2016-07-24
P.353 - திலதைப்பதி
---------------------------------
(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண் டடியார்")
(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")
1)
கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன்
தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் சாந்தம் அதுவாக
வெண்ணீ றணியும் வேத நாவன் விடையன் இடமென்பர்
தெண்ணீர் அரிசிற் கரையில் திகழும் திலதைப் பதிதானே.
கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன் - கண்ணீர் பெருக மனம் உருகி வழிபடுவாரைக் காக்கின்ற அருளாளன்;
தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவன்;
சாந்தம் அதுவாக வெண்ணீறு அணியும் வேத-நாவன் - சந்தனம் போல வெண்-திருநீற்றைப் பூசிய, வேதங்களைப் பாடியருளியவன்;
விடையன் இடம் என்பர் - இடபவாகனன் உறையும் தலம் ஆவது;
தெண்ணீர் அரிசிற்-கரையில் திகழும் திலதைப்பதிதானே - தெளிந்த நீர் பாயும் அரிசிலாற்றின் கரையில் உள்ள திலதைப்பதி;
2)
பால்போல் நீறு பூசிப் பணியும் பத்தர் இடர்தீர்ப்பான்
நால்வே தத்தை ஓது நாவன் நாரி ஒருபங்கன்
நால்வாய் தன்னை உரித்துப் போர்த்த நாதன் இடமென்பர்
சேல்பாய் அரிசிற் றென்பால் திகழும் திலதைப் பதிதானே.
நால்வாய் - யானை; (தொங்கும் வாய்);
அரிசிற் றென்பால் - அரிசில் + தென்பால் - அரிசிலாற்றின் தென்கரையில்;
3)
அரையா அருளாய் என்று போற்றும் அன்பர்க் கணியாவான்
விரையார் கொன்றை வேணி மீது விரும்பிப் புனையீசன்
குரையார் கழலன் நரைவெள் ளேற்றுக் குழகன் இடமென்பர்
திரையார் அரிசில் தென்பால் திகழும் திலதைப் பதிதானே.
அரையா - அரசனே;
அணி ஆவான் - அருகு இருப்பான்;
விரை ஆர் கொன்றை - மணம் பொருந்திய கொன்றைமலர்;
வேணி - சடை;
குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற கழலை அணிந்தவன்;
திரை ஆர் அரிசில் தென்பால் - அலை பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில்;
4)
நீறு பூசி நித்தல் ஏத்தும் நேயர்க் கருள்நாதன்
ஆறு சூடி அங்கை மழுவன் அம்பொற் கொடிகூறன்
ஏறு காட்டும் கொடியை உடைய எந்தை இடமென்பர்
சேறு காட்டும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.
அம் பொற்கொடி கூறன் - அழகிய பொற்கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (* பொற்கொடியம்மை - திலதைப்பதியில் இறைவி திருநாமம்);
சேறு காட்டும் செய் அணிந்த - சேறு திகழும் வயல்கள் சூழ்ந்த; (செய் - வயல்);
5)
அன்ற லர்ந்த பூக்கள் தூவி அடியைத் தொழுவார்க்கு
நன்று நல்கும் நம்பன் இன்பன் நஞ்சம் அணிகண்டன்
மன்றில் மங்கை காண ஆடும் மன்னன் இடமென்பர்
தென்றல் தன்னில் வாசம் வீசு திலதைப் பதிதானே.
அன்று அலர்ந்த பூக்கள் - நாண்மலர்கள்;
நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்;
நஞ்சம் - விஷம்;
மன்று - அரங்கு;
மங்கை - உமாதேவி;
6)
மறைசொல் மாணி வாழ நமனை மார்பில் உதைசெய்தான்
கறைகொள் கண்டன் அண்டர் அண்டன் கங்கைச் சடைமீது
குறைவெண் திங்கள் சூடி ஆடு கூத்தன் இடமென்பர்
சிறைவண் டறையும் நறையார் சோலைத் திலதைப் பதிதானே.
மறை - வேதம்;
மாணி - மார்க்கண்டேயர்;
அண்டர் அண்டன் - தேவதேவன்;
சிறை-வண்டு அறையும் நறை ஆர் சோலை - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற தேன் (/ வாசனை) நிறைந்த சோலை சூழ்ந்த; (நறை - தேன்; வாசனை);
7)
போதை இட்டுப் பொற்ப தத்தைப் போற்றும் அடியார்தம்
வாதை தீர்த்து வரம ளிக்கும் வள்ளல் ஒருபக்கம்
மாதை வைத்த முக்கட் பரமன் வைகும் இடமென்பர்
சீதை கேள்வன் வந்து வாழ்த்து திலதைப் பதிதானே.
