P.352 - சாட்டியக்குடி - வெண்மலை போலொரு
2016-07-02
P.352 - சாட்டியக்குடி
---------------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
1)
வெண்மலை போலொரு விடைவி ரும்பியை
எண்வடி வுடையனை ஈறில் ஈசனைத்
தண்வயல் புடையணி சாட்டி யக்குடி
ஒண்மதி சூடியை உன்னு நெஞ்சமே.
வெண்மலை போல் ஒரு விடை விரும்பியை - வெண்ணிறம் உடைய ஒரு மலை போன்ற இடபத்தை ஊர்தியாக விரும்பியவனை;
எண்வடிவு உடையனை - அஷ்டமூர்த்தங்கள் உடையவனை;
ஈறு இல் ஈசனைத் - முடிவு (அந்தம்) இல்லாத ஈசனை;
தண்-வயல் புடை அணி சாட்டியக்குடி ஒண்-மதி சூடியை உன்னு நெஞ்சமே - குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, ஒளிவீசும் சந்திரனை அணிந்த பெருமானை, நெஞ்சே, நீ நினை. (உன்னுதல் - நினைதல்);
2)
அக்கரம் அஞ்சுரை அன்பு மாணிதன்
துக்கம் அழித்தவன் சூல பாணியன்
தக்கனைத் தலையரி சாட்டி யக்குடி
முக்கணன் சீர்தனை முன்னு நெஞ்சமே.
அக்கரம் அஞ்சு உரை அன்பு மாணிதன் துக்கம் அழித்தவன் - பஞ்சாட்சரம் ஓதி வழிபட்ட, பக்தி மிகுந்த மார்க்கண்டேயருடைய மனக்கலக்கத்தைத் தீர்த்தவன்; (காலனை உதைத்தவன்); (அக்கரம் - அக்ஷரம்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);
சூல-பாணியன் - திரிசூலத்தை ஏந்தியவன்; (பாணி - கை); (பெரியபுராணம் - காரைக்காலம்மையார் புராணம் - 12.24.55 - "சூலபாணியனார் மேவும் படரொளிக் கயிலை");
தக்கனைத் தலை அரி - தக்கனது தலையை வெட்டிய; (அரிதல் - வெட்டுதல்);
சாட்டியக்குடி முக்கணன் சீர்தனை முன்னு நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, முக்கட்-பெருமானின் புகழை, நெஞ்சே, நீ எண்ணு. (முன்னுதல் - கருதுதல்; எண்ணுதல்);
3)
அழுதடை சுரர்களுக் கருள்மி டற்றனைத்
தொழுதவர் துணைவனைத் துடிம ருங்கினள்
தழுவிய நாதனைச் சாட்டி யக்குடி
மழுவனை நாடொறும் வாழ்த்து நெஞ்சமே.
அழுது அடை சுரர்களுக்கு அருள் மிடற்றனைத் - அழுது சரண்புகுந்த தேவர்களுக்கு அருளிய நீலகண்டனை; (சுரர் - தேவர்); (மிடறு - கண்டம்);
தொழுதவர் துணைவனைத் - தொழும் பக்தர்களுக்குத் துணையாக உள்ளவனை;
துடி-மருங்கினள் தழுவிய நாதனைச் - உடுக்குப் போலச் சிற்றிடை உடைய உமை தழுவிய தலைவனை; (துடி - உடுக்கு); (மருங்கு - இடை);
சாட்டியக்குடி மழுவனை நாள்தொறும் வாழ்த்து நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, மழுவாள் ஏந்திய பெருமானைத் தினந்தோறும், நெஞ்சே, நீ போற்று.
4)
நாவியல் பாவினர் நந்தி வட்டமும்
தூவிய கையினர் துதிசெய் தூயவன்
சாவிலன் நோயிலன் சாட்டி யக்குடி
மேவிய வேதியன் வினைகள் தீர்ப்பனே.
நா இயல் பாவினர், நந்திவட்டமும் தூவிய கையினர் துதிசெய் தூயவன் - நாவில் பாமாலைகள் பொருந்தியவர்களும், நந்தியாவட்டம் முதலிய பூக்களைத் தூவிய கையினர்களும் வழிபடும் புனிதன்; (இயல்தல் = பொருந்துதல்; தங்குதல்); (நந்திவட்டம் - நந்தியாவட்டம் என்ற பூ);
சாவு இலன், நோய் இலன் - நோய்களும் இறப்பும் இல்லாதவன்;
சாட்டியக்குடி மேவிய வேதியன் வினைகள் தீர்ப்பனே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற வேதமுதல்வன் நம் வினைகளைத் தீர்ப்பான்;
5)
புதியவன் பழையவன் பொலிந்த வேணியில்
நதியினன் அரையினில் நாகக் கச்சினன்
சதுர்மறை நாவினன் சாட்டி யக்குடி
பதியென நின்றவன் பத்தர்க் கன்பனே.
புதியவன் பழையவன் - காலத்தைக் கடந்தவன்;
பொலிந்த வேணியில் நதியினன் - அழகிய சடையில் கங்கையை உடையவன்;
அரையினில் நாகக்-கச்சினன் - அரைக்கச்சாகப் பாம்பைக் கட்டியவன்;
சதுர்மறை நாவினன் - நான்கு வேதங்களையும் பாடியவன்;
சாட்டியக்குடி பதி என நின்றவன் பத்தர்க்கு அன்பனே - திருச்சாட்டியக்குடியில் நீங்காது உறைகின்ற பெருமான் பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (பதி - உறைவிடம்; கோயில்; தலம்);
6)
கையினிற் சூலனைக் கரிய கண்டனைச்
செய்யனைச் செஞ்சடைத் திங்கள் சூடியைத்
தையலொர் பங்கனைச் சாட்டி யக்குடி
ஐயனைக் கைதொழும் அன்பர்க் கின்பமே.
கையினில் சூலனைக் - கையில் சூலத்தை ஏந்தியவனை;
கரிய கண்டனைச் - நீலகண்டனை;
செய்யனைச் - செம்மேனியனை; (செய்யன் - சிவந்த நிறம் உடையவன்);
செஞ்சடைத் திங்கள் சூடியைத் - செஞ்சடையில் சந்திரனைச் சூடியவனை;
தையல் ஒர் பங்கனைச் - உமையை ஒரு பங்கில் உடையவனை; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
சாட்டியக்குடி ஐயனைக் கைதொழும் அன்பர்க்கு இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற தலைவனைக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.
7)
கங்குலிற் பிணமெரி காட்டில் கூத்தமர்
சங்கரன் ஐங்கரன் தாதை ஓர்புறம்
சங்கணி கையினன் சாட்டி யக்குடி
அங்கணன் அடிதொழும் அன்பர்க் கின்பமே.
கங்குலில் பிணம் எரி காட்டில் கூத்து அமர் சங்கரன் - இருளில் சுடுகாட்டில் திருநடம் செய்து மகிழும் சங்கரன்; (கங்குல் - இரவு); (அமர்தல் - மகிழ்தல்; விரும்புதல்); (சங்கரன் - சிவன் திருநாமம் - நன்மை செய்பவன்);
ஐங்கரன் தாதை - விநாயகனுக்குத் தந்தை; (தாதை - தந்தை);
ஓர் புறம் சங்கு அணி கையினன் - ஒரு பக்கம் கையில் வளையல் அணிந்தவன் - உமைபங்கன்; (சங்கு - சங்கினால் செய்த கைவளை); (சம்பந்தர் தேவாரம் - 3.81.1 - "சங்கமரும் முன்கை மடமாதை ஒருபால் உடன் விரும்பி");
சாட்டியக்குடி அங்கணன் அடிதொழும் அன்பர்க்கு இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, அருள்நோக்கம் உடைய பெருமான் திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.
8)
தருக்கிய தசமுகன் தனைய டர்த்தவர்
கருப்புவிற் காமனைக் காய்ந்த கண்ணினர்
தருக்களிற் குயில்பயில் சாட்டி யக்குடி
இருக்குரை எந்தையை எண்ண இன்பமே.
தருக்கிய தசமுகன்-தனை அடர்த்தவர் - ஆணவம் மிக்க இராவணனை நசுக்கியவர்; (தருக்குதல் - ஆணவம் கொள்ளுதல்); (தசமுகன் - பத்துமுகம் உடைய இராவணன்);
கருப்பு-வில் காமனைக் காய்ந்த கண்ணினர் - கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணர்;
தருக்களில் குயில் பயில் சாட்டியக்குடி, இருக்கு உரை எந்தையை எண்ண இன்பமே - (சோலையில்) மரங்களில் குயில்கள் தங்கி ஒலிக்கின்ற திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, ரிக்வேதம் ஓதும் எம் தந்தையைப் போற்றி எண்ணும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே. (தரு - மரம்); (பயில்தல் - தங்குதல்; ஒலித்தல்); (இருக்கு - ரிக்வேதம்; வேதம்); (* ரிக்வேதநாதர் - இத்தல இறைவன் திருநாமம்);
9)
கடலிடைத் துயிலரி கமலன் என்றிவர்
அடையவொண் ணாச்சுடர் ஆகி நின்றவன்
சடைமிசைப் பிறையினன் சாட்டி யக்குடி
உடையவன் புகழ்தனை ஓத இன்பமே.
கடலிடைத் துயில் அரி கமலன் என்றிவர் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால், தாமரையில் உறையும் பிரமன் என்ற இவர்களால்; (என்றிவர் - என்ற இவர்; "என்ற" என்பதில் ஈற்று அகரம் தொக்கது); (சம்பந்தர் தேவாரம் - 3.33.1 - "நீரிடைத் துயின்றவன்");
அடைய ஒண்ணாச் சுடர் ஆகி நின்றவன் - அடைய இயலாத ஜோதி ஆகி ஓங்கியவன்;
சடைமிசைப் பிறையினன் - சடையின்மேல் சந்திரனை அணிந்தவன்;
சாட்டியக்குடி உடையவன் புகழ்தனை ஓத இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, சுவாமியின் புகழைப் பாடும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே. (உடையவன் - உடையான் - சுவாமி);
10)
காரணி நெஞ்சினர் கத்து சொற்கொளேல்
நீரணி சடையினன் நீறு கொன்றையந்
தாரணி மார்பினன் சாட்டி யக்குடிப்
பூரணன் பொன்னடி போற்ற இன்பமே.
கார் அணி நெஞ்சினர் கத்து சொல் கொளேல் - கருமை பொதிந்த மனம் உடைய வஞ்சகர்கள் கத்துகின்ற சொற்களை மதிக்கவேண்டா; (கார் - கருமை; வஞ்சம்; அஞ்ஞானம்); (கத்துதல் - கூவுதல்; பிதற்றுதல்); (கொளேல் - கொள்ளேல் - மதிக்கவேண்டா);
நீர் அணி சடையினன் - கங்கையைச் சடையில் அணிந்தவன்;
நீறு கொன்றையந் தார் அணி மார்பினன் - திருநீற்றையும் கொன்றைமாலையையும் மார்பில் அணிந்தவன்; (தார் - மாலை);
சாட்டியக்குடிப் பூரணன் பொன்னடி போற்ற இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, குறைவில்லாத பெருமானின் பொற்பாதத்தை வழிபடும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.
11)
வனிதையை ஒருபுடை வைத்த மாண்பினன்
குனிமதி மாசுணம் குலவு சென்னியன்
தனிமணி மிடறினன் சாட்டி யக்குடி
இனிதுறை எந்தையை ஏத்த இன்பமே.
வனிதையை ஒரு-புடை வைத்த மாண்பினன் - உமாதேவியை ஒரு பக்கத்தில் பாகமாக ஏற்ற பெருமை உடையவன்; (மாண்பு - பெருமை; அழகு);
குனி-மதி மாசுணம் குலவு சென்னியன் - வளைந்த பிறையும் பாம்பும் நெருங்கி இருக்கின்ற திருமுடியினன்; (குனிதல் - வளைதல்; வணங்குதல்); (மாசுணம் - பாம்பு); (குலவுதல் - விளங்குதல்; நெருங்கி உறவாடுதல்);
தனி மணி மிடறினன் - ஒப்பற்ற நீலமணிகண்டம் உடையவன்; (தனி - ஒப்பற்ற); (மிடறினன் - மிடற்றினன் - கண்டம் உடையவன்);
சாட்டியக்குடி இனிது உறை எந்தையை ஏத்த இன்பமே - திருச்சாட்டியக்குடியில் மகிழ்ந்து உறைகின்ற, எம் தந்தையைத் துதிக்கும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment