இறைவன் யோகியாய் வேடம் எடுத்தான்.


3) -- 364125

இறைவன் கழுத்தில் இருக்கும் இருண்ட

கறையை மறைத்(து)ஓர் ஓட்டுடன் அவர்கள்

உறையும் இடத்தை அடைந்தான்; அவரிடம்

மறைவாய் ஓட்டைக் காப்பாய் எனப்பல

முறைஐந் தெழுத்தை மொழிந்து பெருமை

நிறைய உடைய ஓட்டைக் கொடுத்தான்.


4) -- 532614

நிறைய காலம் சென்றது; மீண்டும்

இறைவன் வந்திட ஓடு மறைந்த(து);அம்

முறையை அறியா அடியார் அந்தக்

கறையை மாற்றும் கருத்துடன், "ஐயனே,

மறைவாய் வைத்தது மறைந்தது; தில்லை

உறையும் சிவன்மேல் சத்தியம்" என்றார்.


5) -- 451362

உறையும் பனியுடன் ஓம்பும் முனிவரும்

நிறைய உடைய கயிலை நாதன்,

"மறைவாய் வைத்தது மறைந்த(து)என்(று) இருவரும்

இறைவன் குளத்தில் கரம்பிடித்(து) உரைத்துக்

கறையைப் போக்குவீர்" என்றான்; குயவர்அம்-

முறையை யாம்செயல் முடியா(து) என்றார்;


6) -- 246531

முறையை மறுத்த முதியவர் பங்குமை

உறையும் சிவன்மேல் உரைத்ததை, அப்பழம்

கறையைப் பலர்முன் சொல்லி, இடைவெளி

நிறைய விட்டுக் குளத்தில் மூழ்கினர்;

இறைவன் இளமையை இருவர்க்கும் ஈந்தான்;

மறைவாய் இருப்பவன் வானில் தெரிந்தான்.


முறையை மறுத்த முதியவர் - மனைவி கையைப் பிடித்துச் சத்தியம் செய்யவேண்டும் என்று சொன்ன அந்த முறையை இயலாது என்று மறுத்த முதியவரான நீலகண்டக் குயவனார்;


7) -- 14, 25, 36

மறைவாய் உரைசூளை உறையும் பதிமுன்வாழ்

முறையை மொழியன்பர் நிறைய அருள்பெற்றார்,

இறைவன் மிடற்றணிஅக் கறையை மறவாதார்.


(* 3-அம் அடியை முதலில் இயைத்துப் பொருள்கொள்க);

(சூள் - சபதம்; பதி - ஊர்; தலம்; மிடறு - கண்டம்);

ஈசனது நீலகண்டத்தை என்றும் போற்றியவரும், தாம் மனைவிக்குத் தனிமையில் செய்த சபதத்தையும், அவர் வாழ்ந்த முறையையும், அவர் வசித்த ஊர்மக்கள்முன் கூறிய அன்பருமான திருநீலகண்ட நாயனார் பேரருள் பெற்றார்.


வி. சுப்பிரமணியன்

--------- ---------


No comments:

Post a Comment