போதை இட்டு - பூக்களைத் தூவி;
வாதை - துன்பம்;
வைகுதல் - தங்குதல்; உறைதல்;
சீதை கேள்வன் வந்து வாழ்த்து - இராமன் வந்து வழிபாடு செய்த; (வாழ்த்துதல் - துதித்தல்); (* இராமர் இத்தலத்தில் வழிபாடு, தர்ப்பணம் செய்தார் என்பது இத்தலபுராணச் செய்தி);
8)
வான்வெற் பசைத்த வல்ல ரக்கன் வாய்பத் தழவூன்று
கோன்கற் சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரமெய்தான்
நான்கி ரட்டி தோளன் நாக நாணன் இடமென்பர்
தேன்கள் ஆர்க்கும் சோலை சூழ்ந்த திலதைப் பதிதானே.
வான்-வெற்பு அசைத்த வல்-அரக்கன் வாய் பத்து அழ ஊன்று கோன் - பெருமை மிக்க உயர்ந்த கயிலைமலையை அசைத்த வலிய அரக்கனான இராவணனின் வாய்கள் பத்தும் அழும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கிய தலைவன்;
கற்சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரம் எய்தான் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (கல் - மலை); (சிலை - வில்); (கூடார் - பகைவர்);
நான்கு இரட்டி தோளன் - எட்டுப்-புஜங்கள் உடையவன்;
நாக-நாணன் - நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
தேன்கள் ஆர்க்கும் - வண்டுகள் ஒலிக்கின்ற; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);
9)
அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன்
சென்னி தாழ்த்தும் அன்பர் தங்கள் சிந்தை பிரியாதான்
கன்னல் வில்லி தன்னைக் காய்முக் கண்ணன் இடமென்பர்
செந்நெல் வளரும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.
அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன் - அன்னப்பறவையும் பன்றியும் ஆகிய பிரமன் திருமால் என்ற இருவரால் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினன்;
சென்னி - தலை;
கன்னல் வில்லி தன்னைக் காய் முக்கண்ணன் - கரும்பை வில்லாக ஏந்தும் மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (கன்னல் - கரும்பு); (வில்லி - வில்லை ஏந்தியவன்);
செந்நெல் வளரும் செய் அணிந்த - சிறந்த நெற்பயிர் வளர்கின்ற வயல் சூழ்ந்த; (செய் - வயல்);
10)
கோனைத் தெளியாக் குருடர் சொல்லும் குற்ற மொழிநீங்கும்
மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான்வெங்
கானை ஆடும் களமென் றுடைய கருத்தன் இடமென்பர்
தேனை உண்டு வண்டு பாடு திலதைப் பதிதானே.
கோனைத் தெளியாக் குருடர் - இறைவனை அறியாதவர்கள்;
நீங்கும் - அவற்றை நீங்குங்கள்; ("அவை அழியும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான் - கையில் மான், மழு, நெருப்பு இவற்றை ஏந்திய, தேவர்கள் தலைவன்;
வெங்கானை ஆடும் களம் என்று உடைய கருத்தன் - சுடுகாட்டைத் திருநடம் செய்யும் சபை என்று உடைய கடவுள்; (வெங்கான் - கொடிய சுடுகாடு); (களம் - சபை; இடம்); (கருத்தன் - கர்த்தா - கடவுள்)
11)
மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள்
எவ்வ ரங்கள் இரப்ப ரேனும் என்றும் இலையென்னா(து)
அவ்வ ரங்கள் அருளும் சடையன் அமரும் இடமென்பர்
செவ்வ ழிப்பண் வண்டார் சோலைத் திலதைப் பதிதானே.
மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள் - மல்லிகை, நந்தியாவட்டம் முதலிய பூக்களைத் தூவி வழிபடும் அடியவர்கள்; (மௌவல் - மல்லிகை); (அப்பர் தேவாரம் - 4.98.1 - "நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே");
எவ்வரங்கள் இரப்பரேனும் என்றும் இலை என்னாது - என்ன வரங்களை யாசித்தாலும், ஒருநாளும் "இல்லை" என்று சொல்லாமல்;
அவ்வரங்கள் அருளும் சடையன் அமரும் இடம் என்பர் - அந்த வரங்களையெல்லாம் அருள்கின்ற பெருமான், சடையை உடையவன் விரும்பி உறையும் தலம் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);
செவ்வழிப் பண் வண்டு ஆர் சோலைத் திலதைப்பதிதானே - செவ்வழி என்ற பண்ணை வண்டுகள் பாடுகின்ற சோலை திகழும் திலதைப்பதி ஆகும்; (செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்);
(சம்பந்தர் தேவாரம் - 1.132.7 - "வண்டு வேறாய உரு ஆகிச் செவ்வழி நற்பண் பாடும் மிழலையாமே");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment